முத்தொழில் புரிபவர் என்பதற்காக வழிபாடில்லை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ச்லோகத்தில் ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரன் என்று மூன்று பேரை வரிசையாகச் சொல்லிவிட்டு, அப்புறம் பரப்ரம்மம் என்பதால் அந்த மூன்று பேரை ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார மூர்த்திகளாகவே காட்டியிருக்கிறது என்பது வெளிப்படை. இத்தனை நாழி அதைப் பற்றித்தான் விசாரித்தோம்.

தேவர்களெல்லாம் எந்தக் கஷ்டமானாலும் ப்ரம்மாவிடம்தான் முதலில் முறையிடுவார்கள், அஸுரர்களிலும் பல பேர் தபஸ் பண்ணி அவரிடமிருந்து வரம் பெற்றிருக்கிறார்கள் – என்னும்போது அவர்கள் அவரை ஸ்ருஷ்டி கர்த்தா என்று மட்டும் வைத்து அவரிடம் போய்ப் பிரார்த்திக்கவில்லை. தெய்வசக்தி என்று பொதுவாகச் சொல்கிறோமே, அந்த சக்தி நிரம்பிய ஒருவர் என்றுதான் அவரிடம் இவர்கள் போயிருக்கிறார்கள். தங்களுக்கு ஏதேதோ ஸெளக்யங்களை, போக போக்யங்களை அவர் கொடுக்க வேண்டும்; பிரார்த்திப்பது தேவர்களானால், அஸுரர்கள் அழிந்து போக அவர் அருள்புரியவேண்டும்; அல்லது பிரார்த்திப்பது அஸுரர்களானால், தேவர்களை அழிக்க அவர் பலம் தரவேண்டும் என்றுதான் அவரிடம் போயிருக்கிறார்கள். இதில் ஸெளக்யம் போகபோக்யம் கொடுப்பதென்பது பரிபாலனத்தைச் சேர்ந்தது. அது த்ரிமூர்த்திகளில் விஷ்ணுவின் கார்யம். அஸுரர்கள் அழிவது, அல்லது தேவர்கள் அழிவது என்றால் அதுவோ ருத்ரனின் கார்யம். இவற்றுக்காகத்தான் அவர்கள் ப்ரம்மாவிடம் போயிருக்கிறார்கள். ஸ்ருஷ்டி கர்த்தாவாக அவர் செய்யக்கூடிய எதையோ கேட்டுக்கொண்டுதான் அவர்கள் அவரிடம் போனார்களென்றில்லை.

தனக்கு சிரஞ்சீவித்வம் வேண்டுமென்று பல அஸுரர்கள் அவரிடம் ப்ரார்த்திக்க அவரோ, ‘அப்படி அன்-கண்டிஷனலாக வரம் தர எனக்குச் சக்தியில்லையப்பா! மரணம் வராமலிருக்க ஏதாவது கண்டிஷன் வேணுமானால் போட்டுக்கேளு; தருகிறேன்’ என்று சொல்வதாகப் பல புராணங்களில் பார்க்கிறோம். இதிலிருந்து அவர், ‘வெறும் ஸ்ருஷ்டி கர்த்தா இல்லை. எதையும் செய்யவல்லவர்’ என்ற நம்பிக்கையிலேயே வரம் கேட்பவர்கள் அவரிடம் போயிருக்கிறார்களென்றும், ஆனால் அவரோ தாம் ஸர்வசக்தி படைத்தவரல்ல என்றே தம்மைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறாரெனறும் ஆகிறது.

யாராவது சிலபேர் அவரிடம், ‘இப்படியிப்படி அடுத்த ஜன்மா கொடுங்கள் என்று வரம் கேட்டிருக்கலாம், அல்லது பிள்ளைவரம் கேட்டிருக்கலாம். இவர்கள் வேண்டுமானால் ஒருவேளை அவர் ஸ்ருஷ்டி கர்த்தா என்பதாக மட்டுமே அவரை இம்மாதிரி கேட்டிருக்கலாமோ என்னவோ? ஆனால் இதே வரத்தை இதர தெய்வங்களிடமும் – சிவன், விஷ்ணு, அம்பாள், ஸுப்ரம்மண்யர் போன்றவர்களிடமும் – பல பேர் கேட்டிருக்கிறார்கள். ஆகையால் பிறப்பு ஸம்பந்தமான வரமானால் படைப்புக்கே ஏற்பட்ட ப்ரம்மாவிடம்தான் போகவேண்டுமென்று பொதுக் கருத்து இல்லை என்றே ஏற்படுகிறது. இதையே இன்னொரு தினுஸில் திரும்பிப் பார்த்தால் படைப்புக் கடவுள் என்ற முறையில்தான் ப்ரம்மாவிடம் போய் ஒன்றை வேண்டிக்கொண்டார்களென்று இல்லை என்று தெரிகிறது.

இதேபோல விஷ்ணுவையும், சிவனையும் பலபேர் உபாஸித்து இஹ – பர ஸெளக்யங்களில் அத்தனையையும், பரம ஞானத்தையும், மோக்ஷத்தையும்கூடப் பெற்றிருக்கிறார்கள் என்னும் போது அவர்கள் அந்த இரண்டு பேரையும் பரிபாலன கர்த்தா, ஸம்ஹாரகர்த்தா என்று மாத்திரம் வைத்து ஆராதிக்கவில்லை என்று தெரிகிறது. இவர்களை வேண்டிக்கொண்டு, தபஸ் முதலானது பண்ணியே பலர் புத்ரவரம் பெற்றிருக்கிறார்கள். ‘ராஜா இருந்தான்; அவனுக்கு எல்லா ஸெளக்யங்களும் இருந்தன; ஆனால் பிள்ளை இல்லையே என்ற பெரிய குறை மட்டும் இருந்தது; இல்லாவிட்டால், யாரோ ஒரு ரிஷி இருந்தார்; அவருக்கு மனதில் எவ்வளவோ சாந்தி இருந்தும் பித்ரு ருணம் (மூதாதையரின் கடன்) தீர்க்கப் பிள்ளையில்லையே என்பது விசாரமாயிருந்தது; அந்த ராஜா, அல்லது ரிஷி விஷ்ணுவை, அல்லது சிவனைக் குறித்துத் தபஸ் பண்ணினார்; விஷ்ணுவோ சிவனோ ப்ரஸன்னமாகிப் புத்ர வரம் கொடுத்தார்’ என்று அநேகம் கதைகள் பார்க்கிறோம். இங்கேயெல்லாம் ப்ரஹ்மாவுக்குரிய ஸ்ருஷ்டியை இந்த இரண்டு பேர் செய்திருப்பதாக ஆகிறது. அதோடு, தேவர்கள் பிரார்த்தித்தார்கள். ரிஷிகள் பிரார்த்தித்தார்கள் என்று மஹாவிஷ்ணு அவதாரத்துக்கு மேல் அவதாரமாக எடுத்து ஹிரண்யன், ராவணன், கம்ஸன் என்று பல பேரை ஸம்ஹாரம் பண்ணியிருக்கிறார். சிஷ்ட பரிபாலனம் என்று அவர் பண்ணுவதே பூர்வ குணங்களில் முக்யமாக துஷ்ட நிக்ரஹமாகத்தான் இருந்திருக்கிறது. சிவனைப் பார்த்தால் அவர் எத்தனையோ பக்தர்களுக்கு ஆயுராரோக்யம், ஐச்வர்யம் என்று வாரி வழங்கியிருக்கிறார். ஸ்தல புராணங்களைப் பார்த்தால் தெரியும். ராஜாக்கள் கட்டிய அநேக சிவாலயங்கள் இருக்கின்றன அல்லவா? ஒரு ராஜாவின் கொடூரமான நோயை ஈச்வரன் ஸொஸ்தம் செய்தான். ஒரு ராஜா ராஜ்யத்தை இழந்து காட்டில் வஸித்தபோது அவன் இந்த லிங்கத்தைப் பூஜித்துத் தான் ஈச்வரன் அவனுக்கு அந்த ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தான், அதற்காகவே அவர்கள் இந்த ஆலயத்திருப்பணி செய்தார்கள் என்று (ஸ்தல புராணங்களில்) இருக்கும்.

(இவற்றிலிருந்து) என்ன தெரிகிறதென்றால், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடமிருந்து பல பேர் பலவிதமான வரங்கள் பெற்றிருக்கிறார்களென்றால் அவர்கள் அந்த மூவரையும் எல்லாம் செய்யக்கூடிய தெய்வ சக்தி நிரம்பியவர்கள் என்றுதான் பூஜித்திருக்கிறார்களேயொழிய, இவர் ஸ்ருஷ்டி மட்டும் செய்பவர், இவர் ஸ்திதிக்கு மட்டும் அதிகாரி, இவர் ஸம்ஹாரம் மட்டும் செய்பவர் என்று நினைத்து அவர்கள் ஆராதிக்கவில்லை.

ஆனால் இந்த (குருர் – ப்ரஹ்மா) ச்லோகம் போகும் ரீதியிலிருந்தோ ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹார கர்த்தாக்களாக இவர்கள் இருப்பதற்காகவே, அல்லது அந்த அதிகாரத்தில் மாத்திரம் அவர்களை வைத்தே, அவர்களுடைய உருவமாயுள்ள குருவுக்குப் பூஜை செய்யவேண்டும், நமஸ்கரிக்க வேண்டும் என்று சொல்வதாகத் தெரிகிறது. ‘இவர்தான் ப்ரஹ்மா, இவர்தான் விஷ்ணு, இவர்தான் மஹேச்வரன்’ என்று சொல்லி, ‘இவருக்கு நமஸ்காரம் – குரவே – நம:’ என்று முடித்தால், ‘அந்த மூன்று கார்யங்களைப் பண்ணுவதற்காகவே அவர்களுக்கு செய்யவேண்டிய நமஸ்காரத்தை இவருக்குச் செய்’ என்பதாகத்தானே அர்த்தம் கொடுக்கிறது? நமஸ்காரம் என்றால் உபாஸனை என்று அர்த்தம். ஒருவரை பக்தியோடு உபாஸித்து ப்ரார்த்திப்பதற்கு நமஸ்காரத்தை அடையாளமாகச் சொல்லியிருக்கிறதென்று அர்த்தம்.

இங்கேதான், வேடிக்கையோ, வம்போ, வாதமோ, எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், வருகிறது.

ஸ்ருஷ்டிக்குத்தான் சாமி, ஸ்திதிக்குத்தான் சாமி, ஸம்ஹாரத்துக்குத்தான் சாமி என்று ஒருவரை வைத்துவிடும்போது அவரை பக்தி பண்ணி உபாஸிக்கவேண்டியதே இல்லை! நமக்கு ஸந்தோஷகரமான ஒன்றை ஒரு ஸ்வாமி செய்திருக்கிறார், செய்கிறார், அல்லது செய்வார் என்கிறபோது தான் அவரிடம் பக்தி உண்டாகி உபாஸிப்போம். ப்ரம்மா நம்மைப் படைத்தாரே என்று நாம் ஸந்தோஷமா படமுடியும்? அவரிடம் சண்டை வேண்டுமானால் பிடிக்கலாம் என்றுதான் தோன்றும். படைப்பதற்கு மேல் அவர் ஒன்றும் செய்யமுடியாது – அதாவது, ஸ்ருஷ்டிகர்த்தா என்றே அவரை வைக்கிறபோது. இனிமேல் நம்முடைய இந்த வாழ்க்கையில் அவர் செய்யக்கூடியது எதுவுமில்லை. இவரிடம் எதற்கு பக்தி வைக்கணும்? அதற்கு அடையாளமாக நமஸ்காரம் பண்ணணும்? ஆனதினால் ‘குருதான் ப்ரஹ்மா, ஆகவே குரவே நம:’ என்று முடிச்சுப் போட்டால் எடுபடாது. [சிரித்து] நாங்கள் நவீன கால ப்ரஜைகள். ‘லாஜிக’ லாக ஸரியாக வந்தால்தான் ஒப்புக் கொள்வோம்! ஆகையால் குரு ப்ரஹ்மாவாக இருப்பதற்காக அவருக்கு நமஸ்காரம் பண்ண முடியாது!

“குருர் – விஷ்ணு:”- விஷ்ணு ஸமாசாரத்திற்கு அப்புறம் வருகிறன்.

“குருர் – தேவோ மஹேச்வர: – தஸ்மை ஸ்ரீ குரவே நம:” என்றால், இது ப்ரம்மா விஷயத்தை விடவும் ஒப்புக் கொள்ளவே முடியாது! ருத்ர மூர்த்தி சூலத்தைக் தூக்கிக் கொண்டு வந்து ஹதாஹதம் பண்ணுபவர். வேறே ஒன்றும் அவருக்குத் தெரியாது. அவருக்குத் தெரியுமோ தெரியாதோ, ச்லோகத்தில் அவரை ஸம்ஹார க்ருத்யத்துக்கு மட்டும் உரியவராகக் காட்டிக்கொடுக்கும்போது அப்படித்தான் வைத்திருக்கிறது. நம்மை ஸம்ஹாரம் செய்கிறவரிடம் பக்தியா உண்டாகும்? “ஸ்வாமி, என்னை ஸம்ஹாரம் பண்ணுங்கோ!” என்று வேண்டிக்கொள்ள யாராவது தயாராயிருப்பார்களா? ஜன்மா எடுத்து விட்டோமே என்று எத்தனைதான் வருத்தப்படுபவர்களாக இருந்தாலும், அதற்காக ப்ரம்மாவிடம் என்னதான் ‘கர்ர் புர்ர்’ என்று இருந்தாலும், அதே ஸமயத்தில் ஸம்ஹாரமாவதற்கு நாம் யாராவது ரெடியாக இருக்கிறோமா என்ன? நாம் பெரிய திட்டாக, வயிறெரிந்து சொல்வதே ஒருத்தர் சாகணும் என்று சபிப்பதுதான். இப்படிப்பட்ட சாபத்தைக் காரியமாகவே நடத்தி விடுகிறவனை அநுக்ரஹ மூர்த்தியாகக் கொண்டு எங்கேயாவது நமஸ்கரிக்க முடியுமா?

இன்னொன்றும் கவனிக்க வேண்டும். சிவன் – மஹேச்வரன், ருத்ரன், எதுவோ ஒரு பேர்; ஸம்ஹாரகர்த்தா என்பதுதான் பாயின்ட் – சிவன் ஸம்ஹாரம் செய்கிறார் என்னும்போது அவர் சாச்வதமாக ஜன்ம நிவ்ருத்தி கொடுக்கிறார் என்று அர்த்தமாகாது. முன்னேயே சொன்னேன்: ப்ரக்ருதி நியதியில் ஒரு சரீரம் ஜீர்ணமாகி மரணம் ஏற்பட்டாலும், கர்மாவைத் தீர்த்துக் கொள்வதற்காக இன்னொரு சரீரம் எடுத்துதான் ஆகணும். ருத்ரன் இந்த ஜன்மாவில் எடுத்த சரீரத்தைத்தான் நிவ்ருத்தி பண்ணுகிறானே தவிர, ஜன்மாவையே, கர்மாவையே நிவ்ருத்தி பண்ணிவிடவில்லை. நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்க வில்லையோ, ஒரேடியாக ஜன்ம நிவிருத்தி ‘கம்பல்ஸரி’ யாக கொடுக்கிறானென்றாலாவது, ‘அப்பா! ஜனன – மரண சக்கரத்திலிருந்து தப்பணும் என்று என் அஞ்ஞானத்தில் எனக்காகத் தெரியாவிட்டாலும், நீ பிடிவாதமாக என்னை விடுவிக்கிறாயே!’ என்று அவனை பக்தியோடு நமஸ்கரிக்கலாம். இது அப்படியும் இல்லை.

ப்ரளயத்தின்போது அவன் நம்மை ஸம்ஹரித்துத் தன்னிடம் லயப்படுத்திக்கொண்டு, அடுத்த ஸ்ருஷ்டிவரை, அதாவது நீண்டகாலம், ஓய்வு தரத்தான் செய்கிறான். ஆனாலுங்கூட ப்ரளயத்தை நினைத்து பயப்படத்தான் நம்முடைய அஞ்ஞான நிலையில் தோன்றுகிறதே தவிர, அதற்காக வேண்டிக்கொண்டு அவனை நமஸ்காரம் பண்ணணுமென்று நிச்சயமாகத் தோன்றவில்லை.

நெஞ்சில் கை வைத்துக்கொண்டு சொன்னால், நாமிருக்கும் ஸ்திதியில் நம்மில் யாரும் சாவை விரும்பவில்லை. எனவே சாவைக் கொடுப்பவனாகவே ஒரு மூர்த்தி இருப்பதற்காக அவனை நாம் உபாஸிக்க வேண்டியதில்லை. ஆனபடியால், “குருர் – தேவோ மஹேச்வர: தஸ்மை ஸ்ரீ குரவே நம :” என்றால் (சிரித்து) அடியோடு தப்பு!

“குருர் – விஷ்ணு:” இங்கேதான் (இப்படிச் சொல்கிற போதுதான்) மேல் பார்வையில், பக்தியுடன் நமஸ்காரம் செய்யலாம் மாதிரித் தோன்றுகிறது. விஷ்ணுதான் நம்மைப் பரிபாலிப்பவர், காப்பாற்றுபவர் என்பதால் அவர் செய்கிற ரக்ஷணைக் கார்யம் ரொம்ப நல்லதாக, நம் மனஸுக்கு ரொம்பப் பிடித்ததாக இருக்கிறது. ஆகையால் அவரை உபாஸிக்க வேண்டியதுதான். குருவானவர் விஷ்ணுவாக இருப்பாரானால், “குருர் விஷ்ணு: தஸ்மை ஸ்ரீ குரவே நம:” என்று அவருக்கு நிறைய நமஸ்காரம் பண்ணவேண்டியது தான் என்று தோன்றுகிறது. மேலோடு பார்க்கும் போது இப்படித் தோன்றுகிறது.

கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் அபிப்ராயம் மாறிப் போகிறது! விஷ்ணு பரிபாலனமூர்த்தி என்று பேர் வைத்துக் கொண்டிருப்பதிருக்கட்டும். நடைமுறையில், நம் வாழ்க்கையில், அப்படி ஆஹா என்று நாம் ஸந்தோஷப்படும்படி அவர் பரிபாலிப்பதாகத் தெரிகிறதோ? ‘அவர் காப்பாற்றுகிறார், நமக்கென்ன குறை?’ என்று யாருக்காவது அவர் செய்ததற்காகவும், செய்கிறதற்காகவும் நன்றியோடு நமஸ்காரம் செய்யவேண்டுமென்று தோன்றுகிறதோ? ‘இவர்தானே பரிபாலன மூர்த்தி என்கிறார்கள்? அதனால் இனிமேலாவது இன்ன இன்ன ஸெளக்யங்களைக் கொடுக்கட்டும்’ என்று இனிமேல் அவர் செய்யவேண்டியதற்காகத்தான் அவரை நமஸ்கரிப்போமேயொழிய இதுவரை செய்ததற்காகவோ, இப்போது செய்கிறதற்காகவோ மனம் நிறைந்து பண்ண மாட்டோம்! எல்லோருமே இப்படித்தான் இருக்கிறோம் என்று சொல்வதற்கில்லை – அப்படி நான் சொல்லியிருந்தால் ஸரியில்லை. ஆனால் மிகவும் பெரும்பாலானவர்கள் அப்படித் தான் இருக்கிறோம். ‘எப்படியெல்லாம் நமக்கு அநுக்ரஹம் பண்ணியிருக்கிறான்?’ என்று நிறைந்து இருக்கிறவர்கள் ரொம்பக் குறைச்சல். ‘நம்மை இப்படி வெச்சிருக்கானே, அதைக் கொடுக்கலையே, இதைக் கொடுக்கலையே!’ என்று மூக்கால் அழுகிறவர்கள்தான் மெஜாரிட்டி. 51% மெஜாரிட்டி இல்லை, 90-99% மெஜாரிட்டி! இப்போது நன்றாக வைத்திருக்கிறானென்று த்ருப்தியாயிருப்பவர்களில்கூட ரொம்பப் பேர் நாளைக்கும் அவனாக நன்றாக வைப்பான் என்று த்ருப்தியாக இருந்துவிடமாட்டார்கள். எதிர்காலத் தேவைகள், குறைபாடுகள் எதையாவது வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். இப்போது இங்கே மஹாவிஷ்ணு வந்து நின்று கொண்டு எல்லோரும் தங்களுக்கு என்னவாவது வேணுமானால் பெடிஷன் கொடுக்கலாம் என்று சொன்னால் நம்மில் ஒவ்வொருத்தரும் ஒரு பெரிய லிஸ்ட் வைத்திருப்போம்!

என்ன அர்த்தம்? பரிபாலன மூர்த்தி என்று பேர் வைத்துக்கொண்டிருந்தாலும் அவர் அந்தக் கார்யத்தை ஸரியாகப் பண்ணாததாகத்தான் நமக்கு உள்ளூற அபிப்ராயம் என்றே அர்த்தம்!

வாஸ்தவத்தில் அவர் பண்ணாமலில்லை. ப்ரம்மாவுக்குச் சொன்னதேதான் இவருக்கும். “நாம் கட்டிக்கொண்ட கர்ம மூட்டைக்காகத்தான் ப்ரஹ்மா நமக்கு ஜன்மா தருகிறாரே தவிர, அவராக நம்மைக் கஷ்டப்படுத்த வேண்டுமென்று அப்படிச் செய்யவில்லை. ஆனதினாலே, ‘ஏனையா, ஜன்மா கொடுத்தீர்?’ என்று அவரிடம் சண்டைக்குப் போவது விவேகமில்லை” என்று சொன்னேனல்லவா? அப்படியேதான் நமக்கு life -ல் இன்ன இன்னதான் மஹாவிஷ்ணு கொடுத்திருக்கிறார், இன்னதெல்லாம் கொடுக்கவில்லை, கொடுத்ததைவிட கொடுக்காததுதான் ரொம்ப ஜாஸ்தி – என்றால், இதற்குக் காரணம் நம் கர்மாவுக்கு இதுதான் நமக்கு ப்ராப்தி என்பதுதான். அவர் ஏதோ வேண்டுமென்றே கஷ்டப்படுத்துகிறார், கிராக்கி பண்ணுகிறாரென்று அர்த்தமேயில்லை. கர்மாவைப் பார்க்கிறார். அதை வைத்து இவ்வளவுதான் கொடுக்கணுமென்று கணக்குப் போட்டுக் கொடுக்கிறார்; அவரிஷ்டப்படி, மனம் போனபடி இல்லை. விவேகமுள்ளவர்கள் இப்படியே எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் நாம் அவிவேகிகள்தானே? விவேகம் வந்தவர்களாயிருந்தால் நமக்கு எதற்கு குரு? அது வருவதற்குத்தானே குரு என்று ஒருத்தர்கிட்டே போய் நிற்கிறோம்? இந்த நிலையில் விவேகிகளுக்கானதை நமக்குச் சொல்வதில் அர்த்தமில்லை. இப்படியிருக்கிறபோது, மஹாவிஷ்ணுவின் ரக்ஷிப்பு போதவில்லை, அவர் ஸரியாகப் பண்ணவில்லை என்று நமக்கு இருக்கிறபோது அவரை நமஸ்கரிப்பது, பக்தியோடு உபாஸிப்பது என்றால் எப்படி?

ஆனால், “ஸாக அடியுங்கோ, ஸ்வாமி!” என்று சிவனிடம் வேண்டிக்கொள்வதற்கு மனஸு வராது என்ற மாதிரியில்லாமல், “நன்னா ரக்ஷியுங்கோ, ஸ்வாமீ!” என்று விஷ்ணுவிடம் ப்ரார்த்தித்துக்கொள்ள இடமிருக்கிறதே – இதுவரை அவர் ரக்ஷித்து வருவது நமக்கு த்ருப்தியில்லையென்றாலுங்கூட இனிமேலாவது நன்றாகச் செய்யும்படியாக அவரிடம் ப்ரார்த்தித்துக்கொள்ள இடமிருக்கிறதே – அதனால் (அவர் இனி பண்ண வேண்டியதற்காக) நமஸ்காரம் செய்யலாமே என்றால்……ரக்ஷணத்துக்குத்தான் அவர் இருக்கிறார், அந்த உத்யோகத்தை அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்படியிருக்கும்போது நாம்போய் அவரிடம் ‘நன்னா ரக்ஷியுங்கோ!’ என்றால், அவர் ட்யூட்டியை செய்யாததாக நாம் குத்திக் காட்டுகிற மாதிரி ஆகாதோ? இப்படிக் கேட்டால் அவர் கோபித்துக்கொண்டு, “நீ சொல்லிக்கொடுத்துதான் நான் தெரிஞ்சுக்கணுமோ?” என்று செய்வதையும் குறைத்துக் கொண்டுவிட்டால் என்ன ஆவது? இருந்தாலும், குத்திக்காட்டிக் குற்றம் சொல்கிறாற் போலில்லாமல் விநயமாக இம்மாதிரி விண்ணப்பம் பண்ணிக்கொள்ளலாமோ என்று பார்த்தால்…….

ஸரி, நமஸ்காரம் செய்து அவரிடம் விண்ணப்பித்துக் கொள்கிறோம். அவர் என்ன சொல்வார்? யோசித்துப் பார்த்தால் அவர் என்ன சொல்வாரென்று ஊஹிக்க முடியும். “நானாக எதுவும் பண்ணுகிறதற்கில்லை. நாங்கள் மூன்று பேருமே எங்கள் இஷ்டப்படி எதுவும் பண்ணவில்லை. எங்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. ஸர்வ சக்தனான ஒரு பரமாத்மா கொடுத்திருக்கும் வேலையை, எல்லை போட்டுக் கொடுத்திருக்கும் வேலையையே, நாங்கள் செய்கிறோம். உங்கள் கர்மாவைக் கொண்டே இன்ன மாதிரிப் பிறப்பைக் கொடுப்பது என்று ப்ரம்மா வைத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பிறவியில், அதாவது பிறவி ஒவ்வொன்றிலும், உங்கள் கர்ம மூட்டையில் ஏதோ ஒரு அளவு நீங்கள் அநுபவிக்க வேண்டுமென்று பரமாத்மா நிர்ணயம் செய்திருக்கிறார். அந்த அளவு பார்த்தே உங்களுக்கு ஒவ்வொரு ஜன்மாவிலும் நான் ரக்ஷிப்புக் கொடுக்கிறேன். நிறைய ஸுக்ருதம் இருந்தால் – அது நீங்களே செய்ததுதான் – நிறைய ரக்ஷிப்புத் தருகிறேன். குறைவாக இருந்தால் குறைவாகத் தருகிறேன். நீங்கள் எத்தனை ரூபாய் வைத்திருக்கிறீர்களோ அதற்கான சரக்குத் தருகிறேன். கள்ள நோட்டு நீட்டினால் தண்டனை தருகிறேன். இப்படி பரமாத்மாவின் நிர்ணயப்படி ஒரு ஜன்மாவுக்கான அளவை நீங்கள் அநுபவித்தானவுடன் ருத்ரமூர்த்தி வியாதி, வக்கை என்று எதையோ அனுப்பி ஆயுஸை முடித்துவிடுகிறார். ஆகக்கூடி, இனிமேலே உங்களுக்கு நல்ல ரக்ஷிப்புக் கிடைக்கணுமென்றால் அதற்கு விசை உங்கள் கிட்டேயேதான் இருக்கிறது. ஸத்கர்மா நிறையப் பண்ண ஆரம்பியுங்கள். அப்போது நல்ல ரக்ஷிப்பு கொடுக்கும்படியாக என்னைப் பரமாத்மா வைப்பார். ஆனால் அதுவுங்கூட நீங்கள் ஆசைப்படுகிற மாதிரி இன்றைக்கு ஸத்கர்மா செய்தால் நாளைக்கே அதன் ஸெளக்ய பலன் கிடைத்துவிடுமென்று நான் ‘காரன்டி’ பண்ணத் தயாரில்லை. என்றைக்கோ, எந்த ஜன்மத்திலோதான் பலன் என்று பரமாத்மா தீர்மானம் செய்துவிட்டால் நீங்கள் என்னிடம் சண்டைக்கு வந்து ப்ரயோஜனமில்லை” என்று இப்படித்தான் மஹாவிஷ்ணு சொல்வார்.

இங்கே நன்றாக ‘க்ளிய’ராகிவிட்டது. இவரையும் நமஸ்காரம் பண்ண வேண்டியதில்லை என்று. இவரை, அவரை மூன்று பேரையுந்தான்! நடுவாந்தரத்திலே ஒன்று சொன்னாரோ இல்லையோ, ‘உங்களுடைய ரூபாய் எவ்வளவோ அதற்கேற்ற சரக்குத்தான்’ என்று. அதில் எல்லாம் முடிந்துபோய் விடுகிறது. ரூபாய்க்கு ஸரியாக சரக்கு தரும் வியாபாரியை யாராவது நமஸ்காரம் பண்ணுகிறோமா? [சிரிக்கிறார்.]

நாம் பண்ணுவதை வைத்து இப்படியிப்படிப் பலன் என்று முடிவெடுப்பவன் எவனோ ஒருத்தன். இந்த மூன்று பேரும் இல்லை. பரமாத்மா என்கிறவன். ஸர்வ சக்தனாக இருக்கிறவன். அவன் எடுத்த முடிவை இவர்களைக்கொண்டு அமல்படுத்துகிறான். இவர்கள் அவனிடமிருந்து பெற்ற ஸ்ருஷ்டி சக்தி, பரிபாலன சக்தி, ஸம்ஹார சக்தி ஆகியவற்றைக்கொண்டு தங்கள் ட்யூட்டியைச் செய்கிறார்கள். ட்யூட்டி செய்கிற ஆபீஸர்களிடம் நாம் போய் “இந்த ப்ரகாரம் பண்ணுங்கோ, அந்த ப்ரகாரம் பண்ணுங்கோ” என்று கேட்டு என்ன ப்ரயோஜனம்? ஒரு பக்கம் இது நமக்குப் பயன் தராத வியர்த்தமான காரியமென்பதோடு, இன்னொரு பக்கம் ஆபீஸர்களிடம் போய்த் தப்பான சலுகை கேட்டு லஞ்சம் கொடுக்கிற மாதிரியும் ஆகிறது. ஏற்கெனவே பலதினுஸாக (கர்மா) பண்ணிவிட்டுப் பரமாத்மாவிடம் மாட்டிக்கொண்டு முழிப்பது போதாதென்று, “என் தீர்ப்பை மாற்றச்சொல்லி என் சிப்பந்திகளுக்கே லஞ்சம் கொடுக்கப் பார்க்கிறாயா?” என்று வேறே… [பயப்படுவது போல] வேண்டாண்டாப்பா, நமக்கு இந்த த்ரிமூர்த்தி நமஸ்காரம்! இவர்களுக்கு நமஸ்காரம் (பண்ணுவது) என்ற அபிப்ராயத்துக்கே ஒரு நமஸ்காரம்!* [சிரிக்கிறார்.]

ஆக ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்களுக்கு, அவர்களாக ஏதோ செய்யக்கூடியவர்கள் என்னும்போதுதான், புராணாதிகளில் பல பேர் செய்திருப்பதுபோல நாமும் நமஸ்காரம் செய்து உபாஸிக்க இடமிருக்கிறதே தவிர, அவர்களுக்கு மேலே ஒரு பரமாத்மா ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்று திட்டவட்டமாக அதிகார எல்லை போட்டுக் கொடுத்து அவர்கள் அதன்படியே ஆபீஸ் பண்ணுகிறார்களென்று வைத்துப் பார்க்கும்போது இடமில்லை. இவர்களுக்கு நமஸ்காரமென்றால் அது மேலதிகாரியான பரமாத்மாவுக்கு அபசாரம் என்றாகி, அவன் அதற்காகவும் வேறு வைத்துத் தீட்டுவதாகத்தான் ஆகும்.

‘இந்த மூன்று பேர் இப்படி மூன்று ஆபீஸ் பண்ணுவது மட்டுமில்லை, இதற்கான சக்தியைப் பரமாத்மாவிடமிருந்து பெற்றிருப்பது மட்டுமில்லை, இவர்களுக்குள்ளே உட்கார்ந்திருக்கும் பரமாத்மாவுடன் இவர்கள் அப்படியே ஒன்றிப்போய் அவனாகவே இருந்துகொண்டு ஸர்வசக்தனான அவனைப்போல எதையும் செய்யக்கூடியவர்கள்; கர்மாவை மன்னித்தும் மீறியும்கூடப் பரமாத்மா பண்ணுவதுபோல, அல்லது கர்மாப்படியே நடப்பதை நாம் அழாமல், மூஞ்சியைச் சுளிக்காமல் சாந்தமாக ஏற்றுக்கொள்ளும் பக்வத்தை அவன் தருவதுபோல இவர்களும் தந்துவிடுவார்கள்’ என்று வைத்துக்கொள்ளும்போதுதான் இவர்களை நமஸ்கரித்து உபாஸிப்பதற்கு இடமிருக்கிறது.

எந்த தெய்வத்தையுமே இப்படி முழுமுதற் தெய்வத்தின் ஒரு தோற்றமாகக்கொண்டு, ஆனாலும், ‘குறிப்பாக இந்தத் தோற்றத்தில் இது இந்தக் காரியத்துக்கு அதிகாரம் வஹிக்கிறது. ஆனால் நாம் பூர்ணமாகச் மனஸை இதனிடம் கரைத்து வேண்டிக்கொண்டால் அதுவும் மனஸு கரைந்து, தான் பரமாத்மாவிலே கரைந்து, அந்த பரமாத்மாவினாலேயே நமக்கு நடக்கக் கூடிய எதையும் ஸாதித்துத் தந்துவிடும்’ என்று உபாஸனை செய்வதுதான் முறை.


* ‘திக்குக்கு ஒரு நமஸ்காரம்’ என்று ஒரு விஷயத்திற்கு முடிவாக முற்றுப்புள்ளி வைக்கும் அர்த்தத்தில் சொல்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is எதற்காக நமஸ்காரம்?
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  முழுமுதலாக வழங்கும் மூர்த்திகள்
Next