காஞ்சி-திருமலை புனித கால்நடைப் பயணம் - 6 October 2004
காலை ஐந்து மணிக்கு அரக்கோணம் கல்யாண மண்டபத்திலிருந்து மீண்டும் பாதயாத்திரை துவங்கியது. ஊர் எல்லையில் ஊர்காக்கும் முத்து மாரியம்மண் கோயில். கோயில் வளாகத்தில் பெரியவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும் அழகு திருக்கோல கட்டவுட்கள் வரவேற்பு வாஸகங்களுடன் முகமன் அமைக்கப்பட்டிருந்தது. கோயிலின் நுழைவாயில் அருகில் நீண்ட நெடிய சிலை ஒன்று போவோர் வருவோர் யாவருக்கும் அருள்பாலித்துக் கொண்டிருந்தது. தாய்க்கு தன் குழந்தைகளிடம் பாகுபாடு கிடையாது. தன்னிடம் வந்தாலும், வராவிட்டாலும் குழந்தைகளின் நலன் பேணுவது தான் தாயுள்ளம் என்பது உணர்த்துவதுபோல் அமைந்துள்ளது இந்த உயர்ந்த சிலை. அம்பாளஐ தர்சித்து வெளிவந்த பெரியவர்களை அம்மன் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற அன்பர்களின் கோரிக்கையை ஏற்று புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்தார்.
காலை 7.00 மணிக்கு தணிகைப்போளூர் கிராமம் சென்றடைந்தது பயணக்குழு. அங்கு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உறையாற்றினார்கள் பெரியவர்கள். முருகப் பெருமான் கோயில் கொண்டிருக்கும் திருத்தணிக்கு அருகாமையில் பள்ளியில் படிக்கும் பேறு பெற்றிருக்கிறார்கள் இந்த மாணவர்கள். மனதில் தெளிவை, மேற்கொள்ள வேண்டிய நல் வழியைத் ஏற்படுத்தித் தருவது கல்வி. இறைவனே சிலருக்கு பாட்டிற்கு அடியெடுத்துக் கொடுத்தாக வரலாறு உள்ளது. ஞானம் இறைஅருளால் கிட்டுவது சோம்பேரித்தனம், ஆடம்பரமின்றி மிகவும் எளிமையாக வாழ்ந்து தங்களுடைய தேவைகளையெல்லாம் தியாகம் செய்து முழு நம்பிக்கையுடன் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். இவர்களின் தியாகத்தை பெருமையை மாணவ மாழவிகள்ம உணர்ந்து தங்கள் படிப்பில் காலத்தை வீணடிக்காமல் அக்கரையாக கவனம் செலுத்தி படிக்க வேண்டும். பெற்றவர்களின் நம்பிக்கையை, கனவை சிதைத்து விடக்கூடாது. தாங்கள் நல்ல முறையில் கல்வி கற்க வாய்ப்பு வசதி இல்லாததால் கற்க முடியாத பெற்றோர்கள் அந்த நிலை தங்களின் சந்ததிக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் எல்லாவித கட்டுப்பாடுகளையும் சமாளித்து பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். இதனை பிள்ளைகள் மறந்து விடக்கூடாது. இவர்கள் நன்கு படித்து தேறி, தங்கள் குடும்பத்திற்கு, ஊருக்கு, படித்த பள்ளிக்கு நல்ல பெயர் கிடைக்க பாடுபட வேண்டும்.
வீட்டிலே பெற்றவர்கள் போன்று பள்ளியில் இவர்களுக்கு ஆசிரியர்கள்தான் பெற்றோர்கள். தாய் தந்தையர்களை மதித்து, போற்ற, வணங்கி வாழ்வதுபோன்று ஆசிரியர்களை மதித்து, மரியாதை செலுத்தி வாழ வேண்டும் மாணவ மாணவிகள்.
ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மாணவ மாணவிகளை கல்வியோடு நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடன் விளங்கி, நல் ஞானம் பெற்று வீட்டிற்கும் நாட்டிற்கும் தொண்டு செய்ய ஆசி வழங்கினார்கள்.
நெடுஞ்சாலையில் குளக் கரையில் இரண்டு ஆலயங்கள் உள்ளன. ஒன்று சித்தி விநாயகர் ஆலயம், மற்றொன்று சற்று உள்ளடங்கி உள்ள சுயம்பு லிங்கேஷ்வரர் ஆலயம். இந்த குளத்தில் தற்சமயம் நீரில்லை.
இந்தக் கோயில் எல்லைக்குள்ளே நெடுஞ்சாலைக்கு அருகில், அஸ்திவாரம்போட்ட அடையாளமாக ஒரு கல்வெட்டு உள்ளது. இங்கு ஒரு புத்த விகாரம் அமைப்பதற்காக 14-6-1993-ல் தாய்லாந்து புத்த அறவனடிகள் திரு. விசுத்தி ஜோதியானா அவர்களும் தமிழ்நாட்டைச் சார்ந்த ராஜன் போதி அவர்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார் என உள்ளது. இந்த கல்வெட்டு கேட்பார் கவனிப்பாரற்று சிதிலமாக உள்ளது.
காலை எட்டு மணிக்கு புதூர் கிராமத்தைச் சார்ந்த ஸரஸ்வதி நகரில் பூரண கும்பம் ஸ்ரீ பெரியவர்களுக்கு அளிக்கப்பபட்டு ஒரு சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்குள்ள விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பாக சந்தனக்காப்பு சாத்தப்பட்டிருந்தது. ஸ்ரீ பெரியவர்கள் இந்தக் கோயிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்றார்கள்.
அடுத்த கிராமத்துப் பஜனை குழு அங்கு வந்து பஜனை செய்தது. பக்திப் பரவசத்தில் தன்னை மறந்து பக்தர்கள் ஆடி தங்களின் பக்தியை வெளிப்படுத்தியது காண மிகவும் பரவசமாக இருந்தது. பெரம்பூரிலிருந்து மகளிர் குழு ஒன்று வந்து அருணகிரிநாதரின் ""திருப்புகழ்""பாடல்களை பாடினார்கள்.
ஸ்ரீ பெரியவர்கள் திருப்புகழ் புத்தகத்துடன் அமர்ந்து அவர்கள் பாடுவதை கேட்டு ரசித்து திருப்புகழ் பாடலின் பொருளை உணர்ந்து தன்மயமாகி நின்ற காட்சி வார்த்தையினால் விவரிக்க முடியாத ஒன்று. இந்தக் காட்சியினை கண்டவர்கள் மிகுந்த பாக்ய சாலிகள். நடைமுறை பாஷையில் சொல்ல வேண்டுமானால் கொடுத்து வைத்தவர்கள்.
மாலை 4.50 புறப்பட்டு சுமார் 20-ஆண்டுக்கு முன்பு துறவறம் மேற்கொண்ட உடன் கர்ணூலில் தான் மேற்கொண்ட புனிய பாத யாத்திரையை மேற்கொண்டு அப்போது இந்த இடத்தில் சிறிது தங்கி இருந்ததையும் தெரிவித்து இவர்கள் குடும்பம் எல்லா நலன்களும் பெற்று இன்புற்றிருக்க வாழ்த்தி ஆசி வழங்கினார்கள்.
மாலை 5.55-க்கு திருத்தணி வந்தடைந்த ஸ்ரீ பெரியவர்களை திருத்தணி தேவஸ்தானம் ஆலய மரியாதையுடன் யானை புடைசூழ கோயிலுக்கு வாகனங்கள் நேரிடையாக செல்வதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள பாதையினஅ முகப்பில் வரவேற்பு அளித்தது.
மாலை 6.20-க்கு தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்யாண மண்டபத்திற்கு ஸ்ரீ பெரியவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
இத்தருணத்தில் திருத்தணி சிறப்பினை சுருக்கமாக சொல்வது பொருத்தமாக இருக்குமென கருதி சில வார்த்தைகள்...
முருகப்பெருமான் தங்கியுள்ள இடங்களில் சிறப்பாக கருதப்படுபவை அவரின் ஆறுபடை வீடுகள். திருச்சீர் அலைவாய் என்கின்ற திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருவேறகம் என்கின்ற ஸ்வாமிமலை, பழமுதிர் சோலை, திருஆவினன்குடி என்கின்ற பழநி, குண்றுதோர் ஆடல் இதில் திருத்தணியும் சேரும். இந்த திருத்தணியின் உண்மைப் பெயர் செறுத்தணி. செறு என்றால் கோபம். அது தணிந்த இடம் என்று பொருள்பட செறுத்தணி என இருந்தது நாளடைவில் மருவி திருத்தணி ஆகிவிட்டது. அருணகிரிநாதகும் திருத்தணி என்றே தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
வேடனாகி, வேங்கை மரமாகி, விருத்தனாகி பல வேடங்கள் தாங்கி பின் தமையனின் உதவியோடு புறமகள் வள்ளியை கவர்ந்து முருகன் மணந்த வரலாறு யாவரும் அறிந்த சுவையான நம்பிராஜன் படையுடன் எதிர்க்க, அந்த படையினை வெற்றிவாகை சூடியும், கோபம் தணியாமல் இருந்த கந்தனின் கோபம் இந்த குண்றின்மேல் வந்தவுடன் தணிந்ததின் காரணமாக செறுத்தணிந்த இடம் என்று பெயர் பெற்றது.
ஸங்கீத மூம்மூர்த்திகளில் ஒருவராகிய முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவர்கள் முருகப் பெருமானின் அருளினால் சிறந்த வாக் ஜேய காரராகியும் இந்த இடத்தில்தான் தன்னுடைய கீர்த்தனைகளில் தன் முத்திரையாக முருகப் பெருமானின் அருளுக்கு நன்றி சொல்லுமாப்போல ''குரு குகன்''என்று ஒவ்வொரு கீர்த்தனைகளிலும் உபயோகப்படுத்தியுள்ளார்.
கல்யாண மண்டபத்தில் மக்கள் திரண்டு இருந்தனர். பெரியவர்கள் உரையாற்றியதின் சாரம்: பாரத தேசம் ஒரு புண்ணிய நாடு. இதற்கென தனிச்சிறப்புகள் உண்டு. பல க்ஷேத்ரங்கள் உள்ளன. பன்னிரண்டு ஜ்யோதிர் லிங்கங்கள் உள்ளன. நேபாளத்தில் உள்ள காட்மாண்டுவில் பசுபதிநாதர் கோயில் உள்ளது. ஐந்து முகம் கொண்ட லிங்கம். பசு என்ற சொல்லுக்கு மக்கள் என்றும் ஒரு பொருள் உண்டு. ஞானம் வரும் வரை யாவரும் பசுக்களே. அவர் அறம், பொருள், இன்பம் என இவை கடந்து ஞானமே சித்திக்கும் வரை உள்ள பசுக்களுக்கு தலைமை ஏற்று நல்வழி நடத்தி செல்லும் தலைவன் என்பதால் பசுபதி. இந்த பாரத பூமியில் ஐம்பத்தொரு சக்தி பீடங்கள் உள்ளன.'சாரதாம்''என்று அழைக்கப்படும் சோமநாதம், ராமநாதம், ஜகன்நாதம், துவாரகநாதம்/கேதாரநாதம் என்பவற்றை ஆண்க்கொரு முறையாது சென்று தரிசித்து வரும் வழக்கம் வழக்கில் உள்ளது. ஏழு மோக்ஷபுரிகள் அயோத்தி, வடமதுரை, மாயா என்கிற ஹரித்வார், காசி, காஞ்சி, அவந்திகா என்கிற உஜ்ஜயினி, துவாரகா என்ற உள்ளன. இவை யாவை பக்தியை வளர்த்த நகரங்கள். சில பகவான் அவதரித்து திருவிளையாடல் புரிந்த நகரங்கள். இவைகள் யாவும் க்ஷேத்திரங்கள். புண்ணிய தீர்த்தங்கல் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ளது காவேரி. ""கா""என்ற எழுத்துக்கு பாபத்தை போக்கடிக்கக்கூடியது எனவும், விரும்பிதை அளிக்க்கூடியது ""வே""என்ற எழுத்தினாலும் மோக்ஷத்தை அளிக்க்கூடியது ""ரி""என்ற எழுத்தினும் பொருள்படும்படியாக காவேரி என்ற பெயர் அமைந்துள்ளது. மனித பிறவியின் லக்ஷியமே வீடுபேறு அடைவதுதான். புண்ணியம் என்பது நாமே நற்செயல் புரிவதாலும், நற்செயல் புரிவபர்களுக்கு உதவுவதாலும் கிடைப்பது. மனத்திலிருந்து பக்தி என்றும் விலகவே கூடாது. பல புண்ணிய ஆத்மாக்கள் இந்த பாரத தேசத்தில் வாழ்ந்ததால்தான் இந்த தேசமே புண்ணிய பூமியானது. இந்த தேசம் கர்ம, ஞான, தவ, தியாக பூமியாக திகழ்கிறது.
இராமாயணம்