Page load depends on your network speed. Thank you for your patience.

Loading...

விநாயகரும் தமிழ் மொழியும்

விநாயகரும் தமிழ் மொழியும்

கலாசாரத்தில் பாஷை முக்யம். அதை வைத்துத்தானே ஸமய ஸம்பந்தமான நூல்கள், அறிவை வளர்த்துக்கொடுக்கும் நூல்கள், மனஸுக்கு ரஞ்ஜகமான மற்ற கதை, கவிதை, காவ்யம், எல்லாம்? அப்படியிருக்கப்பட்ட தமிழ் பாஷைக்கு விக்நேச்வரர் ரொம்ப முக்யம். எது ஒன்று எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு ஸாமான் லிஸ்ட் எழுதினால்கூட ஸரி, முதலில் என்று பண்ணுகிறோம்? 'பிள்ளையார் சுழி' என்றுதானே போடுகிறோம்? எடுத்துக்கொண்ட கார்யம் சுழித்துப் போகாமல் ரட்சித்துக் கொடுப்பதற்காக முதலில் பிள்ளையார் சுழி!'பிள்ளையார் சுழி' என்ற அர்த்தத்தில் ஸம்ஸ்கிருதம் உள்பட இந்த தேச பாஷைகளில் வேறே எதிலும் இப்படி மங்களாரம்ப ஸிம்பலாக ஒன்று இல்லை. இது தமிழ் மொழியின் பாக்யம். 'பாத்யதை' என்று சொல்லி சண்டை கிளப்பாமல் 'பாக்யம்' என்று சொல்லி நமஸ்காரம் பண்ணுவோம்.

முத்தமிழை அவர் ஆதியிலேயே மேரு மலையில் எழுதியிருக்கிறாரென்று ஒரு அபூர்வமான தகவல் அருணகிரிநாதர் கொடுத்திருக்கிறார். திருப்புகழ் பாராயணம் ஆரம்பிக்கும் போது பாடும் 'கைத்தல நிறைகனி' பாட்டில்

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய முதல்வோனே

என்று ஒரே 'மு' மயமாக மோனை வைத்துப் பாடியிருக்கிறார். எவ்வளவோ தேடியும், விஷயம் தெரிந்த புலவர்களைக் கேட்டுங்கூட 'அல்யூஷன்' (பாடல் குறிக்கும் பூர்வ கதை) அகப்படவில்லை. ஆகக்கூடி, வ்யாஸருக்காக பாரதம் எழுதுவதற்கு முந்தியே, 'முற்பட' என்று பாட்டில் வருகிறதற்கேற்க, பிள்ளையார் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் நூல்களை எழுதினதாக ஏற்படுகிறது.

படிக்க ஆரம்பித்தவுடனே நாம் கற்றுக் கொள்வது ஓளவைப்பாட்டி உபதேசங்களைத்தான். அந்தப் பாட்டி யாரென்றால் பிள்ளையாரின் பரம பக்தைதான். வாக்கு உண்டாகிறதற்கே பிள்ளையார் பாதத்தைத்தான் பிடித்தாகணும் என்று அவள் கற்றுக் கொடுத்து நாம் குழந்தையாயிருக்கும் போதே பாடம் பண்ணுகிறோம் 'வாக்குண்டாம்':வாக்கு உண்டாகும். வாக்கு மட்டுந்தானா? சும்மாவுக்காக வாக்கு - பேச்சு அழகாக ஜோடித்துவிட்டால் போதுமா? நல்ல மனஸைப் பெற்று அந்த மனஸிலிருக்கிற நல்ல எண்ணங்கள், கருத்துக்கள் வாக்கில் வந்தால்தானே நமக்கும் புண்யம், பிறத்தியாருக்கும் உபகாரம்? அந்த நல்ல மனஸு, இன்னும் வாழ்க்கை ஸெனக்யமாக அமைவதற்குத் தேவையான லக்ஷ்மி கடாக்ஷம் எல்லாமே ஒரே குறியாக- 'தப்பாமல்' என்று போட்டிருக்கிறாள், அவள்தான் போட்டாளோ, அதுவே தான் விழுந்ததோ? ஒரே குறியாக - அவர் பாதத்தைப் புஷ்பார்ச்சனை பண்ணிப் பிடித்துவிட்டவர்களுக்குக் கிடைத்துவிடும் என்று அந்தப் பாட்டி நமக்குப் பாடிக் கொடுத்திருக்கிறாள்.

வாக்குண்டாம், நல்ல மனம் உண்டாம், மாமலராள்

நோக்குண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

'மேனி நுடங்காது' என்றால் 'சரீரத்தைக் கஷ்டப்படுத்திக் கொள்ளாமல்' என்று அர்த்தம். 'பிள்ளையாரை உபாஸிக்கிறதற்குப் பெரிசாக ஒன்றும் ஹடயோகம், பட்டினி உபவாஸமெல்லாம் வேண்டாம். உடம்பை சிரமப்படுத்திக் கொள்ளாமல் நாலு பூவைப் பறித்துப் போட்டுவிட்டாலே போதும்' என்கிறாள். 'துப்பார் திருமேனி' என்றால் பவளம் மாதிரிச் செக்கச் செவேலென்று அவர் சரீரம் இருப்பதாக அர்த்தம். 'பவளம் போல் மேனி' என்று அப்பர் ஸ்வாமிகள் நடராஜாவைச் சொன்னாற் போலவே அந்த அப்பனுடைய பிள்ளையும் இருக்கிறார்!ஆனால் 'தாயைப் போலப் பிள்ளை' என்று தானே வசனம் என்றால் அந்தத் தாயாராம் நம்முடைய காமாக்ஷியாயிருக்கிறபோது செக்கச் செவேல் தான்!


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is அதிகபட்ச ஆலயம் கொண்டவர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  வாக்கு - மனங்களுக்கு அருள்   :   தர்மத்திலிருந்து மோட்சம் வரை
Next