மதச் சுதந்திர உரிமையும் மதமாற்றமும்

மதச் சுதந்திர உரிமையும் மதமாற்றமும்

மேற்சொன்ன மதாபிவிருத்தியில் மதப் பிரசார விஷயமாக ஒரு கிளையம்சத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். கிளை எனினும் இதுவே மேற்சொன்ன எல்லா அம்சங்களையும் கிளைகளாகக் கொண்ட அடிமரமும் வேருமாக மதிக்கத்தக்க ஆதாரமான விஷயமாகும்.

அதாவது அரசியற் சுதந்திரம் பெற்ற நம் நாட்டு மக்கள் யாவரும் மதச் சுதந்திரமும் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தின் மீதுதான் மேற்சொன்ன யாவுமே கூறப்பட்டன. அதற்கு நமது அரசியல் நிர்ணயச் சட்டம் நிச்சயமாக உறுதி கூறும் என்ற நம்பிக்கையின் மீதே கூறப்பட்டன. இது ஒருவர் தமக்கு விருப்பமான மதத்தைத் தழுவியிருக்கும் சுதந்திரத்தைப் பெற்றிருப்பதற்குச் சட்டபூர்வமாக உரிமை வழங்குவதேயாகும். அவ்வாறு ஒருவருக்கு விருப்பமானது என்பது மிக மிகப் பெரும்பாலும் அவர் எம்மதத்தில் பிறந்தாரோ அதுவாகத்தானிருக்கும். உடன் வாழும் பெற்றோர், சகோதரர் ஆகியோரைப் போலப் பிறந்த காலம் தொட்டுப் பழகிய அம்மதமே ஒருவருக்கு விருப்பமானதாக இருப்பதே பொது இயற்கை. எனினும் சிலருக்கு வேற்று மதத்தில் விருப்பம் ஏற்படலாம். அல்லது எம்மதத்தையும் விரும்பாத நிரீச்சுவர வாதத்தில் விருப்பம் ஏற்படலாம். எவ்வாறாயினும், அவரவரும் மதம் குறித்த எந்த விருப்பத்தையும் பற்றியழுகுவதற்கு உரிமையளிப்பதே மதச் சுதந்திரமளிப்பதாகும்.

சாத்திரப்படி தாய்மதத்தைத் துறப்பது பெற்ற தாயைத் துறப்பது போன்ற பாபமாகவே கருதப்படுகிறதெனினும், சாத்திர வழிகளைச் சந்தர்ப்பத்தையட்டி மாற்ற இடம் தராமல் உள்ளபடி இரட்சிப்பதே மதத் தலைவர்களான எம் போன்ற மடத்தலைவர்களின் கடமையெனினும், தற்போதுள்ள ஜனநாயக - தனிநபர்ச் சுதந்திரங்களின் தீவிரமான சூழ்நிலையில் அரசாங்கப் பூர்வமாக இந்நாட்டில் சாத்திர வழியைத்தான் அமல்படுத்த வேண்டும்ட என்று கட்டாயப்படுத்துவதற்கு இடமே இல்லை என்று ஆகிவிட்டதால், இவ்விஷயத்தில் எவரும் தமது விருப்பப்படி எந்த மதத்தையும் தழுவ சுதந்திரம் உண்டு என்று மாற்றுக் கருத்தை மதித்துத்தானாக வேண்டியுள்ளது என்ற நிர்ப்பந்த நிலையிலேயே இவ்வாறு கூற முற்பட்டோம்.

பிரஜைகள் மதச் சதந்திரம் பெற்றுள்ள இந்நிலையில், எல்லா மதத்தலைவர்களும் மதாபிமானிகளுக்கும் தத்தமது மதங்களின் கொள்கைகளையும், வழிபாடு முதலான செயலுருவிலான வழிமுறைகளையும் தாங்கள் பின்பற்றுவதோடு, பிறருக்கும் பரப்பிப் பிரசாரம் புரியவும் சுதந்திரமான சட்டவுரிமை இருத்தல் வேண்டும். அந்தப் பிரசாரம் அவர்கள் தங்களுக்கே அதில் ஆழ்ந்த ஈடுபாடும் அநுபவ அறிவும் ஏற்படுத்திக் கொள்வதற்கும், அம்மதஸ்தர்களாகவே உள்ள பிறருக்கும் அவற்றை ஊட்டவும், மொத்தத்தில் பரஸ்பரம் மதத்தினால் தாங்களும், தங்களால் மதமும் இரட்சணை பெறுவதற்குப் பேருதவி புரிவதாகவும் இருக்க வேண்டும்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is மத விஷயங்களில் மக்கள் ஆதரவே மூலதனம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  பிரசாராமும் துஷ்பிரசாரமும்
Next