அரசு மதம்’

இங்கு ஒரு கருத்துத் தெரிவிக்க விரும்புகிறோம். ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்கள் பலகாலமாகப் பின்பற்றும் ஒரு மதத்தை State Religion என்பதாக அரசாங்கத்தின் மதமாக வைத்துக் கொண்டு, மற்ற எல்லா மதத்தினரும் அவரவருடைய மதத்தைப் பின்பற்றச் சம சுதந்திரமளித்து, அரசாங்கப் போஷணையில் ஏற்றத் தாழ்வின்றி சகல மதங்களையும் ஒன்றாக நடத்தும் ஆட்சி முறையும் உண்டு. நமது நாட்டில் இவ்வாறு ஹிந்து மதம் எனப்படும் சநாதன தர்மத்தையே முற்கால மன்னர்களில் மிகப் பெரும்பாலோர் அரசாங்க மதமாகக் கொண்டு, அவர்களில் ஓரிரு விதிவிலக்குகள் தவிர ஏனைய எல்லோரும், பிற மதங்களின் வளர்ச்சிக்கும் பேராதரவு கொடுத்து வந்திருக்கின்றனர். நவீன முன்னேற்றத்தில் முதலிடம் பெற்றதாகப் பெயரெடுத்த இங்கிலாந்து இன்றும் தனது மதாபிமானத்தில் பிறந்த தெய்வ நம்பிக்கையைக் காட்டுவதாக “God save the King” என்பதைத் தேசீய கீதமாகக் கொண்டுள்ளது. அது மாத்திரமின்றி, அவ்வரசரின் பல கடமைகளில் ஒன்றாக மதத்தைக் காப்பாற்றும் Defender of the Faith – ஆக இருப்பதையும் வகுத்துத் தந்துள்ளது. மேலும் அதில் மதம் என்று இருப்பதைக் குறிப்பிட்டதொரு மதமேயான Church of England என்பதாகக் கொண்டு, பார்லிமெண்டின் பார்வையிலேயே அதை நிர்வகிக்கிறது. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே சுதந்திர பாரதத்திலும், மிகப் பெரும்பாலோர் பின்பற்றுவதும் தற்போது உலகில் வழங்கும் எல்லா மதங்களுக்கும் முற்பட்டதும், பல பிற மதங்களுக்கும் ஆதாரக் கொள்கைகள், சடங்குகள் ஆகியவற்றை அளித்துள்ளதும், இவற்றினும் முக்கியமாக, பல்வேறு மதங்களும் ஒரே மெய்ப்பொருளை அடைவிக்கும் பல்வேறு வழிகள்தாம் எனப் பரந்த திருஷ்டியுடன் கூறி அவற்றின் உரிய வளர்ச்சிக்கும் ஆதரவு தரும் ஒரே மதமாகத் திகழ்வதும், அதனினும் முக்கியமாக, தான் விமரிசையாகக் கொடிகட்டிப் பறந்த பொற்காலத்திலுங்கூட மதமாற்றத்தில் புகாததுமான ஹிந்து மதத்தைச் சுதந்திர பாரதத்தின் அரசாங்க மதமாகப் பிரகடனம் செய்ய மிகுந்த நியாயமிருப்பதாகக் கருதுகிறோம். இதனால் பிற மதங்களின் நியாயமான வளர்ச்சி ஒரு விதத்திலும் தடைப்படாது என்பது சரித்திர பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

எனினும் தற்போது இங்கு ஒரு மதத்தினரிடை உண்டான எதிர்ப்புணர்ச்சியினால் மாபெரும் கலவரமும் உயிர்ச்சேதமும் மானபங்கமும் நேரிட்டு, அந்தத் தவறான அடிப்படையிலேயே பாரதமாதா இரு கூறுகளாகத் துண்டாடப்பட்டிருப்பதைக் காண்கையில், இப்போதைக்கு பாரத நாட்டில் அதன் தாய் மதம் பெறுவதற்குரிய விசேஷ அந்தஸ்தையும் விட்டுக் கொடுத்து, அரசாங்க மதம் என எந்த ஒன்றையும் கொள்ளாது, ஆயினும் எல்லா மதங்களுக்கும் ஆதரவு தரும் கொள்கைக்கு மாறுபடாதிருக்கும் வகையைச் சேர்ந்த செக்யூலரிஸத்தையே அரசாங்கம் கைக்கொள்வதற்குச் சம்மதிக்க வேண்டியதாக உள்ளது.