உள்ளத் தூய்மை உடல், உடை இவற்

உள்ளத் தூய்மை

உடல், உடை இவற்றுக்கு மேலாக ஒன்று இருக்கிறது. அதுதான் உள்ளம், மனம் என்பது. மனச் சுத்தம், உள்ளத் தூய்மைதான் மிக மிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும், உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனேயில்லை. மனசிலே அழுக்குப் படியாமல் அதை அவ்வப்போது தேய்த்துக் கழுவிக் குளிப்பாட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

மனசுக்கு ஏற்படுகிற அழுக்கு என்பது என்ன? தப்பு, தவறு செய்வதுதான் உள்ளத்துக்கு அழுக்கு. நாம் செய்கிற காரியங்களில் தவறு ஏற்படக்கூடாது. அதாவது கெட்ட நோக்கங்களுக்காகக் காரியம் செய்யவே கூடாது.

ஆனாலும் காரியம் என்று வந்து விட்டால் நல்லதைச் செய்கிறபோதுகூட அதிலே சில தப்பு, தவறுகள் நேர்ந்து விடலாம். இதனால் பெரிய குற்றம், அதாவது தோஷம் இல்லை. ரொம்பப் பெரியவர்கள்கூட எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிற போது அவர்களையும் கொஞ்சம் சறுக்கிவிட்டிருக்கிறது. நாமே எல்லாம் செய்து கொள்ள முடியும் என்று கர்வப்படாமல், பகவான் துணையால்தான் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் உணறுவதற்காகவே இப்படிச் சில தவறுகள் நேர்ந்துவிடுகின்றன. இம்மாதிரி சமயங்களில் நீங்கள் பகவானை வேண்டிக் கொள்வது தான் சரி. அதுவே அழுக்கைக் கழுவிவிடும்.