குரு தக்ஷிணை காண்டிக்யர் கேசித்வஜரிடம் ஸமாதானமாகப் போய் அறிவு தானம் பண்ணுவது அவரோடேயே வனத்தில் வஸித்துக் கொண்டிருந்த மந்த்ரி, புரோஹிதர்களுக்குப் ப

குரு தக்ஷிணை

காண்டிக்யர் கேசித்வஜரிடம் ஸமாதானமாகப் போய் அறிவு தானம் பண்ணுவது அவரோடேயே வனத்தில் வஸித்துக் கொண்டிருந்த மந்த்ரி, புரோஹிதர்களுக்குப் பிடிக்கவில்லை. ராஜ விச்வாஸத்தினாலேயே அவர்களுக்கு இப்படித் தோன்றிற்று. அவரிடம் வந்து, “உங்களிடமிருந்து ராஜ்யத்தை அவஹரித்த சத்ரு ஒண்டியாக வந்திருக்கும் இப்போது அவனோடு யுத்தம் செய்து ராஜ்யத்தைத் திரும்ப பெறுவதே செய்ய வேண்டியது. இவனுக்கா தர்ம சாஸ்த்ர உபதேசம் பண்ணுவது?” என்று தடுத்தார்கள்.

காண்டிக்யரோ, “நீங்கள் சொல்கிறபடி இவனை நான் கொன்றால் எனக்கு பூலோகம் ஸ்வாதீனமாகுமென்பது வாஸ்தவந்தான். ஆனால் நம்பிக்கையின் பேரில், தர்மம் தெரிந்து கொள்வதற்காக வந்து ப்ராணத் தியாகம் செய்வதால் இவனுக்கோ பரலோகமே அல்லவா ஸ்வாதீனமாகி விடும்? நம்பி வந்தவனுக்கு அறிவைத் தராமல் அடைத்து வைத்துக் கொண்ட எனக்கு அந்தப் பரலோகத்தின் வழி அடைத்துத்தானே போய்விடும்? தாற்காலிகமான இஹலோகத்துக்காக சாச்வதமான பரலோகத்தை இழக்கமாட்டேன்” என்று சொல்லி விட்டார்.

கேசித்வஜரைப் பார்த்து, “உன் தர்ம சாஸ்த்ர ஸந்தேஹத்தைக் கேள்” என்றார்.

கேசித்வஜர் விஷயத்தைச் சொன்னார்.

பாதி யஜ்ஞத்தில் பசு வதையானால் என்ன ப்ராயச்சித்தம் பண்ண வேண்டுமோ அது காண்டிக்யருக்குத் தெரிந்திருந்தது. தெரிந்ததைக் கொஞ்சம் கூட ஒளிக்காமல் சொன்னார். எதிரி அல்லவா அந்த ப்ராயச்சித்தத்தால் பயனடையப் போகிறவன் என்று பார்க்காமல் யதோக்தமாய் எல்லாம் உபதேசம் பண்ணினார்.

கேசித்வஜர் ரொம்பவும் ஸந்தோஷத்தோடு ராஜ்யத்துக்குத் திரும்பினார். ப்ராயச்சித்தத்தைப் பண்ணி விட்டு, அப்புறம் யஜ்ஞத்தையும் பூர்த்தியாக்கி அவப்ருத ஸ்நானம் செய்தார்.