கனவும், விளையாட்டும் நிஜமாக இல்லாததை ஒன்று, கனா என்று சொல்வோம்; அல்லது விளையாட்டு என்போம் எதுவோ ஒன்று நிஜமாக நடக்கப் போகிறது என்று எதிர்பார்க

கனவும், விளையாட்டும்

நிஜமாக இல்லாததை ஒன்று, கனா என்று சொல்வோம்; அல்லது விளையாட்டு என்போம்.

எதுவோ ஒன்று நிஜமாக நடக்கப் போகிறது என்று எதிர்பார்க்கிறோம். அது ஏமாற்றிவிட்டு ஓடிப் போய் விடுகிறது. ‘எல்லாம் கனாவாப் போச்சு’ என்கிறோம். அந்தக் கனவான பொய்ம்மாயமாகவே ஜகத்தைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன்.

விளையாட்டு என்பது நிஜமில்லாததுதான். ஏதோ சின்ன சொப்பை, பொம்மையை பெரிய அண்டான் குண்டான் மாதிரி வேஷம் கொடுத்து வைத்து, பாலப் பிராயத்துக் குழந்தைகள் அம்மா-அப்பா, தாத்தா-பாட்டி என்று தங்களுக்கு வேஷம் கொடுத்துக் கொண்டு பண்ணுவதுதான் விளையாட்டு. பெரியவர்கள் ‘ஸ்போர்ட்ஸ்’ என்று பண்ணும் விளையாட்டுகளும் வாழ்க்கையின் நிஜமான ப்ரச்னைகளுக்கு ஸம்பந்தப்படாமல், ஏதோ ஒரு பந்தை ஏதோ ஒரு goal-க்கு அடிக்க வேண்டும் என்று, காரணம் சொல்ல முடியாததான, வாழ்க்கைக்கு அவசியம் என்று சொல்ல முடியாததான காரியங்களாக இருக்கிறவைதானே? ‘எதற்காக மண்டையை உடைத்துக் கொண்டு ‘செஸ்’ காய்களைத் தள்ள வேண்டும்?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

“விளையாட்டுக்குச் சொன்னேன்: நிஜம்னு நினைச்சுட்டியா?” என்று கேட்கிறோமே, அங்கே நன்றாகவே தெரிகிறதோல்லியோ, விளையாட்டு என்கிறது நிஜமில்லை என்று! ‘விளையாட்டே வினையாச்சு’ என்றும் சொல்கிறோம். வினைதான் நிஜமாகவே நடப்பது. அப்படியானால், விளையாட்டு நிஜமில்லை என்றும், எதனாலோ அப்படிப்பட்டதுகூட நிஜமாகிவிட்டது என்றும்தானே அர்த்தமாகிறது?

‘மாயக் கனா’ என்கிறாற் போலவே ‘மாய விளையாட்டு’ என்று சொல்கிறதையும் கவனிக்க வேண்டும்.

இரண்டும் ஒன்றுதான் என்று ஆகிவிட்டதோல்லியோ?

அதிலே கனாவைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன். விளையாட்டைக் காட்டுகிறான் சிதம்பரத்து ஆட்டக்காரன்.

‘விளையாட்டு’, ‘விளையாடல்’ எல்லாம் ஆட்டம் என்கிறதிலேயே முடிவதாக இருக்கிறது. ஆடல் கலை என்கிறதும் ஒரு விநோத விளையாட்டுதான்! நிஜமாக வாழ்க்கையிலே எழும்பாத பாவங்களை உண்டாக்கிக் கொண்டு, வாழ்க்கைக்கு அவச்யம் என்று சொல்ல முடியாத ஜதி பேதங்களைப் போட்டுக்கொண்டு, இல்லாத பாத்திரங்களை இருக்கிறதாக வைத்துக்கொண்டு அபிநயம் செய்கிறதால் அது விளையாட்டுதானே? ‘நிஜம்’ என்று நாம் நினைக்கும் வாழ்க்கையே பொய்ம்மாயையாகிவிடும் அநுபூதி வரை அபிநயக் கலை அதன் உச்ச ஸ்தானத்தில் கொண்டு விட்டு விடுவதாகச் சொல்கிறார்கள். அப்படியானாலும், அதுவும் விளையாட்டில் ஆரம்பித்து விளையாட்டு விநோதமாகவே போவதுதானே? உச்சியான பூர்த்தி ஸ்தானத்தில் விளையாட்டே வினையாவதாகச் சொல்லலாம்! (ஸ்ரீசரணர் சிறிது பொழுது தமக்குள்ளேயே சிரித்துக் கொண்டிருந்து, பின்னர் தொடர்வார்: ) ஸரியாய்ச் சொன்னால், விளையாட்டால் வினையே போவதாகச் சொல்லலாம்!

அப்படிப்பட்ட நாட்டிய விளையாட்டாகவே இந்தப் பொய்ம் மாய ஜகத்தின் ஸ்ருஷ்டியிலிருந்து ஆரம்பித்து அதிலிருந்து விடுவித்து சிதம்பரமான ஞானாகாசமாகிற பரம ஸத்யத்தில் சிவமாகிற தன்னுடன் தானாகவே ஐக்கியப்படுத்திக் கொள்வதான அநுக்ரஹம் வரையில் ‘ஐந்தொழில்’கள் என்கிறவற்றைப் பண்ணி விடுபவன்தான் சிதம்பரத்து ஆட்டக்காரன். ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரம் (என்பவை) எல்லாருக்கும் தெரிந்த மூன்று தொழில்கள். இந்த மூன்றுமே பரம ஸத்யத்தை மறைத்து விடும் மாயை என்ற திரைக்குள் நடப்பவைதான்! அந்த மாயத் திரையைப் போட்டு மறைக்கும் ‘திரோதானம்’ என்பது நாலாவது தொழில். திரையை நீக்கி, ஞானாகாசத்தில் மோக்ஷமளிக்கிற ‘அநுக்ரஹம்’ ஐந்தாவது தொழில்.

சாந்தன் எனப்படுகிற பரமேச்வரன் ஆட்டமாக ஆடிப் பண்ணும் இதையே மாயா விநோதன் எனப்படுகிறவன் சாந்தமான தூக்கமாகப் பண்ணிக்காட்டுவதில் அந்த இருவரும், unity in diversity நிரூபித்துக் காட்டுகிறார்கள்.