தநுர்மாஸம், மார்கழி தநுர்மாஸம் என்றும், மார்கழி என்று தமிழில் திரிந்து வந்திருக்கிற மார்க்கசீர்ஷம் என்றும் இரண்டு பெயர் ஏன் என்றால், வருஷத்தைக் கணக்

தநுர்மாஸம், மார்கழி

தநுர்மாஸம் என்றும், மார்கழி என்று தமிழில் திரிந்து வந்திருக்கிற மார்க்கசீர்ஷம் என்றும் இரண்டு பெயர் ஏன் என்றால், வருஷத்தைக் கணக்குப் பண்ணுவதில் இரண்டு விதங்கள் இருக்கின்றன. அவற்றில் ‘ஸௌரமானம்’ என்பது ஸுர்யனை வைத்துப் பண்ணினது. பன்னிரண்டு ராசிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மாஸமாக ஸுர்யன் தாண்டிக்கொண்டே போய் ஒரு வருஷம் பூர்த்தியானவுடன் மறுபடி ஆரம்பித்த ராசிக்கே வருகிற மாதிரி பூமி அதைப் பிரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு போகும் போது தோன்றும். வாஸ்தவத்தில் ஸுர்யன் இருந்தபடிதான் மத்தியில் இருப்பது. பூமிதான் அதைச் சுற்றிக் கொண்டே போய் ஒரு வருஷம் ஆனதும் ஆரம்பித்த இடத்திற்கே வருவது. ஆனால் பார்வைக்கு மாறுதலாகத் தெரியும். பூமியின் அந்த ஒரு ஸுர்ய ப்ரதக்ஷிணம் மாஸத்திற்கு ஒரு ராசி வீதம் நடந்து 365 நாளில், அதாவது ஒரு வருஷத்தில் பன்னிரண்டு ராசியையும் ‘கவர்’ பண்ணிவிடுகிறது. இவ்வாறு உள்ளபடியே வைத்துக் கொண்டாலும் ஒரு ராசிக்கு வருஷத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கான காலம் பிடிக்கிறது என்ற fact நிற்கிறது. ஒவ்வொன்றின் பெயரிலுமாக, முதல் மாஸத்தை ‘மேஷம்’ என்கிற ராசியில் ஆரம்பித்து, அதற்கு மேஷ மாஸம் என்று பெயர் கொடுத்து, அப்படியே வரிசையாகச் சொல்லிக் கொண்டு போகிற போது ஒன்பதாவது மாஸம் தநுர் ராசியாக அமைவதால் அதற்கு தநுர்மாஸம் என்று பெயர்.

இன்னொரு விதக் கணக்குக்குச் சாந்த்ரமானம் என்று பெயர். சந்த்ரனை வைத்து கணக்குப் பண்ணுவதால் அப்படிப் பெயர். அதன்படி ஒரு க்ருஷ்ண பக்ஷம் ‘ப்ளஸ்’ ஒரு சுக்ல பக்ஷத்திற்கு எத்தனை நாள் பிடிக்கிறதோ அது ஒரு மாஸம். பெரும்பாலும் ஒரு க்ருஷ்ண பக்ஷ ப்ரதமையிலிருந்து அடுத்த க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை என்றே சாந்த்ரமானக்காரர்கள் அநுஸரிக்கிறார்கள். வடக்கே ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை ஒரு மாஸம் என்று வைத்துக் கொள்வதும் இருக்கிறது.

தமிழ் தேசத்தில் இந்தச் சாந்த்ரமான வழக்கே ரொம்ப காலத்துக்கு முன்னால் இருந்ததால்தான் மாஸத்திற்கே ‘திங்கள்’ என்று சந்த்ரனின் பெயரைக் கொடுத்திருக்கிறது.

இதில் எந்த நக்ஷத்திரம் ஒரு பௌர்ணமியன்று சந்திரனுக்குக் கிட்டேயிருக்கிறதோ அதன் பெயரையே அந்த மாஸத்திற்குப் பெயராக வைத்திருக்கிறது. சித்ரா நக்ஷத்திரம் பூர்ணிமை சந்திரனுக்குக் கிட்டேயுள்ள மாஸம்தான் சித்திரை, வைகாசம் அப்படி இருப்பது வைகாசி, தமிழில் அந்த நக்ஷத்ரப் பெயர்கள் ரொம்பவும் ரூப பேதம் (உருமாற்றம்) அடைந்து ‘ப்ரோஷ்டபதி’ என்ற நக்ஷத்ரப் பெயரிலான மாஸம் ‘புரட்டாசி’, ச்ராவண நக்ஷத்ர மாஸம் ‘ஆவணி’, ‘தைஷ்யம்’ என்பது ‘தை’ என்று இப்படியெல்லாம் ஆகியிருப்பதில்தான் ‘மார்க்கசீர்ஷம்’ என்பது ‘மார்கழி’ என்றாகியிருக்கிறது.

தாரா (தாரகை) மண்டலத்தில் ‘நக்ஷத்ரங்கள்’ என்று பிரதானமாக இருக்கிற இருபத்தேழும் ராசிக்கு இரண்டே கால் நக்ஷத்ரம் வீதம் பன்னிரண்டு ராசிகளில் கவர் ஆகி விடுகின்றன. ஒரு பூர்ணிமை நக்ஷத்திரத்திற்கு அடுத்த பூர்ணிமை நக்ஷத்ரம் இரண்டே கால் நக்ஷத்ரம் தள்ளி அடுத்த ராசியைச் சேர்ந்ததாக இருக்கும். இப்படி இருப்பதால் இங்கேயும் பன்னிரண்டு பூர்ணிமைகளில் – அதாவது பன்னிரண்டு மாஸத்தில் ஒரு வருஷ காலம் பூர்த்தியாகிவிடுகிறது…. மலமாஸம், அதிக மாஸம் என்று ரொம்ப detail-ல் போகாமல் சொல்லிக் கொண்டு போகிறேன்….

ஸௌரமானப்படி மேஷ மாஸம் என்பது இங்கே சித்திரை மாஸம். ரிஷப மாஸம் என்பது வைகாசி மாஸம். இப்படியே ஸௌரமான தநுர் மாஸம்தான் சாந்த்ரமான மார்க்கசீர்ஷமாகிற மார்கழி.

சிவ-விஷ்ணு அபேதம் போல் சைவ-வைஷ்ணவ ஸமரஸத்தைக் காட்டுவதாக ஈச்வரனுக்கு முக்யமான திருவாதிரை, பெருமாளுக்கு முக்யமான வைகுண்ட ஏகாதசி ஆகிய இரண்டு உத்ஸவங்களும் இந்த மாஸத்திலேயே வருவதால்தான் பகவத் கீதை விபூதி யோகத்தில், தாம் மாஸங்களில் மார்கழி என்று பகவான் சொல்கிறார் என்று தோன்றியதைச் சொன்னேன்.