ஸங்கீதத்தில் பாஷை-ஜாதிச் சண்டை எந்த field-ல் ஆகட்டும், ஸம்பந்தமில்லாமல் நம் பாஷை – பிறத்தியார் பாஷை, இந்த ஜாதி – அந்த ஜாதி என்று பேதம் கற்பித்து த்வேஷத்தை

ஸங்கீதத்தில் பாஷை-ஜாதிச் சண்டை

எந்த field-ல் ஆகட்டும், ஸம்பந்தமில்லாமல் நம் பாஷை – பிறத்தியார் பாஷை, இந்த ஜாதி – அந்த ஜாதி என்று பேதம் கற்பித்து த்வேஷத்தைப் பரப்பிக் கொண்டு வருவதாக தற்காலத்தில் ஒரு துர்பாக்கியமான போக்கு ஏற்பட்டிருக்கிறது. ஸங்கீதத்திலும் அப்படிக் கொண்டு வந்து, இப்போது த்ரிமூர்த்திகள் என்றே அதில் போற்றப் படுகிறவர்களையும் அவர்களுக்கு முந்தியே தமிழில் பாடிய கவிராயர், முத்துத்தாண்டவர் மாதிரியானவர்களையும் பாஷை, ஜாதி பேதத்தைக் காட்டிப் பிரித்து வைத்து, ஒரு த்வேஷ ப்ரசாரம் ஆரம்பித்திருப்பதாகக் கேள்வி. வாஸ்தவத்திலோ, அந்த மாதிரி பேத எண்ணத்தினால் அந்த த்ரிமூர்த்திகளை நிர்ணயம் பண்ணவேயில்லை. அந்தக்காலத்தில் இப்படியெல்லாம் பேதம் பார்க்கவேயில்லை. இப்போது என்ன பார்த்தோம்? அந்த இரண்டு பிராமணர்கள் ஒரு நீறுபூசி வேளாளரிடம் தமிழ் படித்திருக்கிறார்கள். அந்த ஆசிரியரோ அந்த சிஷ்யர்களைக் கொண்டே தம்முடைய பாட்டுக்களை ஸங்கீத ஸாஹித்யமாக மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்.

வாக்கேயக்காரர்கள் என்பதாக ஸாஹித்யம், ஸங்கீதம் இரண்டையும் ஒருத்தரே ஒன்றுசேர அமைப்பவர்களாக இருப்பவர்களுக்கே முதல் மரியாதை பண்ண வேண்டும் என்ற அபிப்ராயத்திலேயே த்ரிமூர்த்திகள் என்று தற்போதிருக்கிற அந்த மூன்று பேரை அப்படி உசத்தி வைத்திருக்கலாம். ஸங்கீதம் என்ற முறையில் ராகபாவம், தாளக்கட்டு ஆகியன எதில் என்ன தரம் என்று ஸங்கீத வித்வான்களுக்குத்தானே தெரியும்? அதைப் பார்த்துத்தான் அவர்கள் ஸாஹித்யகர்த்தாக்களுக்கு ஸ்தானம் கொடுத்தார்களே தவிர ஜாதியைப் பார்த்தோ, பாஷையைப் பார்த்தோ இல்லை. பாஷையைப் பார்த்திருந்தால் ஸம்ஸ்க்ருதத்திலேயே பாடிய தீக்ஷிதர் ஒருத்தரையே ஏக மூர்த்தியாக வைத்திருக்க வேண்டும். தெலுங்கிலே பாடிய (தியாகையர், சியாமா சாஸ்த்ரிகள் ஆகிய) இரண்டு பேரை – மூன்றிலே இரண்டு மெஜாரிட்டியாக – சேர்த்து த்ரிமூர்த்தியாக்கியிருக்க வேண்டியதில்லை. துரதிருஷ்டம், அந்த மூன்று பேரும் ஒரே ஜாதியாய் இருந்துவிட்டார்கள்! அதனால் தான் ‘டிஸ்க்ரிமினேஷன்’ குற்றச்சாட்டு!

உள்ளதை உள்ளபடி பார்த்துத்தான் – இல்லாத, பொல்லாத உள்நோக்கங்கள் கற்பிக்காமல் – எல்லா ஜாதி ஸங்கீத வித்வான்களும் பாடி வந்திருக்கிறார்கள். ஐயர்வாள் க்ருதிகளை விசேஷமாகப் பிரசாரம் செய்தவர்களில் முக்யமான இரண்டு பேர் காஞ்சீபுரம் நாயனாப்பிள்ளையும், கீவளூர் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையும் ஆவார்கள். ச்யாமா சாஸ்த்ரி க்ருதிகள், தீக்ஷிதர் க்ருதிகளில் கூட அநேகம், வீணை தனத்தின் மூலம்தான் பிரசாரத்திற்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. மேளக்காரர்கள் ஏராளமாக த்யாகையர் க்ருதிகளையே வாசித்து வந்திருக்கிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் (பூணூல் போட்டிருப்பது போல் ஜாடையில் காட்டி ஸ்ரீசரணர் சொல்கிறார்: )… வித்வான்கள் நிறையவே தமிழ்ப் பாட்டுக்கள், கவிராயர் – முத்துத்தாண்டவர் – மாரிமுத்தா பிள்ளை – பாபவிநாசம் முதலியார் முதலியவர்கள் போட்ட பாட்டுக்கள், தாயுமானவர் பாடல்கள், அருட்பா, அப்பர் ஸ்வாமிகள் தேவாரம் எல்லாம் பாடித்தான் வந்திருக்கிறார்கள். நானும் குழந்தை நாளிலிருந்தே பாட்டுக் கேட்டிருக்கிறேன்; ஸ்வாமிகளானதற்கு அப்புறம் ஐம்பது வருஷத்திற்கு மேலாக எல்லாப் பெரிய வித்வான்களும் இங்கேயே வந்து பாடியிருக்கிறார்கள்; மேளம் – வீணை – ஃப்ளூட் இத்யாதிகளும் வாசித்திருக்கிறார்கள். பாட்டு ஸெலக்‌ஷனில் ஜாதி வித்யாஸம், பாஷா வித்யாஸம் கொஞ்சங்கூடத் தலை தூக்கினதாகத் தெரிந்ததில்லை.

‘பேதமே வேண்டாம்; ஸமரஸம், ஸமரஸம்’ என்று சொல்லிவிட்டு, அதைப் பற்றிப் பேசியே சர்ச்சை மூட்ட வேண்டாம்! விஷயத்திற்குப் போகிறேன். ஏற்கனவே ரொம்ப ‘டிலே’ பண்ணியாச்சு!....