ஸ்வாதீனம் காட்டும் ஆனந்த பக்தி இப்படி மணிமணியாக இரண்டு பாட்டுக்கள் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரனையும் சிதம்பரத்து ஆட்டக்காரனையும் கேள்விக்கு மேல் க

ஸ்வாதீனம் காட்டும் ஆனந்த பக்தி

இப்படி மணிமணியாக இரண்டு பாட்டுக்கள். ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரனையும் சிதம்பரத்து ஆட்டக்காரனையும் கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டு இரண்டு பாட்டுக்காரர்கள் போட்டவை. ஒருத்தர் தூக்கக்காரனைப் பாட்டாலேயே ஆட்டி அசக்கி எழுப்பி விடுகிறாரென்றால், மற்றொருத்தரோ ஆட்டக்காரனையே ஆட்டி வைத்து விடுகிறார்!

மூக்கைச் சிந்திப் போட்டுக்கொண்டு எதற்காகவாவது ஸ்வாமியிடம் அழுவதுதான் பக்தி என்றில்லாமல், ஸ்வாதீனத்துடன் அவனிடம் ஆனந்தமாகக் கேள்வி கேட்டுக் குடைவதும் பக்திதான் என்று நமக்குத் தெரிவித்து, கேட்கிறபோதே நமக்கும் அந்த ஆனந்தம் தரும் பாட்டுக்கள்!