ராம பிரானும் அக்னி ஸாக்ஷியும் தாம்பத்யம் தான் இப்படிச் செய்வது வழக்கமாயிருந்தாலும் ‘ஸக்யம்’ என்கிற நட்பும் அக்னி ஸ

ராம பிரானும் அக்னி ஸாக்ஷியும்

தாம்பத்யம் தான் இப்படிச் செய்வது வழக்கமாயிருந்தாலும் ‘ஸக்யம்’ என்கிற நட்பும் அக்னி ஸாக்ஷியாகப் பண்ணிக் கொண்ட ஒரு அபூர்வமான ஸம்பவம் ராமாயணத்தில் வருகிறது. இன்றைக்கு “ராமர் ஸாக்ஷியா சொல்றேன்” என்று சொல்கிற பல பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தெய்வ ராமரே மநுஷ்யராக நடித்ததால் அக்னியை ஸாக்ஷி வைத்துக் கொண்டிருக்கிறார். ‘ஸுக்ரீவ ஸக்யம்’ என்று கேட்டிருக்கலாம்.

ஸீதாபஹரணத்திற்கு அப்புறம் ராம லக்ஷமணாள் அவளைத் தேடிக்கொண்டே கிஷ்கிந்தைக்கு வருகிறார்கள். அவர்களை ஹநுமார் ஸந்திக்கிறார். ராமர் ராஜ்யத்தை இழந்து விட்டுக் காட்டுக்கு வந்திருக்கிறாரென்றால் ஹநுமாரின் யஜமானனான ஸுக்ரீவனும் அப்போது அதிகாரத்தை இழந்து விட்டு கிஷ்கிந்தாபுரியிலிருந்து ரிச்யமூக பர்வதத்துக்கு வந்து ஒளிந்து கொண்டிருக்கிறான்; இவர் மாதிரியே அவனும் பத்னியைப் பறிகொடுத்திருக்கிறான். இப்படி ஒரே மாதிரி கஷ்டத்துக்கு ஆளானவர்களுக்கிடையே பரஸ்பரம் ரொம்பவும் ‘ஸிம்பதி’ இருக்கும். அதை வைத்து இரண்டு பேரும் பரஸ்பர ஸஹாயம் செய்து கொண்டு இவர் அவன் கஷ்டத்தைப் போக்குவது, பதிலுக்கு அவன் இவர் கஷ்டத்தைப் போக்குவது என்று பண்ணிக் கொள்ளலாமே என்று ‘ஐடியா’ தோன்றுகிறது. ஸுக்ரீவனுடைய இரண்டு க‌ஷ்டங்களுக்கும் காரணம் அவனுடைய அண்ணாவான வாலிதான். மஹாவீரரான ராமர்…

மஹாவீர்ர் என்றால் இப்போது ஜைன மதஸ்தாபகரான வர்த்தமான மஹாவீரரைத்தான் நினைப்பதாயிருக்கிறது.  ஆதியிலே அந்தப் பேர் ராமசந்திர மூர்த்திக்கே இருந்திருக்கிறது. பவபூதி ராம சரித்திரத்தைத்தான் வால்மீகத்திலில்லாத ஒரு புது தினுஸுக் கதையாக ‘மஹா வீர சரிதம்’ என்று நாடகமாக எழுதியிருக்கிறார். நான் இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் வாலி ஸமாசாரமான கட்டத்துடன் அது அபூர்ணமாக – ‘இன்கம்ப்ளீட்டாக – நின்று போயிருக்கிறது. ஸொச்சம் கதையை வடக்கே ஒருத்தரும், தெற்கே இன்னொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் பூர்த்தி செய்திருக்கிறார்கள்.
’மஹாவீர’ப் பெயர் ஹநுமாருக்கும் உண்டு. நாம் ‘ஹநுமார்’ என்றும், தெலுங்கு தேசத்தில் ‘ஆஞ்ஜநேயலு’ என்றும், கன்னட தேசத்தில் ‘ஹநுமந்தையா’ என்றும், மஹாராஷ்ட்ராவில் ‘மாருதி’ என்றும் அதிகம் சொல்கிற அந்த ராமதாஸ ச்ரேஷ்டரை ஹிந்துஸ்தானி பேசும் மாகாணங்களில் ‘மஹாவீர்’ என்று சொல்வதே ஜாஸ்தி.

ராமர் மஹாவீர்ர் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.  அந்த மஹாவீரரைக் கொண்டு வாலியை வதம் செய்து ஸுக்ரீவனுடைய கஷ்ட்த்தைப் போக்குவது, ப்ரதியாக ஸுக்ரீவன் வானர ஸைன்யங்களைக் கொண்டு லோகம் பூராவும் ஸீதையைச் சல்லடை போட்டுச் சலித்துக் கண்டுபிடித்து, அவளைத் தூக்கிக் கொண்டு போன ராவணனை ஸபரிவாரம் ஹதம் பண்ணுவதில் ராமருக்கு ஸஹாயம் செய்வது என்று ஹநுமாரும் ராமலக்ஷ்மணர்களும் ஒரு ‘அவுட்லைன்’ போட்டுக் கொள்கிறார்கள். அதை அஸல் ‘ப்ளா’னாகவே ‘ராடிஃபை’ பண்ணுவதற்காக ஸுக்ரீவனிடம் அந்த இரண்டு பேரையும் ஹநுமார் தோளில் தூக்கிக் கொண்டு போகிறார்.

இங்கே ஒரு கேள்வி வரலாம். ராவணன் தான் ஸீதையைத் தூக்கிக் கொண்டு போனவனென்பது ராம லக்ஷ்மணாளுக்கும் தெரியும்; ஸுக்ரீவன்-ஹநுமாருக்கும் தெரியும். ராவணனை வழியில் பார்த்து, சண்டை போட்டு, குற்றுயிராகிக் கிடந்த ஜடாயு சொல்லி ராமலக்ஷ்மணாளுக்குத் தெரியும். ரிச்யமுகத்துக்கு மேலே ராவணன் ஸீதையோடு பறந்து போன போது ஸுக்ரீவனும் ஹநுமாரும் பார்த்திருக்கிறார்கள். ஸீதையும் அவர்களைப் பார்த்து, பிற்பாடு ராமர் அங்கே வந்தால் இவர்கள் அடையாளம் காட்ட இருக்கட்டுமே என்று தன் உத்தரீயத்தைக் கிழித்து அதில் நகைகளைக் கட்டி அவர்களிடம் போட்டிருக்கிறாள். இப்படியாக அவர்களுக்கு ராவணன் தான் ஸீதையைத் தூக்கிக் கொண்டு போனவன் என்று தெரிந்த அப்புறம் அவனுடைய ராஜதானியான லங்கா பட்டணத்தில் தான் அவளைச் சிறை வைத்திருப்பானென்று ஊஹம் பண்ணி, அங்கே படையெடுத்துப் போய்ச் சண்டை போட்டு, அல்லது ஸமாதானமாகவே முயற்சி பண்ணிப் பார்த்து அவளை மீட்க வேண்டியதுதானே? எதற்காக நாலு திசையிலும் ஆளனுப்பி லோகம் பூராவையும் சல்லடை போட்டுச் சலிக்கணும்? இப்படிக் கேள்வி வரலாம்.

பதில் என்னவென்றால், ராக்ஷஸ புத்தி ரொம்பவும் மாயாவித்தனம் பண்ணுவது. எதையுமே நேராகப் பண்ணாமல் சூதாகப் பண்ணுவதே அவர்கள் குணம். மாரீசன் மானாக வந்தது, ராவணன் ஸந்நியாஸி வேஷத்தில் வந்தது, கம்பராமயணப்படி சூர்ப்பனகை கூட ஸெளந்தர்யவதியாக ரூபமெடுத்துக் கொண்டு வந்தது என்கிற மாதிரி பெரிய பெரிய சூதுகளிலிருந்து ஆரம்பித்து ஸகல நடவடிக்கையிலும் ஒரு சூது, ஏமாற்று, ஒளிப்பு இருக்கிறாற் போலவே அவர்கள் பண்ணுவார்கள். ராவணனுக்கு  லங்காபுரி தான் ராஜதானி. லங்கா த்வீபந்தான் நேர் ராஜ்யமென்றாலும் அவன் த்ரிலோகத்திலும் கொடி கட்டிப் பறந்தவன். ஆனதினாலே யாரும் ஊகிக்கக் கூடிய லங்கையில் இல்லாமல் வேறே எங்கேயாவது தேசாந்திரத்தில், லோகாந்திரத்தில்கூட அவன் அவளை ஒளித்து வைத்திருக்கக் கூடியவன்.
அதற்கும் மேலே ஒன்று. அவளை அவன் வயிற்றிலேயே கூட ஒளித்து வைத்திருக்கக் கூடியவன்! புரிகிறதோல்லியோ? ராக்ஷஸர்கள் நர மாம்ஸ பக்‌ஷிணிகள். ‘பிசிதாசனர்’ என்று அவர்களுக்குப் பெயர். பிசிதம் என்றால் மாம்ஸம், குறிப்பாக நர மாம்ஸம். ‘அசனம்’ என்றால் ஆஹாரம். Cannibal என்கிறார்களே, அப்படிப் பட்டவர்கள் ராக்ஷஸர்கள். அதனால் ராவணன் ஸீதையை மிரட்டும்போது “இன்ன கெடுவுக்குள் நீ எனக்கு இணங்காவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன்” என்று மாத்திரம் சொல்வதில்லை’ “கொன்று தின்று விடுவேன்” என்று சொல்வது வழக்கம்!

அதனாலே ”ஸீதை எங்கே இருக்கிறாள் என்று தேடுவதற்கு, அவள் இல்லாமல் போய் விட்டாளா? அவன் அவளை ஒளித்து வைக்காமல் ஒழித்தே விட்டானா?” என்று கண்டு பிடிக்கும்படியும் இருந்தது. லோகம் பூராவும் தேடிப் பார்த்தால் தானே இதை நிச்சயம் செய்து கொள்ள முடியும்?

ராமலக்ஷ்மணாளை ஸுக்ரீவனிடம் ஹநுமார் சேர்த்த கதையிலிருந்தோம். அதைத் தொடர்ந்தே ராமரும் ஸுக்ரீவனும் ஸ்திரமான நட்பு ஒப்பந்தமாக ஸக்யம் செய்து கொள்கிறார்கள்.
கல்யாணத்தில் பாணிக்ரஹணம் செய்கிறது போலவே முதலில் ஸுக்ரீவன் தன்னுடைய கையை ராமர் பிடிக்க வேண்டும், அப்படிப் பண்ணி விட்டாலே ஃபார்மலான ஒப்பந்தமாகிவிடும் என்றுதான் நினைக்கிறான். ராமரிடம் கையை நீட்டுகிறான். பால காண்டத்தில் விவாஹ ஸமயத்தில் ஜனகர் ராமரிடம் ஸீதையின் கையைப் பிடிக்கச் சொல்லும்போது, “பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணினா” என்று சொன்னதன் அச்சாகவே இப்போது ஸுக்ரீவன், “க்ருஹ்யதாம் பாணினா பாணிம்” என்கிறான்.

வெள்ளைக்காரர்களைப் பரிஹாஸம் பண்ணும் பெளராணிகர்கள் இதை வைத்து வேடிக்கையாகச் சொல்வார்கள். வதூ வரர்கள் பாணிக்ரஹணம் செய்து கொள்வதாக நம்முடைய கலாசாரத்தில் உண்டே தவிர, இதர பந்துக்களோ ஸ்நேகிதர்களோ கையோடு கை பிடிக்கிற வழக்கம் கிடையாது. ரொம்ப அன்பு மேலிட்டுப் போனால் நெருங்கின பந்து மித்ராள் ஆலிங்கனம் செய்து கொள்வதுண்டு; வயஸில் பெரியவர்கள் சின்னவர்களை உச்சி மோந்து பார்ப்பார்கள். ஆனால் நம்முடைய நர வர்க்கத்தின் நாகரிகத்தில் கையோடு கை பிடிப்பதில்லை. வானர ஆசாரம் தான் அப்படி. அதனால்தான் ஸுக்ரீவன் அப்படிப் பண்ணினான். அதைத்தான் இன்றைக்கு நமக்கே நாகரிகம் சொல்லிக் கொடுக்கிற தேசத்துக்காரர்கள் ’ஷேக் ஹாண்ட்’ என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்கிற ‘எவல்யூஷன் தியரி’ (பரிணாமக் கொள்கை)க்கு இப்படி அவர்களே நிரூபணமாயிருக்கிறார்கள் – என்று, நான் சொல்லவில்லை, கதை புராணம் சொல்லும் உபன்யாஸகர்கள் சொல்வதுண்டு!

அவரவர்களுடைய லெவலைப் புரிந்து கொண்டு, அநுதாபத்தோடு அந்த லெவலுக்குத் தாமும் இறங்கி வந்து இழைந்து பழகுவது மூர்த்தியின் குணவிசேஷம். ஆகையினாலே அவர் ஸுக்ரீவன் ஆசைப்பட்டாற்போலவே அவன் கையைப் பிடித்துக் கொள்கிறார்.

ஹநுமார் பேருக்குத் தான் வானரம். அவருக்குத் தெரியாததில்லை. ராமர் மநுஷ்ய ஜாதிக்கான தர்மங்களையெல்லாம் முழுக்க முழுக்க சாஸ்திர ப்ரகாரம் பண்ணிக் காட்டுபவர் என்று அவருக்குத் தெரியும். மநுஷ்ய தர்மப்படி ஒரு ஏற்பாட்டை மாற்ற முடியாதபடி உறுதிப்படுத்த வேண்டுமானால் அதற்கு அக்னி ஸாக்ஷியாகப் பண்ணுவதற்கு மிஞ்சி வழியில்லை என்று ஹநுமார் நினைத்தார். அதனால் இப்போது ராமரும் ஸுக்ரீவனும் அக்னி பகவானின் ஸந்நிதானத்தில் ஸ்நேஹ உடன்படிக்கை செய்து கொண்டு விட வேண்டும் என்று அவர்தான் ஏற்பாடு பண்ணினார்.

ராமர் மஹாவிஷ்ணுவேதான் என்றும் ஹநுமாருக்குத் தெரியும். அந்த மஹா பகவான் அக்னி பகவானை ஸாக்ஷி வைத்துக் கொள்ள வேண்டுமா என்றால், மஹா பகவான் இப்போது இந்த அவதாரமெடுத்திருப்பதே மநுஷ்ய வர்க்கத்திற்கு சாஸ்திர வழிப்படி ஸகல தர்மங்களையும் அநுஷ்டித்துக் காட்டி ஒரு ‘ஐடிய’லைக் கொடுக்க வேண்டுமென்றுதானே? அதனால்தான் மநுஷ்யர்களை ஒரு ஒப்பந்தத்தில் கட்டுப்படுத்தி வைப்பதற்குப் பெரிய விதியாக இருக்கும் அக்னி ஸாக்ஷியை ராமரும் பண்ணுமாறு செய்ய வேண்டும், அவதார ’பர்பஸை’த் தாம் புரிந்து கொண்டு அப்படிப் பண்ணுவதை அவர் தப்பாக நினைக்காமல் ஸந்தோஷமேபடுவார் என்று நினைத்து அந்த மாதிரியே செய்தார்.

மஹா பலசாலியான அவர் பக்கத்திலிருந்த மரத்திலிருந்து கிளைகளை முறித்து, அவற்றை ஒன்றோடொன்று தேய்த்தே நெருப்பு மூட்டினார். அந்த அக்னியை ராமருக்கும் ஸுக்ரீவனுக்கும் மத்தியில் ஸ்தாபித்தார்.

வதூ-வரர்கள் மாதிரியே அந்த இரண்டு பேரும் அக்னியைப் ப்ரதக்ஷிணமும் வந்தார்கள்.

”ராமா! நாம் ஸ்நேஹிதர்களாகி விட்டோம். இனிமேலே ஸுகமோ, துக்கமோ நம் இரண்டு பேருக்கும் ஒன்றுதான்” என்று ஸுக்ரீவன் சொல்ல, அவரும் அப்படியே அங்கீகாரம் பண்ணிக் கொண்டார்.
இந்த ஸர்க்கத்தை முடிக்கிற இடத்தில் வால்மீகி ராமாயணத்தில் ரொம்பவும் அழகான ஒரு கருத்தைத் தெரிவிப்பதாக ஸ்லோகம் இருக்கிறது:

ஸீதா
கபீந்த்ர க்ஷணதாசராணாம்
ராஜீவ ஹேம ஜ்வலநோபமாநி|
ஸுக்ரீவ ராம ப்ரணய ப்ரஸங்கே
வாமாநி நேத்ராணி ஸமம் ஸ்புரந்தி||

ஸக்யம் செய்து கொண்டது இரண்டு பேர் – ராமர், ஸுக்ரீவன் என்ற இரண்டு பேர். அப்படி அவர்கள் செய்தவுடன் மூன்று பேருக்கு இடது கண் துடித்ததாம்! அதிலே ஒருவருக்கு ராஜீவம் என்கிற நீலத் தாமரைப் பூ மாதிரியான கண்ணாம்’ இன்னொருவருக்கு மஞ்சளும் சிவப்பும் கலந்த தங்க நிறக் கண்ணாம்; மூன்றாமவருக்கு அக்னி ஜ்வாலை மாதிரி கண்ணாம். அந்த மூன்று கண்களும் இந்த ஸக்யம் ஏற்பட்டவுடன் ஒரே போலத் துடித்தது என்று ஸ்லோகம் வருகிறது.

யார் அந்த மூன்று பேர்? நீலத் தாமரை போலக் கண் இருப்பது ஸாக்ஷாத் ஸீதைக்குத் தான். ஜலத்திலே அந்தப் பூ இருப்பது போலவே அப்போது அவளுடைய கண் அழுகையிலேயே முழுகியிருந்தது. இப்போது இந்த ஸக்யம் உண்டானதால் அந்த அழுகை போய் அவளுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது. ஸ்த்ரீகளுக்கு இடது கண் துடிப்பது நல்ல காலம் வருவதற்கு அறிகுறி; வலது கண் துடித்தால் கெட்ட காலத்துக்கு அறிகுறி. புருஷர்களுக்கு இதைத் தலைகீழ் பண்ணி வலது கண் துடித்தால்தான் நல்லதுக்கு அறிகுறி; இடது துடித்தால் கெட்ட காலத்தைக் குறிக்கும். ஸக்யத்தின் விளைவாக ஸீதைக்கு நல்ல காலம் வரப் போவதால் அவளுக்கு இடது கண் துடித்தது. மற்ற இரண்டு இடது கண்களும் இரண்டு புருஷர்களுடையது. யார் யாரென்றால், உடனே வதமாகப் போகிற வாலியும், கொஞ்ச காலம் தள்ளி வதமாகப் போகிற ராவணனுந்தான். மஞ்சளும் சிவப்பும் கலந்த தங்க நிறக் கண்காரன் என்றது வாலியைத்தான். வானரர்களுக்கு செம்மஞ்சள் கண், ‘பிங்காக்‌ஷம்’ என்பது. ஜ்வாலைக் கண்காரன் ராவணன். கோபாக்னியில் அவன் கண் ஜ்வாலை வீசும்! அக்னி ஸாக்ஷியான ஸக்யம் அந்த அக்னியை அணைப்பதில்தான் முடியப் போகிறது!..

ஸூர்ய வம்சத்தில் பிறந்தவருக்கும் ஸூர்ய புத்ரனுக்கும் இப்படியாக அக்னி ஸாக்ஷி உறவு உண்டாகி, அப்புறம் அவர்கள் பரஸ்பர ஸஹாயம் செய்து கொண்டு ஸெளக்யத்தை அடைந்தார்கள்.