ஈசன் சொன்ன பிராயச்சித்தம் பூர்வாவதாரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தது போலவே, இப்போதும் கிருஷ்ண பரமாத்மா வீரஹத

ஈசன் சொன்ன பிராயச்சித்தம்

பூர்வாவதாரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தது போலவே, இப்போதும் கிருஷ்ண பரமாத்மா வீரஹத்தி போக என்ன வழி என்று பரமசிவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்தார்; கைலாஸத்துக்குப் போனார்.

சைவ-வைஷ்ணவர்களாகிய நம்மில் சில பேருக்குத் தான் சிவன், விஷ்ணு என்ற இர்ண்டு பேரில் யார் யாரை விடப் பெரியவர் என்று கட்சி கட்டத் தோன்றுகிறது. அவர்கள் இரண்டு பேருக்குமோ, ‘தாங்கள் இரண்டு பேருமே ஸாரத்தில் ஒன்றுதான். லீலைக்காகவும், லோகாநுக்ரஹத்துக்காகவும், நிர்வாஹம் – ஸம்ஹாரம் என்று தொழில் பிரிவினை பண்ணிக் கொண்ட்தற்காகவும் தான் வேறு வேறு மாதிரி வேஷம் போடுகிறோம்’ என்று தெரியும். அதனால் அவரும் இவர் காலில் விழுவார்; இவரும் அவர் காலில் விழுவார். அடித்துக் கொண்டு சண்டையும் போட்டுக் கொள்வார்கள். அதில் ஒரு ஸமயம் ஒருவர் தோற்பார்; இன்னொரு ஸமயம் மற்றவர் தோற்பார். அப்படியே அன்பிலே நெருக்கமாகித் தாங்கள் இரண்டு பேருமே ஒரே தேஹத்தில் பாதிப்பாதியாகச் சேர்ந்தும் இருப்பார்கள்.

இப்போது க்ருஷ்ண பரமாத்மா கைலாஸத்துக்குப் போய் ஈச்வரனிடம், “என்னுடைய வீரஹத்தி தோஷம் விலகுவதற்கு ஒரு பிராயச்சித்தம் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

ப்ராயச்சித்தான் –யசேஷாணி தப: கர்மாத்மகாநி வை

யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம்.

அதாவது, “ப்ராயச்சித்தங்களாக அநேக வித தபஸ்கள், கர்மாநுஷ்டான்ங்கள் என்று எத்தனையோ இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலான ஸர்வப்பிராயச்சித்தம் என்னவென்றால் க்ருஷ்ண ஸ்மரண்ந்தான்” என்று சொல்லியிருக்கிறது.

அப்படிப்பட்ட பதிதபாவனர் தமக்கு தோஷம் வந்ததாகவும் பிராயச்சித்தம் சொல்லவேண்டுமென்றும் கேட்ட போது, சிவனும் லோகத்தின் படிப்பினைக்காவே அவர் இப்படிக் கேட்கிறார் என்று புரிந்து கொண்டு, என்ன தோஷபரிஹாரம் சொல்லலாம் என்று யோசித்தார். ‘நீ தோஷரஹிதன்’ என்று சொன்னால் அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். எல்லா தோஷமும் போகத்தான் கங்கா ஸ்நானம் இருக்கிறதே, அதைச் சொல்ல்லாமா என்றால், அது ஸகல தோஷ நிவாரணம் என்பதாலேயே குறிப்பாக ஒரு பெரிய தோஷம் ஸம்பவித்திருக்கிறபோது அதற்குப் போதுமா என்று  தோன்ற ஆரம்பித்துவிடும். நமக்கு ஃபாமிலி டாக்டர் என்னதான் பெரிய ஜெனரல் ஃபிஸிஷியன் ஆனாலும், ஹார்ட், லங்க்ஸ் என்று ஏதாவதொன்றுக்கு ஒரு பெரிய கோளாறு வந்தால், அதற்கென்றே வேறே ஒரு ஸ்பெஷலிஸ்டிடம் போனால் தான் தேவலை என்று தோன்றும். ஃபாமிலி டாக்டரும் அப்படித்தான் அனுப்பி வைப்பார். தெய்வ விஷயமாகவே எடுத்துக் கொண்டாலும், சிவனோ அம்பாளோ, மஹாவிஷ்ணுவோ எவர் ஒருத்தருமே பரப்ரம்ம ஸ்வ்ரூபமானதால் ஸகல அநுக்ரஹமும் பண்ண முடியும் என்றாலும், விக்னம் விலகணுமானால் பிள்ளையாரைப் பூஜிக்க வேண்டும், படிப்பு வேண்டுமானால் ஸரஸ்வதியைப் பூஜை பண்ண வேண்டும், ஆரோக்யம் வேண்டுமானால் ஸுர்ய நமஸ்காரம் பண்ண வேண்டும் என்றுதானே தோன்றுகிறது? அதே மாதிரி இப்போது ‘க்ருஷ்ணருக்கு கங்கா ஸ்நானத்தைச் சொன்னால் போதாது. ஸ்பெஷலாக ஒன்று சொல்லியாக வேண்டும். கங்கா ஸ்நானம் பாப நிவாரணம் என்று பச்சைக் குழந்தைக்குக்கூட்த் தெரியும். அதைப் போய் கிருஷ்ணரிடம் சொன்னால் அவரை முட்டாளாக்கினதாக ஆகும். கங்கையாலும் போக்க முடியாத தோஷத்தைத் தாம் பண்ணி விட்டதாகவும் அதற்கு அதை விட சக்தி வாய்ந்த ப்ராயச்சித்தம் சொல்ல வேண்டுமென்றும் அவர் கேட்பார்.’

இப்படி யோஜனை பண்ணி ஈச்வரன், “இது துலா மாஸம். (அதாவது நம் ஐப்பசி)*. இந்த மாஸம் பூராவும் புரதி தினமும் அருணோதயத்திலிருந்து உதயாதி ஆறு நாழிகை (2 மணி 24 நிமிஷம்) வரை அறுபத்தாறு கோடி புண்ய தீர்த்தங்களும் காவேரியில் வாஸம் செய்கின்றன. அதிலே ஸ்நானம் பண்ணினால் வீர ஹத்தி தோஷம் போயே போய்விடும்” என்று சொன்னார்.