உள்முகத் தெய்வமணி ஈச்வரனு

உள்முகத் தெய்வமணி

ஈச்வரனுக்குத் திசைக்கொன்றாக ஒரு முகம், அது போக மேலே பார்க்க ஒன்று, அதற்கு ஊர்த்வ முகம் என்று பேர் சொன்னேனோல்லியோ? அதே மாதிரி இந்த ஆறாவது முகம் அதோமுகம்.  மேலே பார்ப்பதால் ‘ஊர்த்வம்’. கீழே பார்ப்பதால் ‘அதோ’.  ’அதோ கதி’ என்கிறோம். அப்படியென்றால் மேல்லோகம் என்கிற மோக்ஷத்திற்கு வழியில்லாமல், கீழ் லோகமான நரகத்திற்கு வழி. ஆனால் ஸ்வாமியின் ‘அதோமுகம்’ என்கிறபோது இப்படி கெட்டதான, தாழ்ச்சியான அர்த்தமில்லை! ரொம்பவும் உசந்த அர்த்தமே.

மேலேயுள்ள ஆகாசம் பரவெளி. ‘பரம்’ என்றால் உயர இருப்பது, உயர்வானது; உயர்ந்த தத்வத்துக்கு ஸ்தூலமான ரூபகமாக இருப்பது அது. அகண்ட ப்ரஹ்மத்துக்கு ஸ்தூல ரூபகமே வெளியிலே தெரிகிற அகண்ட ஆகாசம். அது பரம், பரம பதம். அதைப் பார்க்கிற ஈச்வரனின் ஐந்தாவது முகத்துக்கான மூர்த்தியான ஸதாசிவத்துக்கும் ப்ரஹம்மாகச் சிறப்பு சொன்னேன். ஸ்வாமி அப்படிப் பர தத்வமாக, பரம தத்வமாக இருப்பதாலேயே ‘பரமசிவன்’, ‘பரமசிவம்’ என்பது. எப்படி வேறு எந்த தெய்வத்துக்கும் ‘ஸதா’ prefix (முன்னடை) இல்லையோ, அப்படியே இந்த ‘பரம’வும் சிவன் ஒருத்தனுக்குத்தான்! சின்னக் குழந்தைகள் கூடப் ‘பரமசிவன் – பார்வதி’ என்றே சொல்கின்றன! சிவனுக்கே பொதுவில் அதிகம் வழங்குகிற பேரான ’ஈச்வர’னுக்கும் பரம சேர்த்துப் ‘பரமேச்வரன்’ என்கிறோம்….

அது இருக்கட்டும். மேலே பார்க்கும் முகம் ‘பரமம்’ என்கிறாற்போல, கீழே பார்ப்பது அதமமா என்றால், அதுதான் இல்லை. இது அதோ  முகமே தவிர அதமமுகமில்லை! ஒரு தினுஸில் அதைப் பரமத்துக்கும் பரமம், பரத்துக்கும் பரமான பராத்பரம் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால், இங்கே கீழே பார்ப்பது என்பது கண் மட்டத்துக்குக் கீழே ஹ்ருதயத்துக்குள் பார்த்துக் கொள்வதுதான். ஆகையால் ‘அதோமுகம்’ என்பதற்குக் ’கீழ்முகம்’ என்றில்லாமல் ‘உள்முகம்’ என்றே அர்த்தம் பண்ணுவதுதான் சரி. இந்த உள்முகமும் ஐந்து முகங்களோடு சேர்ந்தே ஆறுமுகனாக உண்டான ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியை ராமலிங்க ஸ்வாமிகள் ‘உள்முகத் தெய்வமணி’ என்று நம்முடைய ஹ்ருதய அந்தரங்கத்தில் இருக்கிற தெய்வ ரத்தினமாகச் சொல்லியிருக்கிறார். அந்த உள்ளே இருப்பது என்ன? மேலே ஆத்ம ஸ்வரூபம் என்கிற ப்ரஹ்ம ஸ்வரூபமானது பரவெளியான அகண்ட ஆகாசமாக இருக்கிறதென்றால், ஹ்ருதயத்துக்குள்ளே அதே ஸத்வஸ்து உள்வெளியான, ‘தப்ர ஆகாசம்’ என்கிற சின்ன ஆகாசமாக, சிற்றம்பலமாக இருக்கிறது!

அந்தச் சிற்றம்பலத்தில் சிவனே நடராஜாவாக நாட்டியம் பண்ணுகிறார். அந்த நாட்டியத்துக்குப் பெயர் பஞ்ச க்ருத்ய பரமானந்த தாண்டவம் என்பதே. ஐந்தொழில் சொன்னேனே, அதுவேதான் இங்கே இவருடைய டான்ஸாக அமர்க்களப்படுகிறது! ஐந்தாவதான ஊர்த்வ முகத்தோடு ஸம்பந்தப்படுத்திப் பார்த்தோமே, அந்த அநுக்ரஹ க்ருத்யத்தை இங்கே (நடராஜாவின்) தூக்கிய திருவடி என்ற இடது பாதம் செய்கிறது! அதனால் அந்தப் பாதமே ஸதாசிவ ஸ்வரூபந்தான். அதையே ஒரு தனி ஸ்வாமியாகக் ‘குஞ்சித பாதம்’ என்று வைத்திருக்கிறது. சிதம்பரத்தில் நடராஜ மூர்த்தியோடு கூடவே தனியாக்க் குஞ்சிதபாதம் என்று இடது பாதத்தையும் ஒரு தனி மூர்த்தியாக வைத்திருக்கிறது. பிரதி ராத்திரியும் பள்ளியறைக்கு எழுந்தருளப் பண்ணுவது அந்தக் குஞ்சிதபாதத்தைத்தான்.

ஆனால் அப்படி அம்பாளுக்குப் பதியாயிருக்கிற அந்தக் குஞ்சிதபாதமே, ரொம்ப வேடிக்கையாக, அம்பாளாகத்தான் இருக்கிறது! எப்படியென்றால், அது இடது பாதந்தானே? ஸ்வாமியின் இடது பாகத்தில் இருப்பதுதானே? அந்த இடது பாகம் அம்பாள்தானே?

அதாவது சிவ-சக்திகள் என்ற அத்வைத-த்வைதங்கள் ஐக்கியமாகிவிட்ட பராத்பர தத்வமாகவே குஞ்சிதபாதம் இருக்கிறது. அதனால்தான் ‘குஞ்சிதபாதம்’ என்றும் ‘ம்’மில் முடிகிற ஒரு பெயர் மநுஷ்யர்கள் வைத்துக் கொள்வதாக இந்தத் தமிழ் தேசத்தில் ஏற்பட்டிருக்கிறது.

தோமுகம் என்ற ஆறாவது முகம் இப்படி சிவசக்தி தம்பதிகளையே காட்டுகிறது என்றாலும், குறிப்பாக அந்த அநுக்ரஹ க்ருத்யத்திற்கே ஸ்தானம் கொடுத்து, அதைச் செய்யும் அம்பாளுடைய முகமாகவே அதைச் சொல்லியிருக்கிறது. ஸ்வாமி பஞ்ச முகத்தாலும், அம்பாள் ஆறாவது முகத்தாலும் வெளிப்பட்டு, இருவரும் ஒன்றுசேர்ந்தே குமாரஸ்வாமி ஆனதாகச் சொல்லியிருக்கிறது.