Page load depends on your network speed. Thank you for your patience.

Loading...

தண்டனிடுவதன் தத்வார்த்தம் நீங்கள் செய்யும் நமஸ்காரத்தையும் ‘தண்டாகார நமஸ்காரம்’, ‘தண்டனிடுவது’ என்

தண்டனிடுவதன் தத்வார்த்தம்

நீங்கள் செய்யும் நமஸ்காரத்தையும் ‘தண்டாகார நமஸ்காரம்’, ‘தண்டனிடுவது’ என்றுதான் சொல்வதென்றாலும் அங்கே அர்த்தமே வேறே. தண்டம் என்பது அங்கேயும் கழிதான். ஆனால் அஸல் கழியை இல்லாமல், அதை உபமித்து (உவமித்து) ‘தண்டனிடுவது’ என்று வந்திருக்கிறது. கழியை நிறுத்திப் பிடித்தால் அது துளிக்கூட குழைவு இல்லாமல் அப்படியே நிற்கிறது. ‘கழியாட்டம் விறைச்சுண்டு நிக்கறயே!’ என்று பணிவு இல்லாதவர்களைக் கேட்கிறோம். அதே கழி பிடியை விட்டு விட்டால் ஒரே படிமானமாக பூமியோடு பூமி படிந்து அப்படியே கிடக்கிறது.  ஜீவ மனஸ் பொதுவாகக் கழி மாதிரி விறைத்துக் கொண்டு நிற்பதுதான். அஹம்பாவப் பிடிப்பில் அது அப்படி இருக்கிறது – அஹம்பாவம் அதைப் பிடித்துக் கொண்டு உசத்தி கொண்டாடிக் கொண்டு நிறுத்தியிருப்பதில்! அந்த அஹம்பாவப் பிடிப்பை விட்டு விட்டால் மனஸ் தாழ்மையாகக் கிடக்கும். அப்படிக் கிடந்தே நிஜமாக உசந்ததில் உசந்த ஸெளக்யத்தைப் பெற்று விடும். இந்த மாதிரி மனஸைக் கிடத்துவதற்கு அடையாளந்தான், பிடியை விட்ட தண்டம் விழுகிறாற்போல பூமியோடு பூமி நமஸ்கரித்துக் கிடப்பது. ‘தண்டாகார நமஸ்காரம்’ என்ற பெயர் இதனால்தான். இந்த தாத்பர்யத்தைப் புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால் அந்த நமஸ்காரமே ‘தண்டம்’தான்!

’தண்டம்’ என்றால் ஒன்றுக்கும் உதவாதது என்ற அர்த்தத்தில் சொல்கிறோம். தாய் மரத்திலிருந்து பிரிந்து தனியாக வந்த பாகந்தானே தண்டம்? மரத்தில் அது பாகமாக இருக்கும்போதுதான் அதற்கு உயிர் இருந்தது. அப்போதுதான் அது ஜலத்தைக் குடித்து, ஸுர்ய வெளிச்சத்தைச் சாப்பிட்டு இலை, பூ, காய், பழம் எல்லாம் உற்பத்தி செய்தது. தனியாக வந்தவிட்டு உயிர்போன சவம் மாதிரிதான் காய், பூ, இலை எல்லாம் கொட்டிப் போய் விடுகிறது. அதனால் தான் ஒன்றுக்கும் உதவாததை தண்டம் என்பது.

‘நாம், நாம்’ என்று ஸதாவும் போற்றி, பேணி, தின்று, அலங்காரம் பண்ணிக்கொண்டு சரீரம் என்பதைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோமே, இதுவும் அவனருளால் இதற்குள் உயிர் என்று ஒன்று ஓடாவிட்டால் ஒன்றுக்கும் உதவாத தண்டந்தான். அந்த அபிப்ராயத்தில் தான் அதை அவனுக்கு முன் – அவனுடைய விபூதிகளில் (சக்திகளில்) எவற்றிலாவதொன்றிலோ பலவற்றிலோ, கொஞ்சமோ நிறையவோ உள்ள பெரியவர்களுக்கு முன் – கிடத்தி தண்ட நமஸ்காரம் என்று செய்வது.

பொதுவாக வைஷ்ணவர்கள் “நமஸ்கரிப்பது” என்று சொல்லாமல் “ஸேவிப்பது” என்றே சொல்வார்கள். இன்னும் நயமாக, நைச்சியமாகச் சொல்பவர்களானால் “தண்டம் ஸமர்ப்பிப்பது” என்பார்கள். கடிதாசு எழுதினால் ‘நமஸ்காரம்’ என்று போடுவதற்குப் பதில் ‘தண்டம் ஸமர்ப்பிக்கிறேன்’ என்றே போடுவார்கள்.

போன தலைமுறை வரைக்கும் அப்ராம்மணக் குடிபடைகள்கூட, ஒன்று, “கும்பிடறேன்” என்பார்கள்; அல்லது, “ஸ்வாமீ, தண்டம்!” என்பார்கள்.

“தண்டம் பெட்டேதி” என்று தெலுங்கு ஜனங்களும் சொல்கிறார்கள்.

ராமருடைய வில்லுக்குக் கோதண்டம் என்றுதானே பேர் இருக்கிறது? அதை வைத்து அந்தக் கோதண்டபாணிக்கு “தண்டமு பெட்டேதுரா” என்று த்யாகையர் கீர்த்தனங்கூடப் பாடியிருக்கிறார்.

சரீரம் தண்டம் என்றால் வாஸ்தவத்தில் அந்த சரீரத்துக்குள்ளேயிருந்து ஆட்டிப் படைக்கிற மனஸுதான் அப்படி தண்டமானது என்று அர்த்தம். சரீரம் கருவிதான். அது என்ன பண்ணும்? மனஸ்தான் அதை ஆட்டி வைக்கிறது. ‘ஆட்டி வைக்கிற தன்னையும் பகவான் தான் ஆட்டி வைக்கிறான்; அதை நல்லபடியான ஆட்டமாக்க வேண்டியவனும் அவனே; எல்லா ஆட்டத்தை நிறுத்தி சாந்தி ஸெளக்யம் தரக் கூடியவனும் அவன் தான்’ என்கிற நினைப்பில், தண்டமாக மனஸை அவனுக்கு முன் கிடத்துவதுதான் நமஸ்காரம். ‘மனஸ்’ என்று அவனை விட்டு வெளி விஷயங்களிலேயே ஓடிக் கொண்டிருப்பதை அவனிடம் திருப்பி, அதற்கு அடையாளமாக ‘மந(ஸ்); என்ற அக்ஷரங்களையும் ‘நம(ஸ்)’ என்று திருப்பிப் பண்ணுகிற க்ரியைதான் ‘நமஸ்காரம்’. தன்னுடைய கருவியான சரீரத்தைக் கொண்டே இதை மனஸ் செய்கிறது. சரீரத்தைத் தப்பு வழிகளில் ஆட்டி வைத்ததற்கு ப்ராயச்சித்தமாக அந்த சரீரத்தையே அவன் முன்னே தண்டம் மாதிரி விழப் பண்ணி அதற்குப் புண்யம் சேர்த்துக் கொடுக்கிறது; தானும் புண்யம் ஸம்பாதித்துக் கொள்கிறது.

தண்டம் என்று மட்டம் தட்டினாலும், நடக்க முடியாதவர்களுக்கு ஊன்றுகோலாக இருப்பதும் தண்டம் தானே? ஆத்ம மார்க்கத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் இந்த தண்ட நமஸ்காரம் என்றும் வைத்துக் கொள்ளலாம். (சிரித்து) செய்கிற கார்யமோ கீழே விழுந்து அசையாமல் கிடப்பது; ஆனால் அதுவே ஆத்ம மார்க்கத்தில் நடப்பதற்குக் கைத்தடி ‘தண்டம்’!

ஏதோ ஒரு தினுஸில் மனஸைத் ‘தண்ட’மாக்கி அவனுக்கு ஸமர்ப்பிப்பதே தாத்பர்யம்.

ஜ்வரம் வந்து சரீரத்திலே சக்தி க்ஷீணமானால் நடக்க முடியாமல் விழுந்து விடுகிறோமோ இல்லையோ? அந்த சக்தி எங்கேயிருந்து வந்தது? அந்த ஈச்வரனொருத்தன் போட்ட பிச்சைதானே? ”இந்த ‘என் சக்தி’ என்கிறது வாஸ்தவத்தில் உன் சக்திதான்” என்று அவனிடமே சக்தியை ஸமர்ப்பித்து அதற்கடையாளமாக சரீரத்தையும் தள்ளுவதுதான் மொத்தத்தில் தாத்பர்யம்.