ப்ரணிபாதம், ப்ரணாமம் ’ப்ரணிபாதம்’தான் நமஸ்காரம் ‘பரிப்ரச்னம்’ உபதேசம் கேட்டுக் கொள்வது ‘ஸேவை’ – பணிவிடை

ப்ரணிபாதம், ப்ரணாமம்

’ப்ரணிபாதம்’தான் நமஸ்காரம். ‘பரிப்ரச்னம்’ உபதேசம் கேட்டுக் கொள்வது. ‘ஸேவை’ – பணிவிடை.

‘ப்ரணிபாதம்’ என்பது ‘ப்ர-நி-பாதம்’ என்று பிரியும். ‘ர’வை அடுத்து வரும் ‘ந’காரம் ‘ண’காரமாகிவிடும். அதனால்தான் ‘ப்ரநிபாதம்’ (என்பது) ‘ப்ரணிபாத’மாவது. பாதம்: padam இல்லை;  paatam, அப்படியென்றால் ‘விழுவது’. நி-பாதம்: ஒரே விழுகையாக விழுகிறது. விழுகிற காரியத்துக்கு அழுத்தம் கொடுக்கவே prefix (முன்னடை) ‘நி’ சேர்த்திருக்கிறார். ‘பூந்து நிபாதம் பண்ணிப்பிட்டான்’ என்கிறோம், ஒரேயடியாக வெட்டிச் சாய்த்து வீழ்த்திவிடுவதை! அந்த அழுத்தமும் போதாது, இன்னுங்கூட அழுத்திச் சொல்லணும் என்று இன்னொரு prefix-ம் ‘ப்ர’ என்று சேர்த்து ‘ப்ர-நி-பாதம்-’ப்ரணிபாதம்’ என்று பகவான் சொல்லியிருக்கிறார். ‘நான்’ என்ற எண்ணத்தை ஒரே வெட்டாக வெட்டிச் சாய்க்கிறதற்கு அடையாளமாக சரீரத்தைத் தடாலென்று கீழே தள்ளி நமஸ்காரம் பண்ணணும் என்று தெரிவிப்பதற்காகவே இப்படிப் பத ப்ரயோகம் பண்ணியிருக்கிறார். குருவைக் கண்டுகொண்ட சிஷ்யன் பண்ண வேண்டிய முதல் கார்யமாக இந்த ப்ரணிபாத நமஸ்காரத்தையே சொல்லியிருக்கிறார்.

‘ப்ர-நிபாதம்’ மாதிரியே ‘ப்ர-நாமம்’ என்றும் இருக்கிறது. அதுதான் ‘ப்ரணாமம்’ என்பது, வடக்கே நமஸ்காரத்தை அப்படிச் சொல்வதே அதிகம். இங்கேயும் ஹிந்தி வார்த்தைகள் ஒரு ஃபாஷனாக வந்து கொண்டிருப்பதில்… ஒரு பக்கம் ஹிந்தி எதிர்ப்பு – எரிப்பு என்று இருந்தாலும் இன்னொரு பக்கம் மநுஷாள் பேர், வீட்டுப் பேர், ஸினிமாக் கொட்டாய் – ஹோட்டல் பேர் எல்லாம் ஹிந்தி ஃபாஷனில் வந்து கொண்டிருப்பதில் இங்கேயும் ‘ப்ரணாம்’ பரவிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

‘ப்ர-நாமம்’ என்பதில் ‘நாமம்’ என்பது ‘நமனம்’ என்பதன் திரிபுதான். ‘நமனம்’தான் ‘வணக்க’த்திற்கு நேரான பெயரென்று சொன்னேன்.

வேடிக்கையாக ஒன்று சொல்லத் தோன்றுகிறது.

நமஸ்கார க்ரியைக்கு ஸஹ அங்கமாக (உடன்சேர்ந்த அங்கமாக) ஒன்று உண்டு. அதற்கு ‘அபிவாதனம்’ என்று பேர். உபநயனமான குழந்தையை, “அபிவாதயே சொல்லு” என்பது அதைத் தான். ‘அபிவாதயே’ என்ற வார்த்தையில் ஆரம்பித்துத் தான் இன்னார் என்று தெரிவித்துக் கொள்வதாகச் சிலது சொல்லியே அந்த க்ரியையைப் பண்ண வேண்டுமென்பதால் இப்படிச் சொல்கிறோம். நமஸ்காரம் பண்ணினவுடன், தப்பாமல் அப்படிச் சில வார்த்தைகளைச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டேயாக வேண்டும். அங்கே தன் பெயரை – நாமத்தை – கோத்ர, ஸுத்ராதிகளுடன் தெரிவிக்கணும்.

இப்போது நான் சொன்னதிலிருந்து முதலில் நமஸ்காரம் ஸமர்ப்பிப்பது. அப்புறமே தன்னுடைய நாமத்தைத் தெரிவித்துக் கொள்வது என்று  தெரிகிறதல்லவா? இதை வைத்துத்தான் ‘ப்ரணாம’த்திற்கு வேடிக்கையாக ஒரு அர்த்தம் செய்து கொண்டேன்.

‘ப்ர’ என்ற prefixக்குப் பல அர்த்தம். அது பின்னால் வரும் வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கும், சிறப்புச் சேர்க்கும். ‘முன்னால்’, ‘முற்கால’ என்றெல்லாமும் அர்த்தம் கொடுக்கும். ‘நாமம்’ என்கிற நமனமாகிற நமஸ்காரத்திற்குச் சிறப்பு மொழியே ‘ப்ர-நாமம்’. ஒரு பெரியவரின் முன்னால் செய்யப்படும் நமஸ்காரம் என்பதாலும் ‘ப்ர-நாமம்’. இவைதான் ஸரியான அர்த்தம். ப்ரநாமம்தான் ‘ப்ரணாமம்’!

எனக்குத் தோன்றிய வேடிக்கையர்த்தம் என்னவென்றால் : ஒருத்தன் தன்னுடைய பெயரை – நாமத்தைத் தெரிவித்துக் கொள்வதற்கு முன்னால் செய்வதுதானே நமஸ்காரம்? ‘முன்னால்’ என்பதற்கும் ‘ப்ர’ போடலாமோல்லியோ? அதனால் ஒருத்தனுடைய பெயருக்கு, ‘நாம’த்துக்குப் ‘ப்ர’வாக வரும் அந்தக் கார்யம், ப்ர-நாமம், ‘ப்ரணாமம்’ ஆகிறது!