பிரதக்ஷிணம் அரன் கோயில் வலம் வ

பிரதக்ஷிணம்

அரன் கோயில் வலம் வந்து

பூக்கையால் அட்டிப் போற்றியென்னாத இவ்

ஆக்கையாற் பயன் என்?

”அரன்கோயில் வலம் வந்து”.

‘வலம் வந்து’ என்றால் – ’ப்ரதக்ஷிணம் பண்ணி’. ‘ஒனக்கு ப்ரதக்ஷிணம் நமஸ்காரம் பண்றேம்ப்பா, போய்ச் சேரு’ என்று கோபத்தில்கூடச் சொல்கிறோமே, அப்படி நமஸ்காரத்துடனேயே அதன் அங்கமாகச் சேர்த்துச் சொல்கிற அந்த ப்ரதக்ஷிணம் என்பதைத்தான் ’வலம் வந்து’ என்று இங்கே ஆக்கையின் கார்யமாக, இந்த சரீரம் ஏற்பட்டிருப்பதற்கே பயனாக, அப்பர் ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார்.

ப்ரதக்ஷிணத்தோடு இன்னும் சிலதும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார். ‘பூக்கையால் அட்டி’: ‘அட்டி’ என்றால் ‘தொடர்ச்சியாகப் போடுவது’, ‘பொழிவது’. ‘பூக்கையால் அட்டி’ என்றால் ‘பூவைக் கையால் தொடர்ச்சியாகப் போட்டு’ ஈச்வரனுக்குப் புஷ்பார்ச்சனை பண்ணுவதைத் தான் சொல்கிறார்.

ஆண்டாள் ’திருப்பாவை’யில்

தூமலர் தூவித் தொழுது

வாயினாற் பாடி மனத்தினால் சிந்திக்க”

என்று பாடியிருக்கிறாள்.

மனோ-வாக்-காயங்கள் என்ற த்ரிகரணங்களையும் பகவத்பரமாக்க வேண்டும் என்பதைத்தான் ஆர்டரை மாற்றி காயம்-வாக்-மனஸ் என்று இங்கே சொல்லியிருக்கிறாள். “வாயினால் பாடி”, “மனத்தினால் சிந்திக்க” என்பதில் வாய், மனஸ் plain-ஆகவே தெரிகிறது. அப்படியானால் “தூமலர் தூவித் தொழுது” என்கிறது காயத்தை பகவதர்ப்பணமாக்குவதே என்றும் ஆகிறது. அப்பர் சொன்ன ‘பூக் கையால் அட்டி’தான் ‘தூமலர் தூவி’; ‘தொழுது’ என்பது நமஸ்காரம். விழுந்து பண்ணுவதாகவே இருக்கலாம். அல்லது புஷ்பாஞ்ஜலியாகத் தூமலர் தூவிய கையாலேயே கும்பிடுவதாகவும் இருக்கலாம். “கைகாள் கூப்பித் தொழீர்” என்று அப்பர் கைக்கே தொழும் க்ரியையைச் சொன்ன மாதிரியே ஆண்டாளும் சொன்னதாயிருக்கலாம்……….

”ஆக்கையாற் பயனென்?” என்ற அப்பர் பாடலில் வரும் ப்ரதக்ஷிணம் ஆக்கையின் அடிப்பாகமாகவுள்ள பாதத்தால் பண்ணுவது. மத்ய பாகத்திலுள்ள கையால் அர்ச்சனை, புஷ்பத்தைப் போட்டு அர்ச்சனை, பண்ண வேண்டும்.

“போற்றி என்னாத” – ஆக்கையின் முடி பாகத்திலுள்ள வாயால் ஈச்வரனைப் போற்றி ஸ்தோத்ராதிகள் சொல்ல வேண்டும்.

உச்சி ஸ்தானம் தலை – அதைச் சொல்லித்தான் பாட்டே ஆரம்பித்தார். “தலையே நீ வணங்காய்!” என்று!

தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச் சங்கரா

சய போற்றி போற்றி யென்றும்*

”ஜய ஜய சங்கர” என்று இன்றைக்கு நாமெல்லோரும் கோஷிக்கிறதைத்தான் அன்றைக்கே “சங்கரா சய போற்றி போற்றி” என்று சொல்லியிருக்கிறார். சொல்லிக்கொண்டே போனால் ஒரு ஆனந்த வெறியே பிறக்கிறதோல்லியோ, அதைத்தான் “கூத்துமாடி” என்கிறார். அவனும் கூத்தன், அவனுடைய பக்தியிலே நாமும் கூத்தர்கள்….

தலையால் வணங்குவதற்காகச் சொன்னேன்.

தலையால் வணக்கம், கையால் அர்ச்சனை, வாயால் ஸ்தோத்ரம் என்று இருந்தால் அதுவே ஆக்கையின் பயன் என்று இங்கே சொல்கிறார்.

இன்னொன்றும் பார்க்கிறோம்; தலை, கை, கால் மூன்றுமே நமஸ்கார உறுப்புக்களாக இருக்கின்றன. தலையைச் சாய்த்து நமஸ்காரம்; கையைக் கூப்பி நமஸ்காரம்; காலை மண்டி போடு நமஸ்காரம்……….

பாதம் என்பது காலின் முடிவில் இருப்பது; Leg-ன் முடிவிலுள்ள foot. ஹஸ்தம் என்பது புஜத்தின் முடிவில் இருப்பது; Arm-ன் முடிவிலுள்ள hand. ஒரு மநுஷ்ய சரீரத்திலே    extremities என்று சொல்லும் சிறிய பாகங்கள் தான் இவை. வலம் வருவதும், பூ அட்டுவதும் இந்தச் சின்ன பாகங்கள்தான்.

*நிலை பெறுமாறெண்ணுதியேல்’ என்ற பாடலில்.

மநுஷ்ய சரீரத்தில் ப்ரதானமாக இருக்கப்பட்ட காலுடைய புஜத்தினுடைய கார்யத்தையும், எல்லாவற்றையும் விட ப்ரதானமாக இருக்கப்பட்ட மார்பும் வயிறும் அடங்கிய ‘டார்ஸோ’வின் கார்யத்தையும் சொன்னால்தானே ஆக்கையைச் சொன்னதாகும்? அப்பர் ஸ்வாமிகள் ஏன் சொல்லாமல் விட்டார்?

இந்த ஸர்வாங்கங்களும் சேர்ந்து ஈச்வரபரமாகச் செய்கிற கார்யம் ஸாஷ்டாங்க நமஸ்காரந்தானே? அதை ஏன் சொல்லாமல் விட்டார்?

எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், சொல்லவேண்டிய அவச்யமே இல்லை; ஈச்வராராதனை – இறை வழிபாடு – என்றாலே நமஸ்காரந்தான் என்று ஸர்வத்ரர்களும் (எல்லோரும்) வைத்துக் கொண்டிருக்கும்போது அதைப் பற்றிச் சொல்ல அவச்யமே கிடையாது என்று தான் விட்டுவிட்டார்!

பெரிசாக விருந்துக்கு ஏற்பாடு பண்ணுகிறோம். சமையற்காரரிடம் இன்னின்ன காய்கறியைப் போட்டு இன்னின்ன ‘அய்ட்டம்’ பண்ணு. இன்னின்ன பருப்பு போட்டு இன்னின்ன பக்ஷணம் பண்ணு என்று சொல்கிறோம். ஆனால், ப்ரதான ‘அய்ட்டம்’ சாதந்தான். ஆனாலும் ‘அரிசியைப் போட்டுச் சாதம் பண்ணு’ என்று சொல்கிறோமா? சாப்பிட்டுவிட்டு வந்தவர்களிடமும், ”என்ன  சமையல்?” என்று கேட்டால் சாதம்தான் ப்ரதானமானாலும் அதை விட்டுவிட்டு பாக்கி அத்தனையுந்தானே சொல்கிறார்கள்?

இறைவழிபாட்டில் நமஸ்காரந்தான் சாதம். (சிரித்து) ஈச்வர ப்ர-ஸாதத்தைப் பெற்றுத் தரும் சாதம்! நாம் சாப்பிடுவது ஈச்வர ப்ரஸாதந்தான் என்பதாலேயே சாதத்துக்கு அப்படிப் பேர் வந்ததோ என்னவோ? ஸத்வமான ஸாத்வன்னம் (ஸாது அன்னம்) என்பதே சாதம் ஆயிருக்கலாம் என்றும் அபிப்ராயம் உண்டு…..

இறை வழிபாடு என்று தனியாக ஒன்று பண்ணவேண்டுமென்றில்லாமல், ஸதா ஸர்வகாலமும் உள்ளூர அவன் ஸ்மரணமாகவே இருந்து, பேருக்காக, ஒப்புக்காக, அல்லது பூர்வ கர்மாவுக்காக அன்றாடக் கார்யங்களைப் பண்ணிக் கொண்டிருக்கும் ஒரு உசந்..த நிலை உண்டு. அப்போது அந்த ஸர்வ ஸாதாரணமான திசையில் கார்யம் எல்லாமே, ஒவ்வொரு கார்யமுமே பூஜாங்கங்களாக (பூஜையின் அங்கங்களாக)த் தான் அந்தராத்மாவுக்குத் தெரியும். அந்த நிலை லபிக்க வேண்டும் என்று ஆசார்யள் ஈச்வரனிடமும், அம்பாளிடமும் வேண்டிக் கொண்டிருக்கிறார். என்னென்ன தினசரிக் கார்யம் என்னென்ன பூஜாங்கம் ஆகவேண்டுமென்று அந்த இரண்டு ச்லோகங்களில் சொல்லியிருக்கிறார்*. ஈச்வரனிடம் வேண்டிக்கொள்ளும்போது.

ஆத்மா த்வம், கிரிஜா மதி:, ஸஹசரா: ப்ராணா:, சரீரம் க்ருஹம் என்று முதலில் ஒரு ஜீவனுக்கு உள்ள முக்யமான நாலை – ஆத்மா, மனஸ், ப்ராணன், சரீரம் என்ற நாலைச் சொல்லி ஈச்வரனேதான் ஆத்மா, அம்பாள் மனஸ், ஈச்வரனுடைய பரிவார கணங்களே ஐந்து விதமான ப்ராணனும், அவனுடைய வாஸ ஸ்தானமே சரீரம் என்று சொல்லிவிட்டு, அப்புறம் கார்யங்களைச் சொல்லி, இன்ன கார்யம் இன்ன பூஜாங்கம் என்று சொல்லியிருக்கிறார்.

ஆத்மா த்வம், கிரிஜா மதி:, ஸஹசரா: ப்ராணா:, சரீரம் க்ருஹம்

பூஜா தே விஷயோப-போக-ரசநா, நித்ரா ஸமாதி ஸ்திதி: |

ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: |

*அடுத்து வருவதைவிட விரிவாக இச் சுலோகங்களின் விளக்கம் ஆறாம் பகுதியில், ‘ஸெளந்தர்ய லஹரி’ என்ற பேருரையில் ‘ஸர்வ ஸமர்ப்பணம்’ என்ற பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

(ஸ்ரீசரணர் மீண்டும் கூறுகிறார்)

ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி:, ஸ்தோத்ராணி ஸர்வாகிரோ,

யத்யத் கர்ம கரோமி தத்தத் அகிலம் சம்போ | தவாராதநம்.

இதில் நமக்கு விஷயம் ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: என்கிறது. காலால் எங்கே ஸஞ்சாரம் பண்ணினாலும் அது ஸ்வாமிக்குச் செய்கிற ப்ரதக்ஷிணமாகவே இருக்கவேண்டும் என்கிறார். அதாவது, ப்ரதக்ஷிணம் என்பதை ஆசார்யாள் ஒரு முக்யமான பூஜாங்கமாகச் சொல்லியிருக்கிறார்.

அம்பாள் விஷயமாக இதேமாதிரி ‘ஸெளந்தர்ய லஹரி’யில், தினசரிக் கார்யம் ஒவ்வொன்றுக்கும் ஒரு பூஜாங்கத்தைச் சொல்லும்போது

ஜபோ ஜல்ப:, சில்பம் ஸகலமபி முத்ரா விரசநா,

        கதி: ப்ரதக்ஷிண்ய க்ரமணம்

(மீண்டும் கூறுகிறார்)

கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமணம், அசனாத்-யாஹூதி விதி: |

ப்ரணாம: ஸம்வேச:

(மீண்டும் கூறுகிறார்)

ப்ரணாம ஸம்வேச: ஸுகமகில மாத்மார்பணத்ருசா

ஸபர்யா-பர்யாய: தவ பவது யந்-மே விலஸிதம்.

இங்கே ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் இரண்டையுமே சொல்லியிருக்கிறார். ஈச்வர ஸம்பந்தமாகச் சொன்னபோது நமஸ்கார ப்ரஸ்தாவம் இல்லை. இங்கே இரண்டையுமே சொல்லியிருக்கிறார்.

அங்கே ‘ஸஞ்சாரம்’ என்றதையே இங்கே ‘கதி’ என்கிறார். நாம் நடக்கிற நடையெல்லாம் ஸ்வாமிக்குச் செய்யும் ப்ரதக்ஷிணமே என்ற ப்ரஜ்ஞை இருக்க வேண்டும்.

‘ஸம்வேசம்’ என்றால் தூங்குவது. தூங்குவதற்காகப் படுத்துக் கொண்டிருப்பது என்று இங்கே அர்த்தம். “அப்படிப் படுத்துக் கொண்டிருப்பது, அம்மா, உனக்கு நான் பண்ணும் நமஸ்காரமாக இருக்கட்டும்!” என்கிறார். இரண்டிலேயும் ஸர்வாங்கங்களையும் பூமியில் நீட்டிக் கொண்டு சும்மாதானே கிடக்கிறோம்?

ஆனால் அந்த ’சும்மா’விலேயே ரொம்ப வித்யாஸம். களைப்பின் பேரிலே ஒரு ப்ரக்ருதி தர்மமாக (இயற்கை விதியாக) நித்திரைக்குப் படுத்துக் கொள்கிறோம். நமஸ்காரம், நிஜமான நமஸ்காரம், மனஸை அப்படியே அவளிடம் சரணாகதி என்று ஒப்புக் கொடுப்பதால் ஏற்படுகிற ‘சும்மா’ நிலை. மனஸ் கார்யம் பண்ணாததால் எண்ணமே எழும்பாமல் சும்மாயிருக்கும் நிலை. (சிரித்து) நிஜமான நித்ரை எல்லாரும் செய்கிறோம்; நிஜமான நமஸ்காரம்?

அது வருவதற்கு ஆரம்பமாகத்தான் நமக்குத் தெரிந்த, நம்மால் முடிந்த நமஸ்கார க்ரியையைப் பண்ணுவது.

நித்ரை நமஸ்காரமென்றால், குப்புறப் படுத்துக் கொண்டு தூங்கவேண்டும் என்று சொல்கிறாரா என்று கேட்கக்கூடாது. தலையோடு கால் நீள நெடுகக் கிடப்பது என்ற அளவுக்குத்தான் இரண்டுக்கும் ஸாம்யம் (ஒற்றுமை). மல்லாக்கவோ, ஒருக்களித்தோ – அதிலும் இடது பக்கமாக ஒருக்களித்தோ – தான் சயனிக்க வேண்டும். குப்புறப் படுத்தால் ஜ்யேஷ்டாதேவி (மூதேவி).

ஒன்றும் பண்ணாமல் கிடப்பது நமஸ்காரம்; நடப்பது ப்ரதக்ஷிணம். இரண்டும் வேறே யோஜனை ஒன்றும் பண்ணாமல் பகவத் சிந்தனை ஒன்றே பண்ணிக்கொண்டு செய்யவேண்டிய கார்யங்கள்.

காலால் பண்ணும் கார்யமாக உள்ள நடப்பதை முதலில் பண்ணி அப்புறம் கார்யமில்லாமல் கிடக்கணும். ‘ப்ரதக்ஷிண – நமஸ்காரம்’ என்கிறபடி முதலில் வலம் வந்து அந்த வலத்தை முடிக்கிற இடத்தில் வணங்க வேண்டும்.

‘ப்ரதக்ஷிணம்’ என்பதில் வரும் தக்ஷிணம் என்பதைத் தான் ‘வலம்’ என்பது காட்டும் வலது பக்கம் குறிப்பிடுகிறது.

ஒரு ஸ்வாமியையோ, திருவண்ணாமலை மாதிரி கிரியையோ, மஹானையோ நடுவாக வைத்து அந்த மூர்த்தியின் பக்கம் நம்முடைய வலது பக்கமே இருக்கிற மாதிரி சுற்றுவதுதான் ப்ரதக்ஷிணம். இதையே வேறு விதமாகச் சொன்னால், ப்ரதக்ஷிணம் செய்கிறபோது மூர்த்தி எப்போதும் நமக்கு வலது பக்கமாகவே இருக்கும்.

‘வலம் வருவது’ என்று தமிழில் சொல்வதில் ரொம்பவும் அர்த்த விசேஷம் இருப்பது தெரிகிறதல்லவா?

ஸம்ஸ்க்ருதத்தில் வலது பக்கத்தை ‘தக்ஷிணபாகம்’ என்று சொல்கிறது. கிழக்குமுகமாக ஒருவர் உட்கார்ந்து கொண்டால் இந்த சரீரமே ஈச்வரனுடைய கோயில் என்று சொல்வதில் இந்த ஜீவனுடைய ஹ்ருதயந்தான் ஈச்வரன் இருக்கிற மூல ஸ்தானம். ஹ்ருதய மத்திதான் ஸாக்ஷாத் அந்த ஈச்வரனே. அப்போது அவனுக்கு வலது பக்கத்தில் இந்த சரீரத்தின் வலது பக்கமாக இருப்பது எந்தத் திசையில் இருக்கிறது? தெற்குதானே? அதனால்தான் அதற்கே தக்ஷிணபாகம் என்று பெயர் என்று தோன்றுகிறது.

‘ஸரி, எதற்காக ப்ரதக்ஷிணம் பண்ணணும்? ஸ்வாமியை ஏன் சுற்றணும்? ‘ஊர் சுத்தாதே!’ என்றே சொல்வது. இங்கே மட்டும் சுற்றச் சொல்லியிருக்கிறதே! ஏன்?’

ஊருக்கு எதிராக இது இருப்பதால் தான்!

‘அப்படியென்றால்?’

ஊர் என்றால் உலகம், லோகம். லோகத்தையே பார்த்துத் திரிந்து கொண்டிருந்தால், ‘ஊர் சுத்தினால்’ லெளகிகம் என்கிற லோகத்தின் அல்ப ஸெளக்யங்களைக் கொடுக்கும் விஷயாதிகளே நம்மை இழுத்துக்கொண்டு போய்ப் பரம ஸெளக்யத்தை அடையமுடியாமல் தடை பண்ணிவிடும்.

இந்த லெளகிகத்துக்கு நேரெதிராக ‘தெய்விகம்’, ‘ஆத்மிகம்’ என்று சொல்கிற அந்தப் பரம ஸெளக்யமான ஸமாசாரம் ஸ்வாமி என்று இருக்கிறது. அப்போது, லெளகிகத்தில் சுற்றப்படாது என்கிறதற்கு நேரெதிராக அவரைச் சுற்ற வேண்டும், சுற்றி வலம் வரவேண்டும் என்றுதானே ஆகிறது?

அவன் தான் இந்த லோகத்துக்குள்ளேயும், லெளகிகம் என்கிறதற்கு உள்ளேயுங்கூட இருக்கிறான்; அவனன்றி எதுவுமில்லை என்ற ப்ரக்ஞையோடு அத்தனை திசைகளிலும் நிறைந்திருக்கிற அவனைச் சுற்ற வேண்டும். இப்படிச் சுற்றி வருவதில் திசைகள் மாறினாலும் மாறாத மத்ய ஸ்தானமாக அவனே இருக்கிறான் என்பதிலிருந்து ஸகலத்திற்கும் Centre of Gravity (ஈர்ப்பு மையம்) அவன் தான் என்ற ஸத்யத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் ப்ரதக்ஷிண க்ரியையை வைத்திருப்பது.