உல‌குக்கெல்லாம் சொந்த‌மான‌வ‌ர் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

பிள்ளையார் ஏழை எளிய‌வ‌ர்க‌ளுக்கெல்லாம் ஸ்வாமி. ம‌ஞ்ச‌ள் பொடியிலும், க‌ளிம‌ண்ணிலும், சாணியிலும் கூட‌ எவ‌ரும் ஒரு பிள்ளையாரைப் பிடித்து பூஜை செய்துவிட‌லாம். அவ‌ர் எளிதில் ஸந்தோஷ‌ப்ப‌டுகிற‌வ‌ர். எங்கே, எப்ப‌டி, எதில் கூப்பிட்டாலும் உட‌னே வ‌ந்து அந்த‌க் க‌ல்லோ, க‌ளிம‌ண்ணோ அத‌ற்குள்ளிருந்துகொண்டு அருள் செய்வார். அவ‌ரை வ‌ழிப‌ட‌ நிறைய‌ சாஸ்திர‌ம் படிக்க‌வேண்டும் என்ப‌தில்லை. ஒன்றும் ப‌டிக்காத‌வ‌னுக்கும், அவ‌ன் கூப்பிட்ட‌ குர‌லுக்கு வ‌ந்துவிடுவார்.

‘ம‌ற்ற‌ தேவ‌தா விக்கிர‌ஹ‌ங்க‌ளில் ஸாங்கோபாங்க‌மாக‌ப் பிராண‌ப் பிரதிஷ்டை என்று ப‌ண்ணி, அவ‌ற்றில் அந்த‌ந்த‌ தேவ‌தைக‌ளின் ஜீவ‌ க‌லையை உண்டாக்குவ‌து போல் பிள்ளையாருக்குப் ப‌ண்ண‌ வேண்டுமென்ப‌தில்லை. பாவித்த மாத்திர‌த்தில் எந்த‌ மூர்த்தியிலும் அவ‌ர் வ‌ந்துவிடுகிறார்’. என்று சொல்வ‌துண்டு.

ம‌ற்ற‌ ஸ்வாமிக‌ளைத் த‌ரிச‌ன‌ம் செய்வ‌து என்றால், நாம் அத‌ற்காக‌ ஒரு கால‌ம் பார்த்து, குளித்து முழுகி, அர்ச்ச‌னை சாம‌ன்க‌ள் வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போக‌ வேண்டியிருக்கிற‌து. கோயிலுக்குப் போனாலும் நேரே அந்த‌ ஸ்வாமியிட‌ம் போய்விட‌ முடியாது. பிராகார‌ம் சுற்றிக்கொண்டு உள்ளே போக‌வேண்டும். அப்போதும் கூட‌ ஸ்வாமிக்கு ரொம்ப‌ப் ப‌க்க‌த்தில் போக‌க் கூடாது. கொஞ்ச‌ம் த‌ள்ளித்தான் நிற்க‌ வேண்டும். பிள்ளையார் இப்ப‌டி இல்லை. எந்த‌ ச‌ம‌ய‌மானாலும் ச‌ரி, நாம் ஆபீஸுக்கோ, ஸ்கூலுக்கோ, க‌டைக்கோ போய் வ‌ருகிற‌போதுகூட‌, தெருவிலே த‌ற்செயலாக‌த் த‌லையைத் தூக்கினால், அங்கே ஒரு முக்கில் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்! அவ‌ரைப் பார்த்த‌மாத்திர‌த்தில் நாமாக‌ நெற்றியில் குட்டிக் கொண்டு ஒரு தோப்புக்க‌ர‌ண‌ம் போட்டுவிட்டு ந‌டையைக் க‌ட்டுகிறோம். இதிலேயே ந‌ம‌க்குச் சொல்ல‌த் தெரியாத‌ ஒரு நிம்ம‌தி, ஸ‌ந்தோஷ‌ம் உண்டாகிற‌து.

அவ‌ருக்குக் கோயில் என்று இருப்ப‌தே ஒரு அறைதான். அத‌னால் ஒரு பேத‌மும் இல்லாம‌ல் யாரும் கிட்டே போய்த் த‌ரிசிக்க‌ முடிகிற‌து. எல்லோருக்கும் அவ‌ர் ஸ்வாதீன‌ம்! பிராகார‌ங்க‌ள் எல்லாம் தாண்டி உள்ளுக்குள்ளே உட்கார்ந்திருக்கிற‌ ஸ்வாமிக‌ளைவிட‌, இப்ப‌டி எங்கே பார்த்தாலும் ந‌ட்ட ந‌டுவில் உட்கார்ந்திருக்கிற‌ பிள்ளையார்தான் த‌ப்பாம‌ல் ஜ‌ன‌ங்க‌ளை இழுத்து தோப்புக் க‌ர‌ண‌ம் வாங்கிக் கொண்டுவிடுகிறார்!

பிள்ளையார் வ‌ழிபாட்டுக்கென்றே சில‌ அம்ச‌ங்க‌ள் இருக்கின்ற‌ன. சித‌று தேங்காய் போடுவ‌து, நெற்றியில் குட்டிக்கொள்வ‌து, தோப்புக் க‌ர‌ண‌ம் போடுவ‌து ஆகிய‌வை பிள்ளையார் ஒருவ‌ருக்கே உரிய‌வை.

பிள்ளையார் ச‌ந்நிதியில், இர‌ண்டு கைக‌ளையும் ம‌றித்து நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள‌வேண்டும். இப்ப‌டியே இர‌ண்டு கைகளையும் ம‌றித்துக் காதுக‌ளைப் பிடித்துக்கொண்டு, முட்டிக்கால் த‌ரையில் ப‌டுகிற‌ மாதிரி தோப்புக்க‌ர‌ண‌ம் போட‌வேண்டும். இவை எத‌ற்கு என்றால்:

யோக‌ சாஸ்திர‌ம் என்று ஒன்று இருக்கிற‌து. அதிலே ந‌ம் நாடிகளில் ஏற்ப‌டுகிற‌ ச‌ல‌ன‌ங்களால் எப்ப‌டி ம‌ன‌ஸையும் ந‌ல்ல‌தாக‌ மாற்றிக்கொள்ள‌லாம் என்று வ‌ழி சொல்லியிருக்கிற‌து. ந‌ம் உட‌ம்பைப் ப‌ல‌ தினுசாக‌ வ‌ளைத்துச் செய்கிற‌ அப்பியாஸ‌ங்க‌ளால், சுவாஸ‌த்தின் கதியில் உண்டாக்கிக்கொள்கிற‌ மாறுத‌ல்க‌ளால் ந‌ம் உள்ள‌ம் உய‌ர்வ‌த‌ற்கான‌ வ‌ழி அந்த‌ சாஸ்திர‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து. நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வ‌து, தோப்புக்க‌ர‌ண‌ம் போடுவ‌து இவ‌ற்றால் ந‌ம் நாடிக‌ளின் ச‌ல‌ன‌ம் மாறும்; ம‌ன‌ஸில் தெய்விக‌மான‌ மாறுத‌ல்க‌ள் உண்டாகும். ந‌ம்பிக்கையோடு செய்தால் ப‌ல‌ன் தெரியும்.

குழ‌ந்தைக‌ளுக்காக‌ நீதி நூல்களைச் செய்த‌ அவ்வையார் பெரிய‌வ‌ர்க‌ளுக்குக்கூட‌ எளிதில் புரியாத‌ பெரிய‌ யோக‌ த‌த்துவ‌ங்க‌ளை வைத்துப் பிள்ள‌யார் மேலேயே ஒரு ஸ்தோத்திர‌ம் செய்திருக்கிறாள். அத‌ற்கு “விநாய‌க‌ர் அக‌வ‌ல்” என்று பெய‌ர். அள‌வில் சின்ன‌துதான் அந்த‌ அக‌வ‌ல் ஸ்தோத்திர‌ம்.

பிள்ளையாரை நினைக்கிற‌போது அவ்வையாரையும் நாம் சேர்த்து நினைத்தால் இர‌ட்டிப்பு அநுக்கிர‌ஹ‌ம் கிடைக்கும். ‘விநாய‌க‌ர் அக‌வ‌லை’ச் சொன்னால் இர‌ண்டு பேரையும் ஒரே ச‌ம‌யத்தில் நினைத்த‌தாகும். எல்லோரும் இதைச் செய்ய‌வேண்டும். வெள்ளிக்கிழ‌மைதோறும் ப‌க்க‌த்திலுள்ள‌ பிள்ளையார் கோயிலுக்குப் போய் “விநாய‌க‌ர் அக‌வ‌ல்” சொல்லி விக்நேச்வ‌ர‌னுக்கு அர்ப்ப‌ண‌ம் ப‌ண்ண‌வேண்டும்.

பிள்ளையாருக்கு எல்லோரும் சொந்த‌ம்; பிள்ளையார் எல்லோருக்கும் சொந்த‌ம். ஏழை எளிய‌வ‌ருக்கும், சாஸ்திர‌ம் ப‌டிக்காத‌ சாமானிய‌ ஜ‌ன‌ங்க‌ளுக்கும்கூட‌ச் சொந்த‌ம். ம‌ற்ற‌ ஸ்வாமிக‌ளின் நைவேத்திய‌ விநியோக‌த்தில் பெரிய‌ ம‌நுஷ்ய‌ர்க‌ளுக்குத்தான் முத‌லிட‌ம். பிள்ளையாரோ த‌ம‌க்குப் போடுகிற‌ சித‌றுகாய் இவ‌ர்க‌ளுக்குப் போகாம‌ல் ஏழைக் குழ‌ந்தைக‌ளுக்கே போகும்ப‌டியாக‌ வைத்துக் கொண்டிருக்கிறார்! எல்லோரும் “அக‌வ‌ல்” சொல்லி அவ‌ரை வ‌ழிப‌ட‌ வேண்டும். பெண்க‌ளுக்கும், குழ‌ந்தைக‌ளுக்கும் இதில் அதிக‌ உரிமை உண்டு. அவ்வை பெண்ணாக‌ப் பிற‌ந்த‌தால், பெண்க‌ள் எல்லோருக்கும் அவ‌ளுடைய‌ இந்த‌ ஸ்தோத்திர‌த்தில் பாத்திய‌தை ஜாஸ்தி. அவ‌ள் குழ‌ந்தைக‌ளுக்கு உப‌தேசித்த‌ பாட்டி. விநாய‌க‌ரும் குழ‌ந்தைத் தெய்வ‌ம். அத‌னால் அவ‌ளுடைய‌ அக‌வ‌லைக் குழ‌ந்தைக‌ள் யாவ‌ரும் அவர்முன் பாடி ஸ‌ம‌ர்ப்பிக்க‌வேண்டும். கொஞ்ச‌ம் ‘க‌ட‌முட‌’ என்றிருக்கிற‌தே, அர்த்த‌ம் புரிய‌வில்லையே என்று பார்க்க‌ வேண்டாம். அர்த்த‌ம் புரிந்தாலும், புரியாவிட்டாலும் ‘அவ்வையின் வாக்குக்கே ந‌ன்மை செய்கிற‌ ச‌க்தி உண்டு’ என்று ந‌ம்பி அக‌வ‌லைப் பொட்டை நெட்டுருப் போட்டுச் சொன்னாலும் போதும்; அத‌னால் நாமும் க்ஷேம‌ம் அடைவோம். நாடும் க்ஷேம‌ம் அடையும்.

அழ‌கான‌ பெட்டி ஒன்று கிடைக்கிற‌து. அதற்குள் நிறைய‌ ர‌த்தின‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஆனாலும் பெட்டியைத் திற‌க்க‌ச் சாவியைக் காணோம். அத‌னால் பெட்டி வேண்டாம் என்று விட்டு விடுவோமா? “சாவி கிடைக்கிற‌போது கிடைக்க‌ட்டும்” என்று பெட்டியை வைத்துக் கொள்வோம் அல்ல‌வா? இப்போது பெட்டியை விட்டுவிட்டால் பிற‌கு சாவி கிடைத்தாலும் பிர‌யோஜ‌ன‌மில்லையே? “விநாய‌க‌ர் அக‌வ‌ல்” அப்ப‌டிப்ப‌ட்ட‌ அழ‌கான‌ பெட்டி. அத‌ற்குள்ளே யோக‌ சாஸ்திர‌ விஷ‌ய‌ங்க‌ள் ர‌த்தின‌ம் மாதிரி உள்ள‌ன‌. அவ‌ற்றைப் புரிந்துகொள்கிற‌ புத்தி (சாவி) இப்போது ந‌ம்மிட‌ம் இல்லாவிட்டாலும் ப‌ர‌வாயில்லை. இப்போதே பிடித்து அதைச் சொல்லிக்கொண்டிருப்போம். சொல்ல‌ச் சொல்ல‌, தானே அர்த்த‌மும் புரிய‌ ஆர‌ம்பிக்கும். பிள்ளையாரே அது புரிவ‌த‌ற்கான‌ அநுக்கிர‌ஹ‌த்தைச் செய்வார்.

பிள்ளையார் எல்லாருக்கும் ந‌ல்ல‌வ‌ர்; எல்லாருக்கும் வேண்டிய‌வ‌ர்; சொந்த‌ம். சிவ‌ ச‌ம்ப‌ந்த‌மான‌ லிங்க‌ம், அம்பாள், முருக‌ன் முத‌லிய‌ விக்கிர‌ஹ‌ங்க‌ளைப் பெருமாள் கோயிலில் பார்க்க‌ முடியாது. ஆனால், பிள்ளையாரும் சிவ‌ குடும்ப‌த்தைதான் சேர்ந்த‌வ‌ர் என்றாலும், விஷ்ணு ஆல‌ய‌ங்க‌ளில்கூட‌ப் பிள்ளையார் ம‌ட்டும் இருப்பார். ‘தும்பிக்கை ஆழ்வார்’ என்று அவ‌ருக்குப் பெய‌ர் சொல்லுவார்க‌ள். ம‌தச்ச‌ண்டைக‌ளுக்கெல்லாம் அப்பாற்ப‌ட்ட‌வ‌ர் அவ‌ர்.

அத‌னால்தான் புத்த‌ம‌த‌ம், ஜைன‌ம‌த‌ம் எல்லாவ‌ற்றிலும்கூட‌ அவ‌ரை வ‌ழிப‌டுகிறார்க‌ள். த‌மிழ் நாட்டிலிருப்ப‌துபோல் ம‌ற்ற‌ ராஜ்ய‌ங்க‌ளில் த‌டுக்கி விழுந்த‌ இட‌மெல்ல‌ம் விநாய‌க‌ர் இல்லாவிட்டாலுங்கூட‌, பார‌த‌ தேச‌த்திலுள்ள‌ அத்த‌னை ஸ்த‌ல‌ங்க‌ளிலும் ஓரிடத்திலாவ‌து அவ‌ர் இருப்பார். “க‌ன்னியாகும‌ரியிலும் பிள்ளையார்; ஹிம‌ய‌த்தின் கோடியில் கேதாரத்திலும் ஒரு பிள்ளையார்” என்று ஒரு க‌ண‌ப‌தி ப‌க்த‌ர் என்னிட‌ம் பெருமைப்ப‌ட்டுக் கொண்டார்.

ந‌ம் தேச‌த்தில் ம‌ட்டும்தான் என்றில்லை. ஜ‌ப்பானிலிருந்து மெக்ஸிகோ வ‌ரை உல‌கத்தின் எல்ல‌த் தேச‌ங்க‌ளிலும் விநாய‌க‌ர் விக்கிர‌ஹ‌ம் அக‌ப்ப‌டுகிற‌து! லோக‌ம் பூராவும் உள்ள‌ ஸ‌க‌ல‌ நாடுகளிலும் அவ‌ரைப் ப‌ல‌ தினுசான‌ மூர்த்திக‌ளில் வ‌ழிப‌டுகிறார்க‌ள்.

அப்ப‌டி லோக‌ம் முழுவ‌த‌ற்கும் சொந்த‌மாக‌ இருக்க‌ப்ப‌ட்ட‌வ‌ரை நாம் எல்லோரும் த‌வ‌றாம‌ல் ஆராதிக்க‌ வேண்டும். வ‌ச‌தி இருப்ப்ப‌வ‌ர்க‌ள் அவ‌ருக்கு மோத‌க‌மும், ம‌ற்ற‌ ப‌க்ஷ‌ண‌மும், ப‌ழ‌ங்க‌ளும் நிறைய‌ நிவேத‌ன‌ம் செய்து, குழ‌ந்தைக‌ளுக்கு விநியோக‌ம் ப‌ண்ண‌வேண்டும். அவ‌ர் குழ‌ந்தையாக‌ வ‌ந்த‌ ஸ்வாமி. குழ்ந்தை என்றால் அது கொழுகொழு என்று இருக்க‌வேண்டும். அத‌ற்கு நிறைய‌ ஆகார‌ம் கொடுக்க‌ வேண்டும். பிள்ளையாரின் தொப்பை வாடாம‌ல் அவ‌ருக்கு நிறைய‌ நிவேத‌ன‌ம் செய்ய‌வேண்டும். வெள்ளிக்கிழ‌மைதோறும் அவ‌ருக்கு சித‌றுகாய் போட்டுக் குழ‌ந்தைக‌ளை ஸ‌ந்தோஷ‌ப்ப‌டுத்த‌ வேண்டும். பெரிய‌வ‌ர்க‌ள் இவ்வாறு ம‌ற்ற‌க் குழ‌ந்தைக‌ளை ம‌கிழ்வித்தால், ஈச‌ன் குழ‌ந்தையான‌ பிள்ளையாரும் ம‌கிழ்ந்து, பெரிய‌வ‌ர்களையும் குழ‌ந்தைக‌ளாக்கித் த‌ம்மோடு விளையாட‌ச் செய்வார்.

பெரிய‌வ‌ர்க‌ளானால் துக்கமும், தொல்லையும் தான். குழ‌ந்தை ஸ்வாமியோடு சேர்ந்து இந்த‌த் துக்க‌த்தை தொலைத்து அவ‌ரைப்போல் ஆன‌ந்த‌மாகிவிட‌ வேண்டும். அவ‌ர் எப்போதும் சிரித்த‌ முக‌முள்ள‌வ‌ர். ‘ஸுமுக‌ர்’, ‘பிர‌ஸ‌ன்ன‌ வ‌தன‌ர்’ என்று பெய‌ர் பெற்று எப்போதும் பேரான‌ந்த‌த்தைப் பொங்க‌ விடுப‌வ‌ர். நாம் உண்மையாக‌ ப‌க்தி செய்தால் ந‌ம்மையும் அப்ப‌டி ஆக்குவார்.

த‌மிழ் நாட்டின் பாக்கிய‌மாக‌த் திரும்பிய‌ இட‌மெல்லாம் அம‌ர்ந்திருக்கும் அவ‌ரை நாம் எந்நாளும் ம‌ற‌க்க‌க் கூடாது. நாம் எல்லோரும் த‌வ‌றாம‌ல் பிள்ளையார் கோயிலுக்குப் போவ‌து, தேங்காய் உடைப்ப‌து, ‘விநாய‌க‌ர் அக‌வ‌ல்’ சொல்வ‌து என்று வைத்துக்கொண்டால் இப்போதிருக்கிற‌ இத்த‌னை ஆயிர‌ம் கோயிலுங்கூட‌ப் போதாது; புதிதாக‌க் க‌ட்ட‌ வேண்டியிருக்கும்.

புதிதாக‌ப் பிள்ளையார் கோயில் க‌ட்டி மூர்த்திப் பிர‌திஷ்டை செய்வ‌தில் வேடிக்கையாக‌ ஒரு உல‌க‌ வ‌ழ‌க்கு இருக்கிற‌து. அதாவ‌து புதிதாக‌ப் பிள்ளையார் விக்கிர‌ஹ‌ம் அடிக்க‌க் கொடுக்காம‌ல், ஏற்க‌ன‌வே ஒரு கோயிலில் இருக்கிற‌ பிள்ளையாரைத் திருடிக் கொண்டு வ‌ந்துதான் புதுக்கோயில் வைக்க‌வேண்டும் என்பார்கள். ‘இது என்ன‌, சாதார‌ண‌ விஷ‌ய‌ங்க‌ளிலேயே திருட்டு கூடாது என்றால், தெய்வ‌க் காரிய‌த்தில் போய்த் திருட்டுச் செய்ய‌லாமா’ என்று தோன்றுகிற‌த‌ல்ல‌வா? பிள்ளையாரைத் திருட‌லாம் என்றால்தான், ஒவ்வொரு கோயிலைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளும், ‘ந‌ம் பிள்ளையார் எங்கே திருட்டுப் போய்விடுவாரோ?’ என்ற‌ ப‌ய‌த்தால், அவ‌ரை அல்லும் ப‌க‌லும் க‌வ‌னித்துக் கொள்வார்க‌ள். இப்போது பல‌ ஊர்க‌ளில் க‌வ‌ன‌க் குறைவால், ‘ஸ்வாமியைக் காணோம்’ என்று செய்தி வ‌ருகிற‌ மாதிரி ந‌ட‌க்காம‌ல் இருக்கும். அத‌ற்காக‌வே இப்ப‌டி ஒரு திருட்டு வ‌ழ‌க்க‌த்தைச் சொல்லி வ‌ருகிறார்க‌ள் போலிருக்கிற‌து. பிள்ளையார் நினைப்பு ந‌ம் ஜ‌ன‌ங்க‌ளுக்கு நீங்க‌வே கூடாது என்றுதான் இம்மாதிரியான‌ ஏற்பாடுக‌ளை ந‌ம் பெரிய‌வ‌ர்க‌ள் செய்து வைத்திருக்கிறார்க‌ள். ந‌ம‌க்கு எப்போதும் துணை அவ‌ர்தான்.

ந‌ம‌க்கும், நாட்டுக்கும், உல‌குக்கும் எல்லா க்ஷேம‌ங்க‌ளும் உண்டாவ‌த‌ற்கு அவ்வையார் மூல‌ம் பிள்ளையாரைப் பிடிப்ப‌தே வ‌ழி.