பகவானைக் காட்டவே பகுத்தறிவு : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இப்படிப்பட்ட பிரமாணங்களைக் கொண்டு ஆராய்ந்து கொண்டே போவதில் நியாயம் விட்ட இடத்தில் வைசேஷிகம் பிடித்துக்கொண்டது. வைசேஷிக ஸ்தாபகரான ‘கணாதர்’ என்ற மஹரிஷி, எல்லாம் கடைசியில் பரமாணுக்களால் ஆனது என்று கொண்டு போய் நிறுத்துகிறார். அந்த பரமாணுக்களை ஈச்வரன் பல தினுஸில் ஒன்று சேர்த்தே ஜகத்தை உண்டாக்கியிருக்கிறான் என்கிறார்.

ஜகத்து, ஜீவன் எல்லாமே ஈச்வரனுக்கு வேறேயாக த்வைதமாகத்தான் நியாய – வைசேஷிகங்களில் பேசப்படுகின்றன.

சைதன்யமான ஜீவனின் சிற்றறிவு எங்கேயிருந்து வந்தது, ஜடமான அணு எங்கேயிருந்து வந்தது என்று கேட்டுக்கொண்டே மேலே மேலே போகிற போதுதான் கடைசியில் எல்லாம் பரமாத்மாவின் பல தோற்றங்கள், வேஷங்கள் தான் என்று அத்வைதமாக முடிகிறது.

அந்த அத்வைதத்தில் முடிவதற்கும் நியாயசாஸ்திரம் இடைநிலையில் வேண்டியிருக்கிறது.

பகுத்தறிவுக்கு உரிய இடத்தைக் கொடுப்பதே நம்முடைய ‘நியாயம்’ அல்லது ‘தர்க்கம்’. அது அறிவு ஆராய்ச்சி நிரம்பப் பண்ணுகிறது. அதற்காக rationalism என்பது materialism, atheism மாதிரியான லோகாயத வாதமாக, நிரீச்வரவாதமாக, நாஸ்திகமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை என்றும் காட்டுகிறது. அறிவு ஆராய்ச்சியின் மூலமே, இத்தனை கிரமத்தோடு ஒரு லோகம் ஏற்பட்டு அதில் இத்தனை ஜீவஜந்துக்களின் வாழ்க்கை ஒன்றுக்கொன்று இசைந்து உண்டாகியிருக்கிறதென்றால் இதையெல்லாம் செய்கிற ஒரு ஈச்வரன் இருக்கத்தான் வேண்டும் என்கிறது. நம் பகுத்தறிவு போகமுடியாத இடமும் உண்டு என்பதை நியாய சாஸ்திரம் ஒப்புக்கொள்வதால்தான் நம்மால் நிரூபித்துப் பார்த்துக் கொள்ள முடியாத விஷயங்களைக் கூட வேதம் சொன்னால் ஏற்கத்தான் வேண்டும் என்கிறது.

அதாவது நியாய சாஸ்திரத்தில் யுக்தி என்பது குயுக்தியாக (ஆசார்யாள் வாக்குப்படி, ‘தர்க்கம்’ என்பது ‘துஸ்தர்க்க’மாக) ஆகிவிடாமல் ஸத்ய தத்வத்தைக் காட்டிக் கொடுக்கவே பிரயோஜனப்படுகிறது.

அறிவால் நல்ல முறையில் ஆராய்ச்சி பண்ணுவது அந்த அறிவையே சுத்தப்படுத்தும். புத்தித் தெளிவு, intellectual clarity என்பதைக் கொடுக்கும். அப்படிப்பட்ட நிலையிலே புத்திக்கு அதீதமான ஸத்யங்களும் ஸ்புரிப்பதற்கு ( flash ஆவதற்கு) இடம் ஏற்படும்.

புத்தி ஆராய்ச்சியே செய்யாமல் பகவானையும் சாஸ்திரங்களையும் பூர்ணமாக நம்பிக் கொண்டு இருந்துவிட்டால் அது ரொம்பவும் சிலாக்யம்தான். ஆனால் இப்படிப் பூர்ணமாக நம்பிக் கொண்டு அதிலேயே ஈடுபட்டு ஆத்மாவைக் கடைத்தேற்றிக்கொள்ள நம்மால் முடிகிறதா? அப்படி முடியாத நிலையில் தெய்வ பரமான சிந்தனையோ, ஆத்மாவைப் பற்றிய நினைப்போ இல்லாமல், அதே சமயத்தில் எந்த விதமான அறிவு விசாரணையும் செய்யாமல் வெறுமே தின்று கொண்டும், தூங்கிக் கொண்டும் சோம்பேறியாக இருப்பதைவிட, புத்தியைக் கொண்டு ஆராய்ந்து, “ஈச்வரன் இல்லை; நாஸ்திகம்தான் சரியானது” என்ற முடிவுக்கு வந்தால்கூடத் தேவலை என்பேன். ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்ள ஒரு முயற்சியும் பண்ணாத சோம்பேறியைவிட, தன் மூளையைச் செலவழித்து ஏதோ பரிசிரமப் பட்டு ஒருத்தன் நாஸ்திகமான முடிவுக்கு வந்திருக்கிறான் என்றால், இந்தச் சோம்பேறியைவிட அந்த நாஸ்திகன் உயர்ந்தவன் என்பேன். அந்த நாஸ்திகன் இன்னும் ஆராய்ந்து கொண்டே போய் புத்தித் தெளிவு ( clarity ) பெற்றானானால் அப்புறம் நாஸ்திகத்தை விட்டுவிடவும் வழி பிறக்கும். ஆனால் இந்த சோம்பேறிக்குத்தான் ஒரு வழியும் இல்லை!

இதனால்தான் ‘சார்வாகம்’ என்கிற நாஸ்திக ஸித்தாந்தத்தையும் ஒரு மதமாக ஆதியில் வைத்தார்கள். சாரு+வாகம் என்பதே சார்வாகம். அதாவது கேட்பதற்கு நன்றாக இருக்கிற வாக்கு என்று அர்த்தம். “சாமி, பூதம் என்றெல்லாம் அலட்டிக் கொண்டு விரதம், தபஸ், இந்திரிய நிக்ரஹம், மனோ நிக்ரஹம் என்று அவஸ்தைப்பட வேண்டாம். மனம் போனபடி, இந்திரியம் போகிற வழியில் ஆனந்தமாயிருப்போம்! என்று கேட்பதற்கு ரம்யமாகச் சொல்வதால் சார்வாகம் என்று அதற்குப் பேர்.

ஆனால் அப்படி நடக்கும்போது ஆனந்தத்தோடு துக்கமும் தானே வருகிறது? அது தானே அதிகம் வருகிறது? இந்த துக்க நிவிருத்திக்குத்தான் மெடீரியலிஸமாக இல்லாத மற்ற மதங்கள் வழி சொல்கின்றன.