எல்லாவித அறிவும் வேண்டும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

புத்தி, மனஸ், இவற்றை நன்றாக உபயோகித்து இவை தம்மைத் தாமே நன்றாக சாணையில் தீட்டுகிறதுபோல தீக்ஷண்யமாகும்படிப் பண்ணிக் கொள்வது ஸத்ய தத்வத்தைக் கண்டுபிடிப்பதற்கு ரொம்பவும் பிரயோஜனப்படும். இல்லாது போனால் லோகமெல்லாம் மாயை என்று சொல்லவந்த ஆசார்யாள் எதற்காக அத்தனை சாஸ்திரங்களையும், கலைகளையும், ஸயன்ஸ்களையும் தெரிந்து கொண்டு ஸர்வக்ஞ பீடாரோஹணம் பண்ணவேண்டும்?

நியாயத்துக்கு ‘தர்க்கம்’ என்றும் ‘ஆன்வீக்ஷிகி’ என்றும் பெயர்கள் உண்டு. இந்த ஆன்வீக்ஷிகியான நியாயத்தையும், கபில மஹரிஷி ஸ்தாபித்ததால் ‘காபிலம்’ எனப்படும் ஸாங்கியத்தையும், பதஞ்ஜலியின் பெயரால் பாதஞ்ஜலம் எனப்படும் யோக சாஸ்திரத்தையும், குமாரில பட்டரின் பாட்ட மதமான மீமாம்ஸையையும் நம் ஆசார்யாள் கரைத்துக் குடித்திருக்கிறார் என்று, ‘சங்கர விஜய’ங்களில் ஒன்றில் ஒரு ச்லோகம் இருக்கிறது.

ஆன்வீக்ஷிக்யைக்ஷி தந்த்ரே பரிசிதி-ரதுலா காபிலே காபி லேபே

பீதம் பாதஞ்ஜலாம்ப: பரமபி விதிதம் பாட்ட கட்டார்த்த தத்வம்| [“மாதவீயம்” IV.20]

அத்வைதத்தைச் சொல்லாத சாஸ்திரங்களும் அத்வைதத்தில் அடங்குகிறவைதான் அதனால்தான் சங்கராசாரியார் என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிற நான் இந்த எல்லா சாஸ்திரங்களையும் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். த்வைதம்-விசிஷ்டாத்வைதம், சைவம்-வைஷ்ணவம் இவற்றில் எல்லாவற்றையும் தனக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பது அத்வைதம். மற்றவை இதைத் திட்டினாலும், அவற்றையும் இது தனக்குள்ளே இடம் கொடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. அவற்றை இது திட்டுகிற இடங்களிலும், அவைதான் முடிந்த முடிவு என்றும் அத்வைதம் தப்பு என்றும் அவை சொன்னதை ஆக்ஷேப்பிப்பதற்காகத்தான் திட்டு இருக்குமே தவிர, அவை அடியோடு தப்பு என்று அத்வைதம் சொல்லாது. அவற்றுக்கும் எங்கே எவ்வளவு இடம் தர வேண்டுமோ அதைத் தரும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is பிரமாணங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  தர்க்க சாஸ்திர நூல்கள்
Next