உப புராணங்களும் பிற புராணங்களும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

பதினெட்டு புராணங்களைத் தவிர பதினெட்டு உப-புராணங்களும் இருக்கின்றன. ‘விநாயக புராணம்’, ‘கல்கி புராணம்’ முதலியவை உப-புராணங்களில் தான் இருக்கின்றன. முக்யமாகப் பதினெட்டு உப-புராணம் என்று சொன்னாலும் மேலும் அநேகம் இருக்கின்றன.

மாஸங்களின் மகிமைகளை சொல்கிற துலா (ஐப்பசி) புராணம், மாக (மாசி) புராணம், வைசாக (வைகாசி) புராணம் என்றெல்லாம் இருப்பவை பதினெட்டு புராணங்களிலும் உப-புராணங்களிலும் அடங்கியிருக்கிற சில பகுதிகளே.

ஸ்தல புராணங்கள் என்று ஒவ்வொரு க்ஷேத்திரத்துக்கும் இருக்கிறது. இவற்றிலும் பல முன்னே சொன்ன புராணங்களுக்குள்ளேயே இருப்பவைதான். தனியாக இருப்பவையும் அநேகம்.

இப்படியே காவேரி, கங்கை முதலான தீர்த்தங்களின் மாஹாத்மியங்களும் புராணங்களின் பாகமாகவும், தனியாகவும் இருக்கின்றன. துலா புராணத்தில் முக்யமாகக் காவேரி மகிமைதான் வருகிறது. துலா மாஸத்தில் காவேரி ஸ்நானம் விசேஷமானது.

பகவானைப் பற்றிய புராணங்களைத் தவிர பக்தர்களைப் பற்றியேயான புராணங்களும் இருக்கின்றன. ‘பெரிய புராணம்’ என்ற திருத்தொண்டர் புராணம் சிவனடியார்களான 63 நாயன்மார்களின் கதைகளைச் சொல்வது. இதுவே ஸம்ஸ்கிருதத்தில் ‘உபமன்யு பக்தி விலாஸம்’ என்ற பெயரில் இருக்கிறது. பண்டரீபுரத்திலுள்ள பாண்டுரங்கனிடம் விசேஷமாக ஈடுபட்டிருந்த துகாராம், நாமதேவர் முதலானவர்களின் சரித்திரத்தைச் சொல்வதாக “பக்த விஜயம்” என்ற நூல் இருக்கிறது. வட தேசத்து பக்தர்களைப் பற்றி நாபா தாஸ் என்பவர் “பக்த மாலா” என்று எழுதியிருக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வியாஸர் தந்த செல்வம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ' இதிஹாஸம் ' - ' புராணம் ': பெயர் விவரம்
Next