ஒன்றே பலவாக : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஒரே பரமாத்மாதான் பல தேவதா மூர்த்திகளாகியிருக்கிறார். ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு மூர்த்தியிடம் அலாதிப் பிடிமானம் உண்டாகிறது. அவனவனுக்கும் அந்தப் பிடிப்பையே உறுதிப்படுத்திக் கொடுப்பதற்காகப் பரமாத்மா தம் ஸ்வரூபத்தில் ஒன்றை இன்னொன்றிடம் ஒரு சமயத்தில் குறைத்துக் கொள்கிறார். தஞ்சாவூர் சீமையிலேயே எடுத்துக் கொண்டால்: திருக்கண்டியூரில் பரமசிவனை மஹாவிஷ்ணுவுக்கு முன்னால் குறைத்துக் காட்டுகிறார். பிரம்ம சிரஸைக் கிள்ளியதால் பரமேச்வரனுக்கு ஏற்பட்ட சாபத்துக்கு அவர் மஹாவிஷ்ணுவிடம் சாபவிமோசனம் பெறுகிறார். அடுத்தாற்போல் திருவீழிமிழலையில் அந்த மஹாவிஷ்ணு பரமசிவனுக்கு முன்னால் குறைந்தாற் போல் இருக்கிறார். அங்கே விஷ்ணு சிவனுக்குப் பூஜை பண்ணுகிறார். ஒவ்வொரு கமலமாக சிவ ஸஹஸ்ர நாமம் சொல்லி அர்ச்சனை செய்கிறார். கடைசியில் ஒரு கமலம் குறைகிறது. உடனே புண்டரீகாக்ஷனான (தாமரைக் கண்ணனான) பெருமாள் தம் கண் ஒன்றையே பறித்து அர்ச்சனை செய்கிறார். ஈச்வரன் பிரஸன்னமாகி அவருக்குச் சக்கரம் வழங்குகிறார். இங்கே ‘நேத்ரார்ப்பணேச்வரர்’ என்றே ஈச்வரனுக்குப் பெயர். கண்டியூரில் பெருமாளுக்கு ‘ஹர சாப விமோசனர்’ என்று பெயர். கண்டியூர் கதையைக் கேட்கிறபோது பெருமாள் மஹாபாபத்தையும் சாபத்தையும் போக்குகிற பரம கருணாமூர்த்தி என்ற பாவத்தை, ஸாரத்தைத்தான் நாம் கிரஹிக்க வேண்டும். அப்படியே திருவீழிமிழலைப் புராணத்தில், தன் கண்ணைக்கூடத் தயங்காமல் கொடுக்கிறதுதான் பக்தி என்னும் ஸாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். எவரைவிட எவர் உசத்தி அல்லது தாழ்த்தி என்று பார்ப்பதை முக்யமாய் நினைக்கக் கூடாது.

முன்பெல்லாம் லாந்தர் விளக்குகள்தாம் இருந்து வந்தன. அதில் நாலு பக்கம் கண்ணாடி போட்டதும் உண்டு; முப்பட்டை மாதிரி மூன்று பக்கம் கண்ணாடி போட்டது மாதிரியும் உண்டு. நாம் இந்த முப்பட்டை லாந்தரைப் பார்ப்போம். கண்ணாடிக்குள்ளே விளக்கு ஏற்றி வைத்திருக்கும். அதன் ஒளி மூன்று பக்கத்தாலும் கண்ணாடி வழியாக வெளியே வரும். சில சமயங்களில் அலங்காரமாக, இந்தக் கண்ணாடி ஒவ்வொன்றுக்கும் ஒரு வர்ணம் பூசியிருப்பார்கள். உள்ளேயிருக்கிற ஒரே ஒளி அந்தந்தப் பக்கத்துக் கண்ணாடி வழியாக வருகிறபோது அததன் வர்ணமாக தெரியும். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற மூன்று காரியங்களை ஒரே பரமாத்மா பண்ணுகிறது. ஒரே சைதன்யம் [அறிவொளி] தான் மூன்றுக்கும் காரணம். அந்த சைதன்யம் முப்பட்டை லாந்தருக்குள் இருக்கிற விளக்கு மாதிரி.

மூன்று பட்டையில் ஒன்றுக்கு சிவப்புக் கலர் பூசியிருக்கிறது. அதுதான் ச்ருஷ்டி. ஸ்பெக்டராஸ்கோப்பில் சுத்த வெளிச்சத்திலிருந்து சிவப்பைப் பிரித்தால், பாக்கி ஆறு கலர்களும்கூட பிரிந்துவிடும். ஒன்று பலவாக ஆகிற சிருஷ்டி இதுதான். அதனால்தான் சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவைச் சிவப்பு நிறமாகச் சொல்வது. முப்பட்டைக் கண்ணாடியில் இன்னொன்று நீலம். ஸயன்ஸ்படி நிற மாலையின் கடைசியில் உள்ள ‘வயலெட்’ அதுதான். ஆரம்பம் சிவப்பு (infra-red), முடிவு வயலெட் (ultra-violet). சிருஷ்டிக்கப்பட்ட லோகத்தையெல்லாம் பரிபாலித்துக் கொண்டிருக்கும்போதே, ‘இந்த லோகம் என்பது தன்னில் தானே நிறைந்த பூர்ண சத்தியம் இல்லை; இது பரமாத்மாவின் வேஷம்தான்; அவருடைய லீலைதான்’ என்று ஞானத்தினால் காட்டிக் கொண்டிருக்கிறவர் மஹாவிஷ்ணு. அந்த ஞான அக்னியில் லோகமெல்லாம் கரியாகிறது. ஒரு வஸ்து அடியோடு நீற்றுப் போய்விடாமல் தன் ரூபத்தோடேயே, ஆனால் வர்ணத்தை இழந்து, கரிக்கட்டையாக நிற்கிற நிலை இது! லோகம் என்று ஒன்று இருக்கவும் இருக்கிறது; ஆனால் அதன் தனி குணம் – மாயை – எரிந்து, கரிந்து அதுவும் விஷ்ணு மயமே என்று தெரிகிறது: ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்! கரியான், நீலமேனியான் என்றெல்லாம் விஷ்ணுவைச் சொல்கிறோம். நீலம், கறுப்பு, வயலெட் எல்லாம் கிட்டக் கிட்ட இருக்கிற வர்ணங்கள். பரமாத்மா முத்தொழிலுக்காக ஒரு முப்பட்டை லாந்தர் மாதிரி இருக்கிறபோது நீலப்பட்டை வழியாக உள்ளேயிருக்கிற ஒளி வருகிறபோது அதை விஷ்ணு என்கிறோம்.

முப்பட்டை லாந்தரில் மூன்றாவது பக்கம் கண்ணாடிக்குக் கலர் பூசாமல் உள்ளபடியே விட்டிருக்கிறது. ஞானத்தில் எல்லாம் எரிகிறபோது முதலில் கரிக்கட்டையாக ஆயிற்று. அந்தக் கரியையும் எரித்தால் எல்லாம் சாம்பலாகி விடுகிறது. ரூபம் என்பதே இல்லாமல் நீற்றுப் பொடியாகி விடுகிறது. இப்போது நிறமும் மாறிக் கறுப்பு அத்தனையும் வெள்ளை வெளேர் என்று ஆகிவிடுகிறது. வெளுப்பு சுத்த வெளிச்சத்துக்கு ரொம்பக் கிட்டின வர்ணம். அந்த வெளிச்சத்திலிருந்து வந்த எல்லாக் கலர்களும் – அதாவது பரமாத்மாவிடமிருந்து உண்டான சகல பிரபஞ்ச வியாபாரங்களும் – அடியோடு அடிபட்டு நீற்றுப் போய், அந்தப் பரமாத்மா மட்டுமே மிஞ்சி நிற்கிற நிலை இது. நிற்பது – நீறு. எல்லாம் போனாலும் நிலைத்து நிற்கிற நிலை இது. ‘மஹா பஸ்மம்’ என்கிற பரமேச்வரன் அதுதான். ஸம்ஹாரம் என்கிற பேரில் எல்லாவற்றையும் அழிக்கிற போது அது கொடூரமான காரியமாகத் தோன்றினாலும், அழிப்போடு நிற்காமல், ஆதாரமான சத்தியத்தில் சேர்க்கிற பரம காருண்யமான தொழிலைத்தான் சிவபெருமான் செய்கிறார். விஷ்ணு, லீலையோடு சேர்த்துச் சேர்த்து ஞானத்தைத் தந்தபோது, நானா தினுசான (ஸர்வம்) லோகம் (ஜகத்) என்பது ஒரு கரிக்கட்டை மாதிரி பார்வைக்குத் தெரிந்தது. அதனால்தான் ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்‘ என்றது. இப்போது லீலை எல்லாம் முடிந்து ஸம்ஹாரம் என்ற பரம ஞான நிலை வந்திருக்கிறபோது ஸர்வமும் இல்லை, ஜகத்தும் இல்லை. அதனால்தான் ‘சிவமயம்’ என்று மட்டும் சொல்கிறோம்.

ஒரே விளக்குத்தான் – பிரம்ம சைதன்யம். அதுவே சிவப்புப்பட்டை வழியாகத் தெரியும்போது பிரம்மா எனப்படுகிறது; நீலப்பட்டை வழியாகப் பார்க்கிறபோது அதுவே விஷ்ணு; வர்ணம் பூசாத ட்ரான்ஸ்பாரன்ட் வெளுப்புக் கண்ணாடி மூலம் பார்த்தால் அதுவே சிவன்.

“ஓருருவே மூவுருவாய்” என்றுதான் நம் பெரியவர்கள் பாடி வைத்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஃபிலாஸபியைத்தான் சொல்ல வேண்டும், ஒரு சித்தாந்தத்தைத்தான் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணங்கள் இல்லாமல் திறந்த மனஸோடு, விசாலமான பார்வையோடு தங்களுக்குத் தோன்றிய சத்தியங்களையே சொல்லிக் கொண்டு போன மகாகவிகள் எல்லோரும் ஒரே வஸ்துதான் மும்மூர்த்திகளாக, முப்பத்து முக்கோடி தேவதைகளாக ஆகியிருக்கிறதென்று சொல்லியிருக்கிறார்கள். பாணன் “ஸர்க- ஸ்திதி-நாச ஹேதவே” (ஸர்கம் என்றால் ஸ்ருஷ்டி) என்று ஒரே வஸ்துவை மூன்று தொழிலுக்காக மூன்றானதாகச் சொல்கிறான். காளிதாஸனும் ஸ்பஷ்டமாக, ” ஏக ஏவ மூர்த்தி: பிபிதே த்ரிதாஸா” – ஒன்றுதான் பரமாத்மா; அது முத்தொழிலுக்காக மூன்றாகப் பிரிந்தது என்கிறான்.

“பதினெண் புராணங்கள்” என்பனவற்றில் சைவமானவைதான் பிரமாணமுடையவை, வைஷ்ணவமானவை தான் பிரமாணமுடையவை என்று கட்சி கட்டினால், கட்சி தான் நிற்குமே ஒழிய, சண்டைதான் மிஞ்சுமே தவிர, தெளிவு உண்டாகாது; சாந்தி பிறக்காது. ‘ஒன்று ஸத்; அதைத்தான் ஞானிகள் பல பேரில் சொல்கிறார்கள்’ என்கிற வேத வாக்கியத்துக்கு அதிகமாக நமக்கு பிரமாணம் இல்லை.

ஆகையால் சைவ வைஷ்ணவ பேதபாவங்கள் இல்லாமல், எல்லோரும் அன்போடு கூடி சகல தெய்வங்களையும் பற்றிய விருத்தாந்தங்களை சிரவணம் செய்து சிரேயஸை அடைய வேண்டும்.

திருவிசநல்லூர் அய்யாவாள் என்று ஒரு மஹான் இருந்தார். ஸ்ரீதர வேங்கடேச்வரர் என்பது அவர் பெயர். ஆனால் அவர் இருந்த ஊரை மட்டும் சொல்லி, பேரைச் சொல்லாமல் ‘திருவிசநல்லூர் அய்யாவாள்’ என்றே ஸகல ஐனங்களும் மரியாதையோடு குறிப்பிடுவார்கள். சுமார் முந்நூறு வருஷங்களுக்கு முன் இருந்தவர். பகவந்நாம போதேந்திராளின் மூத்த ‘கான்டெம்பரரி’ [சமகாலத்தவர்] . போதேந்திராள் விசேஷமாக ராம நாமாவையும், கோவிந்த நாமாவையும் பிரசாரம் செய்து வந்தார். அதே சமயத்தில் அய்யாவாள் சிவ நாமாவின் மகிமையைப் பரப்பி வந்தார். இரண்டு பேருக்குமே சைவ வைஷ்ணவ பேதம் கிடையாது. அதனால் இருவருமே சேர்ந்துகூடத் திருவிசநல்லூரில் நாம ஸித்தாந்தத்தைப் பிரசாரம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்குள் பரஸ்பரம் அன்பும் மரியாதையும் இருந்தன. கலிகாலத்தில் கைகண்ட மருந்து எனப்படும் நாமத்தின் பிரபாவத்தை இரண்டு பேருமே நிலைநாட்டினார்கள். பஜனை சம்பிரதாயத்தில் இவர்களைத்தான் முக்கியமான ஆசார்யர்களாக ஸ்தோத்திரம் செய்து விட்டு அப்புறம் மற்ற தெய்வபரமான நாமாவளிகள் சொல்வது வழக்கம். முதலில் போதேந்திராளைப் பற்றியும், அப்புறம் அய்யாவாளைப் பற்றியும், குருவந்தனம் சொல்லிவிட்டுத்தான் பஜனை செய்வார்கள்.

அய்யாவாள் ஒரு சிராத்த தினத்தன்று பஞ்சமனுக்கு போஜனம் பண்ணி வைத்தார் என்பதற்குப் பிராயச்சித்தமாக அவர் கங்கா ஸ்நானம் செய்து வரவேண்டும் என்று நாட்டாண்மைக்காரர்கள் தீர்ப்பு பண்ண, அவர் தம் வீட்டுக் கிணற்றிலேயே கங்கையைப் பொங்கவைத்தார் என்ற விஷயம் அநேகமாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இப்படி கங்கை வந்தது ஒரு கார்த்திகை அமாவாஸையில். இப்போதும் அந்தப் புண்ய தினத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் திருவிசநல்லூர் அந்தக் கிணற்று ஜலத்தில் ஸ்நானம் செய்தால் கங்கா ஸ்நான பலன் கிடைக்கும் என்று நம்பிச் செய்து வருகிறார்கள்.

அய்யாவாள், ஸீதா கல்யாணத்துக்கு முன்னால் ஸ்ரீராம சந்திர மூர்த்தி சிவதநுஸை ஒடித்த விஷயத்தை ஓர் இடத்தில் சொல்லியிருக்கிறார். அங்கே “ஸ்வகர ப்ரதிபாடித ஸ்வசாப:” என்கிறார். அதாவது, தன் கையாலேயே தன் வில்லை ஒடித்துக் கொண்டார் என்கிறார். ‘சிவதநுஸ் ஏற்கெனவே நாராயணனால் விரிசல் ஆக்கப்பட்டது. அப்புறம் நாராயணன் ஸ்ரீராமனாக வந்து அதை நன்றாக ஒடித்தே போட்டு விட்டார்’ என்பதாக இந்த தநுர்பங்க சமாசாரத்தை வைத்து ஈச்வரனைத் தாழ்த்தி பேசுவது நீண்ட காலமாக வந்த ஒரு வாதம். ஆனால் ஸமரஸமாக பார்த்த அய்யாவாளுக்கோ, சிவ விஷ்ணு பேதமே தெரியவில்லை. ‘சிவனேதான் விஷ்ணு; விஷ்ணுவேதான் ராமன். ஆகையினால் ராமனும் சிவனும் ஒன்றுதான். சிவதநுஸ் என்றால் அதுவேதான் ராம தநுஸும்! தன் கையால் தன் வில்லையே முறித்துப் போட்டார்! அவருடைய லீலைக்கு இதெல்லாம் வேண்டியிருக்கிறது! என்று எழுதிவிட்டார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is தெய்வங்களுள் பேதம் ஏன் ?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வழிகள் பல ; குறிக்கோள் ஒன்றே
Next