வழிகள் பல; குறிக்கோள் ஒன்றே : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஆழ்வார்கள் விஷ்ணுபரமாகப் பாடி வைத்திருக்கிறார்கள். நால்வர் சிவபரமாகப் பாடினார்கள். வேதத்தில் ஸகல தெய்வங்களையும் ஒரே மாதிரி ஸ்தோத்திரம் செய்திருக்கிறது. உபநிஷத்து என்று போனால், அங்கே தெய்வங்களைப் பற்றி அதிகம் பேச்சில்லாமல் எல்லாம் ஆத்ம தத்துவமாகச் சொல்லியிருக்கிறது. இங்கே திருவள்ளுவரை எடுத்துக் கொண்டால் அவர் தெய்வம், தத்வம் இவைகளைப் பற்றி வைதிக சம்பிரதாயப்படியே சொல்லியிருந்தாலும், அதை விட ரொம்ப அதிகமாக தர்மங்கள், நன்னெறிகள் (Morals, ethics) இவற்றையே சொல்கிறார். இன்னொரு பக்கம் திருமூலரைப் பார்த்தால் அங்கே ஸ்வாமி பக்தி என்பதை விடப் பிராணாயாமம், தியானம், தாரணை, ஸமாதி இத்யாதி யோக சமாச்சாரங்கள்தான் நிறைய வருகின்றன. ‘இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைச் சொன்னால் எதை எடுத்துக் கொள்வது?’ என்றால் எதை எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை. நாம் எடுத்துக் கொண்டதை நடுவிலே விடாமல், அதையே நம்பிக்கையோடு பிடித்துக் கொண்டு போய்க் கொண்டேயிருந்தால் முடிவில் எது பரமார்த்த சத்தியமோ அதையே அடைந்து விடுவோம். ஆரம்பத்தில் இவை வேறு வேறு வழிகளாகத் தோன்றினாலும், முடிவில் எல்லாம் கொண்டு சேர்க்கிற இடம் ஒன்றுதான்.

தேவர் குறளும் திருநான்மறை முடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒரு வாசகம் என்(று) உணர்

இதே மாதிரி ‘சிவமஹிம்ன ஸ்தோத்திர’த்திலும் சொல்லியிருக்கிறது. புஷ்ப தந்தர் என்ற மகான் – கந்தர்வராக இருந்து ஈச்வர சாபத்தால் பூமியில் விழுந்தவர் என்று சொல்வார்கள் – பரமேச்வரன் மகிமைகளைப் பற்றிச் சொல்கிற ஸ்தோத்திரம் அது. அதிலே ஒரு ச்லோகத்தில், ‘த்ரயீ (வேதம்), ஸாங்கியம் (தத்வ ஆராய்ச்சி), யோகம், பசுபதி மதம், வைஷ்ணவம் என்பதெல்லாம் அவரவரின் ருசி விசித்திரத்தைப் பொறுத்து ஒரே பரமாத்ம தத்வத்தில் கொண்டு சேர்க்க ஏற்பட்டவைதான் – எந்த நதியானாலும் ஒரே சமுத்திரத்தில் போய் விழுகிற மாதிரி! என்று சொல்லியிருக்கிறது.

இங்கிலீஷ்காரர்கள் இதே ஸமரஸ திருஷ்டியில்தான் ‘Jehovah, Jove or Lord’ என்கிறார்கள். பைபிள் தோன்றிய இஸ்ரேல் பிரதேசங்களில் இருந்த ஹீப்ரு, ஸெமிடிக் மத ஸ்வாமிதான் ஜெஹோவா. கிரீஸ் முதலான தேசங்களில் இருந்த ஹெல்லெனிக் மதத்தின் கடவுள் ‘ஜவ்’. ஜூபிடரின் இன்னொரு பெயர்தான் ஜவ். ‘லார்ட்’- பிரபு – என்பது பொதுவாக எல்லா மதத்திலும் ஈச்வரனுக்குச் சொல்கிற பேர். பேர் வேறாயிருந்தாலும் ஆசாமி ஒருத்தனேதான் என்று வெள்ளைக்கார தேசத்து அநுபவிகளும் சொல்லியிருக்கிறார்கள்.

புராணங்களைப் பணிவோடு, மரியாதையோடு, அதனால் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு படித்தால் குழப்பம் எதுவும் உண்டாகாது. நம்முடைய க்ஷேமத்துக்காகவே ஏற்பட்டவைதான் அவை என்ற நல்லறிவு பெறுவோம். கொஞ்சம் கூட்டிக் குறைத்துச் சொல்லியிருந்தாலும் அதுவுங்கூட நல்ல உத்தேசத்துடன்தான் என்று புரிந்து கொள்வோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ஒன்றே பலவாக
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  புராணத்தை போதித்தவர்
Next