தசோபநிஷத்துக்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

“தசோபநிஷத்” என்று பத்தைப் பொறுக்கி ஸ்ரீ சங்கர பகவத் பாதாள் அத்வைத பரமாக பாஷ்யம் பண்ணினார். பின்னால் வந்த விசிஷ்டாத்வைதம், த்வைதம் முதலியவற்றை சேர்ந்த பெரியவர்களும் இதே பத்துக்குத் தங்கள் தங்கள் ஸித்தாந்தப் பிரகாரம் பாஷ்யம் செய்தார்கள். இந்த பத்தையும் சுலபமாக ஞாபகத்தில வைத்துக் கொள்வதற்காகப் பெயர்களை ஒரு ச்லோக ரூபத்தில் கோத்துச் செல்வதுண்டு.

ஈச-கேன-கட-ப்ரச்ன-முண்ட-மாண்டூக்ய-தித்திரி|

ஐதரேயம் ச சாந்தோக்யம் ப்ருஹதாரண்யகம் தச||

ச்லோகத்தில் சொல்லியிருக்கிற order (வரிசைக் கிரமப்) படித்தான் ஆசார்யர்கள் பாஷ்யம் பண்ணியிருக்கிறார்கள்.

இதிலே ஈசம் என்பது ஈசாவாஸ்ய உபநிஷத். அது சுக்ல யஜுர் வேதத்தில் ஸம்ஹிதையிலே முடிவாக வருவது. “ஈசாவாஸ்யம்” என்ற வார்த்தையோடு ஆரம்பிப்பதால் இந்த உபநிஷத்துக்கு இப்படிப் பெயர். “கேன” என்று ஆரம்பிக்கும் அடுத்த உபநிஷத்துக்கு “கேனோபநிஷத்” என்றே பேர். ‘ஈச்வரனால்தான் இந்த லோகம் முழுக்கவும் வியாபிக்கப்பட்டிருக்கிறது. அவனுக்கே கர்மாக்களை அர்ப்பணம் பண்ணிப் பரமாத்ம தத்வத்தை நாம் அடைய வேண்டும்’ என்று ஈசாவாஸ்யோபநிஷத்து கூறுகிறது.

மரயானைப் பொம்மையைப் பார்த்தால் குழந்தை அது யானை என்றே எண்ணுகிறது. பெரியவர்களுக்கு அது யானை மாதிரி இருந்தாலும் மரம்தான் என்று தெரிகிறது. குழந்தைக்கு மரம் மறைந்து யானை தெரிகிறது. பெரியவர்களுக்கு யானை மறைந்து மரம் தெரிகிறது. இப்படியே பார் (உலகம்) முதலாக பஞ்ச பூதங்களும் பரமாத்மா என்ற மரத்தால் பண்ணின பொம்மைதான். பரமாத்மாதான் இத்தனையும் என்று நாம் பார்க்கவேண்டும்.

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்

என்று திருமூலர் சொன்னபடி, பஞ்ச பூதங்களையே பார்த்துக்கொண்டு, அதன் காரணமான பரமாத்மாவை மறந்திருப்பதை விட்டு, இவற்றால் பரமாத்மா மறைந்து போகவிடாமல், இவற்றிலும் வியாபித்திருப்பது பரமாத்மாதான் என்று, அனைத்தையும் ஈச்வர வியாபகமாகப் பார்க்க வேண்டும். திருமூலர் சொன்னதையே அச்சடித்தாற்போல் “தந்தினி தாரு விகாரே” – மரத்தின் மாற்று ரூபத்தில் யானை – என்று ஆசார்யாள் சொல்கிறார் 1. இவற்றில் எது முந்தி, எது பிந்தி என்ற வாதத்துக்கு நான் வரவில்லை. மஹா புருஷர்களுக்கு ஒரே மாதிரித்தான் தோன்றும்.

‘கேனம்’ என்பது கேனோபநிஷத். அது ஸாம வேதத்தில் ஜைமினி சாகையில், தலவகார பிராம்மணத்தில் வருவதால் ‘தலவகார உபநிஷத்’ என்றும் சொல்வதுண்டு. ‘கெட்டதைக் கேனத்தில் தேடு’ என்று வசனம் இருக்கிறது. அடிமுடி தெரியாத பரம்பொருளை, அஹம்பாவம் பிடித்த தேவர்கள் தெரிந்து கொள்ள முடியாமல் தேடினபோது, ஸாக்ஷாத் அம்பிகையே தேவேந்திரனுக்கு ஞானோபதேசம் செய்ததை இந்த உபநிஷத் சொல்கிறது. நம்முடைய சகல சக்திகளும் ஒரே மஹாசக்தியிடமிருந்து வந்ததுதான் என்று ஸாக்ஷாத் பராசக்தியே உபதேசிக்கிறாள். இதற்கு ஸ்ரீ பகவத்பாதாள் மற்ற உபநிஷத்துக்களுக்கு பாஷ்யம் செய்த மாதிரிப் பதம் பதமாக எடுத்துக்கொண்டு பாஷ்யம் செய்ததோடு நிற்காமல், வாக்கியம் வாக்கியமாகவும் எடுத்துக் கொண்டு இன்னொரு பாஷ்யம் செய்திருக்கிறார். அதாவது இந்த உபநிஷத்து ஆசார்யாளின் இரட்டை பாஷ்யத்தைப் பெற்றிருக்கிறது. ஸெளந்தர்ய லஹரியிலும் ஆசார்யாள் இந்த உபநிஷத்தை முக்கியமாக நினைத்துக் கொண்டே, “வேதமாதாவின் சிரஸில் வைக்கப்பட்ட உன் திருவடிகளை என் தலை மேலும் வையம்மா” என்று அம்பாளை பிரார்த்தனை பண்ணுகிறார் 2. வேதாந்தம் என்ற மாதிரியே வேத சிரஸ், ச்ருதி சிரஸ் என்ற பெயரும் உபநிஷத்துக்களுக்கு உண்டு. சிரஸ் என்றால் தலை. ‘முடி’ என்றும் தமிழில் சொல்கிறோம். வேதத்தின் அந்தமாக, முடிவாக இருப்பதோடு அதன் சிரஸான முடியாகவும் இருப்பவை உபநிஷத்துக்களே. வேத மாதாவின் சிரஸில் அம்பாள் பாதம் இருக்கிறது என்றால், அது உபநிஷத்தில் இருக்கிறது என்றே அர்த்தம். இந்தக் கேனோபநிஷத்தில்தான் அம்பாள் ஞானாம்பிகையாக வருகிறாள். “ஸாமகான ப்ரியா” என்று லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அவளுக்கு ஒரு பெயர் சொன்னதற்கு ஏற்றாற்போல், இந்த ஸாமவேத உபநிஷத்தில் அவளுடைய பெருமை விசேஷமாகத் தெரிகிறது.

ஒரு வஸ்துவை நாம் பார்க்கிறோம் என்றால், பார்க்கப் படுகிற object என்றும், பார்க்கிறவனான subject என்றும் இரண்டு ஏற்பட்டுவிடுகின்றன. நம் உடம்பை நம்மால் object-ஆகத் தெரிந்து கொள்ள முடிகிறது. “என் உடம்பு நன்றாயிருக்கிறது; அல்லது நன்றாக இல்லை” என்று நாம் அதைப் பற்றித் தெரிந்து கொள்கிறோம் என்றால், அப்போது அது object-ஆகி விடுகிறது. அதிலிருந்து வேறாக, ‘நாம்’ என்ற ஏதோ ஒன்று subject-ஆக இருந்து கொண்டு, அதைப் பார்க்கிறது என்று ஏற்படுகிறது. அப்படிப் பார்ப்பது எதுவோ அதுதான் ஆத்மா. இந்த subject-ஐ எதனாலும் தெரிந்து கொள்ள முடியாது. அப்படித் தெரிந்துகொள்ள முடிந்து விட்டால் அதுவும் object-ஆகி, அதைப்பார்க்கிற இன்னொரு subject-தான் நிஜ நாம் என்று ஆகிவிடும். நிஜமான நாமான ஆத்மா subject-ஆகத்தான் இருக்கமுடியுமே தவிர object ஆகாது. எனவே சரீரம் முதலான object-களைத் தள்ளிவிட்டு, இந்த subject-ஆக நாம் அநுபவத்தில் தனித்து இருந்து கொண்டுதான் இருக்க முடியுமே தவிர, அதை அறிந்து கொண்டு இருக்க முடியாது. அறிவது என்றால், இதைவிட இன்னொன்று இதை object-ஆக்கி ஆராய்ந்தால்தான் முடியும். ஆத்மாவின் விஷயத்தில் இது அஸம்பாவிதம். ஆத்மாதான் நிஜமான நாம், அதை அறியவேண்டும் என்றால், அப்படி அறிகிற வஸ்து ஆத்மாவுக்கு வேறானதாகத்தான் இருக்க வேண்டும். நம்மில் நம்முடைய நிஜமான ஸ்வரூபத்துக்கு வேறாக என்ன இருக்கமுடியும்? ஆத்மாவுக்கு அந்நியமாக அதை அறிய எது உண்டு? எதுவும் கிடையாது. அதனால், “ஆத்ம ஞானம்”, “ஆத்மாவை அறிவது” என்ற வார்த்தைகளைச் சொன்னால்கூட, இங்கெல்லாம் ஞானம், அறிவது என்பதற்கு ஒரு ஸப்ஜெக்ட் இன்னொரு ஆப்ஜெக்டை அறிகிறது என்று அர்த்தமில்லை. தன்னைத்தானே அநுபவித்துக் கொள்வதைத்தான் இந்த இடங்களில் ‘ஞானம்’, ‘அறிவது’ என்ற வார்த்தைகளால் சுட்டிக் காட்டுகிறோம். இதனால் தான் கேனோபநிஷத், “எவன் ஆத்மாவை அறிந்துவிட்டேன் என்கிறானோ அவன் அறியவே இல்லை; எவன் அறியவில்லை என்ற நிலையில் இருக்கிறானோ அவன்தான் அறிகிறான். தெரியும் என்று நினைக்கிறவனுக்குத் தெரியாது; தெரியாது என்ற நிலையில் இருக்கிறவனுக்கே தெரிந்தது” என்கிறது. “கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்” என்று சொல்வதும் இதைத்தான்.

“கட” என்றது கடோபநிஷத். க்ருஷ்ண யஜுஸில் கடஸாகையில் வருவது. அதிலே, செத்தபின் ஜீவன் என்ன ஆகிறான் என்பதைப்பற்றி நசிகேதஸ் என்ற பிரம்மச்சாரிக்கு யமதர்மராஜா பண்ணின உபதேசம் வருகிறது. கதை மாதிரி ஆரம்பித்துப் பெரிய தத்வத்தில் கொண்டு போய்விடும். கீதையில் பகவான் முக்கியமாக இந்த உபநிஷத் வாக்யங்களைத்தான் எடுத்துக்கொண்டு, திருப்பிச் சொல்லியிருக்கிறார்.

முன்னே ஸப்ஜெக்ட் – ஆப்ஜெக்ட் பற்றி நான் சொன்னது இந்த உபநிஷத்தின் கடைசியில் ரொம்பவும் அழுத்தமாக, உபதேசிக்கப் பட்டிருக்கிறது. பயிர்த் தண்டிலிருந்து கதிரை உருவி எடுக்கிறோம் அல்லவா? ஒரு ஈர்க்குச்சியில் மேல் தோலிலிருந்து உள்ளேயிருக்கும் ஈர்க்கை அப்படியே உருவி விடுகிறோம் அல்லவா? அந்த மாதிரி, ஆப்ஜெக்டான சரீரத்திலிருந்து ஸப்ஜெக்டான ஆத்மாவைத் தைரியமாக உருவி எடுத்துக்கொண்டு, அதுவாகவே இருக்கவேண்டும் என்று அந்த மந்திரம் (VI:17) சொல்கிறது. ‘காமம், க்ரோதம், த்வேஷம், பயம் எல்லாம் மனஸை சேரந்தனவே ஒழிய, ஆத்மாவான எனது அல்ல. பசி, தாகம் முதலியன உடம்பைச் சேர்ந்தனவே, தவிர என்னுடையன அல்ல, என்று ஆத்மாவைச் சேராத எல்லா அநாத்மவஸ்துக்களையும் objectify பண்ணி, வெளியே தள்ளுவதற்கு ஸதா பழகிக் கொண்டேயிருக்க வேண்டும். இம்மாதிரி எப்பொழுதும் அநுஸந்தானம் செய்து வந்தால், உடம்பும் மனஸும்தான் நாம் என்பதாக வேரூன்றியிருக்கும் அபிமானம் கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து, மறைந்தே போய்விடும். உடம்புக்கும் மனஸுக்கும் இருக்கப்பட்ட அழுக்குகள் எதுவுமில்லாத சுத்தமான ஆத்மாவாக நாம் இருக்கலாம். இப்படி, சரீரத்திலிருந்தும் மனஸிலிருந்தும் ஆத்மாவைப் பிரிப்பதற்கு, முஞ்சம் புல்லுக்குள்ளிலிருந்து ஈர்க்கு பளிச்சென்று சுத்தமாக வழவழவென்று பிரிந்து வருவதைத் திருஷ்டாந்தமாகச் சொல்லியிருக்கிறது. இதோ பக்கத்தில் இருக்கிற இந்த வாழைக்கட்டை வாடி வதங்கிப் போனால், நாம் வாடி வதங்குகிறோமா? அந்த வாழைக்கட்டையை விட, இன்னம் கொஞ்சம் கிட்டேயிருக்கும் மாம்ஸக் கட்டை என்றே இந்த சரீரத்தை எண்ணவேண்டும். அந்த வாழைக்கட்டை ஸப்ஜெக்டான நாமாக இல்லாமல் ‘ஆப்ஜெக்’டாக இருக்கிற மாதிரியே, ஆத்மா என்ற ஸப்ஜெக்டுக்கு இந்த நம் உடம்பையும் வேறான ஆப்ஜெக்டாகப் பார்க்கப் பழக வேண்டும்.

இந்த லோகத்தில், நாம் சரீரத்தில் இருப்பதாகத் தோன்றும் இப்போதே, இப்படி சரீரத்தை ‘நானல்ல’, ‘என்னுடையதல்ல’ என்று பண்ணிக்கொள்ள வேண்டும். அப்போது, செத்துப் போனபின் தான் வேறு ஏதோ கைலாஸ வைகுண்டாதி லோகங்களுக்குப் போய் மோக்ஷம் அடையலாம் என்று இல்லாமல், இங்கேயே மோக்ஷமாகி விடும்! மோக்ஷம் என்றால், எந்த பாரமும் இல்லாமல் விடுபட்ட ஸதாநந்தம் என்றே அர்த்தம். அப்படி இந்த லோகத்திலேயே சரீரப் பிரக்ஞையை விட்டு, ஆத்மாராமனாக இருப்பவனைத்தான் ஜீவன் முக்தன் என்பது. வேத வேதாந்தங்களின் பரம தாத்பர்யம் ஒருத்தனை இப்படி ஜீவன் முக்தனாக்குவதுதான். கீதையில், பகவான் ப்ராக் சரீர விமோக்ஷணாத் (சரீரத்திலிருந்து உயிர் வெளியே போகிறதற்கு முந்தியே), இந்த லோகத்தில் இருக்கும்போதே –இஹைவ– எவன் காம க்ரோத வேகங்களை அடக்கி விடுகிறானோ அவனே யோகத்தில் நிலைத்து நித்ய ஸுகத்தை அநுபவிக்கிறவன் என்று, இதே கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார்3. இஹைவ – இஹ ஏவ – அதாவது இங்கே இந்த பூலோகத்தில் இருக்கிற போதே, இப்படி ஆத்மாவைத் தெரிந்து கொண்டுவிட்டால் (அதாவது அநுபவித்து விட்டால்), சரீரம் போனாலும் போகிறது தெரியாது. சரீரம் இருக்கிறபோதேதான் அது தன்னுடையதல்ல என்று போக்கிக் கொண்டாகி விட்டதே! ஆகையால், சாவு என்று ஒன்று வந்து சரீரத்தைப் போக்கடிக்க வேண்டுமா என்ன? சரீரம் (சரீரம் என்கிறபோது மனஸையும் சேர்த்துத்தான் சொல்வதாக அர்த்தம்) தனதல்ல என்றாக்கி விட்டால், அப்புறம் சாவே இல்லை. தனதில்லாத சரீரத்துக்கு வருகிற சாவு தன்னை எப்படி பாதிக்கும்? ம்ருத்யுவான சாவு இல்லாததால், இவன் அமிருதமாகி விடுகிறான். “இஹைவ” இவன் இப்படி அமிருதமாவதைத்தான் கர்மகாண்டத்திலே வருகிற புருஷஸூக்தாதி மந்திரங்களும் சொல்கின்றன. உபநிஷத்துக்களில் இந்த கருத்து விசேஷமாகத் திரும்பத் திரும்பக் கூறப்படும்.

நமக்கு துக்கஹேதுவாக இருப்பது சரீரமும் அதன் மூலம் செயல்படுகின்ற மனஸும்தான். துக்கம் போய் ஸதா ஆனந்தமாக இருப்பதைத்தான் எல்லா மதத்திலும் மோக்ஷம் என்று சொல்லியிருக்கிறது. அதற்காக வேறு ஏதோ பரலோகம், மோக்ஷலோகம் என்ற ஒன்றுக்குப் போகவேண்டும் என்றுதான் அத்வைதத்தைத் தவிர மற்ற ஸம்பிரதாயங்களெல்லாம் சொல்கின்றன. அந்த லோகங்களில் கிடைப்பதைவிட நிறைவான ஆனந்தம், நிஜமான மோக்ஷம், இந்த லோகத்தில் இருக்கும்போதே, சரீர அபிமானத்தை அடியோடு தள்ளி விட்டு ஆத்மாவில் வேரூன்றி நிற்பதால் கிடைக்கிறது என்று சங்கர பகவத் பாதாள் ஸ்தாபித்திருக்கிறார்.

ததேதத் அசரீரத்வம் மோக்ஷாக்யம்

என்று ஸூத்ர பாஷ்யத்தில் (I.1.4) சொல்கிறார். ‘அசரீரி’ என்றால் நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோமென்றால், ஆள் தெரியாமல் ஒரு குரல் மட்டும் கேட்பது என்று. அசரீரி என்றால் சரீரம் இல்லாமலிருப்பது என்பதே அர்த்தம். “சரீரம் நான்” என்கிற பிரக்ஞை போகிறதுதான் அசரீரத்வம். அதுதான் மோக்ஷம் என்று ஆசார்யாள் லட்சணம் கொடுக்கிறார். சரீரம் இல்லாமல் அசரீரியாகப் பண்ணிக் கொள்வது என்றால், தற்கொலை செய்துகொள்வது என்று அர்த்தமில்லை. தற்கொலையும் ஸாதாரணச் சாவும் ஸ்தூல தேஹத்திற்குத்தான். இது போனபின்னும் மனோமயமான ஸூக்ஷ்ம தேஹம் இருந்து கொண்டு கஷ்டப் படுத்தும். ஆசைகளை குறைத்துக் கொண்டே வந்து, அடியோடு தேய்த்து விட்டால்தான் சரீராபிமானம் முற்றிலும் போய், அபிமானிக்கிற மனஸும் போய்விடும். உள்ளேயிருக்கிற ஆத்மா மட்டுமே பிரகாசிக்கும். இதற்காக, வேறு எந்த லோகத்துக்கும் போகத் தேவையில்லை. இதைத்தான் வேத வேதாந்தங்கள் இஹைவ, இஹைவ என்பது.

இந்த அம்ருத நிலையை அடைவதற்கு முக்யமான இரண்டு சத்ருக்கள் காம, க்ரோதம் என்று கீதையான ஸ்மிருதியில் சொல்லியிருக்கிறது. அதற்கு ஆதாரம் ச்ருதியான சாந்தோக்யத்தில் உள்ள (VIII.12.1) ‘ப்ரிய அப்ரியம்’ என்ற வாக்கியம்: ‘விருப்பு வெறுப்பு’ என்று அர்த்தம். விருப்பு தான் காமம்; வெறுப்பு க்ரோதம். சரீரம் இல்லாதவனை விருப்பு வெறுப்புகள் தொடமாட்டா என்று சாந்தோக்யம் சொல்கிறது. அதாவது, “நீ விருப்பு வெறுப்பிலிருந்து விடுபட வேண்டுமானால் உயிரோடு இருக்கிறபோதே சரீரம் நானில்லை என்று ஆக்கிக்கொள்” என்கிறது.

ஒரே ஜீவாத்மாவின் அஹங்கார – மமகாராதிகளை ஒட்டி [நான் எனது என்ற பாவனைகளை ஒட்டி] கௌணாத்மா, மித்யாத்மா, முக்யாத்மா என்று மூன்றாகப் பிரித்துச் சொல்வது வழக்கம். பெரியோர்கள் இந்த விஷயத்தை ச்லோகமாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்த ச்லோகமானது பகவத்பாதாளால் ப்ரம்ம ஸூத்ர பாஷ்யத்தில் உதாஹரிக்கப்பட்டிருக்கிறது.

கௌண-மித்யாத்மனோ (அ) ஸத்வே புத்ர தேஹாதி பாதனாத்|

ஸத் -ப்ரஹ்மாத்மாஹம் இத்யேவம் போதே கார்யம் கதம் பவேத்||

(ஸூத்ர பாஷ்யம் I.1.4)

புத்ர மித்திரர்கள் நாமே என்றும், அவர்களுடைய ஸுகதுக்கம் நம்முடையது என்றும் எண்ணும் அபிமானமானது எல்லாரிடத்திலும் குடிகொண்டிருக்கிறது. அதுதான் கௌணாத்மா. கௌணமென்றால், உபசாரமாகச் சொல்லுவதென்று அர்த்தம். நாம் வேறு, புத்ர மித்ரர்கள் வேறு என்று நமக்குத் தெரிந்திருக்கும் பொழுதே, நாம் நாம் என்கிற அபிமானம் நமக்கு அவர்களையொட்டி வருவதால் கௌணாத்மா என்று சொல்லப்பட்டது. அவர்களைவிட நெருங்கின சரீரம் முதலியவற்றில் நான் என்கிற அபிமானம் உண்டாவது மித்யாத்மா. சுத்தமான ஆத்ம ஸ்வருபத்தைப் பிரித்து, ப்ரம்ம ஸ்வரூபமே நான் என்பது அநுபவத்திற்க்கு வருகிறபொழுது, ப்ரம்மமே ஆத்மாவாகி விடுகிறது. அதைத் தான் முக்கியாத்மாவென்று சொல்வது. முதலில் சொல்லப்பட்ட கௌணாத்மா, மித்யாத்மா இவ்விரண்டையும் விலக்கி விட்டால் புத்ர மித்திரர்கள், சரீர இந்திரியங்கள் இவைகளுடைய ஸம்பந்தம் நீங்கிவிடும். அப்பொழுது ‘ஸத்யமான ப்ரம்ம ஸ்வரூபமாகவே நான் இருக்கிறேன்’ என்கிற ஞானம் உண்டாகிறது. அதற்குப் பிறகு செய்யவேண்டியது ஒன்றுமே கிடையாது என்பது மேலே சொல்லிய ச்லோகத்தின் தாத்பரியம்.

“Arise, awake: எழுந்திருங்கள்,விழித்துக் கொள்ளுங்கள்” என்று, விவேகாநந்தர் எல்லாரையும் தட்டி எழுப்பி, ராமகிருஷ்ணா மிஷனுக்கு motto-வாக (லஷ்ய வாசகமாக) வைத்தது, கடோபநிஷத்தில் வருகிற மந்திரம்தான். இப்போது நிறைய மேற்கோள் காட்டப்படும் அநேக வாசகங்கள் இந்த உபநிஷத்தில் வருகிறவையே. உதாரணமாக, “படிப்பாலோ மேதாவித்தனத்தாலோ ஆத்மாவை அடைய முடியாது” (“நாயமாத்மா”) என்கிற மந்திரம்; ஜீவன் என்ற தேர்க்காரனுக்கு சரீரம் தேர், புத்தி ஸாரதி, மனஸ் கடிவாளம், இந்திரியங்கள் குதிரைகள் என்ற விஷயம்; ஹ்ருதய குகையில் பரமபுருஷன் அங்குஷ்ட (கட்டை விரல்) பிரமாணமாக ஜோதி ரூபத்திலிருக்கிறான் என்ற ஸமாசாரம்; தீபாராதனை செய்கிறபோது சொல்லும் ‘ந தத்ர ஸூர்யோ பாதி’ மந்திரம் (பரமாத்மாவின் ஸந்நிதானத்தில் சூரியன், சந்திரன், நக்ஷத்திரம், அக்னி எல்லாமே ஒளி மழுங்கி விடுகின்றன. அவனால் தான் இவற்றுக்கெல்லாம் பிரகாசமாதலால், இவற்றால் அவனை விளக்கிக் காட்டமுடியாது’ என்ற அர்த்தம். நம் அறிவெல்லாம் அந்தப் பேரறிவிலிருந்தே உண்டானதால், இந்த நம் சிற்றறிவால் அவனை விளக்க முடியாது); பிற்பாடு கீதையிலும் பகவான் சொல்லும் ஸம்ஸாரம் என்ற தலைகீழ் அச்வத்த விருட்சத்தைப் பற்றிய பிரஸ்தாவம்; ஹ்ருதயத்தில் குடிகொண்டுள்ள ஆசைகளை எல்லாம் ஒழித்துவிட்டால், இங்கேயே மனிதன் அமிருதமாகி பிரம்மத்தை அநுபவிக்கிறான் என்ற விஷயம் – இப்படி அநேக சமாசாரங்கள் இன்று quote பண்ணப்படுவதெல்லாம் கடோபநிஷத்தில் வருபவை தான்.

‘கடோப’நிஷத்துக்கு அப்புறம் வரும் ‘ப்ரச்னோபநிஷத்’, ‘முண்டகோபநிஷத்’, ‘மாண்டூக்யோபநிஷத்’ ஆகிய மூன்றும் அதர்வ வேதத்தைச் சேர்ந்தவை. ‘ப்ரச்னம்’ என்றால் கேள்வி. பிரஜைகள் உற்பத்தியானது எப்படி? அவர்களை ரக்ஷிக்கிற தேவர்கள் யார்? பிராணன் எப்படி சரீரத்தில் வந்து இயங்குகிறது? விழிப்பு, தூக்கம், ஸ்வப்னம் என்கிற நிலைகளைப் பற்றின உண்மை என்ன? ஓங்கார உபாஸனையின் பிரயோஜனம் என்ன? பரம புருஷனுக்கும் ஜீவனுக்கும் என்ன சம்பந்தம்?- என்கிற ஆறு பிரச்னங்களுக்கு விடை சொல்வதால் இந்த உபநிஷத்துக்கு இப்படிப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.

முண்டகம் என்றால் தலையை மொட்டை அடித்துக் கொள்வது. ஸந்நியாஸிகள் மாதிரியான பரம பக்குவமான வைராக்யசாலிகளே அப்யஸிப்பதற்கு அதிகாரம் பெற்ற உபநிஷத்துக்கு ‘முண்டகோபநிஷத்’ என்ற பெயர் இருக்கிறது. அக்ஷர பிரம்மத்தைப் பற்றிச் சொல்கிற உபநிஷத் இது. அழிவில்லாதது எதுவோ அதுவே அக்ஷரம். அக்ஷரம் என்றால் ஒலி என்ற அர்த்தமும் இருக்கிறது. பஞ்சாக்ஷரம், அஷ்டாக்ஷரம் என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா? இந்த ஒலிகளுக்கெல்லாம் மூலமான அக்ஷரம்தான் பிரணவம் என்னும் ஓம்காரம். அக்ஷரப் பிரம்மம் என்ற லக்ஷ்யத்தில் சேர்வதற்கு அக்ஷரமான பிரணவம் விசேஷ ஸாதனமாக இருக்கிறது. ஓம்கார வில்லில் ஆத்மா என்ற அம்பைப் பூட்டிக் கொஞ்சங்கூட கலக்கமில்லாமல் பிரம்மம் என்ற குறியில் அடித்து ஒன்றாக்கி விடவேண்டும் என்று இந்த உபநிஷத் சொல்கிறது. ஜீவாத்மா, பரமாத்மா இரண்டையும் சரீரம் என்கிற ஒரே பிப்பல மரத்திலிருக்கிற இரண்டு பக்ஷிகளாகவும், அவற்றில் ஜீவாத்ம பக்ஷி மட்டும் பழத்தை (கர்ம பலத்தை)ச் சாப்பிடுவதாகவும், பரமாத்ம பக்ஷி சாக்ஷி மாத்திரமாகப் பார்த்துக் கொண்டு மாத்திரம் இருப்பதாகவும் இந்த உபநிஷத்தில்தான் வருகிறது. இதுவே பைபிளில் ஆதம் (ஆத்மா) ஆப்பிள் (பிப்பில) பழத்தைச் சாப்பிடாமலிருந்ததாகவும், ஈவ் (ஜீவன்) அதைச் சாப்பிட்டதாகவும் கதையாயிற்று. இப்போது குடியரசு சர்க்காரில் ‘ஸத்யமேவ ஜயதே’ என்ற motto [லக்ஷ்ய வாசகம்] வைத்துக்கொண்டிருக்கிறார்களே, அது முண்டகோபநிஷத் மந்திரம்தான். இந்த லோகத்திலேயே ஜீவன் முக்தர்களாக இருந்து, சரீரம் போனபின் விதேஹ முக்தர்களாகிற ஸந்நியாஸிகளைப்பற்றியும் இதில் ஒரு மந்திரம் இருக்கிறது. இப்போது ஸந்நியாஸிகளுக்குப் பூர்ண கும்பம் கொடுக்கும்போது சொல்கிற மந்திரங்களில் இந்த மந்திரமும் வருகிறது. வெவ்வேறு பெயரில், வெவ்வேறு ரூபத்தில் ஓடுகிற நதிகள் யாவும் ஸமுத்திரத்தில் தங்கள் பெயரையும் உருவத்தையும் இழந்து ஸமுத்திரமாகவே ஆகிவிடுவதுபோல, ஞானி நாம ரூபங்களை இழந்து பராத்பரனான புருஷனில் இரண்டறக் கலந்துவிடுகிறான் என்று இந்த உபநிஷத் சொல்கிறது.

‘மாண்டூக்கோயபநிஷத்து’ அடுத்தது. மாண்டூக்யம் என்றால் தவளை. ‘தவளை உபநிஷத்து’ என்று ஏன் பேர்? ஒரு காரணம் தோன்றுகிறது. தவளை ஒவ்வொரு படியாக ஏற வேண்டும் என்பதில்லை. அப்படியே தாவி முதல் படியிலிருந்து நாலாம் படிக்கு எகிறிக் குதித்து வரும். இந்த உபநிஷத்திலே ஜாக்ரம் (விழிப்பு நிலை) , ஸ்வப்னம் (கனவு நிலை) , ஸுஷூப்தி (தூக்க நிலை) இவற்றைத் தாண்டி ஆத்மவெளியான துரீயத்தில் (நாலாம் நிலையில்) சேருவதற்கு வழி சொல்லியிருக்கிறது. ‘ஓம்’ என்ற அக்ஷர உபாஸனையாலேயே இப்படி ஒரே தாவாகத் துரீயத்துக்குத் துள்ளிக் குதிப்பதைச் சொல்லியிருக்கிறது. அதனால்தான் ‘தவளை உபநிஷத்து’ என்று பேர் வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ரிஸர்ச் செய்பவர்கள், ஆதிகால ஜனங்களில் ஒவ்வொரு கோஷ்டியும் ஒவ்வொரு பிராணி வர்க்கத்தின் பேரில் totem என்று அடையாளம் வைத்துக் கொண்டு, தனித் தனிப்பிரிவுகளாகச் சேர்ந்திருந்தார்கள் என்றும், இதிலே தவளை அடையாளம் வைத்துக் கொண்ட மாண்டூக்யர்களிடம் இருந்த உபநிஷத்தே இது என்றும் சொல்கிறார்கள். இந்த உபநிஷத்தின் ரிஷி மண்டூக ரூபியான வருண பகவான் என்று சொல்லப்படுகிறது.

உபநிஷத்துக்களுக்குள் ரொம்பச் சின்னது இதுதான். மொத்தம் பன்னிரண்டே மந்திரங்கள்தான். ஆனால் கீர்த்தியிலும், சக்தியிலும் இந்த உபநிஷத் விசேஷமான இடம் பெற்றிருக்கிறது. பிரணவத்தின் நாலு பாதங்களைக் காட்டி ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் ஒன்றே என்று இது நிர்த்தாரணம் செய்கிறது. கடைசியில் பிரபஞ்சமெல்லாம் ஒடுங்கிப் போகிற துரீய அநுபவத்தை “சாந்தம்-சிவம்-அத்வைதம்” என்று இந்த உபநிஷத் வர்ணிப்பது பிரஸித்தமாக இருக்கிறது.

ஸ்ரீ சங்கர பகவத் பாதாளின் குருவுக்கு குருவான ஸ்ரீ கௌட பாதாச்சார்யாள் ‘மாண்டூக்யோப நிஷத் காரிகை’ என்று இந்த உபநிஷத்தின் தத்துவத்தை விளக்கி எழுதியிருக்கிறார். அதற்கு பகவத்பாதாள் பாஷ்யம் செய்திருக்கிறார்.

தசோபநிஷத்துக்களின் பேரைச் சொல்லும் ச்லோகத்தில் அடுத்தாற்போல் ‘தித்திரி’ என்று வருவதுதான், தைத்ரீய உபநிஷத்.

வைசம்பாயனருக்குத் தம்முடைய சிஷ்யரான யாக்ஞவல்கியரிடம் மனோபேதம் உண்டாகி, “நான் சொல்லிக் கொடுத்த வேதத்தைக் கக்கிவிடு” என்று கோபித்துச் சொன்னதாகவும், யாக்ஞவல்கியர் அப்படியே செய்துவிட்டு, பிறகு சூரியபகவானிடம் சென்று அவரிடமிருந்து இதுவரை லோகத்துக்கு வராதிருந்த சுக்ல யஜுர் வேதத்தில் உபதேசம் பெற்று வந்தார் என்றும் முன்னே சொன்னேனல்லவா? யாக்ஞவல்கியர் முதலில் கற்றுக்கொண்ட வேதத்தைத் தம்முடைய மந்திர சக்தியால் வாஸ்தவமாகவே அன்ன ரூபமாக்கிக் கக்கி விட்டார். அப்போது வைசம்பாயனரின் உத்தரவுப்படி, மற்ற சிஷ்யர்கள் ‘தித்திரி’ என்கிற புறா மாதிரியான பக்ஷியின் ரூபத்தை எடுத்துக் கொண்டு யாக்ஞவல்கியர் கக்கியதைச் சாப்பிட்டு விட்டார்கள். அதனால், உடனே அவர்களுக்கு அந்த வேதம் முழுவதையும் அறிந்து கொள்ள முடிந்து விட்டது. அந்த வேத சாகைக்கு கிருஷ்ண யஜுஸின் ‘தைத்திரீய சாகை’ என்ற பெயரும் உண்டாகிவிட்டது. ‘தித்திரிக்கு’ adjectival form ‘தைத்திரீய’ என்பது. தைத்திரீய சாகையில் உள்ள ஸம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம் எல்லாவற்றுக்கும் தைத்திரீயம் என்றே பெயர். தைத்திரீய ஆரண்யகத்தில் தான் இந்த உபநிஷத்து உள்ளது.

மற்ற எல்லா உபநிஷத்துக்களைவிட அதிகமாக அத்யயனம் செய்யப்படுகிற உபநிஷத்து இதுதான். கர்மாநுஷ்டானங்களில் பிரயோகமாகும் அநேக மந்திரங்கள் இதிலிருந்து எடுத்தவைதான்.

சீக்ஷாவல்லி, ஆனந்தவல்லி, ப்ருகுவல்லி என்று இந்த உபநிஷத்தில் மூன்று பாகங்கள் உண்டு.

சீக்ஷாவல்லியில் சீக்ஷையை (கல்விப் பயிற்சியை)ப் பற்றிய பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறது. பிரம்மசர்ய ஆசிரம நியமங்கள், அதன் மகிமை, வேத அத்யயனக் கிரமம், பிரணவ உபாஸனை முதலியவற்றைப் பற்றி இந்த பாகம் உபதேசிக்கிறது. பிரம்மசாரிகள் தங்கு தடையில்லாமல் தன்னிடம் வந்து வேதத்தை ஸ்வீகரிக்க வேண்டும் என்று ஆசாரியன் செய்கிற ‘ஆவஹந்தீ ஹோமம்’ இதில்தான் இருக்கிறது. இன்றைக்குக்கூட, இந்த ஹோமத்தைப் பண்ணிப் பார்த்ததில், பல இடங்களில் குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த [வேத] பாடசாலைகளில் புதிதாக வித்யார்த்திகள் சேர்ந்து அவற்றுக்குப் புத்துயிர் உண்டானதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். இப்போது ராஜரீக ரீதியில் நாம் சொல்கிற ஸ்வராஜ்யத்தைவிட, சாச்வதமான ஆத்ம “ஸ்வராஜ்ய”த்தைப் பற்றியும் இதிலே சொல்லியிருக்கிறது. ஸத்யம் வத, தர்மம் சர (உண்மையே பேசு; தர்மப்படியே ஒழுகு) முதலான உபதேசங்கள் இங்கேதான் வருகின்றன. வேத அத்யயனத்தையும் ஸ்வதர்மத்தையும் ஒருநாளும் விடக்கூடாது; இவை எந்நாளும் லோகத்தில் இருந்து வருவதற்காகவே, கலியாணம் பண்ணிக்கொண்டு பிரஜா விருத்தி பண்ணவேண்டும் என்று சிஷ்யனுக்கு குரு உபதேசிக்கிறார். “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ” [அன்னை, தந்தை, குரு அதிதி ஆகியோரை தெய்வமாகப் போற்ற வேண்டும்] என்ற மந்திரங்கள் இங்கேதான் இருக்கின்றன. தான தர்ம சிந்தனையை விசேஷித்து உபதேசிப்பதும் இங்குதான்.

மற்ற ஆனந்தங்கள் ஒவ்வொன்றையும் நூறால் பெருக்கிக் கொண்டே போய்க் கடைசியில் பிரம்மானந்தத்தைச் சொல்லியிருக்கிறது என்று முன்னே சொன்னேன் அல்லவா? அந்தப் பெருக்கல் வாய்ப்பாட்டைச் சொல்லி பிரம்மானந்தத்தோடு முடிகிற உபநிஷத் பாகத்துக்கே ‘ஆனந்தவல்லி’ என்று பெயர். சோற்றால் வளரும் மாம்ஸ சரீரமான அன்னமய கோசம், அதற்குள் மூச்சு விடுகிற பிராணமய கோசம், எண்ணங்களை உண்டாக்குகிற மனோமய கோசம், அவற்றில் நல்லது கெட்டதுகளை அறிந்து கொள்கிற விஞ்ஞான மயகோசம், இந்த நாலு கோசத்துக்கும் ஆதாரமாக இருக்கிற தனி ஜீவ மூலமான ஆனந்த மய கோசம் என்று ஐந்தைச் சொல்லி, ஆனந்த மயத்துக்கு அடி ஆதரமாயுள்ள பிரம்மம் ஸ்வச்சமாகத் தன்னுடைய பேரின்ப நிலையில் இருக்கிற விஷயம் இங்கே விளக்கப்படுகிறது. ஒவ்வொரு கோசத்தையும் ஒரு பக்ஷியாக உருவகப்படுத்தி, அந்த பக்ஷிக்கு இது தலை, இது வலதுபக்க சிறகு, இது இடதுபக்க சிறகு, இது உடம்பு, இது ஆதாரமான வால் (அடிப்பாகம்) என்று தத்ரூபமாகச் சொல்லியிருக்கிறது. அடிக்கடி quote பண்ணப்படும் “யதோ வாசோ” [‘எந்த ஸ்தானத்தை எட்டிப் பிடிக்க முடியாமல் வாக்கும் மனஸும் திரும்பி விடுகின்றனவோ, அந்த ஆனந்தமான பிரம்மத்தை அறிந்தவனுக்கு பயமில்லை’] முதலான மந்திரங்கள் இதில் வருவதுதான்.

“பிருகுவல்லி” என்பது, வருணபகவான் தன்னுடைய புத்திரரான பிருகுவுக்குச் செய்த உபதேசமாகும். உபதேசம் என்று சொன்னாலும் எல்லாவற்றையும் குருவே ‘டிக்டேட்’ பண்ணுவதாக இல்லாமல் சிஷ்யன் தானாக ஒவ்வொரு ஸ்டேஜாக எக்ஸ்பெரிமென்ட் பண்ணி, சொந்தத்தில் எக்ஸ்பீரியன்ஸ் அடைகிற விதத்தில், இங்கே பிருகுவை வருணன் உத்ஸாஹப்படுத்திக் கொண்டு போகிறார். இந்த மாதிரி, பிருகு தாமாகத் தபஸ் பண்ணிப் பண்ணியே, முதலில் அன்னமயமான சரீரம்தான் ஸத்தியம் என்று நினைத்த ஸ்திதியிலிருந்து, ஒவ்வொன்றாக மேலே ஏறிப்போய், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம் இவற்றைக் கடந்து, கடைசியில் ஆனந்த மயத்துக்கு ஆதாரமான ஆத்மாதான் பரம ஸத்தியம் என்று அநுபவத்தில் தெரிந்து கொள்கிறார்.

இப்படிச் சொன்னதால், முக்கியமாக அன்னமய சரீரத்தோடேயே நின்றுவிடுகிற யதார்த்த லோக வாழ்க்கையை இந்த உபநிஷத் தள்ளிவிடுகிறது என்று அர்த்தமில்லை. லோகத்தில் இருந்து கொண்டே உத்தமமான ஸத்யத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த லோக வாழ்க்கையே தர்மமாக நடத்தி, உபாயமாக்கிக் கொள்ள வேண்டும். அதனால்தான் இங்கே ஆனந்தமய கோசத்துக்குப் போனபின், மறுபடி ‘அன்னத்தை இகழாதே’, அன்னத்தை எறியாதே, நிறைய அன்னத்தை விளைவியுங்கள்’ என்றெல்லாம் உபதேசிக்கப்படுகிறது. சர்க்காரில் கூட உணவு அபிவிருத்தி இயக்கத்தில் (Grow More Food Campaignல்) இந்த மந்திரங்களைப் பிரசாரப் படுத்தினார்கள்! ஞானியானவன், “அன்னம், அதை உண்பவன், அன்னத்துக்கும் உண்பவனுக்கும் சம்பந்தம் உண்டாக்கியவன் ஆகிய எல்லாமும் நானே” என்று ஈச்வரனோடு ஈச்வரனாகத் தன்னை உணர்ந்து ஆனந்தமாக கானம் பண்ணிக் கொண்டிருப்பான் என்று முடிகிறது.

ரிக் வேதத்தின் ஐதரேய ஆரண்யகத்தில் வருகிற ‘ஐதரேய உபநிஷத்’ அடுத்ததாக இருக்கிறது. ஐதரேயர் என்ற ரிஷியின் மூலம் இது பிரசாரத்துக்கு வந்ததால் இப்படிப் பெயர் ஏற்பட்டிருக்கிறது. ஒரு ஜீவன் பிதாவிடமிருந்து மாதா கர்ப்பத்தில் புகுவது, பிறகு லோகத்தில் பிறப்பது, புண்ய பாபங்களால் மறுபடி மறுபடி பல லோகங்களில் ஜன்மா எடுப்பது முதலான விஷயங்களைச் சொல்லி, ஆத்மாவைத் தெரிந்துகொள்வதன் மூலமே ஜன்மாவிலிருந்து, ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை பெறுவதை இந்த உபநிஷத் சொல்கிறது. கர்ப்பத்திலிருக்கிற காலத்திலேயே வாமதேவர் என்ற ரிஷி சகல ஜன்மாக்களைப் பற்றியும் தெரிந்து கொண்டு, அத்தனை கோட்டைகளையும் கடந்து ஆகாசத்தின் உச்சியில் பறக்கிற பருந்து மாதிரி விடுதலையை நோக்கிக் கிளம்பிவிட்டதாக இந்த உபநிஷத்தில் சொல்கிறார். இதிலே ஆத்மாவைப் பற்றிய பிரத்யக்ஷ ஞானமான பிரஜ்ஞானத்தை சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. அந்த ஞானத்தினால் பிரம்மம் பெறப்படுகிறது என்பதுகூடச் சரியில்லை. அந்த பிரஜ்ஞானமேதான் பிரம்மம் என்று முடிகிறது. இதுவே ரிக்வேத மஹாவாக்யம்.

பத்தில் கடைசி இரண்டான “சாந்தோக்ய உபநிஷத்”தும், “பிருஹதாரண்யக உபநிஷத்”தும் ரொம்பவும் பெரியவை. மற்ற எட்டு உபநிஷத்துக்களையும் சேர்த்தால் எவ்வளவு ஆகுமோ அதைவிட இவை பெரியவை. சாந்தோக்ய உபநிஷத் என்பது ஸாமவேதத்தில் சாந்தோக்ய ப்ராம்மணத்தில் இருப்பது. ‘சந்தோக’ என்பதைக் குறித்தது ‘சாந்தோக்யம்’. சந்தோகன் என்றால் ஸாம கானம் செய்கிறவன் என்று அர்த்தம். ‘சந்தோகன் காண்’ என்று தேவாரத்தில்கூடப் பரமேச்வரனைச் சொல்லியிருக்கிறது. ‘சந்தோக அவஸ்தா’ என்பதே Zend-Avesta என்றாகிப் பார்ஸியர்களின் மதநூலாக இருக்கிறது!

கீதையில் கடோபநிஷத் வெகுவாகக் கையாளப்படுவது போல், பிரம்மஸூத்ரத்துக்கு நிரம்ப ஆதாரமாக சந்தோக்யோபநிஷத் மந்திரங்களே இருக்கின்றன என்று சொல்வதுண்டு.

‘சாந்தோக்யம்’, ‘பிருஹதாரண்யகம்’ ஆகிய இரண்டு உபநிஷத்துக்களிலும் பல ரிஷிகளின் உபதேசங்களைச் சேர்த்து கொடுத்திருக்கிறது.

சாந்தோக்ய ஆரம்பத்தில் ஓம்காரத்துக்கு உத்கீதம் என்று பேர் சொல்லி, அதன் உபாஸனையை விவரித்திருக்கிறது. இந்த உபநிஷத்தில் அக்ஷிவித்தை, ஆகாசவித்தை, மது வித்தை, சாண்டில்ய வித்தை, பிராண வித்தை, பஞ்சாக்னி வித்தை போன்ற பல வித்தைகளைச் சொல்லியிருக்கிறது. இவையெல்லாம் அத்வைதமான பரமாத்ம தத்வத்தைப் பல வழிகளில் சென்று தெரிந்துகொள்வதற்கு உதவுகிற த்வைதமான உபாஸனைகள். இவற்றுக்கு உச்சியிலே வருவது ஹரவித்தை. அகண்ட ஆகாசமாக இருக்கிற பரம்பொருளை ஜீவனானவன் தன் உள்ளத்துக்குள்ளே இருக்கிற சின்னஞ்சிறிய ஆகாசத்தில் கண்டுகொள்வதுதான் ஹர வித்தை.

இந்த உபநிஷத்திலே, சுவாரஸ்யமான பல கதைகளைச் சொல்லி, அதன் வழியே தத்வங்கள் உபதேசிக்கப்படுகின்றன.

வெளிப்பார்வைக்கு விசித்திரமாகத் தோன்றும் பிரம்ம ஞானியின் போக்கு ரைக்வர் என்பவரின் கதையில் தெரிகிறது. தன்னுடைய கோத்திரத்தைத் தெரிந்து கொள்ளாத ஸத்யகாமன் என்ற ஒரு சிறுவன் அதை ஒளிக்காமல் சொன்னதாலேயே அவனை நல்ல பிராமணனாகக் கொண்டு கௌதமர் என்ற ரிஷி அவனை சிஷ்யனாக ஏற்றுக் கொண்ட கதை சாந்தோக்யத்தில்தான் வருகிறது. ‘சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு’ என்ற திருக்குறளுக்குக் கதா ரூபமாக இது இருக்கிறது. ஸத்யகாமனுக்கு உபதேசம் பண்ணுவதற்கு முந்தி குருவானவர் நிரம்ப சோதனைகள் வைக்கிறார். அவருடைய பத்னியே ஸத்யகாமனுக்கு பரிந்து கொண்டு பேசுகிறாள். இதை எல்லாம் உபநிஷத்தில் பார்க்கும்போது, பழையகால குருகுல வாசத்தைக் கண்முன்னால் படம் பிடித்துக் காட்டின மாதிரி இருக்கிறது. ஸத்யகாமனுக்கு நேரெதிராக வித்யா கர்வத்தோடு இருந்த ச்வேதகேது என்ற பிரம்மச்சாரிக்கு அவனுடைய தகப்பனாரான உத்தாலக ஆருணி அடக்கத்தை உண்டுபண்ணி, கடைசியில் ஜீவப்பிரம்ம அபேதத்தைச் சொல்லும் “தத்-த்வமஸி” உபதேசம் செய்வதுதான் ஸாம வேதத்துக்கே உயிர்நிலையாக இருக்கிற மஹா வாக்யத்தைச் சொல்லும் இடம். ச்வேதகேதுவைப் போலில்லாமல் ஸகல வித்தைகளையும் கசடறக் கற்றிருந்தும், இவற்றால் ஆத்மாவைத் தெரிந்துகொள்ள முடியவில்லையே என்று பரிதவித்துக் கொண்டிருந்த நாரத மஹரிஷிக்கு ஸனத்குமாரர் செய்கிற உபதேசமும் இந்த உபநிஷத்தில்தான் வருகிறது. “தைத்திரீயத்”தில் அன்ன மயத்தில் ஆரம்பித்து மேலே மேலே கொண்டு போன மாதிரியே, ஸனத்குமாரரும் ஆகார சுத்தியில் ஆரம்பித்து அந்தஃகரண சுத்திக்குக் கொண்டு போய், அப்போதுதான் கட்டுக்கள் எல்லாம் தெறித்து ஆத்மானந்தம் ஸித்திக்கும் என்கிறார்.

உபதேசம் ஒன்றேயானாலும், சிஷ்யர்களின் பக்குவத்தைப் பொறுத்தே ஒவ்வொருவரும் அதனால் பிரயோஜனம் அடைகிறார்கள் என்பதை இன்னொரு கதை காட்டுகிறது. தேவராஜாவான இந்திரன், அசுர ராஜாவான விரோசனன் இரண்டு பேருக்கும் பிரஜாபதியானவர், “கண்ணினால் எவன் பார்க்கிறானோ அவனே ஆத்மா” என்று ஒரே உபதேசத்தைச் செய்கிறார். கண், அறிவு முதலான எல்லாவற்றுக்கும் பின், அவற்றுக்கு ஆதாரமாக இருக்கிற வஸ்துவை அவர் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டார். ஆனால் இதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் இருவரும் தங்களைத் தாங்களே கண்களால் பார்த்துக் கொள்ளும்படியாகத் தோன்றும் தங்களுடைய பிரதிபிம்பங்களையே ஆத்மா என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள். பிரதிபிம்பத்தில் சரீரம் தானே தெரிகிறது? அதனால் சரீரமே ஆத்மா என்று விரோசனன் முடிவாகத் தீர்மானம் பண்ணி விடுகிறான். அதிலிருந்து நாஸ்திகவாதம், லோகாயதம், materialism என்றெல்லாம் சொல்வது அசுரர்களின் கொள்கையாகி விடுகிறது. இந்திரனும் முதலில் இப்படித் தப்பாக நினைத்தாலும், அப்புறம் (தைத்ரீயத்திலே வருகிற) பிருகு அன்னமய கோசத்திலிருந்து ஒவ்வொன்றாகத் தாமே பரீக்ஷித்துப் பரீக்ஷித்து ஆனந்தமய கோசத்துக்குப் போன மாதிரி, இங்கே இந்திரனும் ஸ்தூல தேகத்திலிருந்து ஸூக்ஷ்ம தேகமான ஸ்வப்ன சரீரம், அப்புறம் ஸ்வப்னமும் இல்லாமல் ஆழ்ந்து தூங்குகிற காரண சரீரம் முதலியவற்றை ஆராய்ந்து கொண்டே போய், மாண்டூக்யோபநிஷத்தில் சொன்ன துரீயம்தான் ஆத்மா என்று தெரிந்து கொள்கிறான்.

‘பிருஹதாரண்யக’ உபநிஷத்து எல்லாவற்றுக்கும் கடைசியில் வருவது. ‘பிருஹத்’ என்றால் பெரியது என்று அர்த்தம். பிருஹதீச்வரர், பிருஹந்நாயகி என்பவற்றைப் பெருவுடையார், பெரியநாயகி என்கிறோமல்லவா? உபநிஷத்துக்களுக்குள் பெரியது பிருஹதாரண்யகம். ஸாதாரணமாக ஒரு ஆரண்யகத்தின் முடிவிலே வருவதுதான் உபநிஷத். இதற்கு மாறுதலாக சுக்ல யஜுஸ் ஸம்ஹிதையிலேயே வருவது ஈசாவாஸ்ய உபநிஷத். அதே சுக்ல யஜுஸ்ஸில் ஒரு முழு ஆரண்யகமாக (ஆரண்யகத்தின் கடைசிப் பகுதியாக மட்டுமில்லாமல் முழு ஆரண்யகமாகவே) இருக்கிற உபநிஷத்துத்தான் பிருஹதாரண்யகம். இதில் இரண்டு பாடம் உண்டு. மாத்யந்தின சாகையில் இருப்பது ஒன்று; காண்வ சாகையில் இருப்பது இன்னொன்று. பகவத்பாதாள் காண்வ சாகைப் பாடத்துக்கே பாஷ்யம் எழுதியிருக்கிறார்.

இதில் மொத்தம் ஆறு அத்யாயங்கள். முதல் இரண்டை மது காண்டம் என்றும், அடுத்த இரண்டை யாக்ஞவல்கியர் பெயரில் முனி காண்டம் என்றும், கடைசி இரண்டைக் கில காண்டம் என்றும் சொல்வார்கள். மது என்றால் ஆனந்த ரஸமாக இருப்பது என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். எல்லாம் பரமாத்ம ஸ்வரூபம் என்று தெரிந்து கொண்டால் லோகம் பூராவும் ஜீவர்களுக்கு மதுவாக இருக்கும். ஜீவர்களும் லோகத்துக்கு மதுவாக இருப்பார்கள். ஆத்மா ஸகலத்துக்கும் மது. இந்த விஷயம் மது காண்டத்தில் வருகிறது.

பிற்பாடு இதே உபநிஷத்தில்தான் (IV.4.22) ஆத்மா இப்படி இல்லை, இப்படி இல்லை என்று தள்ளித்தள்ளி, ‘அதை இப்படி இருக்கிறது என்று வர்ணிக்க முடியாது; நமக்குத் தெரிந்த எதுவாகவும் அது இல்லை’ என்று சொல்லியிருக்கிறது. இதற்கு “நேதி நேதி” வாதம் என்று பெயர். “ந இதி” என்பது ஸந்தியில் “நேதி” என்றாகும். “ந இதி” என்றால் இவ்வாறு என்று சொல்வதற்கு இல்லாதது’ என்று அர்த்தம். முதலில் இப்படி ‘நேதி’ கொள்கைப்படி பிரபஞ்சம், சரீரம், மனஸ் எல்லாவற்றையும் தள்ளிவிட்டுத்தான் வர்ணனாதீதமான ஆத்மாவை அறிந்துகொள்ள வேண்டும். அப்படி அறிந்து கொண்டதற்குப் பின் விவகாரத்தில் தோன்றுகிற லோகம், ஜீவர்கள் எல்லாமும்கூட அதே ஆனந்தரஸத்தால் ஆனதுதான் என்ற பாவம் உண்டாகும்.

இப்போது அநேக இடங்களில் ‘ப்ரேயர்’ மாதிரிச் சொல்லப்படும் ‘அஸதோ மா ஸத்கமய’ மந்திரம் பிருஹதாரண்யகம் ஆரம்ப அத்யாயத்திலேயே இருக்கிறது (1.3.28).

க்ஷத்ரிய ராஜாவான அஜாதசத்ருவிடம் கார்க்கியர் என்ற பிராம்மணர் உபதேசம் வாங்கிக்கொண்டது இரண்டாம் அத்யாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அஜாத சத்ரு, ஜனகர் போன்ற ராஜாக்கள் பிரம்ம ஞானிகளாக இருந்திருப்பது இதிலிருந்து தெரிகிறது. இதே போல் ஸ்திரீகளும் ராஜ ஸதஸில் ரிஷிகளுக்கு ஸமமாகக் கேள்விகள் கேட்டு வாதம் பண்ணிய ‘ப்ரம்மவாதினி’களாக [பிரம்மத்தைப் பற்றி ஆராய்ந்து பேசுகிறவர்களாக] இருந்திருப்பதை, ஜனகரின் வித்வத் ஸதஸில் இருந்த கார்கி என்பவளைப் பற்றிச் சொல்கிறபோது தெரிந்து கொள்கிறோம். யாக்ஞவல்கியரின் இரண்டு பத்தினிகளில் ஒருத்தியான காத்யாயனி ஸாதாரண லௌகிக ஸ்த்ரீயாகவும், இன்னொருத்தியான மைத்ரேயி ‘பிரம்மவாதினி’யாகவும் இருந்ததை இந்த உபநிஷத்து சொல்கிறது. யாக்ஞவல்கியர் மைத்ரேயிக்குப் பண்ணின உபதேசம் இந்த உபநிஷத்தில் மதுகாண்டம், முனிகாண்டம் இரண்டிலும் [2-ம் அத்யாயம் 4-ம் பிரிவிலும், 4-ம் அத்யாயம் 5-ம் பிரிவிலும்] கொஞ்சம் கொஞ்சம் வித்யாஸத்தோடு திருப்பிச் சொல்லப்படுகிறது. அது ரொம்பவும் அழகான கதையும் தத்வமும் சேர்ந்ததாக இருக்கிறது.

யாக்ஞவல்கியர் வீட்டை விட்டுவிட்டு ஸந்நியாஸியாகப் போவதற்கு உத்தேசம் பண்ணி, இரண்டு பத்னிகளுக்கும் சொத்தைப் பாகம் பிரித்துக் கொடுக்கிறார். காத்யாயனி சொத்திலேயே திருப்தி அடைந்து விடுகிறாள். ஆனால் மைத்ரேயியோ, “இந்த சொத்திலெல்லாம் இல்லாத ஸெளக்கியம் ஸந்நியாஸத்தில் இருக்கிறது என்பதால்தானே இதைவிட்டு அதற்குப் போகிறீர்கள்? அப்படிப்பட்ட அந்த ஸெளக்கியம் என்ன? அதை எனக்கும்தான் எடுத்துச் சொல்லுங்களேன்! என்று கேட்கிறாள். அதற்கு யாக்ஞவல்கியர், “நீ எப்போதுமே எனக்கு பிரியமானவளாக இருந்திருக்கிறாய். இப்போது இந்தக் கேள்வியைக் கேட்பதால், இன்னமும் அதிகப் பிரியமானவளாக ஆகிவிட்டாய்!” என்று சொல்லி, உபதேசிக்க ஆரம்பிக்கிறார். இந்தப் பிரியம் என்பது என்ன என்பதையே தத்வார்த்தமாக விஸ்தாரம் செய்கிறார். “பதியிடம் பத்தினிக்குள்ள பிரியமும், பத்தினியிடம் பதிக்குள்ள பிரியமும், இப்படியே புத்திரரிடத்திலுள்ள பிரியமும், செல்வங்களில் உள்ள பிரியமும், எல்லாவிதமான பிரியங்களுமே எதனிடம் செலுத்தப்படுகின்றனவோ அந்தப் பதி, பத்தினி, புத்ரர், செல்வம், மற்ற விஷயங்கள் இவற்றின் பொருட்டாக உண்டாவதில்லை. இப்படிப் பிரியமாக இருப்பதால் ஒருவனுக்குத் தன் நிறைவு ஏற்படுகிறதல்லவா? அவ்வாறு தன் ஆத்மாவுக்கு இது ஸந்தோஷம் உண்டாக்குகிறது என்பதால்தான் எதனிடமும் பிரியத்தைச் செலுத்துகிறான். அப்படியானால் அந்த ஆத்மா அன்பு ஸ்வரூபமாக இருக்கிறது என்பதுதானே அர்த்தம்? அதை மட்டும் பிரித்துத் தெரிந்து கொள்வதற்காகத்தான் அதுவரை பிரியமாக இருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஸந்நியாஸியாகப் போவது. அதைத் தெரிந்து கொண்டபின், அதற்கு அந்நியமாக எதுவுமே இல்லை என்று ஆகிவிடும். எல்லாமும் பிரியமானதாகிவிடும். முதலில் சிலதில் பிரியம் வைத்தபோது, அதற்கு மாறான வேறு சிலதில் அப்ரியம் என்று இருந்தது. இவை எல்லாவற்றையும் விட்டு விட்டு ஆத்மாவைத் தெரிந்து கொண்டு விட்டால் ஏற்றத்தாழ்வில்லாமல், எல்லாமே ஆத்ம ஸ்வரூபம் என்ற உணர்ச்சி ஏற்பட்டு, சிலதில் மட்டுமின்றி, எதனிடமுமே த்வேஷம் இல்லாமல் எல்லாமே ப்ரியமானதாகிவிடும்” என்று உபதேசம் செய்கிறார்.

இப்படி அவர் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளப் புறப்படுமுன் ஜனகராஜனின் சபையில் பரமாத்ம தத்வம் பற்றிக் கஹோளர், உத்தாலக ஆருணி, கார்கி ஆகியவர்களிடம் நடத்தின வாதங்களும், அப்புறம் ஜனகருக்குப் பண்ணின உபதேசங்களும் முனிகாண்டத்தில் சொல்லப்படுகின்றன. விசிஷ்டாத்வைதத்தில் விசேஷமாகச் சொல்லப்படும் அந்தர்யாமிக் கொள்கைக்கு ஆதாரம், உத்தாலக ஆருணிக்கு யாக்ஞவல்கியர் சொன்ன பதிலில் இருக்கிறது. லோகம் முழுக்கவே மாயை என்று அத்வைதத்திலுள்ளபடி சொல்லாமல், லோகம் சரீரம் என்றால், அதற்கு உயிராக உள்ளே பரமாத்மா இருக்கிறார் என்பதுதான் அந்தர்யாமிக் கொள்கையின் முக்யமான கருத்து. இதை ஒரு குறிப்பிட்ட நிலையில் யாக்ஞவல்கியர் ஒப்புக்கொண்டு பேசினாலும், மற்ற சமயங்களில் பூர்ணமாக அத்வைதந்தான் சொல்கிறார். மைத்ரேயிக்கு உபதேசித்து முடிக்கும்போது பரம அத்வைதமாக, “கொஞ்சம் தனித்து த்வைதமாக இருந்தாலும், இன்னொன்றைப் பார்ப்பது, முகர்வது, ருசிப்பது, தொடுவது, கேட்பது, நினைப்பது என்றெல்லாம் ஏற்பட்டு விடும். ஆனால் ஆத்மாவை அநுபவத்தில் தெரிந்து கொள்கிற போது இந்த எதுவுமே இல்லை. எதனால்தான் பார்வை, கேள்வி, ருசி, வாஸனை, எண்ணம் எல்லாமே ஏற்படுகின்றனவோ அதை எப்படி, எதைக் கொண்டு பார்க்கவும், கேட்கவும், ருசிக்கவும், முகரவும், நினைக்கவும் முடியும்?” என்பதாக, அகண்ட ஏக உணர்வைத்தான் சொல்கிறார். ‘ஜலத்தோடு கலந்து ஜலம் மாதிரிப் பரமாத்மாவுடன் அத்வைதமாக (ஒன்றாகி) விடுகிறான்’ என்றே ஜனகருக்கும் அத்வைதமாக உபதேசிக்கிறார் (IV.3.22). எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபட்டவன் சரீரத்தில் இருக்கிற போதே பிரம்மாக இருந்து கொண்டு, சரீரம் விழுந்த பிற்பாடு பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுகிறான் (IV.4.6) என்றும் சொல்கிறார்.

இந்த உபநிஷத்தின் கடைசியில் வருகிற இரண்டு அத்தியாயங்களும் சிதறிக் கிடக்கிற பல ஸமாசாரங்களைச் சேர்த்துக் கொடுப்பதால் ‘கில காண்டம்’ என்று வழங்குகின்றன. ஒரு வஸ்து சிதைந்து போனால் அது கிலமாகிவிட்டது என்று சொல்கிறோமல்லவா? கொஞ்சங்கூட சிதையாமல் பூர்ணமாக இருப்பதுதான் ‘அகிலம்’.

ஸாதகர்களின் தராதரத்தைப் பொறுத்து, ஒரே உபதேசத்துக்கு மூன்று விதமான அர்த்தம் உண்டாவதைக் கில காண்டத்தில் உள்ள ஒரு கதை விளக்குகிறது. தேவஜாதி, மநுஷ்ய ஜாதி, அசுர ஜாதி ஆகிய மூவரும் பிரஜாபதியிடம் உபதேசம் வேண்டுகிறார்கள். அவர் “த” என்ற ஒரு எழுத்தை மட்டும் உபதேசமாகச் சொல்கிறார். புலனடக்கம் போதாத தேவர்கள் ‘த’ என்றால் ‘தாம்யத’ (அடக்குங்கள்) என்று அர்த்தம் செய்து கொள்கிறார்கள். தனக்கென்று சேர்த்துக் கொள்வதையே ஸ்வபாவமாகக் கொண்ட மநுஷ்யர்கள் ‘த’ என்றால் ‘தத்த’ (கொடு, தானம் பண்ணு) என்று பொருள் கொள்கிறார்கள். குரூர குணம் படைத்த அஸுரர்கள் ‘த’ என்பதற்கு ‘தயத்வம்’ (தயையோடு இருங்கள்) என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள்.

பிருஹதாரண்யக உபநிஷத்தின் கடைசிப் பாகத்தில் வருகிற ஒரு மந்திரம் எனக்கு ரொம்பவும் ரஸமாக, ஆறுதலாகத் தோன்றுவதுண்டு. இந்த மந்திரம் என்ன சொல்கிறது?

“வியாதிக்காரன் ஒருத்தன் ஜ்வரதாபத்தில் கஷ்டப்படுகிறான் என்றால் அது பெரிய தபஸ். இப்படி நோய் நொடியைத் தபஸ் என்று ஒருத்தன் தெரிந்து கொண்டு விட்டானானால், அவனுக்கு உயர்ந்த பரலோகம் (மோக்ஷம்) கிடைத்துவிடுகிறது” என்று இந்த மந்திரத்தில் சொல்லியிருக்கிறது [V.11.1].

இப்படிச் சொன்னால் ஒன்றும் புரியவில்லையே! இதில் என்ன ரஸம், என்ன ஆறுதல் இருக்கிறது? என்று கேட்கலாம். சொல்கிறேன்:

விரதம், தபஸ் முதலியவற்றால் உடம்பை வருத்திக் கொள்வதால் சரீராபிமானம் விலகுவதோடுகூட, நம்முடைய பூர்வ பாபங்களும் தேய்கின்றன. பூர்வ கர்ம பாபம் போவதற்கு ஒரு பிராயச்சித்தமாகத் தபஸ் இருக்கிறது. முன்னே உடம்பால் நாம் பாபம் பண்ணினதால், அதே உடம்பால் சிரமப்பட்டு தபஸ் செய்தால் பாபம் போகிறது.

இதனால்தான் மஹான்களும் தபஸ் பண்ணியதாகப் புராணங்களில் வருகிறது. ஸாக்ஷாத் ஜகன்மாதாவான அம்பிகையே பரமேச்வரன் வார்த்தையை மீறி தக்ஷனின் யக்ஞத்துக்கு வந்து அவமானப்பட்டு, அப்போதே பிராணத்தியாகம் செய்தபின், மறுஜன்மாவில் ஹிமவானுக்குப் புத்திரியாக அவதாரம் செய்தபோது, பூர்வத்தில் பதியின் உத்தரவை உல்லங்கனம் பண்ணியதற்கு [மீறியதற்கு] பிராயச்சித்தமாகத் தபஸ் பண்ணினால்தான் மறுபடி இந்த ஜன்மாவில் அவரை அடைய முடியும் என்பதால் ரொம்பவும் உக்ரமான தபஸுகளைப் பண்ணியிருக்கிறாள். [காளிதாஸனின்] குமார ஸம்பவத்தில் ரொம்ப அழகாக, மனஸை உருக்கும்படியாக இதை வர்ணித்திருக்கும். குளிர் காலத்தில் ஹிமயமலையில் எத்தனை குளிராக இருக்கும்? அந்த சமயத்தில் பனிப் பாறைகளின் மேல் உட்கார்ந்து கொண்டோ, பனியாக உறைந்து கொண்டிருக்கும் தடாகங்களுக்குள் நின்று கொண்டோ தபஸ் பண்ணுவாள். நல்ல கோடை வெயில் கொளுத்துகிறபோது, தன்னைச் சுற்றி நாலு பக்கமும் நெருப்பை மூட்டிக் கொண்டு தபஸ் பண்ணுவாள். நாலு பக்கம் நெருப்பும், மேலே ஐந்தாவது நெருப்பாக ஸூரியனும் இருப்பதால், இதற்கு ‘பஞ்சாக்னி தபஸ்’ என்று பேர்.

இம்மாதிரியான கடுமையான தபஸ்களை அநேக மஹான்கள் பண்ணியிருக்கிறார்கள்.

இப்போது நம் விஷயம் என்ன? அவர்கள் ஏதோ ஒரு தப்பு இரண்டு தப்பு பண்ணினார்களென்றால், நாம் பண்ணுகிற தப்புகளுக்கோ கணக்கு வழக்கே இல்லை. ஆனால், அவர்கள் செய்த தபஸில் கோடியில் ஒரு பங்குகூடப் பண்ண நமக்கு மனஸும் இல்லை, சக்தியும் இல்லை. இப்படியிருந்தால் நம் பாபம் போகிறது எப்படி?

இம்மாதிரி நினைத்துக் கஷ்டப்படுகிற போதுதான் [மேலே சொன்ன] உபநிஷத் மந்திரம் ஆறுதலாக வருகிறது. நமக்கு disciplined life (நெறியான வாழ்க்கை) இல்லாததால், எப்போதும் பார்த்தாலும் வியாதி, வக்கை, ஜ்வரம் முதலியன வருகன்றனவல்லவா? நம்மைப் பார்த்துத்தான் உபநிஷத், “இந்த நோய், நொடி, காயலா எல்லாமே பெரிய தபஸ்தான். இப்படிப் பார்ப்பதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டாயானால், தபஸினால் கிடைக்கிற பாபத்தின் அழிவு உனக்கும் உண்டாகி, மோக்ஷ லோகத்துக்குப் போய் விடுவாய்” என்று சொல்கிறது. இவ்வளவு plain-ஆக தெளிவாக, நேராகச் சொல்லாவிட்டாலும், அந்த மந்திரத்தின் அர்த்தம் இதுதான்.

ஜ்வர தாபம், தாப ஜ்வரம் என்றெல்லாம் சொல்கிறோமல்லவா? ‘தாபம்’ என்றால் கொதிப்பது, வேகிறது என்று அர்த்தம். ‘தபஸ்’, ‘தாபம்’ என்று இரண்டுக்கும் root ஆன ‘தப’ என்னும் வார்த்தைக்குக் ‘கொளுத்துவது’ என்று அர்த்தம். ஸூர்யனுக்குத் ‘தபனன்’ என்றே பேர் இருக்கிறது. ஆகையால் சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தபஸை நாம் பண்ணாவிட்டாலும், தானாக வந்த இந்த ஜ்வர தாபத்தையே நம் பாபத்தைப் போக்குவதற்காக ஈச்வரனே தந்திருக்கிற தபஸ்தான் என்று வைத்துக்கொண்டுவிட வேண்டும்.

டைபாய்ட், நிமோனியா மாதிரி வந்து 105, 106 [டிகிரி] என்று உடம்பை வறுத்து எடுக்கிறதா? அப்பாடா நாம் பஞ்சாக்னி தபஸ் பண்ணாததற்கு பதிலாகத்தான் ஸ்வாமி இந்த தாப ஜ்வரத்தைத் தந்திருக்கிறார் என்று நினைத்து நிம்மதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

மலேரியா வந்து, எத்தைனைக் கம்பிளி போர்த்தினாலும் போதாமல் குளிர் நடுக்கி எடுக்கிறதா? ‘ரொம்ப நல்லது! நாம் குளிர்காலத்தில் ஐஸுக்குள் இருந்து கொண்டு தபஸ் பண்ணமாட்டோமோல்லியோ? அதனால்தான் பரம கருணையோடு பகவானே நமக்கு இந்தக் குளிர் ஜுரத்தை அனுப்பியிருக்கிறார்’ என்று வைத்துக் கொண்டு விடவேண்டும்.

இப்படி இந்த உடம்பு [நோய்] வந்தாலும், அடிபட்டாலும், காயம் பட்டாலும், ஒவ்வொன்றையும் ஒரு தபஸாக – நாமாகப் பண்ணாத போதிலும் பகவானே அனுப்பி வைத்திருக்கிற தபஸாக – எடுத்துக் கொண்டு விடவேண்டும்.

பழகப் பழக இந்த மனோபாவம் உறுதியாக ஏற்பட்டு விடும். இதனால் நோய் நொடியைத் தாங்கிக் கொள்கிற சக்தி உண்டாகும். டாக்டர், மருந்து என்று தேடி ஓடாமல், “ஆகிறபடி ஆகட்டும்” என்று அதன் வழி விட்டு விடுவோம். பாப கர்மாவைத் தீர்த்து வைக்கிற ஒரு நல்ல உபாயமாக நம்மைத் தேடி வந்திருக்கிற தேக சிரமத்தை நாமாகப் போக்கிக் கொள்ள மாட்டோமில்லையா? இதனால் doctor fees, மருந்துச் செலவு எல்லாமும் லாபம். எல்லாவற்றையும் விடப் பெரிய லாபம், சிரமத்தை சிரமமாக நினைக்காமல் ஏற்றுக்கொள்கிற ‘திதிக்ஷை’ என்ற உயர்ந்த பண்பைப் பெற்று விடுவோம்.

இவ்வளவையும்தான் உபநிஷத் மந்திரம் ஸம்க்ஷேபமாக [சுருக்கமாக]ச் சொல்லி விடுகிறது. ‘மஹத்தான பாபங்களைப் பண்ணிவிட்டு அதற்குப் பிரயாச்சித்தமான விரதம், தபஸ் எதையும் பண்ணாமலே, பண்ண முடியாமலே, திராணியில்லாமல் இருக்கிறோமே’ என்று துக்கப்படும்போது, இந்த மந்திரம் நமக்கும் ஸ்வாமியே அனுப்பிவைக்கிற தபஸ் இருக்கிறது என்று ஆறுதல் சொல்கிறது.

தசோபநிஷத்துக்களும் முடிகிற இடமான பிருஹதாரண்யகத்தின் கடைசி அத்தியாயத்தில், கர்ம காண்டத்துக்கு வேதாந்தம் விரோதமே இல்லை என்று அழுத்தமாகக் காட்டுகிற மாதிரி பஞ்சாக்நி வித்யையையும், ஸுப்ரஜைகளை [நன்மக்களை] விரும்பும் கிருஹஸ்தர்கள் அநுஷ்டிக்க வேண்டிய கர்மாக்களையும் சொல்லியிருக்கிறது4.


1. “ஸ்வாத்ம நிரூபணம்” : 94-வது ச்லோகம்.

2. “ச்ருதீநாம் மூர்த்தாநோ” எனத் தொடங்கும் 84-வது ச்லோகம்.

3. V.23

4. இந்த உபநிஷத்துக்களின் தாத்பரியத்தைப் பற்றி “அத்வைதம்” என்ற பிரிவிலுள்ள “வேதத்தின் முடிவும் சங்கரரின் முடிவும் ஒன்றே” என்ற உரையிலும் காண்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வேதமும் வேதாந்தமும் முரணானவையா ?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்ன ?
Next