வேதமும் தமிழ்நாடும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேதமிருந்தால்தான் லோகம் நன்றாக இருக்கும், ஆத்மாவும் க்ஷேமமடையும் என்பது என் அபிப்ராயம். இந்தப் பெரிய மூலதனம் இப்போது வீணாகப் போயிருக்கிற நிலை மாறி, இதை மறுபடி தழைக்கும்படியாகப் பண்ணவேண்டுமென்பதே எனக்கு ஸதா விசாரமாக இருக்கிறது. அதற்காகத்தான் என்னாலானதை ஏதோ திட்டம் கிட்டம் போட்டு வேத ரக்ஷணம், ஸ்டைபண்ட் என்று பல இடங்களில் ஏற்பாடு செய்திருக்கிறது. ஆனால் இது இந்த மடம், அல்லது சில ஸ்தாபனங்களின் கடமை மட்டுமல்ல; இது நம் எல்லோர் கடமையுமாகும்; உங்கள் எல்லோருடைய ட்யூட்டியும் ஆகும். நிர்ப்பந்தத்துக்காக இல்லாமல், ஆசையோடு ஆர்வத்தோடு நீங்கள் எல்லோரும் சேர்ந்து இது வேத பூமி என்பதை மறுபடி நிஜமாக்கப் பிரயாஸைப் படவேண்டும். தமிழ்நாட்டுக்கு இதை நான் முக்கியமாகச் சொல்கிறேன்.

வேத விருக்ஷம் நன்றாக விழுது விட்டு வளர்ந்த மண் இந்தத் தமிழ் பூமி, “வேதம் நிறைந்த தமிழ்நாடு” என்று [பாரதி] பாடியிருப்பது கவியின் அதிசயோக்தி இல்லை. அப்படித்தான் தமிழ்தேசம் இருந்திருக்கிறது.

சங்க காலத்திலிருந்து, எங்கே பார்த்தாலும் வேத வேள்விகளை வானளாவப் புகழ்ந்து சொல்லியிருக்கிறது. சங்கம் வளர்த்த பாண்டிய ராஜாக்கள் வைதிகமான யக்ஞாதிகளை நிறையச் செய்து, “பல் யாகசாலை முது குடுமிப் பெருவழுதி” என்ற மாதிரியான பட்டங்களைத் தங்களுக்குப் பெருமையோடு சூட்டிக் கொண்டி௫க்கிறார்கள். அவர்களுடைய ராஜதானியான மதுரையைப் பற்றி இரண்டு பெருமை. ஒன்று, ‘மாடு கட்டிப் போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போர் அடித்தது.’ இது தான்ய ஸுபிக்ஷத்தைச் சொல்வது. இன்னொன்று ஆத்ம ஸுபிக்ஷத்தையும், லோக ஸுபிக்ஷத்தோடு சேர்த்துச் சொல்வது. அதாவது, பல ஊர்க்காரர்கள் தங்கள் தங்கள் ஊர்ப் பெருமையைச் சொல்லும்போது மதுரைவாசிகள், “எங்கள் ஊரில் வேத சப்தத்தோடேயாக்கும் பொழுது விடிகிறது. சேரர்களின் தலைநகரான வஞ்சியில் இருப்பவர்களும், சோழர்களின் தலைநகரான கோழி என்ற உறையூரில் இருப்பவர்களும், தினமும் கோழி கூவுவதைக் கேட்டு விழித்துக் கொள்கிறார்கள். அதைவிடப் பெருமைப்படத்தக்க விதத்தில் விழித்துக் கொள்பவர்கள் பாண்டிய ராஜதானியான மதுரையில் வசிக்கிற நாங்களே. வேத அத்யயனத்தை, மறையொலியைக் கேட்டுக் கொண்டுதான் நாங்கள் விழித்துக் கொள்கிறோம்” என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்! இது சங்க இலக்கியத்திலேயே இருக்கிற விஷயம்1.

திருக்குறளில் பல இடங்களில் வேதநெறி சிறப்பித்துப் பேசப்படுகிறது. வேதத்திலுள்ள பஞ்ச மஹாயக்ஞங்களைத்தான் திருவள்ளுவர் சொல்கிறார்:

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை.

ராஜநீதி தவறினால் கோ-ப்ராம்மணர்களுக்கு க்ஷீணம் உண்டாகும் என்பது ஒரு முக்யமான வைதிகக் கொள்கை. கோ (பசு) வையும், பிராம்மணர்களையும் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம், கோ தருகிற நெய், பால், சாணம் முதலியனதான் யக்ஞ திரவியங்களில் முக்யமானவை; யாகத்தைப் பண்ணுகிற அதிகாரம் பெற்றவர்களோ பிராம்மணர்கள்- என்பதுதான். இதே மாதிரி கோ-பிராம்மணர்களைத் திருவள்ளுவர் குறிப்பிட்டு, அரசின் நீதித் தண்டம் தவறினால், இந்த இருவராலும் கிடைக்கிற லோக உபகாரம் வீணாகிவிடும் என்கிறார்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

‘ஷட் கர்ம நிரதர்’ என்று பிராம்மணர்களுக்கு உள்ள வைதிகமான பெயரை, அப்படியே மொழிபெயர்த்து “அறு தொழிலோர்” என்கிறார். அத்யயனம்-அத்யாபனம் (தான் வேதம் ஓதுவது-பிறருக்கும் ஓதுவிப்பது); யஜனம்-யாஜனம் (தான் வேள்வி செய்வது-பிறருக்கு வேள்வி செய்விப்பது): தானம் – ப்ரதிக்ரஹம் (வேள்வியில் தானே தக்ஷிணை தருவது; இம்மாதிரி செலவழிப்பதற்கு வேண்டிய மூலதனத்துக்காகவே பிறத்தியாருக்கு சிக்ஷை சொல்லி முடித்தபின் அவர்களிடமிருந்து தக்ஷிணை வாங்கிக் கொள்வது) என்ற ஆறும் தான் பிராம்மணனுக்கு உரிய ஷட்கர்மாக்கள். இது மநுஸ்மிருதியில் சொன்னது. தர்ம சாஸ்திரங்களில் இன்னொன்றான பராசர ஸ்மிருதியில் வேறு தினுசாக ஆறு கர்மாக்களை பிராம்மணனின் நித்யப்படியாக (daily routine -ஆக) சொல்லியிருக்கிறது.

ஸந்த்யா-ஸ்நானம் ஜபோ ஹோமம் தேவதானாம் ச பூஜனம்|

ஆதித்யம் வைச்வதேவம் ச ஷட்கர்மாணி தினே தினே|

ஒன்று ஸந்தியாவந்தனம்; அதை ஸ்நானத்தோடு செய்ய வேண்டும். பிராம்மணன் பச்சைத் தண்ணீரில் முழுகப் பயப்படவே கூடாது. எப்போது பார்த்தாலும், தினமும் இரண்டு, மூன்று வேளை ஸ்நானம் செய்யவேண்டும். ப்ராத ஸ்நானம் (விடியற்காலை) , மாத்யான்னிக ஸ்நானம் (பகல்) ஸாயங்கால ஸ்நானம் என்று பண்ண வேண்டும். இப்படி மூன்று வேளையும் பண்ணியே அந்தந்த வேளைக்கான ஸந்தியா வந்தனத்தையும், மாத்யான்னிகத்தையும் செய்ய வேண்டும். இது தான் ஸந்த்யா-ஸ்நானம். முதலில் ஸந்தியா வந்தனம், அப்புறம் ஸ்நானம் என்று சொன்னதால், ஸந்தியா வந்தனம் பண்ணிவிட்டுப் பிறகு ஸ்நானம் செய்யவேண்டும் என்று குயுக்தி பண்ணக் கூடாது…

இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் விதண்டாவாதம், மரியாதைக்கு அர்ஹமான (உரிய) விஷயங்களில் கேலிப்பேச்சுப் பேசுவதெல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. ஆசார்யாள் முடிவாக உபசதேசித்த “ஸோபான பஞ்சக”த்தில் ‘துஸ்தர்க்காத் ஸுவிரம்யதாம்’ என்று சொல்கிற போது, குதர்க்கமாக, குயுக்தியாக மத விஷயங்களில் அர்த்தம் பண்ணுவதைத்தான் கண்டித்திருக்கிறார். மிகவும் பூஜ்யமான வேதத்தின் விஷயத்தில் இது மிகவும் அவசியம். பவ்யத்தோடு பணிவோடு அதைக் கேட்டுக் கொள்ள வேண்டும். வேதாந்த நிர்ணயத்துக்கு நல்ல யுக்திகளை ஒரு பிரமாணமாக ஆசார்யாள் ஒப்புக் கொள்கிறார். குயுக்தி, துஸ்தர்க்கம் (குதர்க்கம்) தான் கூடாது என்கிறார். எந்த அளவுக்குத்தான் மநுஷ்ய அறிவு போக முடியுமோ அந்த எல்லைக்குள்ளேயே அதற்கு அதிகாரம் கொடுத்து வேதத்தை ஆராய்ச்சி பண்ணுவதில் தப்பில்லை. ஆனால், நம் சிற்றறிவுக்கு எல்லையே வகுக்காமல் பூரண அதிகாரம் கொடுப்பதுதான் தப்பு…

ஸ்நானம்-ஸந்த்யா என்றில்லாமல், ஸந்த்யா-ஸ்நானம் என்றதற்குக் காரணம்: பிராம்மணனுக்கு ஸந்த்யா வந்தனம் தான் மற்ற எல்லா அனுஷ்டானங்களைவிட முக்கியமாக இருப்பது. அதனால் அவனுடைய கர்மாவைச் சொல்லும்போது அதற்கே முதலிடம் கொடுத்திருக்கிறது.

ஆறு தொழில்களில் முதலாவது ஸந்த்யா-ஸ்நானம். இரண்டாவது ஜபம் – அநேக மஹாமந்திரங்களை, அவரவர் குலதேவதை இஷ்டதேவதை முதலியவற்றின் மந்திரங்களை ஜபிப்பது. மூன்றாவது ஹோமம், அதாவது யக்ஞம். நாலாவதாக தேவதா பூஜனம் – கந்த, புஷ்ப, தூப, தீப, நிவேதனங்களால் ஈச்வரனை வழிபடுவது. ஐந்தாவதாகச் சொன்ன ஆதித்யம் என்றால் அதிதியை உபசரிப்பது.. அதாவது விருந்தோம்பல். கடைசியில் வைச்வ தேவம். பஞ்சமனும், நாய் முதலான ஜந்துக்களும் உள்பட ஸகலப் பிராணிகளுக்கும் பலி போடுவது வைச்வதேவம்.

இப்படிப் பண்ணுபவர்களைத்தான் ‘அறுதொழிலோர்’ என்று ரொம்பவும் பெரியவரான வள்ளுவர் சொல்கிறார். கெட்ட ராஜ்யத்தில் பிராம்மணர்கள் வேத அத்யயனம் பண்ண மாட்டார்கள், வேதத்தை மறந்து விடுவார்கள் என்கிறார் – அறு தொழிலோர் நூல் மறப்பர். பிராம்மணர்கள் வேதத்தை மறக்காமல் இருக்க வேண்டும்; அப்படிப்பட்ட நல்ல ராஜ்யம் ஏற்படவேண்டும் என்பதுதான் வள்ளுவரின் ஆசை என்று இதிலிருந்து தெரிகிறது.

தமிழ்த் தெய்வம் என்று சொல்லப்படும் ஸுப்ரமண்ய ஸ்வாமியின் ஆறுமுகங்களை வர்ணிக்கும்போது, சங்க நூலான திருமுருகாற்றுப் படையில், அவருடைய முகங்களில் ஒன்று பிராம்மணர்கள் வேதவிதி தப்பாமல் செய்யும் யக்ஞங்களை ரக்ஷிக்கவே இருக்கிறது என்கிறது2.

ஜைன-பௌத்த சம்பந்தமே முக்கியமாக உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் கூட, பல இடங்களில் வேதத்தை, வைதிக தர்மத்தை ரொம்பவும் சிலாகித்துச் சொல்லியிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் எங்கே பார்த்தாலும் வர்ணாச்ரம தர்மங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறது! ‘அந்தணர் ஓம்பலை’ விசேஷித்துச் சொல்லியிருக்கிறது; வேத சப்தம், யக்ஞம் (ஆரண ஓதையும் செந்தீ வேட்டலும்) இவற்றைக் கொண்டாடியிருக்கிறது என்று புலவர்கள் சொல்லுகிறார்கள். வைச்யனான கோவலன் அநேக வேத கர்மாநுஷ்டானங்களைப் பண்ணினதற்கு அதிலே குறிப்புகள் இருக்கின்றன என்கிறார்கள்.

தமிழ் வார்த்தைகளும், வழக்கிலுள்ள அநேக வசனங்களுமே, இந்த நாட்டின் வைதிக ஈடுபாட்டுக்குப் பெரிய சான்றுகளாக இருக்கின்றன. ‘யஜனம், யக்ஞம்’ என்பனவற்றுக்கு ‘வேட்டல், வேள்வி’ என்ற வார்த்தைகள் பிராசீனமாக இருந்து வருகின்றன. ‘சயனம்’ என்ற யக்ஞ மண்டப அமைப்புக்குப் ‘பரப்பு’ என்ற வார்த்தை பழங்காலத்திலிருந்து இருக்கிறது. இம்மாதிரி வேறு நாகரிகத்திலிருந்து வந்த விஷயங்களுக்கு, ஒரு பாஷையில் தனிப்பெயர்கள் ஆதிகாலத்திலிருந்து இருக்க முடியாது. இப்போது கிறிஸ்துவ தேசத்திலிருந்து பைபிள் வந்தால், அதற்கு நாம் ‘கிறிஸ்துவ வேதம்’ என்று பேர் கொடுத்தாலும், வேள்வி மறை என்பவை போல் இந்தப் பேர் வேரூன்றாமல் பைபிள், பைபிள் என்றேதான் சொல்கிறோம். அதுவுமில்லாமல் அதை வேதம் என்கிறபோது, வேதம் என்று ஏற்கெனவே நம்மிடமிருக்கிற மூல சாஸ்திரத்தின் பேரைக் கொண்டுதான் அதற்குப் பேர் வைத்திருக்கிறோம். பைபிளைத் தவிர வேறு வேதம் நமக்கு உண்டு. ஆனால், வேத யக்ஞத்தைத் தவிர வேறே ‘வேள்வி’ என்று ஒன்று கிடையவே கிடையாது. ‘வேள்வி’ என்று தமிழிலே பெயர் இருந்தாலும், வைதிக தர்மத்தில் இல்லாததாகத் தமிழ் நாட்டுக்கு என்று மட்டும் வேள்வி என்ற வேறு கர்மா இருக்கவில்லை. இப்படியே ‘மறை’ என்றால் வேதம்தான். தமிழிலே வேறே மறை என்று ஒன்று இருந்து, அந்தப் பெயரை வேதத்துக்கு வைக்கவில்லை.
இந்த ‘மறை’ என்ற வார்த்தை ரொம்பவும் ஆழமான, பொருத்தமான பொருள் கொண்டதாகும். வேதங்களில் அங்கங்கே மறைவாக ரக்ஷிக்கவேண்டிய பகுதிகளுக்கு ‘ரஹஸ்யம்’ என்று வேதத்திலேயே பேர் கொடுத்திருக்கிறது; உபநிஷத்துக்களில் இப்படிப்பட்ட ரஹஸ்யமான பாகங்களையே தனியாக ‘உபநிஷதம்’ என்று குறிப்பிட்டிருக்கிறது. வேதியர்கள் தங்களுக்குள்ளயே ஜாக்ரதையுடன், கொஞ்சமும் அம்பலப்படுத்தி விடாமல் மறைவாக ரக்ஷிக்க வேண்டிய சில பாகங்களை மட்டுமே வேத, உபநிஷத்துக்கள் இப்படிச் சொல்கின்றன. தமிழ் இன்னம் ஒரு படி மேலே போய் வேதம் முழுதையும் ‘மறை’ என்று சொல்லிவிட்டது! ‘மறை’ என்றால் மறைத்து ரஹஸ்யமாகக் காப்பாற்றப்பட வேண்டியது என்று அர்த்தம். வேதம் அதிலே அதிகாரம் பெற்றவர்களிடம் மட்டும் பேசிற்று. ‘இன்னின்ன பாகங்களை நீங்கள் மறைவாகப் போற்றி வாருங்கள்’ என்று அதிகாரிகளுக்குச் சொல்லிற்று. தமிழ் பாஷை வேதியர்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், ஸமஸ்த ஜன சமூகத்தையும் எடுத்துக் கொண்டு பேசும்போது, எப்படி வேதமானது பிராம்மணர்களுக்குள்ளேயே சில பாகங்களை ரஹஸ்யமாக ரக்ஷிக்க வேணடும் என்கிறதோ, அதே மாதிரி ஸகல வர்ணத்தாரையும் எடுத்துக் கொள்கிறபோது வேதம் முழுதையுமே அதில் அதிகாரமுள்ளவர்கள் அதிகாரமில்லாதவர்களிடமிருந்து ரஹஸ்யமாக ரக்ஷிக்க வேண்டும் என்று கருதியே, முழு வேதத்துக்கும் “மறை” என்று பேர் கொடுத்து விட்டது! அதை எல்லாருக்கும் என்று democratise பண்ணிவிடக்கூடாது என்பதுதான் தமிழ் ஜனங்களின் தொன்று தொட்ட அபிப்ராயம் என்பது “மறை” என்ற இந்த வார்த்தையிலிருந்தே தெரிகிறது.

இன்னொரு விதத்திலும் ‘மறை’ என்று பெயர் பொருத்தமாயிருக்கிறது. வேதத்தினால் ஏற்படும் பயன் முழுவதும் உடனே தெரிந்து விடாது. ஆத்யாத்மிகமாக அதனால் அடையப்படும் பிரயோஜனங்கள் இப்போது மறைந்திருந்து பிற்பாடுதான் வெளிப்படும். இதனால் வேதமானது ‘அதிருஷ்ட பலனை’ச் சொல்வது என்பார்கள். திருஷ்டியில் தெரியாதது தான் அதிருஷ்டம். தெரியாதது என்றால் மறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்? எதன் பலன் இப்படி மறைந்திருக்கிறதோ அதை “மறை” என்றே சொல்லி விட்டார்கள்.

நம் மதத்துக்கு வேதம் வேர். பக்தி, கோவில், தியானம், ஞானம் எல்லாவற்றுக்கும் மூலம் அது. மூலம் என்றால் வேர் என்றே அர்த்தம். கோவில், பக்தி, பூஜை முதலான மற்றதெல்லாம் வெளியே தெரிகிற அடிமரம், கிளை, பூ, காய், பழம் என்றால் வேதம் வேர். அதனால்தான் அடிமரம் முதலானவை இருக்கின்றன. வளர்கின்றன. ஆனால் வேர் இவற்றைப் போல் வெளியில் தெரியாமல் பூமிக்குள்ளேதான் ஓடிக்கொண்டு மறைவாக இருக்கிறது. இவ் விதத்திலும் மறை என்ற பெயர் மிகவும் பொருத்தமாயிருக்கிறது.

‘ஓத்து’ என்றும் வேதத்துக்கு அழகான, அர்த்த புஷ்டியுள்ள தமிழ்ப் பேர் இருக்கிறது. எது எழுதப்படாமல், வாய்மொழியாகவே, அதாவது ஓதப்பட்டே அப்யஸிக்கப் படவேண்டுமோ அதுதான் “ஓத்து”. திருக்குறளில் இந்தப் பேர் இருக்கிறது. வடார்க்காடு ஜில்லாவில் திருவோத்தூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. ஞானஸம்பந்தர் அங்கே ஆண் பனையைப் பெண் பனையாக மாற்றினார். திருஓத்து-ஊர் என்பதே திருவோத்தூர் என்பது. வேதங்கள் பரமேச்வரனைப் பூஜை பண்ணின க்ஷேத்ரமாதலால் இப்படி பேர் ஏற்பட்டது. ஸம்ஸ்கிருதத்தில் அதற்கு ‘வேதபுரி’ என்று பெயர் இருக்கிறது.

மறை, ஓத்து, என்பது போல் “ஆரணம்” என்ற பெயரும் வேதத்துக்குத் தமிழ் பாஷையில் இருக்கிறது. “ஆரணன்காண்” என்று அடிக்கடி திருமுறைகளில் வரும்.

‘வேத வாக்கோ!’ என்று கேட்பது, தர்மசாலையை ‘சத்திரம்’ என்பது, முதலாளியை ‘யஜமான்’ என்பது, ‘ஸாங்கோபாங்கம்’ என்பது – இப்படி நடுவே நடுவே நான் சொன்ன அநேக விஷயங்களும், வைதிக அநுஷ்டானங்கள் தமிழ்த் தேசத்தில் எப்படி வேரோடியிருக்கிறது என்று காட்டுகின்றன.

எழுதி வைக்காமல் குரு-சிஷ்யன் என்று தலைமுறை தத்துவமாகக் காதால் கேட்டே பாடம் பண்ணப்பட வேண்டிய வேதத்துக்கு ‘ச்ருதி’ என்று ஸம்ஸ்கிருதத்தில் பேர் இருக்கிறதென்றால், தமிழிலோ ‘எழுதாக் கிளவி’ என்று இன்னம் அழுத்தமான பேர் இருக்கிறது. ‘ச்ருதி’ என்றால் ‘கேட்கப்படுவது’. இப்படி சொல்வதாலேயே ‘எழுதப்படக்கூடாதது’ என்று ஊகித்துக் கொள்ளும்படியாக விட்டு விட்டார்கள். ஆனால் தமிழிலோ வேதத்தை எழுதக்கூடாது என்று வெளிப்படையாக தெரியும்படியாக ‘எழுதாக் கிளவி’ என்று பேர் வைத்திருக்கிறது. வேதம் அதற்குள்ள நியமப்படியே ரக்ஷிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசத்துக்கு அவ்வளவு உறுதியிருந்திருக்கிறது!

இப்போது எந்த மதக் காரியமானாலும் ‘சடங்கு’ என்றுதானே தமிழில் சொல்கிறோம்? இது நான் இனி மேலே சொல்லப் போகும் “ஷடங்கங்கள்” என்கிற வேதத்தின் ஆறு அங்கங்களை வைத்தே ஏற்பட்ட பேர்தான்.

வேதங்களுக்குப் பிராணன் மந்திரங்கள் என்றால், அந்த மந்திரங்களுக்குப் பிராணன் அக்ஷர சுத்தம். அதாவது, சரியான உச்சரிப்புத்தானே? இது மாறினால் வெளி ஆகாசத்து சலனம் (vibration), உள்ளே நாடி சலனம் இரண்டும் மாறிப் பலனே மாறிவிடும் என்று சொன்னேனல்லவா? எந்தெந்த அக்ஷரம் சரீரத்தில் எங்கே யெங்கே பிறந்து எப்படி வெளிப்படுகிறது என்பதையெல்லாம் ரொம்பவும் scientific-ஆக (விஞ்ஞான ரீதியில்) சிக்ஷா சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. வெளியிலே மநுஷ்யர் காதுபடக் கேட்கிற ‘வைகிரி’ என்ற சப்தத்துக்கு ஆதாரமாக உள்ளே ‘பரா’ என்ற சப்தம் இருக்கிறது. ‘வைகிரி’ வாயில், உதட்டில் வருவது. ‘பரா’ என்ற மூல ரூபம்தான் மூலாதாரத்தில் நாபிக்குக் கீழே இருக்கிற சப்தம். அது வைகரியாக வாய் வழியே வருவதற்கு முன் பச்யந்தி, மத்யமா என்ற இரண்டு நிலைகள் இருக்கின்றன. யோக சித்தியில் மேலே போகப் போகத்தான் படிப்படியாக பச்யந்தி, மத்யமா, பரா முதலிய சப்தங்களை கேட்க முடியும். யோகேச்வரர்களான ரிஷிகள் பரா வாக்கையே கேட்கக் கூடியவர்கள். மூலாதாரத்தில் பரா வாக்காக எந்தெந்த சப்தங்கள் இருந்தால், அவை வைகரியாக எல்லா மநுஷ்யர்களும் வெளிப்படக் கேட்கக் கூடியபடி வரும்போது, அவற்றால் தேவதாப் பிரீதியும், லோகக்ஷேமமும், ஆத்மாபிவிருத்தியும் உண்டாகுமோ, அப்படிப்பட்ட பரா வாக்குகளையே ரிஷிகள் அகண்ட ஆகாசத்திலிருந்து கிரஹித்து வேத மந்திரங்களாக நமக்குத் தந்திருக்கிறார்கள். இந்த விவரங்களைத் தொல்காப்பியத்தில் ரொம்பவும் நன்றாகப் புரிந்து கொண்டு சொல்லியிருக்கிற விஷயம் ஸமீபத்தில் தெரிய வந்தது.

பரா, பச்யந்தி என்பவற்றைப் பரை, பைசந்தி என்று பழைய தமிழ் நூல்களிலேயே சொல்லியிருப்பது முன்னமே தெரிந்தது. ஆனாலும் பஞ்சப் பிராணங்களில் உதானன் என்ற மேல்நோக்கிப் போகிற காற்றினால்தான் மூலாதாரத்தில் சப்தங்கள் உண்டாகின்றன என்பது உள்பட, மந்திரயோகம் இத்தனை நுணுக்கமாகத் தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறதென்று இப்போது தான் தெரிந்தது. வேத ஸ்வரங்களைத் தூக்கியும், தாழ்த்தியும், ஸமனாகவும், ஸ்வரபேதமில்லாமலும் சொல்வதை உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம், பிரசயம் என்று சொல்வார்கள். அந்த சூட்சுமங்களையெல்லாம்கூடத் தெரிந்து கொண்டு தொல்காப்பியத்தில் சொல்லியிருக்கிறது.

‘கோவிலில் ஏன் ஸம்ஸ்கிருத மந்திரங்களைச் சொல்ல வேண்டும்? தமிழில் சொன்னால் என்ன?’ என்ற ஒரு கேள்வி ஸமீபத்தில் வந்ததல்லவா? அப்போதுதான் நன்றாகப் படித்த தமிழ்ப் புலவர்கள் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு விளக்கிச் சொன்னார்கள். ‘மந்திரங்களைப் பொறுத்தமட்டில் எந்த பாஷை என்று பார்ப்பது அடிப்படையிலேயே தப்பு; இங்கே பாஷை, அர்த்தமெல்லாம் இரண்டாம் பக்ஷம்தான். சப்த மாத்திரத்திலேயே ஏற்படுகிற பலன்தான் மந்திரங்களுக்கு விசேஷம். வைதிகமான மந்திரங்களுக்கு இப்படி சப்தத்தினாலேயே கௌரவம், சக்தி இருக்கிறது என்று தொல்காப்பியரே சொல்லியிருக்கிறார்’ என்று அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.

அந்த விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள், இங்கே நான் இன்னொன்றையும் சொல்லி விட வேண்டும். உங்களில் ரொம்பப் பேருக்கு அது விசித்ரமாக இருக்கும். அதாவது, வேதம் ஸம்ஸ்கிருத பாஷையில் இருக்கிறது என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதுவே தப்பு. வேத பாஷைக்கு ‘ஸம்ஸ்க்ருதம்’ என்று பேர் இல்லை. அதற்குப் பேர் ‘சந்தஸ்’ என்பதுதான். சந்தஸ் என்றால் சந்தம் (meter) மட்டுமில்லை. சந்தங்களில் அமைந்த வேதங்களுக்கும் வேதபாஷைக்கும்கூட ‘சந்தஸ்’ என்றே பேர். வேதம் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் (லௌகிகமான பேச்சு, எழுத்து, காவியங்கள் ஆகியன மட்டுமின்றி தர்ம சாஸ்திரம், புராண இதிஹாஸம் உள்பட எல்லா விஷயங்களிலும்) பிரயோகமாகிற பாஷைக்குத்தான் ஸம்ஸ்கிருதம் என்று பேர். வேத பாஷை சந்தஸ். ‘வேத பாஷையில் இப்படி இருக்கிறது’ என்று சொல்லுமிடங்களில், வியாகரண சாஸ்திரம் எழுதிய பாணினி, ‘இதி சந்தஸி’ என்பார். மற்றபடி ஸம்ஸ்கிருதத்தைச் சொல்லும்போது ‘இதி லோகே’ என்பார்.

ஸம்ஸ்கிருதம் என்பது பார்த்துப் பார்த்து ஸம்ஸ்காரம் பண்ணப்பட்ட- அதாவது பழுதில்லாமல், வழுவில்லாமல் ரூபம் பண்ணப்பட்ட – பாஷை. ஆனாலும் முழுக்கவும் லோக க்ஷேமார்த்தமான சப்தங்களின் மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட ஒரு பாஷை உண்டென்றால் அது வேத பாஷையான சந்தஸ்தான். ‘கிருதம்’ என்றால் ‘செய்யப்பட்டது’ என்று அர்த்தம். ‘ஸம்ஸ்கிருதம்’ என்றால் நன்றாக செய்யப்பட்டது. அப்போது யாரோ உட்கார்ந்து கொண்டு பிரயத்தனப்பட்டு இந்த பாஷையை செய்திருக்கிறார்கள் என்று ஆகிறது. வேத பாஷை இப்படி இல்லையே! அது தானாக flash ஆனது (பளிச்சிட்டது) என்றுதானே இத்தனை நாழி கதை சொன்னேன்? அதனால் அதில் grammar (இலக்கணம்) முக்கியமில்லை. லோகோபகாரமாக இப்படி வந்த சப்தங்களை வைத்தே அதற்கு நன்றாக grammar முதலியவையும் இருப்பதாக ஸம்ஸ்காரம் செய்து, தேவஜாதியினர் ஸம்ஸ்கிருத பாஷையைப் பண்ணி அதில் பேசலானார்கள். அதனால்தான் Vedic Grammar (வேத இலக்கணம்) , Vedic Prosody (வேதத்தின் யாப்பு) என்றெல்லாம் தனியாக இருக்கின்றன. வேதத்திலிருந்து ஸம்ஸ்கிருதம் பண்ணப்பட்டது என்பதாலேயே வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை. பிற்பாடு ஸம்ஸ்கிருதம் தானாக வளர்ந்தும், ஸர்வ தேசப் பரிவர்த்தனைகளாலும் அநேக புது வார்த்தைகள் அதில் சேர்ந்த மாதிரி வேதத்தின் பாஷையில் ஏற்படவில்லை.

வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை என்பதே, இப்போது நம் தாய் பாஷைகளுக்கு இல்லாத ஸ்தானம் ஸம்ஸ்கிருதத்துக்கு ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் வேத வித்யையை ஆதரிக்காமல் கோபப்படுகிறவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்! இரண்டு கால் பிராணி, நாலு கால் பிராணி ஆகிய அனைத்துக்கும் க்ஷேமத்தை உண்டு பண்ணும் சலனங்களை உண்டாக்கக் கூடிய சப்தங்களையே உடையதான வேத பாஷையும், மற்ற அநேக மந்திர சாஸ்திர மந்திரங்களின் பாஷையும், நாம் நடைமுறையில் சொல்கிற அர்த்தத்தில் பாஷையே இல்லை. அவை ஒரு ஜாதிக்கோ, இனத்துக்கோ உரியன இல்லை. ஸமஸ்தப் பிரபஞ்சத்துக்குமான பாஷை என்று வேண்டுமானால் சொல்லலாம். சந்திரன் எல்லா தேசத்துக்கும் ஜிலுஜிலு என்ற நிலா அடிக்கிறது; சூரியன் லோகம் பூராவுக்கும் ஜீவஸத்தைத் தருகிறது. “எந்த தேசத்து சந்திரன்? எந்த தேசத்து சூரியன்? எங்களுக்கு இது வேண்டாம்” என்பார்களா?

தொல்காப்பியர், வேத சப்தங்கள் பரா என்கிற மூலத்தில் தோன்றியதால் முக்கியத்துவம் பெற்றவையாகும் என்று சொல்லி, “இப்படிப்பட்ட அக்ஷரங்களைப் பற்றி இந்த தொல்காப்பியத்தில் நான் சொல்லப் போவதில்லை. இங்கே சாதாரண மனிதர்களின் காதுக்கு எட்டும் வைகரி சப்தங்களை மட்டுந்தான் விவரிக்கப் போகிறேன். மற்றது, உள் விஷயம், மந்திராக்ஷரம், ‘அந்தணர் மறைத்தே’ என்று எழுத்ததிகாரத்தில் (102-ம் சூத்திரம்) சொல்லியிருப்பதாகவும், ஆதலால் ஆலயங்களில் மந்திர சப்தங்களை மாற்றாமல் ரக்ஷிப்பதற்குத் தொல்காப்பியமே ஆதரவாகத்தான் இருக்கிறது என்றும், அந்தத் தமிழ்ப் புலவர்கள் எடுத்துக் காட்டினார்கள் 3.

‘நம் பாஷையில் ஒன்று இருந்தால்தான் உசந்தது; வேறெந்தப் பாஷையில் இருந்தாலும் மட்டம்; அது வேண்டாம்’ என்று நினைப்பது கொஞ்சம்கூடப் பகுத்தறிவாகத் தோன்றவில்லை. உலகத்திலிருக்கிற அத்தனை புத்திசாலித்தனமும், நல்லதும் நம் பாஷையில்தான் இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால், அவரவர்களும் இப்படித்தானே தங்கள் தங்கள் தாய்ப் பாஷையைப் பற்றி நினைப்பார்கள்? அதனால் இநதப் பாஷைதான், அந்தப் பாஷைதான் என்றால் – அதில் துளிகூடப் பகுத்தறிவும் இல்லை; யதார்த்த ஞானமும் இல்லை. ஒரு பக்கத்தில் நம்பிக்கையின் மீதே அநேக விஷயங்களை ஏற்கவேண்டிய ஆஸ்திக்யத்தை பரிஹாஸம் செய்து, “பகுத்தறிவு, பகுத்தறிவு” என்கிறார்கள். இன்னொரு பக்கத்தில், இப்படி பிரத்யக்ஷத்திலேயே பகுத்தறிவு இல்லாமல் இருக்கிறது! ஒரு பக்கத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுதான் தமிழ்நாட்டின் தேசாசாரம் என்று சொல்கிறோம். இன்னொரு பக்கம், ஆதிகாலத்திலிருந்து இங்கு உறைந்து போய்விட்ட ஸநாதனமான ஸமாசாரங்களைக்கூட எப்படியாவது இல்லாமல் பண்ணிவிட்டால் தேவலை என்று நினைக்கிறோம்!

மந்திரங்களை நாம் விடுவதால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. நமக்குத்தான் நஷ்டம். மைசூரிலிருந்து காவேரி வருகிறது, வெளிதேசத்திலிருந்து உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு மருந்து வருகிறது என்றால், ‘அதெல்லாம் வேண்டாம்; உள்ளூர் ஜலம் கிடைத்தால்தான் குடிப்போம்; உள்ளூர் மருந்தானால்தான் சாப்பிடுவோம்’ என்று உயிரை விடுவார்களா? நமக்குப் பெரிய ரக்ஷையாக இருக்கிற மந்திரங்களில் பாஷையைக் கொண்டுவந்து, அந்நியம் எனறு ஒதுக்குவது இப்படித்தான். வாஸ்தவத்தில் அது அந்நியமும் இல்லை. நம்மோடு அந்நியோந்நியமாக ஆதிகாலத்திலிருந்து கரைந்ததுதான்.

ஆதி நாளிலிருந்து சென்ற நூற்றாண்டு வரை நம் தமிழ் தேசத்தில் இப்படிப்பட்ட பேத உணர்ச்சி இல்லவே இல்லை.

ரொம்பவும் தொன்மை வாய்ந்த புறநானூற்றிலேயே, நீண்ட சடாமுடியைக் கொண்ட இறைவன் எப்போது பார்த்தாலும் ஆறங்கத்துடன் கூடிய வேதத்தை ஓதிக் கொண்டிருக்கிறான் என்று இருப்பதாக ஸமீபத்தில் ஒரு கட்டுரையில் பார்த்தேன்4. இன்னொரு புறநானூற்றுப் பாட்டில் இப்படி வருகிறது – அதாவது: தமிழ்நாட்டு மூவேந்தர்களுக்கிடையில் எப்போது பார்த்தாலும் குஸ்திதான். இதற்கு மாறாக ஒரு சமயத்தில் சேர, சோழ, பாண்டிய ராஜாக்கள் மூன்று பேரும் ஒரே இடத்தில் சிநேகத்தோடு சேர்ந்திருந்தார்களாம். அந்தச் சோழ ராஜாவின் பேரே வைதிக ஸம்பந்தமானது- இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று அவன் பெயர். இப்படி மூவரும் ஒற்றுமையுடன் சேர்ந்திருப்பதைப் பார்த்தாளாம் அவ்வைப்பாட்டி. அவளுக்கு ஆனந்தம் தாங்கமுடியவில்லை. இந்த காட்சியை ரொம்பவும் உசந்த ஒன்றோடு ஒப்பிட வேண்டுமென்று நினைத்துக் கடைசியில், “பிராம்மணர் வீட்டில் கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளும் ஒன்று சேர்ந்திருக்கிற மாதிரி அல்லவா நீங்கள் மூவரும் சேர்ந்திருக்கிறீர்கள்?” என்றாளாம்5.

சங்க காலத்துக்கு அப்புறம் பார்த்தாலும், சேர சோழ, பாண்டிய, பல்லவ ராஜாக்கள், எங்கே பார்த்தாலும் பிராம்மணர்களுக்கு ‘இறையிலி’யாக (வரியில்லாததாக) நிலம் கொடுத்து ரக்ஷித்திருக்கிறார்கள். கடிகை என்றும், பாடசாலை என்றும் நிறைய வைத்து, ஏராளமாக மான்யங்கள் தந்து வேத வித்யைகளை வளர்த்திருக்கிறார்கள்.

தமிழ் மறைகளாக முறையே சைவர்களும், வைஷ்ணவர்களும் கொண்டாடுகிற தேவாரத் திருமுறைகளையும் திவ்வியப் பிரபந்தங்களையும் பார்த்தாலோ, ஸ்வாமியைப் பற்றிச் சொல்கிற அளவுக்கு வேதங்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறது.

பக்தி என்பதுதான் தேவார-திவ்யப் பிரபந்தங்களுக்கு முக்கியம், கர்மா இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும், இவற்றைப் பார்த்தால் ஈச்வர பூஜையைவிட ஒரு படி அதிகமாகவே யக்ஞ கர்மாவைத்தான் ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறது.

வேத பாஷை ஸம்ஸ்கிருதம் இல்லை என்ற மாதிரியே, இன்னொரு விசித்ரமான விஷயம் இப்போது சொல்லப் போகிறேன். அதாவது, நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வரவாதம் என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்? இது தப்பு. ஸ்வாமி இல்லை என்று சொல்லிக்கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும். அப்படிப் பல பேர் இருந்திருக்கிறார்கள். ‘இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன?’ என்றால், ஆஸ்திகம் என்றால் வேதத்திலே நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம். ஸ்வாமியிடம் நம்பிக்கை இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை; வேத சப்தங்களின் மந்திர சக்தியில் நம்பிக்கை வைத்து, யக்ஞாதி அநுஷ்டானங்களைப் பண்ணி விட்டாலும் அது ஆஸ்திகம்தான். ‘வேதங்கள் ஒன்றேயான ஈச்வரனைச் சொல்லவில்லை. பல தேவதைகளைத்தான் சொல்லியிருக்கிறது. அவர்கள் மநுஷ்யர்களைப் போன்ற ஒரு இனந்தான் – பரமாத்ம தத்வத்தின் ரூபங்கள் இல்லை. ஆனாலும் இவர்களைத் திருப்தி பண்ணினால் க்ஷேமம் உண்டாகும்’ என்று அரைகுறையாகப் புரிந்து கொண்டு, வேத கர்மாநுஷ்டானம் பண்ணுகிறவன்கூட ஆஸ்திகன்தான். ‘வேத கர்மாக்களைப் பரமேச்வர அர்ப்பணமாகச் செய்யாமல் அதன் பலனுக்காகவே பண்ணவேண்டும்’ என்கிற கொள்கையைப் பின் பற்றின கர்ம மீமாம்ஸகர்களை ஆஸ்திகர்கள் என்றே கருதுகிறோம். அவர்கள் வேதத்துக்குச் செய்து கொண்ட அர்த்தம் தப்பாகவே இருக்கட்டும்; ஆனாலும் வேதம்தான் தர்ம ப்ரமாணம் என்று நம்பியிருக்கிறார்களல்லவா? அதனால் தான் அவர்களை ஆஸ்திகர்களோடு சேர்த்தது. இதே சமயத்தில் பாசுபதம், பாஞ்சராத்ரம் முதலான சைவ, வைஷ்ணவ சம்பிரதாயங்களில் வேதத்துக்கு விருத்தமான [முரணாண] விஷயங்கள் இருப்பதாக ஒருத்தருக்குத் தோன்றினால், இந்த மதங்கள் வேதத்தின் பிராமாண்யத்தை [பிரமாணமாக இருக்கும் ஸ்தானத்தை] ஆட்சேபிப்பதாகத் தோன்றினால், அவர் இப்படிப்பட்ட சம்பிரதாயங்களைப் பின்பற்றி ஓயாமல் சிவனையோ விஷ்ணுவையோ பூஜை பண்ணுகிறவரைக் கூட நாஸ்திகர்களுடனேயே சேர்த்துவிடுவார். பழைய கால புஸ்தகங்களில் இப்படித்தான் இருக்கிறது. இப்படியே சாக்த தந்திரங்கள் ஒருவருக்கு அவைதிகமாகத் தோன்றினால், அவர் சாக்தர்களை நாஸ்திகர்களோடு சேர்த்து விடுவார்.

வைதிக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞானசம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது; ஈச்வர பக்தி இல்லாமலிருப்பதுகூட அல்ல.

ஞானஸம்பந்தமூர்த்தி சைவ சமயாசாரியர்களுள் ஒருவர். குமாரஸ்வாமி அம்சமாதலால் ஈச்வரனான ராஜாவுக்குப் பிள்ளையான யுவராஜா மாதிரி ஹோதா படைத்தவர். “ஆணை நமதே!” என்று தம்முடைய கோளறு பதிகத்தைப் பாராயணம் செய்கிறவர்களை நவக்ரஹங்கள் தொடமுடியாதென்று, தம் வாக்காலேயே கம்பீரமாக உத்தரவு போட்ட யுவராஜா! அதனால் தமிழ் தேசத்தில் அவர் வாக்குக்குச் சட்டம் மாதிரியான அதிகாரம் உண்டு. பாலியத்தில் பல ஸ்தலங்களுக்குப் போய் பல அற்புதங்களைச் செய்திருக்கிறார். மயிலாப்பூரிலும் சில அற்புதங்களைச் செய்திருக்கிறார். பட்டீச்சுரம் என்னும் ஸ்தலத்தில முத்துப் பல்லக்கு முதலியவைகளை ஈச்வரன் கொடுக்கப் பெற்றுக் கொண்டார். முத்துப் பல்லக்கில் ஏறிக்கொண்டு ஸ்தல யாத்திரை செய்து கொண்டு வந்தார். அவருடன் 5000 பேர் பஜனை செய்து கொண்டு போவார்கள். பரமேச்வர பக்தி பண்ணிக் கொண்டு, சிவ க்ஷேத்திரங்களான ஊர்களுக்குப் போய்க் கொண்டிருந்தார்.

அந்தக் காலத்தில் ஜைனமதம், பௌத்த மதம் என்னும் இரண்டும் இந்தத் தேசத்தில் இருந்தன. வேதம் தப்பு; அதன்படி நடந்தால் பிரயோஜனமில்லை என்று அந்த மதஸ்தர்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இவர்களில் பாண்டிய தேசத்தில் ஜைனர்கள் அதிகாரம் உடையவர்களாகி, அரசனையும் தங்கள் மதத்திற்கு இழுத்துக் கொண்டார்கள். மதுரையிலிருந்த பாண்டியன் சமணன் ஆனான். ஆனால், அவனுடைய பத்னியான மங்கையர்கரசியும், மந்திரி குலச்சிறையும் சிவபக்தி மிகுந்தவர்களாக இருந்தார்கள். அரசன் சமணனாய் விட்டதற்காக அவர்கள் மிகவும் வருந்தினார்கள்.

ஞானஸம்பந்த மூர்த்தியின் பிரபாவத்தை அவர்கள் கேட்டார்கள். அவர் மூலமாக அரசனை மாற்றலாம் என்று எண்ணி, அவரை மதுரைக்கு அழைத்துப் போனார்கள்.

அவர் மதுரைக்குப் போனவுடன் சமணர்கள் வாதத்துக்கு வந்தார்கள். அப்பொழுது அரசியும் மந்திரியும் இந்த சமணர்கள் இவரை என்ன செய்துவிடுவார்களோ என்று பயந்தார்கள்.

ஈச்வரனுடைய கிருபை இருந்தால், எந்த ராஜ்யம் எப்படிப் புரண்டாலும் பயம் இல்லாமல் இருக்கலாம். முடிவிலே அருள் வெல்லும். ஒருவனுக்குப் பரமாத்மாவின் பரிபூரண கடாக்ஷம் இருந்தால் எப்பொழுதும் ரக்ஷிக்கும். பீரங்கிகளும் மற்ற ஆயுதங்களும் அவன் காலில் வந்து நமஸ்காரமாக விழும். பக்தியும் பகவத் கடாக்ஷமும் குறையும்பொழுது, தேசத்துக்கும் மதத்துக்கும் குறைவு உண்டாகிறது. ஈச்வர கடாக்ஷத்தைப் பரிபூரணமாகப் பெற்றவன் ஒருவன் இருந்தாலும் போதும்; அவன் மூலமாகத் தேசம் க்ஷேமத்தை அடையும்; அப்பொழுது எது வந்தாலும் பயமில்லை.

ஆகவே, ஈச்வர கடாக்ஷத்தைப் பூர்ணமாகப் பெற்ற ஞானசம்பந்த மூர்த்தி கொஞ்சமும் பயமில்லை என்று வாதம் செய்யத் துணிந்தார். வாதம் செய்யப் போவதற்கு முன் ஸுந்தரேச்வர ஸ்வாமி ஸந்நிதானத்தை அடைந்து ஒரு பதிகத்தால் ஸ்தோத்திரம் பண்ணினார். அதில் ‘ஜைனர்களை வாதத்தில் ஜெயித்து உன்னுடைய புகழை நிலை நிறுத்த வேண்டும்’ என்று பிரார்த்தித்தார். ஒவ்வொரு பாட்டிலும் கடைசியில்,

“ஞால நின்புகழே மிக வேண்டும் தென்

ஆலாவாயி லுறையும் எம் ஆதியே”

என்று பாடினார். ஆலவாய் என்றால் மதுரை.

ஜைனர்களை ஏன் ஜயிக்க வேண்டும்? ‘அவர்கள் சிவன் கோயிலுக்கு வருவதில்லை; திருநீறிடுவதில்லை; ருத்திராக்ஷம் அணிவதில்லை; சிவபக்தியைப் பழிக்கிறார்கள்’ என்று சொல்லி, இதனாலா அவர்களை ஜயிக்க வேண்டும் என்று சம்பந்தர் சொன்னார்? ஞாலமெல்லாம் சிவன் புகழ் பரவ வேண்டுமென்று ஆசைப்பட்ட அவர், இப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர் இப்படிச் சொல்லவில்லை. பின் என்ன சொன்னார்?

வேத வேள்வியை நிந்தனை செய்துழல்

ஆதமில்லி யமணொடு தேரரை

வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே

பாதி மாதுட னாய பரமனே

ஞால நின்புக ழேமிக வேண்டும்-தென்

ஆல வாயிலு ரையுமெம் மாதியே

என்று முதல் பாட்டிலேயே சொல்கிறார்.

சமணரும், தேரரும் வேத வேள்வியை, அதாவது வேதங்களையும் யக்ஞங்களையும் நிந்திக்கிறார்கள் என்பதாலேயே அவர்களை வாதம் பண்ணி ஜயிக்க வேண்டும் என்கிறார்.

சமணர் என்றால் ஜைனர்கள். ‘ஜினர்’ என்கிற மஹாவீரரைப் பின்பற்றுவதால் ‘ஜைனர் ‘என்ற பேர் உண்டாயிற்று. ச்ரமணர் என்ற வார்த்தை தமிழில் சமணர் என்று ஆயிற்று. ‘ச்ர’ என்று ஸம்ஸ்கிருதக் கூட்டு எழுத்து ‘ச’, அல்லது வெறும் ‘அ’ வாக ஆகிவிடும். ‘ச்ராவணம்’ என்பது இப்படித் தான் ‘ஆவணி’ என்றாயிருக்கிறது. சங்கரன், சட்டி என்பதிலெல்லாம் வரும் ச (sa) சப்தம், தமிழில் சில இடங்களில் ‘அ’ ஆகிவிடும். ‘சமர்’ (யுத்தம்) என்பது ‘அமர்’ என்று வருகிறது. யுத்தகளம்தான் சமர்க்களம் என்பது. அதை ‘அமர்க்களம்’ என்கிறோம். சரீரத்தை ரொம்பவும் சிரமப்படுத்தி, கடினமான விரதங்களை அநுஷ்டிப்பதால் ஜைனர்களுக்கு ‘ச்ரமணர்’ என்று பேர். அது தமிழில் ‘சமணர்’ என்றும், ‘அமணர்’ என்றும் ஆகிறது. ஜைனர்களில் ‘ச்வேதாம்பர் என்ற பெயரில் வெள்ளை வஸ்திரம் கட்டிக் கொள்பவர்கள் உண்டு. இல்லாது போனால் திகம்பரர்களாக, நிர்வாணமாகவே இருப்பார்கள். இதனால்தான், துணி கட்டிக் கொள்ளாத எவனையுமே அமணனாகச் சொல்லி ‘அ(ம்)மணக்கட்டை’ என்கிறோம்.

தேரர் என்றால் தேராவாதிகள் எனப்படும் பௌத்தர்கள்.

இந்த இரண்டு மதஸ்தர்களையும்தான் ‘அமணொடு தேரரை’ என்று முதற் பாட்டில் சொல்கிறார். அவர்கள் வேதத்தையும் யக்ஞத்தையும் நிந்திப்பவர்கள் என்று தோஷம் சொல்லுகிறார். அது பெரிய பாபம் என்கிறார். சிவபக்தி இல்லாதவர் என்று சொல்லவில்லை. இந்தப் பதிகத்தில் மற்றொரு பாட்டில்,

மறைவ ழக்கமி லாதமா பாவிகள்

பறித லைக்கயர் பாயுடுப் பார்களை

முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே

மறியு லாங்கையின் மாமழு வாளனே

ஞால நின்புக ழேமிக வேண்டும்-தென்

ஆல வாயிலு றையுமெம் மாதியே

என்று சொல்கிறார். இதில் “மறை வழக்கமில்லாத மாபாவிகள்” என்று நன்றாகவே திட்டிச் சொல்லியிருக்கிறார். ஒழுக்கம், வழக்கம் என்று தமிழில் இரண்டைச் சொல்லுவார்கள். ஆசாரம், அனுஷ்டானம் என்று ஸம்ஸ்கிருதத்தில் சொல்லுவதே தான் இது. ஒழுக்கம் ஆசாரம்; வழக்கம் அநுஷ்டானம். மறை வழக்கமென்பது வைதிக அனுஷ்டானம். வைதிகாநுஷ்டான மில்லாதவர்கள் ஜைனர்கள். அது மஹா பாவம் என்று நினைத்ததனால்தான், ‘மாபாவிகள்’ என்றார்.

‘பறிதலைக்கையர்’ என்று அவர்களைச் சொல்லியிருக்கிறார். வித்யாரண்ய ஸ்வாமிகள் என்பவர் வேத பாஷ்யம் செய்தவர். ஸகல வித்தைகளையும் அறிந்தவர். விஜய நகர ராஜ்யத்தை ஸ்தாபித்தவர். அவர் “ஸர்வதர்சன ஸங்க்ரஹம்” என்று ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார். தர்சனம் என்பது மதத்துக்கு ஒரு பெயர். தர்சனம் – பார்ப்பது. உள்ளதை உள்ளபடி பார்ப்பது மதமாகையால் தர்சனம் என்னும் பெயர் பெற்றது. அந்தப் புஸ்தகத்தில், அந்தக் காலத்தில் இருந்த எல்லா மதங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். ஜைன மதத்தைப் பற்றி எழுதியிருக்கும் இடத்தில், ஜைனர்கள் ‘கேசோல்லுஞ்சனம்’ பண்ணிக் கொள்ளுவார்கள் என்று சொல்லியிருக்கிறார். உல்லுஞ்சனம் என்றால் பிடுங்குதல் என்று அர்த்தம். ‘பாபம் செய்வதற்குப் பலனாகக் கஷ்டத்தை அநுபவிக்க வேண்டும். கஷ்டத்தை அநுபவித்தால் பாபம் போய் விடும். தலையிலுள்ள கேசத்தை ஒவ்வொன்றாகப் பிடுங்குவதால் கஷ்டம் உண்டாகும். அதனால் பாபம் குறையும்’ என்பது ஜைனர்களுடைய அபிப்ராயம். அதனால், ஒவ்வொரு மயிராகப் பிடுங்கிக் கொள்வார்கள். அவர்கள் வஸ்திரம் உடுத்தமாட்டார்கள். “கடவஸனா:” என்று சொல்லப்பட்டிருக்கிறது. கடம் என்றால் பாய். வஸனம் என்றால் ஆடை. பாயை உடுப்பார்கள். இதைத்தான், “பறி தலைக்கையர், பாயுடுக்கையர்” என்று ஞானஸம்பந்தர் சொல்லியிருக்கிறார். அவர்கள் செய்யும் பாபம் மறை வழக்கத்துக்கு பாஹ்யர்களாக (வெளியாராக) இருப்பதும், வேத வேள்வியை நிந்தனை செய்வதும் என்று சொல்லியிருக்கிறார்.

பத்துப் பாடல்களில் முதல் ஏழெட்டில் இப்படி ஈச்வர பக்தி இல்லாதவர்கள் என்பதை அடியோடு சொல்லாமல், வேதத்தையும் கர்மாநுஷ்டானத்தையும் விட்டவர்கள் என்பதற்காகவே சமணர்களைக் கண்டித்துவிட்டுக் கடைசியில் தான் பக்தியில்லாதவர்கள் என்பதற்காகக் கண்டனம் பண்ணுகிறார். முதலிலெல்லாம்,

“வைதிகத்தின் வழியொழுகாத; அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர்6; வேட்டு வேள்வி செயும் பொருளை விளி மூட்டு சிந்தை முருட்(டு) அமண்; அழல(து) ஓம்பும் அருமறையோர் திறம் விழல(து) என்னும் அருகர்” என்று சொல்லிவிட்டு, பிறகுதான் அவர்கள் சிவபக்தியில்லாமலிருப்பதைச் சொல்லுகிறார். சைவர்கள் மேல் பட்ட காற்றைக் கூட அவர்கள் ஒதுக்குகிறார்களாம்!

நீற்று மேனியா ராயினர் மேலுற்ற

காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரை

என்று சொல்லிவிட்டு கடைசியில்தான்,

அன்று முப்புரம் செற்ற அழக! நின்

துன்று பொற்கழல் பேணா அருகரை

என்பதாக, நேராக, அவர்கள் ஈசன் எந்தையின் இணையடியை வழிபடாததைத் தோஷமாகச் சொல்கிறார். இதற்கு முந்தி வைதிக கர்மாவுக்குத்தான் பிராதான்யம் கொடுத்துச் சொல்லியிருக்கிறார்.

தேவாரத்திலும் திவ்யப் பிரபந்தத்திலும் பிராம்மணர்களைப் பற்றிச் சொல்லும் இடங்களிலெல்லாம் அவர்கள் யக்ஞ கர்மாநுஷ்டானத்தில் வல்லவர்கள் என்பதற்காகவே ரொம்பவும் பாராட்டிச் சொல்லியிருக்கிறது.

கற்(று) ஆங்கு எரி ஓம்பிக் கலியை வாராமே

செற்றார் வாழ் தில்லை.

என்பதாக, “வேதத்தைக் கற்று, அதன்படி அக்னி வளர்த்து (எரி ஓம்பி) யாகம் பண்ணுவதாலேயே கலி புருஷனை விரட்டுகிற பிராம்மணர்கள் வசிக்கிற சிதம்பரம்” என்று சம்பந்த மூர்த்தி ஸ்வாமிகள் சொல்கிறார்.

ஓமாம்புலியூர்த் தேவாரத்தில், யக்ஞங்களைப் பற்றி நிறையச் சொல்கிறார். அதில் ஓரிடத்தில்,

பரப்பைப் படுத்(து) எங்கும் பசு வேட்(டு) எரி ஓம்பும்

என்று வருகிறது.

‘பரப்பு’ என்றால் யாகவேதியை முறைப்படி அமைப்பது. சயனம் என்பது அதுதான். ‘பசு வேட்டு’ என்றதால் யக்ஞத்திலே ஜீவஹிம்ஸை தப்பில்லை என்கிற அபிப்ராயத்துக்குத் தேவாரத்தின் ஆதரவு தெரிகிறது.

ஸம்பந்தர் பிராம்மணர், அதனால் யாகாதிகளைக் கொண்டாடிச் சொல்லியிருக்கிறார் என்று நினைத்தால் சரியில்லை. அப்பிராம்மணரான அப்பரும் ஸ்வாமியை வேத வேள்வி சம்பந்தப்படுத்தியே ஸ்தோத்திரம் செய்கிறார்.

”வேதியா வேத கீதா”; “வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி ஏத்த”; “வேதத்தான் என்பர், வேள்வியுளான் என்பர்”; “வேத நாயகன், வேதியர் நாயகன்” என்பதெல்லாம் அப்பர் ஸ்வாமிகள் வாக்குதான். ஸ்வாமியே வேதாத்தியயனம் பண்ணுகிறார் என்று அவர் சொல்கிறார்: ” வேதமோதி வந்(து) இல்புகுந்தார்” “வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்.”

மேலே சொன்ன ஓமாம்புலியூரில் அப்பரும் தேவாரம் பாடியிருக்கிறார். அதிலே,

ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்(று) ஓம்பும்

உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர்…..

ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும்

உயர்புகழ் நான் மறை ஓமாம்புலியூர்

என்றெல்லாம் புகழ்ந்து, ஓமம் (ஹோமம்) நிறைந்ததே ஓமாம் புலியூர் என்று கொண்டாடுகிறார். எரி மூன்று, முத்தீ என்பவை கார்ஹபத்தியம், ஆஹவநீயம், தக்ஷிணாக்னி என்பதாகப் பிராம்மணன் வளர்க்க வேண்டிய மூன்று அக்னி குண்டங்களைச் சொல்வது. இத்தனை நுணுக்கமாக அப்பர் ஸ்வாமிகள் பிராம்மண ஆசாரங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார்.

திவ்யப் பிரபந்தத்திலும் அநேக இடங்களில் ஒரு பெருமாள் க்ஷேத்திரத்தை வர்ணிப்பதானால், யக்ஞத்தில் எழும்புகிற ஹோமப் புகையே மேகங்கள் மாதிரி ஆகாசம் முழுதையும் அடைத்துக் கொண்டிருக்கிற ஊர் என்று அதை வர்ணித்திருக்கும். இங்கேயும் ஜாதி வித்யாஸம், ஜாதி த்வேஷங்கள் இல்லாமல், அப்ராம்மணர்களான ஆழ்வார்களும் வேதங்களின் பெருமையைப் பாடியிருக்கிறார்கள். பிராம்மணரில்லாதவரான திருமங்கையாழ்வார்தான் பெருமாளையே,

சந்தோகன், பௌழியன், ஐந்தழலோம்பு

தைத்திரீயன், சாமவேதி!

என்று வேத சாகைகளைச் சொல்லி அவற்றால் துதிக்கிறார். அப்பர் ‘முத்தீ’யைச் சொன்னார் என்றால், இவர் இன்னும் சூக்ஷ்மமாக வைதிக ஆசரணைகளைத் தெரிந்து கொண்டு, பிராம்மணர்களிலேயே ரொம்பவும் விஷயம் தெரிந்தவர்கள் அந்த மூன்றோடு ஸப்யம், ஆவஸத்யம் என்ற வேறு இரண்டு அக்னிகளைச் சேர்த்துப் பஞ்சாக்னி வளர்ப்பதை ‘ஐந்தழல் ஓம்புவது’ என்கிறார். ஓமாம்புலியூரைத் தேவாரத்தில் சொன்ன மாதிரியே திருநாங்கூர், திருநறையூர் முதலான க்ஷேத்திரங்களை இவர் வேத விதி வழுவாத பிராம்மணர்களின் ஊர் என்பதற்காகவே திரும்பத் திரும்பப் போற்றிப் பாடியிருக்கிறார் 7.

தமிழில் தொல்காப்பியம் என்று மிகப் பழைய இலக்கண நூல் இருக்கிறதல்லவா? அது அகஸ்திய சிஷ்யர்கள் பன்னிரண்டு பேர்களுள் ஒருவரான திருணதூமாக்கினியால் செய்யப்பட்டது. அந்தப் புஸ்தகத்துக்கு பனம்பாரனார் செய்துள்ள சிறப்புப் பாயிரத்தில், ‘அரங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான்’என்று வருகிறது. இதற்கு நச்சினார்க்கினியர் உரை எழுதும் போது, ‘இங்கே ரிக்-யஜுஸ்-ஸாம-அதர்வ வேதங்களை நான்மறை என்று சொல்லவில்லை. அல்பாயுஸும், அநேக வியாதிகளும், ஸ்வல்பமே அறிவும் கொண்ட கலிகால ஜனங்களான ‘சின்னாட் பல்பிணிச் சிற்றறிவின’ரின் ஸெளகரியத்தை முன்னிட்டு, மஹா ஸமுத்ரமாயிருந்த வேதங்களை வியாஸர் நாலாகப் பிரிப்பதற்கும் முற்பட்ட காலத்தில் தொல்காப்பியம் உண்டாயிற்று. ஆகையால், இங்கே நான்மறை என்பவை தைத்திரியம், பௌடிகம், தலவகாரம், ஸாமம் என்ற ஆதிகால வேத பாகங்களே’ என்று எழுதியிருக்கிறார். திவ்வியப் பிரபந்தத்தில், ‘பௌழியா சந்தோகா’ என்று வருகிறது. அதில் ‘சந்தோகம்’ என்பது ஸாமவேதம். ‘பௌழியம்’ என்பதே மேலே சொன்ன ‘பௌடிகம்’. ரிக்வேத சாகைகளில் ஒன்றைச் சேர்ந்த ‘கௌஷீதகீ ப்ராஹ்மணம்’ என்ற ‘பௌஷ்யம்’ தான் பௌழியம் என்றும், பௌடிகம் என்றும் ஆகியிருக்கிறது. தலவகாரம், தைத்ரீயம், பௌழியம் என்பவை முறையே ஸாமவேதம், க்ருஷ்ண யஜுர்வேதம், ரிக் வேதம் ஆகியவற்றைச் சேர்ந்த வேத சாகைகளின் பெயர்கள். ஸாமம் மட்டுமே முழுவேதத்தின் பெயர்.

மலையாளத்தில் உள்ள நம்பூதிரிப் பிராம்மணர்கள் யாவரும் வேதாத்தியயனம் செய்வார்கள். லௌகிகப் பிரவிருத்தி உள்ளவர்கள்கூட இளமையில் வேதாத்தியயனம் பண்ணினவர்களாகத்தான் இருப்பார்கள். ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு என்று முதன் மந்திரியாக இருந்த கம்யூனிஸ்டு தலைவர்கூட, பால்யத்தில் அத்யயனம் பண்ணியவர்தான். சமீப காலம் வரை அங்கே பிரம்மச்சாரிகள் கௌபீனம், கிருஷ்ணாஜினம் [மான்தோல்], தண்டம், ஸமிதாதானம் முதலியவைகளை விடாமல் கைக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது அவர்கள்கூட மாறிக் கொண்டு வருகிறார்கள். எந்த ஜாதியினர் அதிக சிஷ்டர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தவறினால் தான் மிகவும் கீழே போய்விடுகிறார்கள். நம்பூதிரிகளில் ரிக்வேதத்தினர்கள் அதிகம். அவர்களுடைய சுவடி ஒன்றில் ரிக்வேதத்திற்கு ‘பௌழியம்’ என்றே பேர் எழுதியிருக்கிறது. அதனால் பௌழியம் என்பது ரிக்வேதத்தின் பெயர் என்று தீர்மானமாகத் தெரிய வந்தது. அதுதான் தொல்காப்பிய உரைக்காரர் சொன்ன பௌடிகம்.

சங்கர பகவத் பாதாள் அவதாரம் பண்ணின இந்த நம்பூதிரி வம்சத்தில் இன்றைக்கும் வைதிக சிரத்தை அடியோடு போய்விடாத பெருமை இருக்கிறது. பல தப்பான மதங்கள் தலைவிரித்தாடிய சமயத்தில் வேத தர்மத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்காகவே அவதாரம் செய்ய நினைத்த பரமேச்வரன், இருப்பதற்குள் எங்கே வேத அத்யயனமும் அநுஷ்டானமும் நிறைய இருக்கிறது என்று தேடிப்பார்த்தே, கேரளத்தில் காலடியில் ஒரு நம்பூதிரிக் குடும்பத்தில் அவதாரம் பண்ணினார் என்று சொல்லியிருக்கிறது. அவர் காலத்தில் மலையாள மொழியே தோன்றியிருக்கவில்லை. தமிழ் மொழிதான் அங்கும் இருந்தது. ஸுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் அத்யந்த ஸகாவான சேரமான் பெருமாள் நாயனார் காலத்தில்கூட மலையாளம், தமிழ் பாஷை பேசின சீமையாகத்தான் இருந்திருக்கிறது. அவர் தமிழில்தான் “திருக்கைலாய ஞான உலா” பாடியிருக்கிறார். அவர் மலையாளத்திலுள்ள திருவஞ்சைக்களத்திலிருந்துகொண்டு ராஜ்ய பரிபாலனம் பண்ணினவர். திவ்யப்பிரபந்தத்தில் “பெருமாள் திருமொழி” என்ற பெயரிலுள்ள பாசுரங்களைச் செய்த குலசேகர ஆழ்வாரும் திருவனந்தபுரத்திலிருந்துகொண்டு ஆட்சி செய்தவர்தான். அப்போதும் தமிழ்தான் அங்கே இருந்திருக்கிறது. இதற்கெல்லாம் முந்தி, இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தி, ஈச்வரனே சங்கரராக அவதாரம் செய்த போது கேரளம் தமிழ் தேசமாகவேதான் இருந்திருக்கிறது. பாரத நாட்டிலேயே இந்தத் தமிழ் நாட்டுப் பகுதியில்தான் வேதம் ரொம்பவும் ஜீவனோடு இருந்தது என்பதால்தான் அவர் அங்கே அவதரித்தார் என்பதிலிருந்து தமிழ் தேசத்துக்கு வேதத்தில் இருந்துள்ள விசேஷமான பற்றுதல் தெரிகிறது.

இன்றைக்கு கேரளாவில் ஜாஸ்தி வேதாத்யயனம் இருப்பதற்குக் காரணம், ஆதியில் அது தமிழ் நாடாக இருந்ததுதான். அதே மாதிரி, ஸமீபத்தில் தமிழ் நாட்டைவிட ஆந்திராவில் வேதாத்யயனம் அதிகம் இருந்தாலும்கூட, ஆதியில் ஆந்திரர்களுக்கும் சோழர்களுக்கும் கல்யாண சம்பந்தம் ஏற்பட்டபோது, அந்தத் தெலுங்கு ராஜாக்கள் தமிழ் நாட்டிலிருந்தே ஏராளமான வேத வித்துக்களை அழைத்துக் கொண்டு போய்த்தான் தங்கள் தேசத்தில் வைதிகஸ்ரீயை விருத்தி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஏதோ துர்பாக்யவசமாகத்தான் இப்போது மற்ற திராவிட மாகாணங்களைவிடத் தமிழ்நாட்டிலேயே வைதிக த்வேஷம் தலை தூக்கியிருந்தாலும், பூர்வத்தில் அந்தச் சீமைகளுக்கும் வேத வித்யை இங்கிருந்துதான் போயிருக்கிறது. ஆந்திராவில் ‘த்ராவிடலு’ என்று பேர் போட்டுக் கொள்கிற பிராம்மணர்கள், ஆதியில் தமிழ் நாட்டிலிருந்து போன குடியினர்கள்தான்.

தமிழ்நாட்டில் ஆதிகாலத்திலிருந்து இருந்து வந்திருக்கிற மதம் உள்பட, சைவம், வைஷ்ணவம், சாக்தம் முதலிய ஷண்மதங்கள்; ஸாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம் முதலிய ஸித்தாந்தங்கள்; மந்திர தந்திர ஆகமங்கள் எல்லாமே வேதத்தை ஆதாரமாகக் கொண்டவைதான்; வேதப் பிராமாண்யத்தை ஒப்புக் கொள்கிறவைதான். நவீன ஆராய்ச்சிக்காரர்கள் வேதம் வடக்கிலிருந்து வந்ததாகவும், தென்னாட்டில் வேறு மதமும் வேறு முதல் நூல்களும் இருந்தததாகவும் சொல்லி, அவர்கள் ஆரியர்கள், இவர்கள் திராவிடர்கள் என்று பெயர் கட்டிவிட்டுச் சண்டையைக் கிளப்பிவிட்டிருப்பதற்கெல்லாம் உண்மையாக ஸம்ஸ்கிருத சாஸ்திரங்களையும், தமிழின் பழ நூல்களையும் ஆராய்ந்து பார்த்தால் ஆதாரமேயில்லை. சாஸ்திரங்களை மூடநம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு ஏமாந்து போகக்கூடாது என்று இந்த நவீன ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கடைசியில், இப்போது ஏற்பட்டிருக்கிற நிலைமை என்ன என்றால், இவர்கள் தாங்களே பகுத்தறிவோடு, ஸயன்டிஃபிக்காகச் சொல்கிறோம் என்று அடித்துச் சொல்லிவிட்டதால், அநேக ஜனங்கள் இவர்கள் சொல்வதையே ஆராய்ச்சி பண்ணாமல், ‘இதுதான் சரி’ என்று வெறும் நம்பிக்கையின் மேலேயே ஏற்றுக்கொண்டு நிஜமென நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்! வேத சாஸ்திரங்களில் நம்பிக்கையின் மீதே அனுஸரிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை அறிவால் ஆராயக் கூடாதுதான். ஆனால் அவற்றில் நன்றாக பகுத்தறிவோடு ஆராய்ந்து பார்க்கிற பகுதிகளும் உண்டு. அதோடு சேர்த்துச் சேர்த்து நம் தாய் பாஷைகளில் உள்ள ஆதி நூல்களையும் அலசி அலசிப் பார்த்தாலோ, இந்த ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிற race theory (ஆரிய திராவிட இன பேதக் கொள்கை), தமிழ் மதம் வேறே என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் அடிபட்டுப் போய்விடுகிறது. இப்படியெல்லாம் நம் தேசத்தில், நல்லதற்கில்லாமல் அநேக தப்பபிப்ராயங்கள், த்வேஷம், சாஸ்திரத்தில் அவநம்பிக்கை ஆகியன ஏற்பட்டுவிட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. இதெல்லாம் போய் இங்கே ஸமஸ்த லோகங்களுக்கும், ஸமஸ்தப் பிராணிகளுக்கும் க்ஷேமத்தைத் தரக்கூடியதான வேத மரபு மறுபடி நன்றாக தழைக்கவேண்டும். இதுதான் நாம் பரமேச்வரனிடம் எப்போதும் செய்துகொள்ள வேண்டிய பிரார்த்தனை.

இப்போதே அநேக‌ வேதசாகைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. மற்றவையும் அழியும்படி விடவே கூடாது. இதைவிடப் பெரிய ட்யூட்டி, கடமை எதுவும் நமக்கில்லை. நமக்கிருக்கிற புத்தி பலம், திரவிய பலம், கூட்டுறவு சக்தி எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நாம் பண்ணவேண்டிய காரியம், தற்போது எங்கெங்கேயோ கொஞ்சம் கொஞ்சம் உயிரை வைத்துக் கொண்டிருக்கும் வேத சாகைகள் எல்லாம் அழிந்து போய்விடாதபடி, அவைகளுக்கு ஆக்ஸிஜன் கொடுத்து உயிரூட்டுவதுதான்.

அனந்தமாக பரவிக்கிடந்த வேத சாகைகள், ஏற்கெனவே நம் அலக்ஷ்யத்தால் விரல்விட்டு எண்ணுகிற அளவுக்கு வந்துவிட்டன. இதுவும் அடுத்த தலைமுறைக்கு இல்லை என்ற பெரிய பாபம் நமக்கு ஸம்பவிக்காதபடி பண்ணவேண்டும்.


1.நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம வின்றுயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாதெம் பேரூர் துயிலே. (பரிபாடல்).

2. ….ஒருமுகம்
மந்திரம் விதியின் மரபுளி வழா அது
அந்தணர் வேள்வி ஓர்க்கும் மே.

3. எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியில்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து,
அகத்தெழு வளியிசை அரில் தப நாடி
அளவிற் கோடல் அந்தணர் மறைத்தே;
அஃதிவ‌ண் நுவலாது எழுந்து புறத்திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவு நுவ‌ன்றிசினே

இதற்கு பதப்பொருள் வருமாறு:

எல்லா எழுத்தும்– (உயிர், மெய், உயிர்மெய் முத‌லிய‌) எல்லா எழுத்துக்க‌ளும் (பிறக்கும் முறையினை),

வெளிப்படக் கிளந்து– (முன்னையை நூலாசிரியர்க‌ள்) விளக்கியிருப்பதனால், சொல்லிய பள்ளி– மேற்கூறிய (த‌லை,மிட‌று, நெஞ்சு, ப‌ல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் என்னும்) எட்டு இடங்க‌ளிலும், எழுதரு வளியில்– உந்தியில் இருந்து எழுகின்ற உதானன் என்னும் காற்றினால், பிறப்பொடு– பிறக்கின்ற (ப‌ரை பைசந்தி மத்திமை என்னும்) ஓசைக‌ளின் பிறப்புடன், விடுவழி– எழுத்துக்களின் பிறப்பைச் சொல்லுமிடத்து, உறழ்ச்சி வாரத்து– (மேற்கூறிய‌ எட்டு உறுப்புக்களும் உதானன் என்னும் காற்றும்) வெவ்வேறாக‌ மாறுப‌ட்டு அமையும் த‌ன்மையினால், அகத்தெழு வளியிசை– மூலாதாரத்தில் எழுகின்ற காற்றின் ஓசையினை, அரில்தப நாடி– குற்றமற ஆராய்ந்து, அளவிற் கோடல்– எடுத்த‌ல், ப‌டுத்த‌ல், நலித‌ல், விலங்கல் (உதாத்த‌ம், அனுதாத்த‌ம், ஸ்வ‌ரித‌ம், ப்ரசயம்) என்னும் த‌ன்மை உடைய‌வனாக‌க் கொள்ளும் முறைமை, அந்தணர் மறைத்தே– அந்தணர்களின் வேதங்களில் சொல்லப்பட்ட முறைமை உடையதேயாகும்அஃது இவ‌ண் நுவலாது– (அவ்வேதங்க‌ளில் கூறிய‌ ப‌ரை, பைசந்தி, ம‌த்திமை என்னும் நிலையில் உள்ள ஓசைக‌ளும், எழுத்துக்களும் யோகிக‌ளின் உணர்வுக்கே புல‌ப்ப‌டுமாத‌லின்) அவ்விய‌ல்பினை இங்குக் கூறாமல், எழுந்து புறத்திசைக்கும் மெய்தெரி வளியிசை–நெஞ்சத் தானத்தில் இருந்து எழுந்து, வெளியே ந‌ம் காதுக‌ளில் கேட்கும்ப‌டி ஒலித்துப் பொருளை உணர்த்துகின்ற வைக‌ரி ஓசையினது(எழுத்தினது), அளவு நுவ‌ன்றிசினே– த‌ன்மை அல்லது மாத்திரையினை ம‌ட்டுமே (இவ்விலக்கண நூலுக்கு வேண்டிய‌ அளவு) கூறுகின்றேன்.இந்நூற்பாவின் அமைப்பினால் மூலாதாரத்தினின்றும், உந்திக் க‌மல‌த்தினின்றும் ஓசை எழுகிறது என்றும், அவ்வோசையை எழுப்பும் காற்று உதானன் என்று பெய‌ர் பெறும் என்ப‌தும், அங்கனம் தோன்றும் ஓசையானது ப‌ரை, பைசந்தி, ம‌த்திமை, வைகரி என்று நால்வ‌கைப்ப‌டும் என்ப‌தும், முதல் மூன்றும் யோகிக‌ளின் உணர்வுக்கே புல‌னாகும் என்ப‌தும், வைக‌ரி என்ப‌து ஒன்று ம‌ட்டுமே ந‌ம் செவிக‌ளுக்குப் புலனாகின்ற எழுத்தொலியாக‌ வெளிப்ப‌டும் என்ப‌தும்,அங்க‌ன‌ம் வெளிப்ப‌டுங்கால் அவ்வோசையானது உதாத்த‌ம், அனுதாத்த‌ம், ஸ்வ‌ரித‌ம், ப்ரசயம் என்னும் (எடுத்த‌ல், ப‌டுத்த‌ல், நலித‌ல், விலங்கல் என்னும்)நிலைக‌ளில் அமையும் என்ப‌தும், இவ்விவரங்க‌ள் எல்லாம் வேத‌ங்களில் விரிவாகக் கூறப்ப‌ட்டுள்ளன என்ப‌தும்,அவ‌ற்றையெல்லாம் இங்கு எழுத்ததிகாரத்தில் கூற முற்படாமல், தாம் தொடங்குகின்ற எழுத்ததிகாரத்திற்கு இன்றிய‌மையாம‌ல் வேண்டப்ப‌டுகின்ற சில குறிப்புக்க‌ளை ம‌ட்டுமே தொல்காப்பிய‌ர் கூறியுள்ளார் என்ப‌தும் அறிய‌க் கிடைக்கின்றன. இதனால் வேதங்க‌ளின் தொன்மையும், அவற்றுள் விளக்கப்ப‌ட்ட ஓசைக‌ளின் நுட்ப‌ங்க‌ளும், பண்டைக் காலத்திலேயே த‌மிழகத்துச் சான்றோர்களால் அறிய‌ப்பெற்றிருந்தன, அறிந்து தழுவிக் கொள்ளப்பெற்றன என்று தெரிகின்றது.(ப‌தப்பொருளும் க‌ருத்துரையும் உத‌விய‌வ‌ர் பேராசிரிய‌ர் ஸ்ரீ ந.ரா. முருகவேள் அவர்கள்.)

4. நன்றாய்ந்த நீள நிமிர்சடை முது முதல்வன்

வாய் போகாது ஒன்று புரிந்த ஈரிரண்டின்ஆறுணர்ந்த ஒரு முதநூல்     (புறம்-166)

5. ஒன்று புரிந்து அடங்கிய இரு பிறப்பாளர்

முத்தீப் புரையக் காண்தக இருந்த‌கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர் (புறம்-367)

6.புத்தர் வரிசையில் உச்சியில் இருக்கிறவர் அர்ஹத். அவரை வழிபடுகிற பெளத்தர்களை அருகர் என்பார்கள். ஜைனர்களின் தெய்வத்துக்கும் அர்ஹத் என்றே பெயர். ஆதலால் சமணருக்கும் இப் பெயர் பொருந்தும்.

7. உண்மை மிகு மறையோடு நற்கலைகள் நிறை பொறைகள்

உதவுக் கொடை என்றிவற்றின் ஒழிவில்லா பெரிய

வண்மைமிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்

*     *    *

நாத்தொழில் மறைவல்லார்கள் நயந்(து) அறம் பயந்த வண்கை

தீத்தொழில் பயிலு நாங்கூர்

*     *    *

சொல்ஆர் சுருதிமுறை ஓதிச் சோமுச் செய்யும் தொழிலினோர்

நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் (சோமு–சோமயாகம்)

*     *    *

வேத நான்(கு) ஐந்து வேள்வி அங்கம் ஆ(று) இசை ஏழ்

நடையாவல்ல அந்தணர் வாழ் நறையூர்

(ஐந்து வேள்வி — பஞ்ச மஹா யக்ஞம்; அங்கம் ஆறு — வேதத்தின் ஆறு அங்கங்களான ஷடங்கங்கள்)

“நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையால் நான்மறை என்றார். அவை தைத்திரியமும் பெளடிகமும் தலவகாரமும் சாமவேதமுமாம். இனி இருக்கும் (ரிக்கும்) யசுவும் (யஜுஸும்) சாமமும் அதர்வணமும் என்பாரும் உளர். அது பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேதவியாதர் (வியாஸர்) சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தனராதலின்.”

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்ன ?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பிராம்மணரல்லாதார் விஷயம்
Next