இலக்கண நூல்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இங்கே பரமேச்வரனைக் கவி “சந்த்ராவதம்ஸன்” என்கிறார். அப்படியென்றால் சந்திரனைத் தலையணியாக, சிரோபூஷனமாகக் கொண்டவன் என்று அர்த்தம். “சந்திரசேகரன்”, “இந்துசேகரன்” என்றாலும் இதே பொருள்தான். வியாகரண சாஸ்திரங்களில் இரண்டுக்கு ஆச்சரியமாக இந்த ‘இந்துசேகர’ப் பெயர் இருக்கிறது. ஒன்று, ‘சப்தேந்து சேகரம்’ வியாகரணத்தில் இந்த நூல் வரைக்கும் ஒருத்தன் படித்து விட்டால், “சேகராந்தம் படித்தவன்”என்று பாராட்டிச் சொல்வார்கள். ‘இன்னொரு புஸ்தகம், “பரிபாஷேந்து சேகரம்” என்பது.

சிக்ஷா சாஸ்திர நூல்கள் சுமார் முப்பது இருப்பது போல், வியாகரணத்திலும் ஏராளமான கிரந்தங்கள் இருக்கின்றன. அவற்றில் பாணினி ஸூத்ரம், அதற்குப் பதஞ்ஜலி பாஷ்யம், வரருசி வார்த்திகம் ஆகிய மூன்றும் தலைமை ஸ்தானத்தில் இருக்கின்றன.

வரருசியும் காத்யாயனரும் ஒருத்தரே என்ற அபிப்ராயத்தில் இங்கே நான் சொல்லியிருக்கிறேன். அவர்கள் வெவ்வேறு பேர் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

விக்ரமாதித்தன் ஸபையிலிருந்த ‘நவரத்ன’ங்களில் ஒருத்தர் வரருசி. இலக்கண புஸ்தகங்கள் எழுதினவர். வார்த்திகம் பண்ணின காத்யாயனர் இவரா இல்லையா என்பதில் அபிப்ராய பேதம் இருக்கிறது.

பர்த்ருஹரியின் “வாக்யபாதீயம்” என்ற நூலும் முக்யமான வியாகரண புஸ்தகங்களில் ஒன்றாகும்.

‘நவ வ்யாகரணம்’ என்பதாக ஸம்ஸ்கிருதத்தில் ஒன்பது இலக்கண நூல்கள் குறிப்பிடப் படுகின்றன. ஆஞ்ஜநேய ஸ்வாமி ஸூரிய பகவானிடமிருந்து இவற்றைக் கற்றுக் கொண்டார். பிற்பாடு ஸ்ரீராமரே ஆஞ்சநேயரை “நவவ்யாகரண வேத்தா” என்று புகழ்கிறார்.

நவ வியாகரணங்களில் ஒன்று “ஐந்திரம்” – இந்திரனால் செய்யப்பட்டதால் இப்படிப் பெயர். தமிழ் இலக்கணத்துக்கு மூலமான “தொல்காப்பியம்” இந்த ஐந்திரத்தை மூலமாகக் கொண்டு அந்த வழியிலேயே செய்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ஸ¨சனாத் ஸ¨த்ரம் |
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வடமொழி வியாகரணமும் தமிழிலக்கணமும்
Next