சுதேச-விதேச மொழிகளும், லிபிகளும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இந்திய பாஷைகள் எல்லாவற்றுக்குமே ஒரு விசேஷம். அவற்றில் எழுதியிருப்பவை ஸ்பஷ்டமான சப்தங்களாகச் சொல்லப்பட வேண்டியவை. World என்று எழுதினாலும் சொல்லும்போது, முதலில் வருவதே ‘வே’யும் இல்லாமல், ‘வோ’வும் இல்லாமல் ஒரு அஸ்பஷ்ட (ஸ்பஷ்டமில்லாத) சப்தம்; அப்புறம் ‘r’ என்பதையும் அஸ்பஷ்டமாக மழுப்பிக் கொண்டு போக வேண்டியிருக்கிறது. இப்படி அநேக அஸ்பஷ்ட சப்தங்கள் அந்நிய பாஷைகளில் இருக்கின்றன. இவற்றை ‘அவ்யக்த சப்தம்’ என்பார்கள். நம் தேச மொழிகள் யாவும் ஸ்பஷ்டமான வ்யக்த சப்தங்களே கொண்டவை.

எழுத்துக்கும் உச்சரிப்புக்கும் பொதுவான ஒரே விதி இல்லாமல் பல விதமாக குழப்புகிறதும் அந்நிய பாஷைகளில்தான் மிகவும் அதிகமாகக் காண்கிறது. ஒரே ‘க’ சப்தத்துக்கு C,K,Q, என்று மூன்று எழுத்து இருப்பது போல் இந்திய பாஷைகளில் இராது. ‘ஃப’ சப்தம் ஒன்றுக்கே இங்கிலீஷில் f(fairy), ph(philosophy), gh(rough) என்று மூன்று விதமான ஸ்பெல்லிங் இருக்கிறது. C என்ற எழுத்தை ‘ஸி’ என்ற ஸகாரமாகச் சொன்னாலும், அந்த எழுத்தில் ஆரம்பிக்கிற பெரும்பாலான வார்த்தைகள் ‘க’ காரமாகவே இருக்கின்றன. ஸெல், ஸெலுலாய்ட், ஸினிமா மாதிரி ஏதோ சிலதில்தான் c-க்கு ஸகார சப்தம் இருக்கிறது. இன்னொரு பக்கத்திலோ அந்நிய பாஷைகளில் ஒரு எழுத்துக்கே வெவ்வேறு சப்தமும் இருக்கிறது. இன்னொரு பக்கத்திலோ அந்நிய பாஷைகளில் ஒரு எழுத்துக்கே வெவ்வேறு சப்தமும் இருக்கிறது. மேலே சொன்னபடி c என்பது க, ஸ இரண்டுக்கும் வருகிறது. Fat என்கிறபோது a என்பது ‘ஏ’ மாதிரி தொனிக்கிறது. Fast என்கிற போது அதே a என்பது ‘ஆ’ வாகத் தொனிக்கிறது. சில ஸ்பெல்லிங்குகளுக்கும் உச்சரிப்புக்கும் சம்பந்தமே இல்லை. Station, Nation முதலான வார்த்தைகளில் tion என்று எழுதிவிட்டு, அதை ஸம்பந்தமேயில்லாமல் ‘ஷன்’ என்று படிக்க வேண்டியிருக்கிறது.

ரோமன் ஆல்ஃபபெட் என்கிற இங்கிலீஷ் முதலான பாஷைகளின் லிபியில் இருபத்தியாறே எழுத்துக்கள் இருப்பதால் முதலில் கற்றுக் கொள்ள ஸுலபமாக இருக்கிறது. நம் தேச பாஷா லிபிகளில் நிறைய எழுத்து இருப்பதால் முதலில் சிரமப்பட்டே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இப்படி ஒரு வருஷம் கஷ்டப்பட்டு பால சிக்ஷை வாசித்து விட்டால், பிற்பாடு அந்த பாஷையிலுள்ள ஸகல புஸ்தகங்களையும் கிறுகிறுவென்று வாசித்து விடலாம். இங்கிலீஷிலோ எம்.ஏ.பாஸ் பண்ணின பிறகு கூட, அநேக வார்த்தைகளின் உச்சரிப்புக்கு டிக்ஷனரியில் போட்டிருக்கிற உச்சரிப்பு விளக்கத்தை பார்க்க வேண்டியிருக்கிறது.

இப்படி இந்திய பாஷைகளுக்கு இருக்கிற சிறப்பு இந்திய பாஷைகளுக்குள்ளும் ஸம்ஸ்கிருதத்துக்கு பரிபூரணமாக இருக்கிறது. இதனால் நம் தேசத்தை விட அந்நியமானது மட்டமானது என்றோ, நம் தேசத்திலேயே ஸம்ஸ்கிருதத்தை விட மற்றப் பாஷைகள் தாழ்த்தி என்றோ நான் சொல்லவில்லை. சில fact -களை (நடைமுறை உண்மைகளை) சொன்னேன். அவ்வளவுதான்!

சப்த ப்ரம்மாத்மகமாக இருக்கப்பட்ட பரமாத்மாவின் பரிபூர்ண ஸ்வரூபமாக ஸம்ஸ்கிருதம் இருக்கிறது என்று தெரிவதைச் சொன்னேன்.

எல்லா பாஷையும் எல்லாருக்கும் பொதுதான் என்ற மனப்பான்மை வரவேண்டும். அப்போது யாரையும் யாரும் மட்டம் தட்டத் தோன்றாது. பரஸ்பரம் அபிப்ராயப் பரிவர்த்தனைக்காக ஏற்பட்டதே பாஷை என்ற அடிப்படையான உண்மையை மறந்து விட்டதால்தான், இப்போது தாய் பாஷை ஒன்றிடமே வெறி மாதிரியான பற்றுதல், பிறபாஷைகளிடம் துவேஷம் எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. மற்ற எல்லா விஷயங்களிலும் பரந்த மனப்பான்மை, இன்டர்நேஷனல் அவுட்லுக் (ஸர்வ தேச நோக்கு) என்று சொல்லி விட்டு இந்த பாஷை விஷயத்தில் மட்டும் இத்தனை குறுகின புத்தி வந்துவிட்டதைப் பார்க்கிறபோது பரிதாபமாக இருக்கிறது.

ஸம்ஸ்கிருத சப்தங்களை சிக்ஷா சாஸ்திரம் எப்படி ஸ்பஷ்டமாக நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறது என்பதில் ஆரம்பித்து, பெரிய பாரதமாக மொழி ஆராய்ச்சி சண்டைகளில் கொண்டு விட்டுவிட்டது!

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is பல மொழிகளின் லிபிகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  சில சிறிய வித்யாஸங்கள்
Next