மனமென்ற த்வைதம் மறைவதே அத்வைதம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அப்படிச் சிந்தனை என்பதே, அதாவது மனஸ் என்பதே இல்லாமல் சும்மாயிருப்பதற்குத்தான் அத்வைதம், அத்வைதம் என்று பேர். த்வைதமாக, அதாவது இரண்டாவதாக ஒரு விஷயம் இருப்பதாக எப்படித் தெரிகிறது? மனஸு இருப்பதால்தான் தெரிகிறது. தூக்கத்தில் இன்னொன்று தெரிகிறதா? இல்லை. மனஸ் கொஞ்சம் அப்போது அடங்கிக் கிடப்பதால்தான் இரண்டாவது ஆஸாமி யாரும் தெரியவில்லை. அதனால் நிம்மதியாக விச்ராந்தியாக இருக்கிறது. இரண்டாவது ஆஸாமி தெரிந்துவிட்டால் போதும், சாந்தி போச்சு! ஒன்று, அந்த ஆஸாமியிடம் ப்ரியம் என்று மனஸ் அடித்துக்கொண்டு எதையாவது செய்யத் தோன்றுகிறது. ஆலோசித்துப் பார்த்தால் அதுவும் உண்மையில் அந்த ஆஸாமியிடம் ப்ரியமில்லை; நம்மிடமேதான் ப்ரியம்; நமக்கு ப்ரியத்தை அந்த ஆஸாமி கொடுக்கக்கூடுமென்பதாலேயே அவனிடம் ப்ரியம்; அவனிடம் ப்ரியமாயிருப்பது நமக்கு ஒரு ஸந்தோஷத்தைத் தருகிறது என்பதற்காகவே ப்ரியம் என்று தெரிகிறது. ஆனால் இரண்டாவது ஆஸாமியிடம் ப்ரியம் என்பது எப்போதாவதுதான். நம்மைச் சேர்ந்தவர்கள், அல்லது இனிமேல் நமக்கு ஸ்வாதீனமாகக் கூடியவர்கள் என்பவர்களிடம்தான் ப்ரியம். பொதுவாக இரண்டாவது ஆஸாமியிடம் அஸூயை, போட்டி இப்படித்தான் உண்டாகிறது. ப்ரியத்திலே படுகிற சஞ்சலங்கள், செய்கிற கார்யங்கள் ஆகியவற்றில் ஏதோ ஒரு ஸந்தோஷ நிழலாவது அடிக்கிறதென்றால், போட்டியிலும் அஸூயையிலும் படுவதெல்லாமோ ஒரே கோபமும், த்வேஷமும், அழுகையுமாகி எதிராளியைத் தாக்குவதைவிட நம்மையே அதிகம் தாக்குகின்றன. நம்மை நாமே வதைத்துக் கொள்கிறோம்.

இரண்டாவது ஸமாசாரம் (நமக்கு வேறாக இன்னொன்று) இருப்பதன் வினைதான் இவ்வளவு கஷ்டங்களும்.

இரண்டாவது இல்லாமல் பண்ணிவிட்டால், நமக்கு வேறேயாக எதுவுமே இல்லையென்று ஆக்கிவிட்டால், எதிடம் ப்ரியமோ, த்வேஷமோ வரும்?

அப்படியென்றால் நம்மைத் தவிர எதுவுமே இல்லை என்று லோகம் முழுதையும் ஹதம் பண்ணுவதா? அப்படிப் பண்ண யாருக்கு சக்தி இருக்க முடியும்? அப்படியே இருந்து பண்ணிவிட்டாலும் லோகத்திலே ஜீவர்களை வேணுமானால் ஹதம் செய்யலாமே தவிர லோகத்தை-ஜடமாக உலகமென்று இருப்பதை-எப்படி அழிக்க முடியும்? அதையும் அழித்து விட்டால் நாம் எங்கே இருப்பது?

த்வைதமான ஜீவ ஸமூஹத்தால் மட்டுந்தான் அசாந்தி என்றில்லை. ஜட ப்ரக்ருதியும் நமக்கு வேறேயாக இருந்து கொண்டு பலவித உணர்ச்சிகளை ஏற்படுத்திக்கொண்டு அந்த மோதல்களில் நம்மை அவஸ்தைக் படுத்திக் கொண்டுதானிக்கும். ஒரு மாம்பழத்தைப் பார்த்தால் தின்னணும் என்று ஆசை, ஒரு முள்ளுச் செடியைப் பார்த்தால் குத்திக்கொண்டு விடப்போகிறாமே என்று கவலை-இன்னம் பெரிசாக இடி, மின்னல், பூகம்பம் என்று பயம், ‘குளிருகிறதே! கொளுத்துகிறதே!’ என்று ஹிம்ஸைப்படுவது-இப்படியெல்லாம் இருந்துகொண்டே தானிருக்கும். இதுகளை எப்படி இல்லாமல் பண்ணிக் கொள்வது?

அப்படியே (ஜட) உலகத்தையும் எப்படியோ ஒரு விதத்தில் இல்லாமல் பண்ணிவிட்டு, நமக்கு வேறேயாக யாருமே இல்லை. எதுவுமே இல்லை என்று நாம் மட்டும் உட்கார முடிந்தாலும் அப்போதும் நமக்கே பசி, தாஹம் முதலானது வந்து அவஸ்தை கொடுக்கத்தானே செய்யும்? எதையாவது நினைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதில் காம நினைப்பு, க்ரோத நினைப்பு, பய நினைப்பு, துக்க நினைப்பு இதெல்லாம் வரத்தானே செய்யும்? தனக்குள்ளிருந்தே தானே ஒவ்வொரு ஜீவராசிக்கும் காமம் வருகிறது? வேறே யாரும் எதுவும் இல்லாமல் தனியாயிருந்தாலும் ஒருத்தனுக்கு அப்படி வந்து உபத்ரவப்படுத்தினால் என்ன செய்வது? ‘முட்டாள் மாதிரி இப்படி நெனைச்சோமே?’ என்று நம்மிடமே நாம் கோபப்பட்டுக்கொள்வது, நம்மைப் பற்றியே அவமானப்பட்டுக் கொள்வது, இதெல்லாமும் நாம் மட்டும் ஏகாங்கியாக இருந்தாலும் ஏற்படத்தானே செய்யும்?

அப்படியானால் இன்னொன்று இல்லாமல் — அதாவது, அத்வைதமாக — செய்து கொள்வது என்றால் என்ன, எப்படி?

[பதிலாக, குரலைக் கனிவுடன் மாற்றிக்கொண்டு தொடர்கிறார்] அப்பா! ‘இன்னொன்று இல்லாமல்’ என்றால், ‘நமக்கு இரண்டாவதாக ஒரு வஸ்து இல்லாமல்’ என்றால், அந்த இன்னொரு வஸ்து என்பது ஜீவ, ஜட லோகத்தில் உள்ள எதையும் குறிப்பதில்லை. ‘பின்னே என்ன?’ என்றால் நம்முடைய மனஸேதானப்பா! ஜீவலோகம் ஜடலோகம் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் நீ பெறுகிற கஷ்டம், ஸுகம், பயம், அழுகை, சிரிப்பு ஆகிய எல்லாம் உனக்கு மனஸ் என்று ஒன்று உள்ளவரைக்கும் தானப்பா! உனக்கு மயக்கம் கொடுத்து மனஸ் வேலையே செய்யாமல் பண்ணி ஆபரேஷன் பண்ணினார்களே, கத்தியைப் போட்டு உன்னை அப்போது அறுத்தார்களே — ஆனாலும் கொஞ்சமாவது பயம், வலி, அழுகை இருந்ததா? தினமும் நீ தூங்குகிறாயே. மனஸின் வேலையில்லாமல் நீ இருக்கிற அப்போதும் உனக்கு வேறேயாக லக்ஷம் கோடி இரண்டாவது வஸ்துக்கள் ஜீவ, ஜட லோகங்களில் இருந்துகொண்டுதானே இருந்தன? ஆனாலும் நீ கொஞ்சமாவது அவற்றால் பாதிக்கப்பட்டாயா? உன் உடம்புக்கே வலி, உன் உடம்புக்கே பசி என்கிறதுகூட மனஸு வேலை செய்யும்போதுதானே தெரிகிறது? துக்கம் ஸுகம் எல்லாமே மனஸ் இருக்கிறபோதுதானே?

அதனாலே, அப்பா, இரண்டாவது ஆஸாமி என்பது உன் மனஸேதான். தூக்கத்திலேயும் மயக்கத்திலேயும் உன் மனஸ் இல்லாமல் போயிருந்தாலும் உயிரோடுதானே நீ இருந்தாய்? அந்த உயிரைத்தான் ஆத்மா என்பது. அதுதான் நிஜமான நீ. அதற்கு இரண்டாவது ஆஸாமியாக மனஸ் என்று ஒன்றை மாயை கொண்டுவந்து விட்டிருக்கிறது. ஞானத்தினாலே அந்த இரண்டாவது ஆஸாமியை இல்லாமல் பண்ணிவிடு. அப்போது உனக்கு வேறேயாக, இரண்டாவதாக எதுவுமில்லை. அத்வைதம் என்ற அநுபவம் ஸித்திக்கும். இரண்டாவது இல்லாதபோது கார்யமில்லை, பேச்சில்லை, சுற்றுவதில்லை, அலைச்சலே இல்லை. அதாவது உபத்ரவத்தை உண்டாக்கும் எதுவுமில்லை. மனஸில்லாததால் எண்ணமே இல்லாமல் போய் விடுகிறதென்றதற்கப்புறம், மற்றதைப் பற்றிச் சொல்வானேன்? ‘மனமாயை’ போன அப்புறம் நாலா திசையிலும் போட்டு இழுக்கிற லோகாநுபவமே போய்விடும். அதாவது உன்னைப் பொறுத்தமட்டில் லோகமே போய்விடும். ஸம்ஸாரம் என்பதே போய்விடும். நீ தனியாக உட்கார்ந்திருந்தால்கூட உனக்குள்ளே காம, க்ரோதாதி எண்ணம் எதுவும் தோன்றாமல் — இதெல்லாமும் மனஸ் என்கிறதை வைத்து, அதிலிருந்து தோன்றுபவை தானே? மனஸே இல்லாததால் இவையும் தோன்றாமல் — அப்படியே சாந்த நிலையில் சாச்வதமாயிருக்கலாம். நல்லது, கெட்டது என்று பல பேர்களை வைத்துக்கொண்டு உன் சாந்தியைக் குலைக்க வருவதான இரண்டாவது ஸமாசாரம் எதுவுமில்லாமல் நீ பாட்டுக்கு ஸெளக்யமாயிருக்கலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is செயலற்றவரின் கருணையுள்ளம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  சூன்யமில்லை;ஸச்சிதானந்த பூர்ணமே
Next