ஜீவாத்ம-பரமாத்ம பேதமும் இல்லை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அங்கே இரண்டாவது வஸ்து இல்லை என்னும்போது முக்யமாக ஒன்றைச் சொல்லவேண்டும். ‘பூலோகம், ஸ்வர்க்க லோகம் முதலியவற்றைவிட உசந்ததாக, ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுவிப்பதாக, ஸ்வாமி இருக்கும் மோக்ஷலோகம் என்று ஒன்று இருக்கிறது. வைகுண்டம், கைலாஸம் என்பதெல்லாம் அதுதான். அங்கே அவர் தன்கிட்டே ஒரு ஜீவனைக் கொண்டுபோய் சாச்வதமாக வைத்துக் கொள்வதுதான் மோக்ஷம்’ என்றே பல ஸித்தாந்தங்கள் சொல்கின்றன. அதாவது மோக்ஷத்திலேயும் ஸ்வாமி, நாம் என்று இரண்டு உண்டு; ஸ்வாமிக்கு வேறேயாக நாம் இருக்கிறோம். நமக்கு வேறேயாக ஸ்வாமி இருக்கிறார் என்பது அவற்றின் முடிவு. பக்தியாக, ‘தியாலாஜிக’லாக “ஸ்வாமி” என்று சொல்வதைத் தத்வ சாஸ்த்ரமாக, ‘ஃபிலாஸஃபி’யாகச் சொல்லும்போது “பரமாத்மா” என்று சொல்லி “மோக்ஷம் உள்பட எப்போதுமே பரமாத்மாவும் ஜீவாத்மாவும் (ஜீவாத்மாதான் நாம்) வேறுதான். இவை இரண்டு ஆஸாமிகள்தான் — த்வைதம்தான்” என்பார்கள். ஸகல ஜீவ-ஜகத்துக்களுக்கும் காரண வஸ்துவான ‘ப்ரம்மம்’ என்பதுதான் இந்தப் பரமாத்மா. அத்தனையையும் ஆட்டிப்படைத்து ஆள்வதால் ‘ஈச்வரன்’ என்பதும் அதைத்தான்.

ஆனால் அத்வைதப்படி: ஜீவனுக்கு மாயையினால் ஏற்பட்ட மனஸ் என்பது உள்ளபோதுதான் எல்லாவிதமான உலக அநுபவமும் உணர்ச்சிச் சஞ்சலங்களும் உண்டாகிறது என்றும், அவன் மனஸைக் கழட்டிப் போட்டுவிட்டு மாயைக்கு அந்தண்டை போய்விட்டால் ஒரே சாச்வத சாந்தியாய்ப் போய்விடுகிறானென்றும் பார்த்தோமல்லவா? இதே மாதிரி, இவனுக்கு அநுபவத்தைக் கொடுக்கிற உலகம், இவனுடைய மனஸ், மற்ற எல்லாருடைய மனஸுகள்-ஆகிய இவை அத்தனையையும்கூட ப்ரம்மம் மாயையால்தான் உண்டாக்கியிருக்கிறது. ஜீவனுக்கு மனஸு மாதிரிதான் ப்ரம்மத்துக்கு மாயை. மனஸு நம்முடைய நிஜமான நான் இல்லை என்கிற மாதிரியே ப்ரஹ்மத்துக்கும் மாயையோடு கூடியிருக்கும் நிலை ஸ்வ-ஸ்வரூபமில்லை. ப்ரஹ்மம் ஈச்வரனாக இருந்துகொண்டு, தான் ஆட்டிப்படைக்கிற பரமாத்மா என்றும் மற்றவர்கள் ஆட்டிப்படைக்கப்படுகிற ஜீவாத்மா என்றும் பண்ணுகிறதெல்லாம் தன் நிஜ ஸ்வரூபத்திலிருந்து கொண்டு பண்ணுவதல்ல. மனஸைக் கழட்டி போட்டுவிட்டால் நாம் சாந்திமயமாக, ஒரு கார்யமுமில்லாத ஆத்மாவாக இருக்கிற மாதிரியே ப்ரஹ்மமும் மாயையக் கழட்டிப் போட்டுவிட்டுத் தானாக இருக்கிற நிலையில் உள்ளது. ‘இது மாதிரி அது’ என்பதைவிட, ‘அது மாதிரி இது’ என்பதுதான் ஸரி. ஏனென்றால் அது மாயையைக் கைக்கொண்ட பிறகு தான் ஜீவனுடைய தோற்றம், இவனுடைய மனஸ் எல்லாம் உண்டாயிருக்கின்றன. இன்னம் இப்படி ஆலோசித்துப் பார்த்துக்கொண்டே போனால் ‘அது மாதிரி இது’, ‘இது மாதிரி அது’ என்று ‘மாதிரி’ போடுவதெல்லாமே தப்புதான். ‘மாதிரி’, ‘கீதிரி’ எதுவும் இல்லை. அதுவேதான் இது. ப்ரஹ்மமேதான் ஜீவன். மாயையில்லாத நிஜ நிலையில் ப்ரஹ்மமும் பரம சாந்தி, மனஸில்லாத நிஜ நிலையில் ஜீவனும் பரம சாந்தி என்றால் இரண்டும் ஒன்றேதானே? ப்ரஹ்மம் மாயையைப் போட்டுக்கொண்டு ஜகத்தைச் செய்து, அந்த ஜகத்திலே மனஸைப் போட்டுக்கொண்டிருப்பவனான ஜீவன் என்று ஒருவனைச் செய்திருக்கிறது என்றால் ப்ரஹ்மமே ஜகத்தாகவும், ஜீவனாகவும் தோன்றுகிறது என்றே அர்த்தம். ஜீவாத்மா என்கிறவனிடமிருந்து மனஸை எடுத்துப் போட்டுவிட்டால் ப்ரஹ்மமாகவே ஆகிவிடுகிறான். ஜீவாத்மா, பரமாத்மா என்று இரண்டு ஆத்மா இல்லை. ஒரே ஆத்மாதான். அதற்கே ப்ரஹ்மமென்று பேர்.

ஸ்வாமி என்று ஒருவர் வைகுண்ட, கைலாஸாதி லோகங்களில் நம்மைக் கொண்டுபோய் வைத்துக் கொள்ளும் போது அது எத்தனை உசத்தியாகத்தான் இருக்கட்டும். அவர் அங்கே கொடுக்கிற ஆனந்தம் எத்தனை பெரிசாகத்தான் இருக்கட்டும். எப்படியிருந்தாலும் அவரும் ஸரி, நாமும் ஸரி நிஜ ஸ்திதியில் இல்லை; ஸ்வ-ஸ்வரூபத்தில் இல்லை. இரண்டு பேருமே சாந்த ஸமுத்ரமாக அப்படியே அடங்கியிருக்கிற நிச்சலன நிலையில் இல்லை. பக்தி என்று நாம் ஒரு கார்யம் பண்ணுகிறோம். அநுக்ரஹம் என்று அவரும் ஒரு கார்யம் பண்ணுகிறார். பக்தி பண்ண மனஸ் என்று ஒன்று இல்லாமல் முடியாது. அது விகாரங்களே இல்லாத மனஸாகத்தான் இருக்கட்டும், இருந்தாலும் அப்படியொன்று இருந்துதானாக வேண்டும். அது இருக்கிறதென்றால் நம்முடைய நிஜ ஸ்வரூபமான ஆத்மாவை விட்டுவிட்டு இதனிடமே நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டுவிடுகிறோம் — identify செய்து கொள்கிறோம் — என்றுதான் அர்த்தம். இப்படி நாமே நிஜமான நாமாக இல்லாதபோது செய்யும் ஒன்று எத்தனை தான் உசத்தியாயிருந்தாலும் அது ஸத்ய ஸத்யமில்லை என்ற குறை இருக்கத்தானே செய்கிறது? அதனால் பரமாத்மா நமக்குப் பரமாநுக்ரஹம் பண்ண நினைக்கும்போது, ‘இவனுக்கு நம்மை வேறேயாக வைத்துச் செய்கிற பக்திக் கார்யம்கூட வேண்டாம்; நமக்கும் இவனை வேறேயாக வைத்துச் செய்கிற அநுக்ரஹ கார்யம்கூட வேண்டாம்; ஏனென்றால் இவன் நமக்கு வேறேயாக இருக்கிறபோது வாஸ்தவத்தில் தனக்கே வேறேயான மனஸுடன் தான் ஐக்கியப்பட்டு, தானான ஆத்மாவை விட்டுவிடுகிறான். அப்படி வேண்டாம். நாமும் அநுக்ரஹம் என்ற கார்யம் பண்ணுவதற்காக மாயையை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதுவும் வேண்டாம். ஆனபடியால் நாம் இவனுடைய மனஸை அடியோடு போக்கி, இவனை நமக்குள்ளேயே ஆத்மாவாய், ப்ரஹ்மமாய் வைத்துக்கொண்டு விடுவோம்’ என்று அத்வைத மோக்ஷம்தான் அநுக்ரஹிப்பார். ஸ்வாமி என்றும் பக்தன் என்றும் வேறாக இல்லை; ஜீவாத்ம-பரமாத்மாக்களும் வேறே இல்லை என்று பண்ணிவிடுவார். த்வைதமாக இரண்டாவது இல்லை என்கின்ற வேதாந்த ஸித்தாந்தத்தில் ‘அத்வைதம்’ என்று சொல்வது, இப்படி பக்தனும் பகவானும் — அதாவது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் — இரண்டு வேறு வஸ்துக்களில்லை என்பதைத்தான். ஜீவ-ப்ரஹ்ம அபேதம்தான் அத்வைதம்.

அதுவே மோக்ஷம். மோக்ஷ லோகம் என்று ஒன்றில்லை. மோக்ஷ அநுபவம்தான்.

அங்கே கார்யமே கிடையாது. கார்யம் செய்ய மனஸ் வேண்டும். மனஸ் வந்தால் ஆத்மாவாக இருக்கும் நிஜமான நிலை போய்விடும்.

இந்த மோக்ஷ அநுபவத்திற்கே ரூபமாக இருக்கும் தக்ஷிணாமூர்த்தி நம் கதை ஆரம்பிக்கும் ஸமயத்தில், ‘நாம் கார்யமில்லாமல் இப்படி நிர்விசாரமாக உட்கார்ந்திருக்கிறோம். ஜனங்களானால் கார்யத்திலும் ஒரே தப்பான கார்யமாக பண்ணிக்கொண்டு கஷ்டப்படுகிறதுகளே, பிறரையும் கஷ்டப்படுத்துகிறதுகளே’ என்று பரம கருணோயடு நினைத்தார்.

“கருணையோடு நினைத்தார்” என்றால் அவரும் மனஸினாலே கார்யம் பண்ணினார் என்றுதானே அர்த்தம்? அப்புறம் அவரை ஆத்மாவாகவே மோக்ஷானந்தத்தில் முழுகி நிஷ்க்ரியமாக இருக்கிறவர் என்றால் என்ன அர்த்தம்?

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is சூன்யமில்லை;ஸச்சிதானந்த பூர்ணமே
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  மாயா ஸஹிதனாயினும் ஈசன் ஞானியே!
Next