நேர் சிஷ்யர்கள் தரும் சான்று : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஆசார்யாளைப் போற்றுவதற்கென்றே ஏற்படாமல் பொதுப்படையாக இருக்கப்பட்ட புராண இதிஹாச க்ரந்தங்களில் அவரை அவதார புருஷராகச் சொல்லியிருப்பதற்கு ஒருவிதமான முக்யத்வம் உண்டென்றால், அவரை நேரில் பார்த்து, நெருங்கிப் பழகி, அவரோடு கூடவே இருந்த சிஷ்யர்களான மஹான்கள் தங்களுடைய குருவைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கலென்பதற்கும் ஒரு தனியான மதிப்பு உண்டு. யாரையுமே வெளியுலகம் எதோ கொஞ்சம் தெரிந்துகொள்வதோடு சரி. லோகத்திற்குத் தெரியும்படியாக ஒருத்தர் எப்படித் தன்னைக் காட்டிக்கொள்கிறாரோ அதை வைத்துத்தான் வெளியுலகம் அவரை எடைபோட முடியும். யாராயிருந்தாலும் லோகத்தின் பார்வையில் தங்களை நல்லவர் மாதிரியும், அறிவாளி மாதிரியும்தான் காட்டிக்கொள்வார்கள். ஆனால் வாஸ்தவத்தில் அவர்கள் அப்படி இருக்கிறார்களா, இல்லாவிட்டால் ‘ஷோ’ பண்ணுகிறார்களா என்பது (அவர்களுக்குக்) கூடவே இருந்து நன்றாகப் பழகிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் தெரியும். தத்வ சாஸ்திரப் புஸ்தகங்களை ஒருத்தர் பரம வேதாந்தமாக நல்லமுறையில் எழுதி விடலாம். அப்படியே, படிப்பவர்கள் ‘ஆஹா’ என்னுபடியாக ஸ்தோத்ரங்களும், பக்திநூல்களும் எழுதிவிடலாம். அதைப் பார்த்து அவர் மஹா ஞானியாக இருக்க வேண்டும், பக்த சிகாமணியாக இருக்க வேண்டும் என்று வெளி மனுஷ்யர்கள் நினைத்துவிடுவார்கள். ஆனால், கூடவே இருப்பவர்களுக்குத்தான் தெரியும், வாஸ்தவத்திலேயே அவர் எழுதியபடியும், உபதேசிக்கிறபடியும் தான் வாழ்க்கையில் இருக்கிறாரா இல்லையா என்பது. அநேகமாக வேளிலோகம் நினைக்கிற அளவுக்கு ஒருவர் (பெரியவராக) இல்லை என்றே நன்றாகப் பழகுபவர்கள் நினைப்பதாக இருக்கலாம். வேடிக்கையாக இங்கிலீஷில், பெரிய ‘ஹீரோ’வாக உள்ள எவனும் தான் கோடவே இருக்கும் சேவகனைத் தவிர மற்றவர்களுக்குத்தான் அப்படி இருக்கிறான் என்று சொல்கிறார்கள்.1

ஆசார்யாளைப் போல நம்முடைய மத புருஷர்கள்வெளி வாழ்க்கை ஒரு தினுசு, உள்வாழ்க்கை ஒரு தினுசு என்று இல்லாதவர்கள் என்பது ஸர்வ நிச்சயமான விஷயம்தான். ஸ்வாநுபூதி இல்லாமல் வெறும்அறிவையும், கவி சாதுர்யத்தையும் மாத்திரம் கொண்டு அவர்கள் புஸ்தகம் மட்டும் பெரிசாக எழுதிவிடவில்லை என்பது நமக்குத் தீர்மானமான விஷயம்தான். ஆனாலும்கூட அவர்கள் கூடவே வஸித்து அத்யந்தமாக இருந்தவர்கள் அவர்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதில் நமக்கு ஒரு குதூஹலம் இருக்கவே இருக்கிறது. அதிலும் ஆசார்யாளின் ப்ரதான சிஷ்யர்களாகக் கூடவே வஸித்த ஸுரேச்வராசார்யாள், பத்மபாதாசார்யாள், ஹஸ்தாமலகாசார்யாள், தோடகாசார்யாள் ஆகிய நாலு ஒஎரும் மஹா பெரியவர்களாக, ஞான ஸித்தி பெற்ற மஹாத்மாக்களாக இருந்திருப்பதால், “தினந் தினமும் ஆசார்யாளைப் பார்த்துப் பழகிக்கொண்டிருந்த இவர்கள் அவரைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்? குறிப்பாக, (அவரை) ஈச்வராவதாரம் என்று சொல்லியிருக்கிறார்களா?” என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் நமக்கு இருக்கிறது.

இந்த நாலு சிஷ்யர்களில் ஹஸ்தாமலகாசார்யாள் பண்ணியதாக ஒரே ஒரு சின்ன ஸ்தோத்ரம்தான் “ஹஸ்தாமலக ஸ்தோத்ரம்” என்று இருக்கிறது2.அது பரம அத்வைதமாக ஒரே வேதாந்த தத்வ மயமாக இருப்பது. ‘மநுஷ்யர், தேவர், யக்ஷர், அந்த ஜாதி – இந்த ஜாதி என்றெல்லாம் எதுவுமில்லை. இருப்பது ஒரே ஆத்மா ஸ்வரூபம்தான், ‘ப்ரஹ்ம ஸ்வரூபம்தான்’ என்று அது சொல்லிக்கொண்டு போகிறது. அந்த நிலையில் ஆசார்ய ஸ்வரூபம் என்று ஒன்று, அவதார ஸ்வரூபம் என்று ஒன்று ஆகியவை மட்டும் இருக்கமுடியுமா என்ன? அதனால் ஹஸ்தாமலகாசார்யாளின் வாக்கில் ஆசார்ய ப்ரசம்ஸையாக (புகழ்த்துதியாக) எதுவும் இல்லை. எனவே, அவர் ஈச்வராவதாரம் என்று காட்டும்படியாகவும் எதுவுமில்லை.

ஆனால் மற்ற மூன்று பேரும் ஆசார்யாளைப் பரமபக்தியோடு பரமச்வரனாகவே ஸ்தோதரித்துச் சொல்லித்தான் இருக்கிறார்கள்.(ஆசார்யாளைப் போற்றி) அவர்கள் அநேகம் சொல்லியிருக்கிறார்கள். அது எல்லாவற்றையும் இப்போது தான் சொல்லப் போவதில்லை. அவர் பரமசிவ அவதாரந்தான் என்பதற்கு அவர்கள் அத்தாட்சி கொடுத்திருப்பதை மட்டுமே சொல்லப் போகிறேன். (ஞானஸூர்யனாக அவரை ஸுரேச்வராசார்யாளும், தோடகாசார்யாளும் சொன்னதை எடுத்துக்காடியாற்று).

தோடகாசார்யாள் தம்முடைய அஷ்டகத்தில் ஒவ்வொரு அடியையும் “பவ சங்கர தேசிக மே சரணம்” என்று முடித்திருக்கிறார்.

சங்கரர் என்பது ஆசார்யாளுக்குப் புதுசாக இட்டுக்கட்டி வைத்த பெயரில்லை. பூர்வ காலங்களிலிருந்தே பரமசிவனுக்கு இருந்து வந்துள்ள அநேக நாமாக்களில் ஒன்றுதான் அது. ‘இப்போது கண்ணுக்கு முன்னாள் தெரிகிறாரே, இந்த சங்கரர், இவர் அந்த சிவனாகிய சங்கரர்தான்’ என்று ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கிற வகையில்தான் ‘பவ சங்கர தேசிக மே சரணம்’ என்று போட்டிருக்கிறார். ‘பவன்’ என்பது பரமசிவனின் ப்ரஸித்தி வாயிந்த அஷ்ட நமாக்களில் (எட்டு பெயர்களில்) முதலாவதாகும். பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹா(தேவ)ன் என்ற எட்டு பெயர்களும் சிவனுக்கு மிகவும் உகப்பான நாமாக்கள். ‘அந்த பவனாகிய சிவன்தான் சங்கர தேசிகராகிய சங்கராசார்யா ஸ்வாமிகள். அவர்தான் எனக்கு அடைக்கலம்’ என்பதுதான் ‘பவ சங்கர தேசிக மே சரணம்’ என்பதற்கு அர்த்தம்.

வ’ என்பதை க்ரியாபதமாக (வினைச் சொல்லாக) வைத்துக்கொண்டால் ‘ஆகுக!’, ‘இருக்குமாக!’, ‘இருப்பாயாக!’ என்று அர்த்தம். தீர்க்காயுஷ்மான் பவ!’ ‘தீர்க்கஸுமங்கலி பவ!’ என்று சொல்லும்போது இதுதான் அர்த்தம்.

ஆகையால் ‘பவ’ என்பதற்கு அப்படியுங்கூட அர்த்தம் பண்ணலாம்.

ஆனால் (தோடகாஷ்டகத்தில்) நாலாவது ச்லோகத்தில் ஐயம்` திரிபுக்கு இடமில்லாமல் ‘பவ’ என்பதை ‘சிவ’ என்ற அர்த்தத்திலேயே ஆசார்யாளுக்குச் சூட்டுகிறார்.

பவ ஏவ பவாந்!

‘பவாந்’ என்றால் ‘தாங்கள்’. ஆசார்யாலை நேரே பார்த்து அப்படிக் கூப்பிட்டு, “தாங்கள் ஸாக்ஷாத் சிவபெருமானே! ‘பவ ஏவ’ – பவனாகிய சிவனேதான்!” என்கிறார்.

பவ ஏவ பவாந் – இதி மே நிதராம் ஸமஜாயத சேதஸி கௌதுகிதா

‘கௌதுகம்’ என்றால் ஸந்தோஷப் பூரிப்பு. ‘நிதராம்’ என்றால் ‘முழுக்க’, ‘பரிபூரணமாக ரொம்பி’ என்று அர்த்தம். ‘சேதஸி’ – சித்தத்திலே. என்ன சொல்கிறாரென்றால், தாம் ஆசார்யாளை ஏதோ மநுஷ்ய ரூபத்திலிருகிற அநேக குருக்களில் ஒருவராக நினைக்காமல் ஸாக்ஷாத் பரமேச்வரனே என்று தெரிந்துகொண்டுவிட்டதில் தம்முடைய சித்தம் அப்படியே பரமானந்தத்தில் பூரணமாகத்திளைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார்.

அப்புறம் மூன்று ச்லோகம் தள்ளி மறுபடியும்

‘குருபுங்கவ புங்கவகேதந!”

என்கிறார். புங்கவம் என்றால் ரிஷபம். எதிலுமே உத்க்ருஷ்டமாக (மிகவும் உயர்வு பொருந்தியதாக) இருப்பதை ‘ரிஷபம்’ என்று சொல்வார்கள். ‘புருஷர்ஷப’ – ‘புருஷ ரிஷப’ என்றால் புருஷ ச்ரேஷ்டன் என்று அர்த்தம். ‘தேவரிஷப’ என்றால் தேவ ச்ரஷ்டன். தமிழிலும் இதே வழக்கு இருக்கிறது. ‘ஏறு’ என்றால் ரிஷபம். நர ச்ரேஷ்டன், தேவ ச்ரேஷ்டன் என்பதைத் தமிழிலும் மனிதரேறு தேவரேறு என்று சொல்லிக் கேட்கிறோம். புங்கவம் என்பதும் ரிஷபமே. ஆகையால் ‘குரு புங்கவ!’ என்று ஆசார்யாளைக் கூப்பிடுவதற்கு, ‘ஆசார்ய ச்ரேஷ்டரே!’ என்று அர்த்தம்.

அப்புறம் ‘புங்கவ கேதந’ என்கிற இடத்தில்தான் அவதாரத்துக்கு அத்தாட்சி வருகிறது. புங்கவ தேதணன் என்றால் ரிஷபத்தைக் கொடியாக உடையவன். இப்படி ரிஷபக் கொடியோனாக இருப்பது யார்? வேறே யார்? பரமேச்வரன்தான்?

தோடகாசார்யாள் புத்தி பிரகாசமே இல்லாதமாதிரி பரம எளிமையாக அடங்கியிருந்து கொண்டு நிறைந்த பக்தியுடன் ஆசார்யாளுக்கு சரீர ஸேவை செய்துவந்தவர். அப்படிப்பட்டவர் உணர்ச்சிப் பெருக்கில் தம்முடைய குருவையே பகவதவதாரமாகக் கொண்டாடுவது இயற்கைதான். ஸுரேச்வராசார்யாள் அவர் மாதிரி இல்லை. அவர் மஹா பண்டிதராக ப்ரகாசித்தவர். பூர்வத்தில் நிறைய யாக, யஜ்ஞாதிகள் செய்த கர்ம மீமாம்ஸகராக இருந்துகொண்டு அந்த மதத்தை ஆதரித்துக் காரஸாரமாக வாதங்கள் பண்ணியவர். ஆசார்யாளின் ஞான மார்க்கத்தைக் கட்டோடு ஆக்ஷேபித்தவர். முதல் முதலில் அவர் ஆசார்யாளைக் கண்டபோது3 ஆசார்யாளுடைய ஞான காந்தியோ, காருண்யா மாதுர்யமோ அவரைக் கொஞ்சங்கூடத் தொடவில்லை. ரொம்பவும் அவமரிதையாக, சண்டை பிடிப்பதாகத்தான் (அவர் ஆசார்யாளிடம்) பேச ஆரம்பித்தார் என்று சங்கர விஜயங்களில் இருக்கிறது. அப்புறம் அவரே ஆசார்யாளிடம் (வாதத்தில்) தோற்றுப் போய், ஆசார்யாளின் ஸித்தாந்தமே ஸித்தாந்தம் என்று ஏற்றுக்கொண்டு, ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு அவருடைய சிஷ்யராக ஆனார். முன்னே ஒரே கர்மாநுஷ்டானம், அதற்காக வாதச் சண்டை போடுவது என்று இருந்ததற்கு நேர்மாறாக இப்போது ஒரே ஞானம், வேதாந்தம் என்று தத்வார்த்தமாகவே போனார். கார்யமே இல்லாமளிருக்கிரதுதான் முடிவான லக்ஷ்யம் என்பதை விளக்கி ‘நைஷ்கர்ம்ய ஸித்தி’ என்று புஸ்தகம் எழுதினர். ஆக பூர்வத்தில் தீவரமான கர்ம மீமாம்ஸகராக இருந்த போதும் ஸரி, அப்புறம் ஆசார்யாளின் சிஷ்யராகி அடியோடி மாறிய பிறகும் ஸரி, அவர் உணர்ச்சி வசப்படுவது என்று இல்லாமலிருந்தவர். முதலில் ஒரே காரியமும், அறிவுச் சண்டையுமாக இருந்தார். அப்புறம் மனஸின் உணர்ச்சிகளே இல்லாத ஞானம், சாந்தம் என்பதில் ஈடுபட்டுவிட்டார். தத்வ ரீதியில் விஷயங்களை எடுத்துச் சொல்லி நிலைநாட்டுவதில்தான் இப்படியானவர்களுக்கு கவனம் இருக்கும். குருவை அவதாரமாக ஸ்துதித்து, ‘ஸமஜாயத சேதஸி கௌதிகதா’ என்று தோடகாசார்யாள் சொன்னாற்போல் சித்தம் ஸந்தோஷத்தில் பூரித்து நிறைவாக இவர்கள் சொல்லுவத்கில்லை. இப்படிஎல்லாமிருந்தும் அவர் (ஸுரேச்வரர்) ஆசார்யாளைத் தமோந்தகாரத்தை விரட்டும் ஞான ஸுர்யனாகக் கொண்டாடிச் சொன்னாரென்று பார்த்தோம். அது ப்ருஹதாரண்யக வார்த்திகத்தில், தைத்திரீயோபனிஷத்திற்கு ஆசார்யாள் செய்துள்ள பாஷ்யத்திற்கும் ஸுரேச்வராசார்யாள் வார்த்திகம் எழுதியிருக்கிறார். அதிலே ஆசார்யாள் பரமசிவ அவதாரம் என்றே த்வனிக்கும்படியாக ஒரு வாக்கியம் சொல்லியிருக்கிறார்.

முமுக்ஷு – ஸார்த்தவாஹ்ஸ்யா பவ- நாம- ப்ருதோ யதே:

‘முமுக்ஷுக்களின் கோஷ்டிக்கேல்லாம் தலைவர், பவனுடைய பெயரைத்தாங்கும் யதி (ஸந்நியாஸி)’ என்று அர்த்தம். முமுக்ஷு என்றால் மோக்ஷ காங்க்ஷிகள், அதாவது மோக்ஷம் அடையவேண்டும் என்று விரும்பி அதற்காக முயற்சி செய்பவர்கள். ஸார்த்தவாஹன என்றால் பொதுவாக ஒரு பெரிய வியாபாரிகளின் கோஷ்டிக்குத் தலைவன் என்று அர்த்தம். படகுகளில் திரை கடல் ஓடி, அல்லது பாலைவனத்தில் ஒட்டகங்களின் மேல் ஏறிக்கொண்டு — இப்படியெல்லாம் வியாபாரிகள் caravan என்று போகும்போது ஏற்கெனவே அந்த வழிகளெல்லாம் நன்றாக அற்றுப்படி பண்ணிக்கொண்டு, இப்போது மற்றவர்களுக்கு ஜாக்ரதையாக வழிகாட்டி அழைத்துப் போகும் லீடராக ஒரு பெரிய வ்யாபாரி இருப்பானல்லவா? அவன்தான் ஸார்த்தவாஹன். இம்மாதிரி ஸம்ஸாரக் கடலில், அல்லது ஸம்ஸாரப் பாலை வனத்தில் வழிகாட்டியாக முமுக்ஷுக்களை அழைத்துக் கொண்டு போகிற ஆத்மிக ஸார்த்தவாஹராக ஆசார்யாளைச் சொல்லியிருக்கிறார். இந்த வியாபாரியிடமுள்ள’ சரக்கு, அவருடைய செல்வம் என்னவென்றால் ஞானம்தான்! இதைச் சொல்லும்போது பத்மபாதாசார்யார் அவரை (அவருடைய ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யத்துகுச் செய்துள்ள ‘பஞ்சபாதிகா’ என்ற வ்யாக்யானத்தில்) ‘பாஷ்யவித்தக குரு’, அதாவது தாம் எழுதிய பாஷ்யங்களையே தம்முடைய செல்வமாகக் கொண்ட குரு என்று சொல்லியிருப்பது நினைவு வருகிறது. ஸந்நியாஸியின் லக்ஷணப்படி பொருட் செல்வம் அவரிடம் இல்லாவிட்டாலும் ஞானச் செல்வத்தில் பெரிய வியாபாரித் தலைவராயிருந்திருக்கிறார்!

அதிருக்கட்டும். அவதார ஸமாசாரமல்லவா பார்த்துக் கொண்டிருந்தோம்? அதற்கு ஆதரவாக (ஸுரேச்வரர்) ‘பவ – நாம- ப்ருத்’ என்கிறார். ‘பவன் என்கிற, அதாவது சிவன் என்கிற நாமத்தை தரித்துக்கொண்டிருப்பவர்’ என்கிறார். இப்படி எதற்காகச் சொல்ல வேண்டும்? சிவாவதாரம்தான் இவர் என்று hint பண்ணுவது தவிர இதற்குக் காரணமில்லை!

இப்போது பத்மபாதாசார்யாளை விட்ட இடத்தில் எடுத்துக்கொள்வோம். ஸூத்ர பாஷ்யத்திற்கு வ்யாக்யானம் செய்திருப்பதில் அவருடைய ஞானமும் வித்வத்தும் தெரிகிறதென்றால் ஆசார்ய சரித்ரத்தைப் பார்க்கும்போது அவருடைய உசந்த பக்தியுள்ளம் பல கட்டங்களில் தெரியும். தோடகாசார்யர் ஞான பாண்டித்யத்தை அடக்கி வைத்துக் கொண்டு பக்தராக மட்டும் தெரிந்தார். பக்தி உணர்ச்சியை அப்படியே கொட்டினார். ஹஸ்தாமலகரோ கிட்டத்தட்ட தக்ஷிணாமூர்த்தி மாதிரியே ஞானப் புஸ்தகம், ஞானவாதம் என்றுகூடப் பண்ணாமல் ஒரேயடியாக ஞானத்தில் தோய்ந்து போனவர். உணர்ச்சி என்பதே அங்கே கிட்டேவராது. ஸுரேச்வராசார்யாள் வேறே தினுசில் உணர்ச்சி வசப்படாமலிருந்தார் என்று பார்த்தோம். பத்மபாதாசார்யார்தான் ஞானியாக இருந்ததோடு emotional, intellectual என்று சொல்கிற இரண்டாகவும் இருந்துகொண்டு பக்தராகவும் இருந்தார், தத்வார்த்தங்களை விவரித்துச் சொல்லும் வித்வானாகவும் இருந்தார்.

அவர் பஞ்சபாதிகாவில் அசார்யாளை ரொம்பவும் ரஸமான விதத்தில் சிவாவதாரமாக ஸதோத்ரித்திருக்கிறார். பரமேச்வரனுக்கு ஆப்போஸிட் குணங்கள் மாதிரியே ஆசார்யாளுக்கு இருப்பதாக வேடிக்கையாக வார்த்தை விளையாட்டு பண்ணி, ‘ஒரிஜினல் சிவன் அப்படி; அவதார சிவன் இப்படி’ என்று சொல்லியிருக்கிறார்! இப்போது நாம் ஆசார்யாளை ‘ஆதி சங்கரர்’ என்கிறோம். அவருக்குப் பிற்பாடு அவர் ஏற்படுத்திய அநேக ஆசார்யபீடங்களில் வரிசையாக வந்துள்ள அத்தனை ஸ்வாமிகளுக்கும் ‘சங்கராசார்யார்’ என்றே பேர் இருப்பதால், இவர்களுக்கெல்லாம் மூல புருஷராக இருந்தவரை ‘ஆதி’ சங்கர என்று சொல்வதாக வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஆசார்யாளின் காலத்திலேயே இருந்தவர்கள் அவரை ‘ஆதி’ சங்கரர் என்று சொல்லியிருக்க முடியாது. அவருக்கு ஸமகாலத்தவர்களாக இருந்துகொண்டே அவரை அவதார புருஷர்தான் என்று தெரிந்துகொண்டவர்கள் கைலாஸநாதனான சங்கரனையே ஆதி சங்கரன் என்றும், அவர்களுக்கு மத்தியில் நடமாடிக் கொண்டிருந்த ஆசார்யாளை அவதார சங்கரர், அல்லது அபிநவ (புதிய) சங்கரர் என்றும்தான் சொல்லி வந்திருப்பார்கள். இந்த ரீதியில் பத்மபாதாசார்யாள் அவரை “அபூர்வ சங்கரர்” என்று சொல்கிறார். பூர்வ காலத்திலிருந்து சங்கர நாமம் தாங்கி யிருப்பது கைலாஸ நாதனான பரமேச்வரன். அவனே புதிதாக நிகழ்காலத்தில் வந்துள்ளபோது அபூர்வ சங்கரராகி விடுகிறான்!

இப்படி ‘அபூர்வசங்கரர்’ என்று பேர் கொடுத்ததில் ஒரு சிலேடையும் பண்ணியிருக்கிறது. அந்த ச்லோகம் முழுக்க ஏகப்பட்ட சிலேடைகள். அதில் இதுவும் ஒன்று. “அபூர்வ” என்றால் அதிசயமான, விசித்ரமான என்றும் அர்த்தம் இருக்கிறது. “ரொம்ப அபூர்வமாயிருந்தது” என்று நாம் ஒன்றைச் சொல்லும்போது இந்த அர்த்தத்தில்தான் சொல்கிறோம். கைலாஸ சங்கரருக்கு நேர்மாறாக அநேக விஷயங்கள் அவதார சங்கரரிடம் இருப்பதாக ச்லோகத்தில் அடுக்கிக் கொண்டே போய், கடைசியில் ‘அபூர்வ சங்கரர்’ என்று முடித்திருப்பதால், ‘இப்படி ஒரு அதிசயமான, விசித்ரமான பரமசிவனாக இவர் இருக்கிறார் பார்த்தீர்களா?’ என்று காட்டுகிறமாதிரி இருக்கிறது.

ச்லோகம் முழுவதையும் சொல்கிறேன்:

நமாம்-யபோகி-பரிவார-ஸம்பதம்

நிரஸ்த-பூதிம் அநுமார்த்த-விக்ரஹம் |

அநுக்ரம்-உன்ம்ருதித கால-லாஞ்சநம்

விநா-விநாயகம்-அபூர்வ சங்கரம் ||

மூல சங்கரனுக்கும், அவதார சங்கரருக்கும் ஒரே வித்தியாஸமாகச் சொல்லியிருக்கிறது!

அவதார சங்கரர் எப்படியிருக்கிறார்? ஸந்நியாஸிகளான சிஷ்ய கணத்தினால் சூழப்பட்டவராக இருக்கிறார். “ஸர்வஜ்ஞம், ப்ரஹ்ம – ஸமஸ்தம் – முநிகண – ஸஹிதம்” என்று அவரை ஸுரேச்வராசார்யாள் ‘நைஷ்கர்ம்ய ஸித்தி’ என்ற புஸ்தகத்தில் சொல்லியிருக்கிறார். ஆறாயிரம் சிஷ்யர்கள் புடைசூழ அவர் ஸஞ்சாரம் செய்ததாக ‘சங்கர விஜய’ங்களில் இருக்கிறது. துறவியான அவருடைய பெரிய ஸொத்து இந்தத் துறவி கூட்டமே. உடைமைகளையெல்லாம் த்யாகம் செய்த ஆசார்யாளின் பெரிய உடைமை, அவருடைய ஞானமும், அவர்செய்த பாஷ்யங்களும், ஸந்நியாஸ சிஷ்யக் கூட்டமும்தான். இதைத்தான், “அபோகி பரிவார ஸம்பதம்” என்று இந்த ச்லோகத்தில் சொல்லியிருக்கிறது. போகி என்றால் ஸுக போகங்களை அநுபவிக்கும் க்ருஹஸ்தன். அப்படியில்லாத துறவி ‘அபோகி’. அபோகிகளையே தமக்குப் பரிவாரமாகிய ஸம்பத்தாகக் கொண்டவரை, ‘அபோகி பரிவார ஸம்பதம்’ என்று சொல்லியிருக்கிறது.

“நமாமி” — “நமஸ்கரிக்கிறேன்” – என்று சுலோகத்த குரு வந்தனத்தோடு ஆரம்பித்திருக்கிறது. ‘நமாம்யபோகி’ என்பது ‘நமாமி அபோகி’ என்று பிரியும்.

அவதார சங்கரர் இப்படியிருக்கிறார்: ‘அபோகி பரிவார ஸம்பத’ராக. இந்த மாதிரி பத ப்ரயோகம் செய்யும்போது அவர் மூலமான கைலாஸ சங்கரருக்கு நேர் வித்யாஸமாக இருக்கிறார் என்று ஸ்லோக கர்த்தா வேடிக்கையாகக் காட்டிவிடுகிறார்! எப்படி?

ஒரு வார்த்தைக்கு நேர் வித்தியாஸமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமானால் அந்த வார்த்தைக்கு முதலில் “அ” போட்டுவிட்டால் போதும் – ஸத்யம்- அஸத்யம்; தர்மம்-அதர்மம், இப்படி. “அபோகி பரிவார ஸம்பதம்” என்பதில் ‘அ’வை எடுத்துவிட்டு “போகி பரிவார ஸம்பதம்” என்றால் அதுதான் கைலாஸ சங்கரர்! இதற்கு என்ன அர்த்தம், பார்க்கலாம்.

கைலாஸ சங்கரர் எப்படி இருக்கிறார்? உடம்பு முழுக்கப் பாம்புகளை வாரிப் போட்டுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு பாம்புகள்தான் முக்யமான ஆபரணம், அலங்காரம் எல்லாம். கழுத்திலேயும் ஹாரம் மாதிரிப் பாம்பைத்தான் போட்டுக் கொண்டிருப்பார். இவர் மஹாவிஷ்ணுமாதிரி நவரத்னாபரணங்கள் போட்டுக் கொலாதவர். ஆனாலும் நாகரத்னம் என்பதாகப் பாம்பின் படத்தில் ரத்னம் இருப்பதுண்டல்லவா? அதனால், இவர் ஹாரங்களாகப் போட்டுக்கொண்டுள்ள பாம்புகளின் படத்திலுள்ள ரத்னங்கள் இவருடைய ஸ்படிகம் போன்ற தேஹத்தில் செக்கச் செவேலென்று டால் அடிக்கும்! இப்படி ஆசார்யாளே ஒரு இடத்தில் வர்ணித்திருக்கிறார்:

…ரூக்ஷ-சக்ஷு-ச்ருதிகண-பண-ரத்நௌக-பா-(அ) பீக்ஷ்ண சோபம்

…..ஸ்படிக-மணிசிலா-மண்டலாபம்4

‘சக்ஷு’ என்றால் கண். ‘ச்ருதி’ என்றால் காது. ‘சக்ஷு-ச்ருதி’ என்றால் கண்ணையே காதாக உடைய ‘கட்செவி’யாகிய பாம்பு.

கைலாஸ சங்கரர் பாம்புக் கூட்டத்தையே ஆபரணமாக அணிந்திருக்கிறார். பாம்புக்கு இருக்கும் பல பேர்களில் “போகி” என்பது ஒன்று. “போகம்” என்பதற்குள்ள அநேக அர்த்தங்களில் ஒன்று ‘பாம்பின் படம்’ என்பது. அந்தப் படத்தை உடைய பாம்பு “போகி”. “போகி பரிவாரம்” என்றால் ‘பாம்புக் கூட்டம்’. பாம்புகளால் நன்றாக நெருக்கிச் சூழப்பட்டிருப்பதைக் குறிப்பதாகவும் சொல்லலாம். ‘பரிவார’ என்பதற்கு இப்படியும் அர்த்தம் செய்யலாம். தம்மைச் சூழ்ந்து தழுவிக்கொண்டுள்ள பாம்புகளையே செல்வமாக, ஆபரணமாக, ஹாரமாகக் கொண்டுள்ள கைலாஸ சங்கரர் “போகி பரிவார ஸம்பதர்” ஆகிவிடுகிறார்! ‘ஸம்பத்’ என்றால் செல்வம் என்பதோடு அலங்காரம் குறிப்பாக, ஹாரம் என்றும் அர்த்தம் உண்டு. இந்த எல்லா அர்த்தப்படியும் அவர் (கைலாஸ சங்கரர்) அதற்கு நேரெதிர் மாதிரி முதலில் ஒரு “அ” சேர்த்துக்கொண்டு அபோகி பரிவார ஸம்பத்துக்காரராக இருக்கிறார்!

இவருக்கு இன்னும் என்ன லக்ஷணங்கள் இருக்கின்றன? சிஷ்யக் கூட்டத்தையே செல்வமாகக் கொண்ட இவர் லௌகிகச் செல்வங்களையெல்லாம் துச்சமாகத் தூக்கி எறிந்தவர். இவர் “நிரஸ்த பூதி”. “பூதி” என்றால் செல்வம். “நிரஸ்த” என்பது வேண்டாமென்று தூக்கி எறிவதைக் குறிக்கும்.

இப்படியிருப்பதிலும் இவர் கைலாஸ சங்கரர் நேர் வித்யாஸமாயிருக்கிறார்! இவர் பூதியை வேண்டாமென்று தள்ளுகிறாரென்றால் அவரோ பூதியை வேணும் வேணும் என்று வாரிப் பூசிக்கொள்கிறார்! “பூதி” என்றால் இந்த இடத்தில் விபூதி என்று அர்த்தம். ‘பூதி’ என்று சொன்னாலே போதும். ‘வி’ சேர்ப்பது விசேஷணத்தைக் குறிப்பதற்குத்தான்.

பூதி அல்லதுவிபூதி என்பதற்குத் திருநீறு என்றும்அர்த்தம்; அஷ்ட மா ஸித்தி என்னும் எட்டுக்கும்கூட விபூதிகள் என்றுதான் பெயர். இந்த இரண்டு அர்த்தத்திலுமே கைலாஸ சங்கரர் விபூதி மயராக இருக்கிறார்.

காடுடைய சுடலைப் பொடி பூசி

என்று முதல் தேவாரப் பாட்டிலேயே சொல்லியிருப்பது போல் அவர் சர்வாங்கமும் விபூதி பூஷணராக இருப்பதில் ப்ரியர். அதோடு அஷ்ட ஸித்திகள் என்கிற அற்புத சக்திகளுக்கு உறைவிடமாகவும் பரமசிவனையே சொல்வது வழக்கம். அஷ்ட ஸித்தி, அஷ்ட விபூதி என்பதுபோல் அந்த எட்டும் அஷ்ட ‘ஐச்வர்யங்கள்’ என்றும் சொல்லப்படும். ‘ஐச்வர்யம்’ என்பதற்கு அர்த்தமே ‘ஈசவரனுக்கு உரியது’ என்பதுதான். ஞான ஸ்வரூபமான தக்ஷிணாமூர்த்தியை ஆசார்யாள் ஸ்துதித்து முடிக்கிறபோதுகூட அவரது உபாஸனா பலனாக இந்த விபூதிகளுக்கெல்லாம் மேலான ‘மஹாவிபூதி’யான ஸர்வாத்ம பாவம் (அத்வைத ஞானம்) உண்டானதொடுகூட எட்டாகப் பரிணமித்துள்ள இந்த ஐச்வர்ய விபூதிகளும் ஸித்திக்கும் என்று சொல்லியிருக்கிறார்: ஸித்யேத் – தத்புநர்- அஷ்டதா பரிணதம் சைச்வர்யம் (ச ஐச்வர்யம்) அவ்யாஹதம்.

ஆகக்கூடி திருநீற்று பூதியானாலும் ஸரி, ஸித்திகலான பூதியானாலும் ஸரி, இரண்டும் கைலாஸ சங்கரரோடு பிரிக்கமுடியாமல் சேர்ந்திருப்பவை. ஆனால் அவதார சங்கரரோ பூதியைத் தூக்கி எறிந்த ‘நிரஸ்த பூதி’யாயிருக்கிறார்! இங்கே ‘பூதி’ என்பது பொருட்செல்வத்தைக் குறிப்பதென்று ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஸந்நியாஸ லக்ஷணங்களில் முக்யமான ஒன்று பொருள் பற்றில்லாமை. இன்னொன்று சுத்த ப்ரஹ்மசர்யம். ஸ்த்ரீ விஷயமாக லவலேசங்கூடப்பற்றில்லாமல் நெருப்புமாதிரி இருப்பது. ஆசார்யாள் அப்படி இருந்தவர்தான். அவர் பக்கத்திலேயே ஸ்திரீ வாஸனைகூட வரமுடியாது.

ஆனால் கைலாஸ சங்கரர் எப்படி? அர்த்த நாரீச்வரர் என்னும்படியாகத் தம்முடைய தேஹத்திலேயே பேர் பாதியில் பத்தினியை வைத்துக் கொண்டிருப்பவர்! “உமார்த்த விக்ரஹ”ராக, உமாதேவியை அர்த்த சரீரமாக உடையவர். ஆசார்ய அவதாரமோ அவர் ஸம்பந்தமே இருக்கப்படாதென்றுதான் ஸந்நியாஸியாக ஏற்பட்டது என்று பார்த்தோம்.

‘சங்கர நாமம் கொண்டவராக இருக்கிறாரே! சங்கராவதாரம் என்றும் சொல்கிறார்களே! அதனால் அம்பாளை சரீரார்த்தமாகக் கொண்டவர்ர்க தர்சனம் கொடுப்பாரோ?’ என்று அவரைப் பற்றி முழுக்கத் தெரிந்துகொள்ளாத யாராவது வந்து பார்த்தால் ஏமாந்துதான் போவார்கள்! அவர் ‘உமார்த்த விக்ரஹ’ராக இருக்கமாட்டார். இதையே வேறு தினுஸில் சொன்னால் ‘அநுமார்த்த விக்ரஹ’ராக இருப்பார். ‘அ’ மாதிரியே முதலில் ‘அன்’ சேர்த்தாலும் வேரெதிர் அர்த்தம் கொடுக்கும் உயிரெழுத்துக்களுக்கு முன்னாள் எதிர்ப்பதத்தைக் காட்ட ‘அன்’ சேர்க்கவேண்டும். அந்தம் – அனந்தம் ; அர்த்தம்-அனர்த்தம்.உமார்த்தம் – அநுமார்த்தம்.

நமாம்யாபோகி-பரிவார-ஸம்பதம் நிரஸ்தபூதி-மநுமார்த்த விக்ரஹம்

– இது ச்லோகத்தின் முதல் பாதி. அப்புறம், இன்னும் என்னென்ன வித்யாஸம்?

அநுக்ரம்” : உக்ரத்துக்கு எதிர்ப்பதம் அநுக்ரம். ‘உமார்த்தம்-அநுமார்த்தம்’ மாதிரி ‘உக்ரம்’ – அநுக்ரம்’. கொஞ்சங்கூட உக்ரபாவமே இல்லாமல் ஸௌம்ய மூர்த்தியாக, “கருணாலயம்” எனப்படுபவராக5 இருப்பவர் நம்முடைய பகவத்பாதர்கள். அநுக்ர மூர்த்தி, அநுக்ரஹ மூர்த்தி! கைலாஸ சங்கரரோ உகர ரூபி! பவன் முதலான அவரது அஷ்ட நாமாக்களிலேயே ‘உக்ரன்’ என்று அவருக்கு ஒரு பெயர் வருகிறது! ப்ரளய காலாக்னி ருத்ரன், ஸம்ஹார ருத்ரன் என்றெல்லாம் சொல்லும் போதே பயமாயிருக்கிறது! இப்படி பயங்கரமாக இருப்பதால் ‘பீமன்’ என்றும் அவருக்கு அஷ்ட நாமாக்களில் இன்னொரு பெயர் இருக்கிறது. ஆக, இதுவும் ஒரு வித்யாஸம் : இவர் அநுக்ரர், அவர் உக்ரர்.

அநுக்ரம் – உன்ம்ருதித கால – லாஞ்சநம்

அதென்ன ‘உன்ம்ருதித கால லாஞ்சநம்?’ ‘கால லாஞ்சனம்’ என்றால் கருப்பான அடையாளம். ‘காலம்’ – கறுப்பு. ‘லாஞ்சநம்’ – அடையாளம். ‘உன்ம்ருதித’ என்றால் ‘நசுக்கி அழிக்கப்பட்ட’. அவதார சங்கரர் ‘கறுப்பு அடையாளத்தை நசுக்கி அழித்துவிட்டவர்’ என்று அர்த்தம். இப்படி எதற்காகச் சொல்லவேண்டும்? கைலாஸ சங்கரருக்கு இவர் அடியோடு வித்யாஸமாயிருக்கிறார் என்பதற்கு இன்னொரு சான்று காட்டுவதற்குத்தான்! கைலாஸ சங்கரருக்கு விசேஷமாக உள்ள அடையாளமே அவர் கழுத்தில் உள்ள கால லாஞ்ஜநம் தான். ‘கால’ கூடம் என்றே சொல்லப்படும் விஷத்தைப் பானம் பண்ணியதால் கழுத்தில் ஏற்பட்ட அந்தக் கால லாஞ்சனத்தோடு அவர் இருப்பதால்தான் ‘நீலகண்டன்’ என்று பெயர். அவருடைய அவதாரம்தான் இவர் என்கிறார்களே என்று இவரிடம் வந்து பார்த்தால் இவர் நீலகண்டராக இருக்கவில்லை! கால லாஞ்சனத்தைக் காணோம்! அதை அழித்துவிட்டு ‘உன்ம்ருதித கால லாஞ்சன’ராக இருக்கிறார்.

கறுப்பு என்பது தோஷத்தைக் குறிப்பது, களங்கத்தைக் குறிப்பது. கைலாஸ சங்கரரின் சுத்த ஸ்படிக தேஹத்தில் அந்தக் களங்கம் இருக்கிறது. அவதார சங்கரரிடம் அது இல்லை. களங்கமே இல்லாதவர். இப்படிச் சொல்லும்போது தேஹத்திலுள்ள களங்கத்தை மாத்திரம் சொல்வதாக இல்லை. குணம், நடத்தை எதிலுமே களங்கத்தின் சுவடுகூட இல்லாமல் அழித்துப் போட்டு உன்ம்ருதித கால லாஞ்சனராக இருக்கிறாரென்று அர்த்தம் கொடுக்கிறது.

வேடிக்கையாக ஒன்று தோன்றுகிறது. ‘கால லாஞ்சனம்’ என்பதை அப்படியே இங்கிலீஷில் சொன்னதால் ‘Black mark’. ஒருத்தருக்கு இருக்கும் ஒரு தோஷத்தை ‘Black mark’ என்கிறோம். அது அடியோடு இல்லாத தோஷ ரஹிதராக ஆசார்யாள் இருந்ததால் உன்ம்ருதித கால லாஞ்சனம்’ என்பது ரொம்ப ஸரிதான் என்று தோன்றுகிறது.

கொஞ்சம் நீட்டி இன்னொரு அர்த்தங்கூடச் சொல்லலாம். காலனை உதைத்தபோது காலில் ஏற்பட்ட தழும்பு என்ற அடையாளத்தினால் கைலாஸ சங்கரர் கால லாஞ்சனரானார் என்றும், நம்முடைய ஆசார்ய சங்கரர் அதை உன்மர்த்தனம் பண்ணிவிட்டவர் (அடியோடு அழித்து விட்டவர்) என்றும் வைத்துக்கொள்ளலாம்.

காளீய மர்த்தனம் என்று கால ஸர்ப்பத்தை க்ருஷ்ண பரமாத்மா மிதித்துத் துவைத்தமாதிரி ஆசார்யாள் பரமேச்வர ரூபத்தில் இருந்த கால லாஞ்சனத்தை மர்த்தனம் பண்ணியிருக்கிறார்.

கடைசி வித்யாஸம் : “விநா விநாயகம்“. அப்படியென்றால் விநாயகரோடு இல்லாதவர், விநாயகரைத் தன்னிடம் சேர்த்துக் கொள்ளாதவர் என்று அர்த்தம். ‘எதற்காக ஆசார்யாளை இப்படிச் சொல்லணும்?’ என்று புரியாமலிருக்கலாம்! ‘கைலாஸ சங்கரருக்கு வித்தியாசமாகவே இவரைக் காட்ட வேண்டும் என்பதற்காக வேறே என்னென்னவோ சொல்லிக் கொண்டு போனதெல்லாம் ஸரிதான். அவர் போகி பரிவாரர். இவர் அபோகி பரிவாரர். அவர் உமார்த்த விக்ரஹர். இவர் அநுமார்த்த விக்ரஹர். இப்படியெல்லாம் பல சொன்னது ஸரிதான். அவர் ஜ்யேஷ்டபுத்ரரான வினாயகரோடேயே ஸதா காலமும் சேர்ந்து இருப்பவர். விநாயக மூர்த்தி தகப்பனாரிடம் குறும்புகள் பண்ணிகொண்டிருப்பார் என்று கவிகள் சொல்லிக் கேட்டிருக்கிறோம். சக்தி பஞ்சாக்ஷரி த்யானத்திலேயே ஈச்வரனை அம்பாளோடு மாத்திரமில்லாமல், — ஸோமாஸ் கந்த ரூபத்தில் அவர் அம்பாள், ஸ்கந்தன் ஆகிய இருவரோடு சேர்ந்திருப்பதுபோல மாத்திரமும் இல்லாமல் — அந்த இரண்டு பேரோடும் பிள்ளையாயையும் சேர்த்து முழுக் குடும்பமாக ஸ்மரிக்கும்படிதான் இருக்கிறது6. இவர் — அவதார சங்கரர் — விநாயகரை விட்டுவிட்டவர், அதாவது ஒதுக்கி விட்டவர் என்று எதற்காகச் சொல்ல வேண்டும்? ஷண்மதங்களில் ஒன்றாகப் பிள்ளையார் மதத்தையும் அவர் ஸ்தாபித்துத்தானே இருக்கிறார் ? அவர் பண்ணியிருக்கும் ‘கணேச பஞ்சரத்ன’த்தைச் சொன்னாலே பிள்ளையார் நர்த்தன கணபதியாக நாட்டியமாடிக்கொண்டு வருகிற மாதிரி இருக்கிறதே! (அப்படியிருக்க) ‘விநா விநாயகம்’ என்று ஏன் சொல்லவேண்டும்? வித்யாஸம் காட்டிக்கொண்டே போகணும் என்பதற்காக் எதையாவது சொல்லிவிடுவதா என்ன’? என்று தோன்றலாம்.

இங்கே ‘விநாயக’ என்ற வார்த்தையைப் போடும்போது (பத்மபாதர்ஒரு சிலேடை பண்ணியிருக்கிறார். ‘போகி’, ‘பூதி’ என்ற வார்த்தைகளைப் போடும்போது பரமசிவனைக் குறிக்குமிடத்தில் ஒரு அர்த்தமும் ஆசார்யாளைக் குறிக்குமிடத்தில் இன்னொரு அர்த்தமும் கொடுக்கும்படியாகப் போட்டிருந்ததைப் பார்த்தோமல்லவா? அப்படித்தான் இங்கேயும். விநாயக சப்தம் ஈச்வரனோடு ஸம்பந்தப்படும் பொது பிள்ளையார் என்று பொருள் கொடுக்கிறது. ஆசார்யாளோடு ஸம்பந்தப்ப்படுத்தும்போது விநாயகர் என்பதற்கு புத்தர் என்று அர்த்தம்.

ரொம்பப் பேருக்குத் தெரிந்திருக்காத விஷயம்: புத்தருக்கு விநாயகர் என்று பேர் உண்டு.

விநாயகர் என்றால் விசேஷம் பொருந்திய நாயகர்(தலைவர்), தமக்கு மேலே இன்னொரு தலைவர் இல்லாதவர் என்று இரண்டு அர்த்தம். பூதகணாதிபதியாக இருக்கப்பட்ட பிள்ளையாரை நாம் அப்படிச் சொல்கிறோம். பௌத்தர்கள் ‘தங்களுடைய மதத் தலைவரான புத்தருக்கு அதே பெயரைக் கொடுத்திருக்கிறார்கள்7.

‘அமர கோச’ நிகண்டுவில் அதை எழுதிய ஜைனனான அமரசிம்ஹன் புத்தரின் பெயர்களையும் ஜினரின் பெயர்களையும் கலந்து சொல்லிக்கொண்டு போகும்போது ‘புத்தர்’, ‘ததாகதர்’ முதலான பெயர்களுக்கு நடுவில் ‘விநாயக’ என்ற பெயரும் வருகிறது:

ஷடபிஜ்ஞோ தசபலோ, (அ)த்வயவாதீ, விநாயக:

அப்புறம் அந்த அகராதியில் விக்நேச்வரரின் பெயர்களைக் கொடுக்கும்போது,

விநாயகோ விக்நராஜ, த்வைமாதுர, கணாதிபா:
அப்யேகதந்த ஹேரம்ப, லம்போதர, கஜாநநா:

என்று விநாயக நாமாவிலேயே ஆரம்பித்திருக்கிறது.

கைலாஸ சங்கரக் ‘பிள்ளையார் – விநாயகரைக் கூடவே வைத்துக்கொண்டு சீராட்டுகிறவர். காலடி சங்கரரோ ‘புத்த- விநாயக’ரின் மதத்ததை நிற்மூலமாக்கியவர். அதனால் இந்த விநாயகரோடு அவர் சேர்ந்து இருக்கவேமாட்டார்! இதைத்தான் ‘விநா விநாயகம்’ என்று சொன்னது.

இப்படி கைலாஸ சங்கரர் இருப்பதற்கு ஒரே மாறுதலாக இவர் அபூர்வ சங்கரராக இருக்கிறார். ‘பாம்புக் கூட்டங்களின் அலங்காரம் கிடையாது’, ‘விபூதி கிடையாது’, ‘அம்பாளுக்கு பாகம் கிடையாது’, ‘உக்ர பாவம் கிடையாது’, ‘நீலகண்டம் கிடையாது’, ‘பிள்ளையார் சங்கமும் கிடையாது’, என்றெல்லாம் அர்த்தம் கொடுக்கும்படியாக பதப்ரயோகம் பண்ணி, இப்படி “அபூர்வ சங்கர”ராக ஆசார்யாள் இருக்கிறார் என்று ச்லோகம் சொல்கிறது!

இப்படிச் சொல்லும்போதே இவர் சங்கரர்தான், அதாவது பரமசிவந்தான்; ஆனால் அந்தப் பரமசிவனே தம்முடைய வழக்கமான தன்மைகளுக்கு வித்யாஸமாக அபூர்வ ரூபம் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார் என்றும் சிவாவதாரத்தை ஸ்தாபிக்கிறது. இவர் பரமசிவனின் அவதாரமாகக் கொண்டு தானே மூல பரமசிவனோடு இவரை ஒப்பிட்டு ஒவ்வொன்றாக வித்யாஸம் காட்டுவது? இப்படி மஹாவிஷ்ணுவோடோ, வேறு ஸ்வாமியோடோ ஆசார்யாளை ஒப்பிட்டுப் பார்க்கவில்லையல்லவா?

இப்படியாக ஆசார்யாளின் சிஷ்ய ரத்னங்களாக இருக்கப்பட்ட தோடகாசார்யாள், ஸுரேச்வராசார்யாள், பத்மபாதசார்யாள் ஆகிய மூன்று பெரும் அவர் ஈச்வராவதாரம்தான் என்பதற்கு ‘எவிடென்ஸ்’ கொடுத்திருக்கிறார்கள்.


1 “No man is a hero to his valet”.

2 அது இயற்றப்பட்ட ஸந்தர்பம் குறித்து பிற்பாடு பார்க்கலாம்

3 இச் சம்பவ விவரங்கள் பிற்பாடு காண்போம்

4 சிவ கேசாதி பாதாந்த வர்ணன ஸ்தோத்ரம் – 18

5 ஸ்ரீ ஆசார்யாளை குறித்த பிரஸித்தமான ச்லோகம் :

ச்ருதி – ஸ்ம்ருதி – புராணநாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோகசங்கரம்.

6 ‘கஜவதந குஹாச்லிஷ்ட பார்ச்வம் மஹேசம்’ : ஆனைமுகன் குஹன் ஆகியவரால் இரு மருங்கும் தழுவப்பட்ட மஹேச்வரனை (வணங்குகிறேன்)

7 ஆப்தேயின் ஸம்ஸ்க்ருத – ஆங்கில அகராதிப்படி ‘விநாயகர்’ என்பது புத்தர் ஒருவரை மட்டுமின்றி பௌத்தர்கள் தெய்வமாகப் போற்றும் அவர்களது எல்லா குருமாருக்குமே பெயர் என்று தெரிகிறது. “a Buddhist deified teacher”.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஈச்வராவதார ப்ரமாணங்கள்:வேத - இதிஹாஸ - புராணங்களில்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அவரே அளிக்கும் சான்று!
Next