ஆதிசேஷன் அவதாரம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஒருநாள் ஸாயங்காலம் விஷ்ணு இப்படி த்யானம் பண்ணி சிவ தாண்டவத்தைப் பார்த்து ரஸித்துக் கொண்டிருந்தார். ஹ்ருதய கமலத்தில் ப்ரஸன்னமாயிருக்கும் நடனமூர்த்தியின் ஸ்வரூபத்தைப் பார்த்ததில் அவருக்கு ஸந்தோஷம் தாங்கமுடியாமல் பூரிப்பு ஏற்பட்டது.

அந்த கனத்தை ஆதிசேஷனால் தாங்கமுடியவில்லை.

அவர் விஷ்ணுவிடம், “என்ன, இப்படி ஒரே பாரமாகி விட்டீர்களே! என்னால் தாங்கமுடியவில்லையே! என்ன காரணம்?” என்று கேட்டார்.

அதற்கு விஷ்ணு, “என் ஹ்ருதயத்தில் பரமேச்வரன் நர்த்தனம் பண்ணினார். அதுதான் பாரத்திற்குக் காரணம்” என்று பதில் சொன்னார்.

ஸந்தோஷத்தினாலேயே பாரம் என்கிறபோது அது அத்வைதம். ஈச்வரன் இவர் ஹ்ருதயத்தில் தோன்றியதால் பாரம் என்றால் இவர் ப்ளஸ் அவர் என்று இரண்டு பேர் சேர்ந்ததால் பாரம் என்பதாக த்வைத்மாக அர்த்தம் கொடுக்கிறது. அத்வைதமாகப் பண்ணிக் காட்டியதைத் திருவாரூரில் முக்காலே மூணு வீசம் மூடி வைக்கும்படியாகி விட்டதல்லவா? அதனால். பொதுஜனங்களுக்கு அவர்களுக்குப் புரிவதான த்வைத்மாகக் காட்டித்தான் அப்படியே அத்வைதத்திற்கு அழைத்துக்கொண்டு போகவேண்டும். ஆதிசெஷனின் மூலம் இதைப் பண்ண வேண்டும்’ என்று பகவான் நினைத்தார். அதனால்தான் இப்படிச் சொன்னார். இப்படிச் சொன்னால் ஆதிசேஷன் என்ன கேட்பார் என்று அவருக்குத் தெரியும்.

அவர் நினைத்ததுபோலவே ஆதிசேஷன், “அப்படிப்பட்ட ஈச்வர தாண்டவத்தை நான் பார்க்க வேண்டுமே!” என்றார்.

அதற்குத்தான் பகவான் காத்துக்கொண்டிருந்தார். மூடி மறைத்துக்கொள்ளாமல் நன்றாகத் தாண்டவமாடுவதாக வெளியில் தெரிகிற நடராஜ மூர்த்தியிடம் பதஞ்சலியை அனுப்பி, அவருடைய பக்தி விசேஷத்தினால் சிதம்பர க்ஷேத்ரத்திற்கு மேலும் கீர்த்தி ஏற்படச் செய்து, எல்லா ஜனங்களும் வந்து கண்ணார தர்சனம் பண்ணி, தர்சனத்தினாலே முக்தி பெறச் செய்யவேண்டுமென்பதுதான் அவருடைய ஆசை.

திருவாரூரில் பிறந்தால் முக்தி” “ஜநநாத் கமலாலயே” பிறப்பது நம்மிஷ்டம் இல்லை! சிதம்பரத்தில் தர்சன மாத்திரத்தால் முக்தி: “தர்சநாத் அப்ர ஸதஸி”. எங்கே பிறந்தவரானாலும் அங்கே போய் தர்சனம் பண்ணி மோக்ஷத்திற்குப் போய்விடலாம். த்வைதமான தர்சனத்தினாலேயே அத்வைதமான மோக்ஷம்! பதஞ்சலியின் மூலம் சிதம்பர மஹிமையை ப்ரகாசிக்கச் செய்து ஸர்வ ஜனங்களுக்கும் மோக்ஷோபாயம் காட்ட பகவத் ஸங்கல்பம் ஏற்பட்டது.

மகாவிஷ்ணு பதஞ்சலியிடம், “சிவ தாண்டவம்தானே பார்க்கணுமே? பாரத் வர்ஷத்தில் தக்ஷிண தேசத்தில் தில்லைவனத்தில் சிதம்பர க்ஷேத்ரம் இருக்கிறது. அங்கே சிவன் நடராஜாவாக ஆனந்தமாக ஆடிக்கொண்டிருக்கிறார். போய் தர்சனம் பண்ணிக்கொள்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

இவருடையாவும் ஜனந்களுடையவும் ஆத்மா க்ஷேமத்திற்காக மட்டும் அனுப்பி வைக்காமல் அறிவு விஷயமாகவும் பூலோகமே உபகாரம் பெரும்படியாக இன்னொரு பெரிய கார்யத்தையும் கொடுத்தார். “நடராஜாவின் டமருக நாதத்தைக் கொண்டு பாணினி வ்யாகரண ஸுத்ரம் செய்திருக்கிறார். அதைப் புரிந்துகொள்ள மஹா மேதாவிகளைத் தவிர மற்ற எவராலும் முடியாமலிருக்கிறது. ஆகையால் தேவ பாஷையான ஸம்ஸ்க்ருத்தின் அந்த வ்யாகரண ஸுதரங்களை நன்றாகப் புரியவைத்து பெரிய பாஷ்ய புஸ்தகம் எழுது” என்றும் ஆஜ்ஞாபித்தார்.

தூங்குகிற மஹாவிஷ்ணுவுக்குப் பாம்பு படுக்கை. அவர் உட்கார்ந்தால் அந்தப் பாம்பே ஸிம்ஹாஸனமாகிவிடும். நடந்து போனாரானால் குடை பிடிக்கும். ஆனால் மகாவிஷ்ணு நாட்யம் ஆடுவதில்லை. சிவன்தான் ஆடுகிறவர். ஆடுகிறவருக்குப் பாம்பு எந்தவிதத்தில் பணி செய்ய முடியும்? ஆபரணமாக அவர் உடம்பிலேயே நெளிந்துகொண்டு அலங்காரப் பணி செய்கிறது! ஈச்வரன் மேலே பல பாம்புகள் நெளிகிறபோது, அவருடைய பாதத்தில் சிலம்பாகச் சுற்றிக்கொள்ள ஆதிசேஷன் போனார்.

ஆதிசேஷப் பாம்பு பதஞ்ஜலி மஹர்ஷியாக அவர்தாரம் செய்து நடராஜாவிடம் போய்ச் சேர்ந்தது. அதனால் மஹாவிஷ்ணுவுக்கு சேஷபர்யங்கம் இல்லாமல் போய் விட்டதென்று அர்த்தம் பண்ணிக்கொள்ளக் கூடாது. ஆதிசேஷன் அங்கேயும் இருந்துகொண்டே தம்முடைய அம்ச கலைகளினால் பூமியில் ஒரு அவதார ரூபம் எடுத்தார்.

அத்ரி மஹர்ஷியின் புத்ரராகப் பதஞ்ஜலி அவதரித்தார்.அ தனால் ஆத்ரேயர் என்று அவருக்கு ஒரு பெயர். (ஆசார்யாளும் ஆத்ரேய கோத்ரம்தான் என்று பார்த்தோம்.)

கோணிகா புத்ரர் என்றும் அவருக்கு ஒரு பெயர். சில புராணங்களை அநுஸரித்துப் ‘பதஞ்ஜலி சரித’த்தில் அவர் கோணிகா என்ற தபஸ்வினிக்குப் புத்ரராகப் பிறந்த கதையைச் சொல்லி, அதிலிருந்தே ‘பதஞ்ஜலி’ என்ற பெயர் ஏற்பட்டதற்குக் காரணம் சொல்லியிருக்கிறது.

கோணிகா அஞ்சலி முத்ரையுடன் கூடிய கையில் அர்க்ய ஜலத்தை வைத்துக்கொண்டு ஸுர்ய பகவானிடம் தனக்கு மஹாத்மாவான புத்ரனை அருளுமாறு வேண்டிக் கொண்டிருந்தாள். அப்போது ஆகாசத்திலிருந்து ஆதிசேஷன் அந்த அஞ்சலி ஹஸ்தத்தில் விழுந்து அவதாரம் எடுத்தார். ‘பத்’ என்றால் ‘விழுவது’. அஞ்சலி ஹஸ்தத்தில் விழுந்ததால் அவருக்குப் ‘பதஞ்ஜலி’ என்று மாதா பெயர் வைத்தால் – இப்படி (‘பதஞ்ஜலி விஜய’த்தில்) பெயருக்குக் காரணம் சொல்லியிருக்கிறது.

சரகர் என்றும் அவருக்கு ஒரு பெயர்.

அவர் ஆசைப்பட்டு ஜன்மா எடுத்தது நடராஜ தாண்டவம் பார்ப்பதற்காக. அந்த ஆசை பரிபூரணமாக நிறைவேறிற்று. சிதம்பரத்தில் வாஸம் செய்துகொண்டு, நடராஜாவை ஸதா கால தர்சனம் பண்ணி, அவருடைய முக்யமான இரண்டு பக்தர்களின் ஒருத்தராகிவிட்டார்.

இவருடைய ஆசை நிறைவேறுமாறு இவரை அனுப்பி வைத்தா விஷ்ணுவுக்கு இவர் மூலமாக லோகோபகாரமான அறிவுப் பணியும் நடக்கவேண்டும் என்பதல்லவா ஆசை? அந்த ஆசையும் நன்றாக நிறைவேறியது – பதஞ்ஜலி தேவ பாஷைக்கு வ்யாகரண மஹாபாஷ்யம் எழுதினார். அவருக்கு அது மிகவும் ப்ரஸித்தியைக் கொடுத்தது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அஜாப-ஹம்ஸ நடனம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  திரிகரணத்திற்கும் திருத்தொண்டு
Next