ஆயிரம் சீடருக்கு அதிசயப் பாடம்! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

சிதம்பரம் ஆயிரக்கால் மண்டபத்தில் பதஞ்ஜலி பாடம் நடத்தினார். அவரோ ஆயிரம் நா படைத்த ஆதிசேஷன்! ரொம்பவும் விஸ்தாரமான விஷயமென்றால், ‘ஆயிரம் நா படைத்த ஆதிசேஷன்தான் சொல்லணும்’ என்றே வசனமிருக்கிறது. மஹாபாஷ்யம் அவ்வளவு விஸ்தாரமானது. ஸாதாரணமாகப் பதஞ்ஜலி மநுஷ்ய ரூபத்தில் ஒரு ரிஷியாகத் தெரிந்து கொண்டிருந்தவர்தான். ஒரு முகம், ஒரு நாக்கு என்று இருந்தவர்தான். இப்போது என்ன ஆயிற்றென்றால் அவர் நிஜமாகவே ஆயிரம் நா படைத்த ஆதிசேஷ ரூபத்தையே எடுத்துக் கொள்ளும்படியாயிற்று.

ஏனென்றால், அவரிடம் பாடம் கேட்க ஆயிரம் சிஷ்யர்கள் சேர்ந்துவிட்டார்கள்.

வித்யையை, அதிலும் பாஷா சாஸ்த்ரத்தை, அறிவதில் இந்த தேசத்தில் ஆதிகாலத்திலிருந்து இருந்து வந்துள்ள அக்கறை அதிசயமானது. தேசத்தின் ஒரு மூலைக்கு மறு மூலை போய்க்கூட வித்யாப்யாஸம் செய்தார்கள். அப்படி இப்போதும் இந்தப் பெரிய உபகண்டத்தின் நாலா திசையிலிருந்தும் சிதம்பரத்துக்கு வித்யார்த்திகள் வந்துவிட்டார்கள்.

அவர்களில் ஒவ்வொருவருக்கும் ‘இன்டிவிஜீவல் அடேன்ஷன்’ கொடுத்து (தனிப்பட கவனம் செலுத்தி) பாடம் சொல்லவேண்டும், முடிந்த மட்டும் சீக்ரமாக இதைச் செய்து முடிக்கவேண்டும் என்று பதஞ்ஜலி நினைத்தார். எந்த சிஷ்யன் எந்தக் கேள்வி கேட்டாலும் தாமஸமில்லாமல் உடனே பதில் சொல்லவேண்டுமென்று நினைத்தார். இப்படி ஒவ்வொருவருக்கும் பாடம் சொல்லி, ஒவ்வொருவரிடமும் தனியாக ஸந்தேஹங்கள் கேட்டு நிவர்த்தி செய்வதென்றால் ஒரு முகத்தோடு, ஒரு வாயோடு இருந்தால் போதாது என்று எண்ணினார். அதனாலேயே ஆயிரம் சிரஸுள்ள ஆதிசேஷ ஸ்வரூபத்தையே பாடம் சொல்லும் காலத்தில் எடுத்துக்கொள்வது என்று தீர்மானித்தார்.

ஆனால் ஆதிசேஷ ஸாந்நித்யத்தை மநுஷர்களால் தாங்கமுடியாது. அதனுடைய த்ருஷ்டி பட்டால் போதும், அல்லது மூச்சுக் காற்றுப் பட்டால் போதும், எந்த மநுஷ்யரானாலும் பஸ்மமாய்ப் போய்விடவேண்டியதுதான். ஆதிசேஷன் பார்ப்பது மட்டுமில்லை, ஆதிசேஷனைப் பார்த்தாலுங்கூட, பார்க்கிற மநுஷர் பஸ்மாவாகிவிட வேண்டியதுதான்! அவ்வளவு உக்ரம்!

அதனால் என்ன உத்தேசித்தாரென்றால்… தம்மைச் சுற்றி ஒரு திரையைப் போட்டுக்கொண்டு அதற்குள் ஆதிசேஷ ரூபத்தில் இருப்பதென்றும், சிஷ்யர்களைத் திரைக்கு வெளியில் தம்மைச் சுற்றி, ஒவ்வொரு முகத்துக்கும் நேரே ஒரு சிஷ்யன் இருக்கும் விதத்தில் உட்காரவைத்துக் கொள்வதென்றும் தீர்மானித்துக் கொண்டார்.

இப்படி குரு கண்ணில் படாமல் மறைவாக இருப்பதால் சிஷ்யர்களில் யாராவது இஷ்டப்படி வெளியிலே சுற்றப் போய்விட்டால் என்ன பண்ணுவது? அப்படி ஆகாமல் பயமுறுத்தி மிரட்டித் தடுக்கவேண்டுமென்று நினைத்து, ‘உத்தரவில்லாமல் யாராவது வெளியே போனால் அவர்கள் ப்ரம்ம ரக்ஷஸாவிடுவார்கள்’ என்று சாபமாக ஆஜ்ஞை செய்தார்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is திரிகரணத்திற்கும் திருத்தொண்டு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பிரம்மரக்ஷஸ்;ராக்ஷஸ ஜாதி
Next