பிரம்மரக்ஷஸ்; ராக்ஷஸ ஜாதி : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ப்ரம்ம ராக்ஷஸம் என்கிறோமே, அதுதான் ப்ரம்மரக்ஷஸ். அது பிசாசைப் போன்ற ஒருவிதப் பிறவி. தேவதைகளில் அநேக விதம் இருப்பதுபோலப் பிசாசுகளிலும் உண்டு. மநுஷர்கள், பக்ஷிகள், ம்ருகங்கள் எல்லாவற்றிலும்தானே விதம்விதமாகப் பார்க்கிறோம்?

வேடிக்கை என்னவென்றால் ராக்ஷஸ ஜாதியிலேயே பலவிதம் இருந்தாலும் அந்த ராக்ஷஸ ஜாதி என்பதே பலவிதமான தவ ஜாதிகளில் ஒன்றுதான்! தேவர்கள் என்று பொதுவாக நாம் சொல்பவர்களோடு ராக்ஷஸர்கள் சண்டை போட்டதாகவே புராணங்களில் பார்ப்பதால் அவர்கள் வேறே ஜாதி, இவர்கள் வேறே ஜாதி என்று தோன்றினாலும், வாஸ்தவத்தில் ராக்ஷஸர்களும் தேவஜாதிகள் பலவற்றுக்குள்ளேயே தாழ்ந்து தாழ்ந்துபோய் க்ரூரமாக இருக்கும் ஒரு பிரிவுதான்! அஸுரர்கள் என்பவர்தான் தேவ ஜாதிக்கு முற்றிலும் வேறானவர்கள். ஸுரர் என்ற தேவருக்கு நேரெதிர் அஸுரர்தான். பேச்சு வழக்கிலுங்கூட ‘தேவாஸுர’ என்கிறோமே தவிர ‘தேவராக்ஷஸ’ என்று சொல்வதில்லையல்லவா? ‘அமர’த்தில் ஆதித்தியர்களில் ஆரம்பித்து தேவ ஜாதிகளைச் சொல்லிக்கொண்டு போகும்போது “வித்யா-அப்ஸரஸோ-யக்ஷ-ரக்ஷோ-கந்தர்வ-கிந்நரா” என்று ராக்ஷஸர்களையும் உள்ளடக்கிச் சொல்லியிருக்கிறது. இவர்களெல்லாம் தேவ ஜாதிகள் “தேவ யோநய:” என்று முடித்துவிட்டு அப்புறம் அஸுர ஜாதிகளை “அஸுரா-தைத்ய-தைதேய-தநுஜ” என்று அடுக்கியிருக்கிறது.

இந்த ராக்ஷஸ ஜாதிக்குள் அப்புறம் பல பிரிவுகள், உபஜாதிகள் – மநுஷ்ய ஜாதியிலேயே நாலு ஜாதி, அப்புறம் அதில் ஒவ்வொரு ஜாதியிலும் ஸப்-ஸெக்டுகள் என்று இருக்கிறதுபோல. அப்படி ராக்ஷஸ ஜாதியை சேர்ந்த ஒன்றுதான் ப்ரம்ம ரக்ஷஸ். பிசாசுமாதிரியான ஆவி வகைகளைச் சேர்ந்தது அது. (ஆச்சர்யமாயிருக்கலாம்: பிசாசுகூட தேவ ஜாதியில் வருவதுதான்! “பிசாசோ குஹ்யக: ஸித்தோ பூதோ (அ)மீ தேவயோநய:” என்று ‘அமர’த்தில் முடிந்திருக்கிறது.) வேதாத்யயனம் நன்றாகப் பண்ணியும், துன்மார்க்கத்தில் போய் மற்ற ப்ராம்மணர்களுடைய ஸொத்து, ஸ்த்ரீ முதலானவற்றை அபஹரித்து அல்பாயுசில் செத்துப் போனவர்கள் அந்த வேத ஞாபகத்தோடேயே பிசாசு மாதிரி இருப்பதுதான் ப்ரம்மரக்ஷஸ். அதற்கு ஆஹாரம் தினந்தோறும் வேதம் தெரிந்த ஒரு ப்ராம்மணனைச் சாப்பிடுவதுதான்! மாறுவேஷத்தில் போய் வேத அத்யயனம் செய்தவர்களிடம் நயமாகப் பேசி நீள இழுக்கடித்துக்கொண்டு தனியிடத்துக்குப் போய் வேத சாஸ்த்ர ஸம்பந்தமாகவே அநேகம் கேள்விகள் கேட்கும். அவர்கள் பதில் தெரியாமல் முழிக்கும்போது அடித்து பக்ஷித்துவிடும். ‘ப்ரம்ம ராக்ஷஸம் அடிச்சுப் போட்டுடுத்து’ என்று க்ராமாந்தரங்களில் சொல்வதுண்டு.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஆயிரம் சீடருக்குப் அதிசயப் பாடம்!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  விபரீதம் விளைந்தது!
Next