ஆசார்யாளின் போற்றுதல் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

கௌடபாதரின் ‘மாண்டூக்ய காரிகா’வுக்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். அதை முடிக்கும்போது, ‘அம்ருதம் சாப்பிட்டதால் அமரர் என்றே பேர் பெற்ற தேவ ஜாதிக்கும் கிடைக்கவொண்ணாத ஞானாம்ருதத்தை ஸம்ஸார ஸாகரத்தில் உழலும் மநுஷ்ய ஜாதிக்குப் பரமகருணையால் கொடுத்தவர்’ என்று கௌடபாதரை ஸ்தோத்ரம் செய்கிறார். தம்முடைய (குருவின் குருவாகிய) பரம குருவான அவர் பூஜ்யர்களுக்குள்ளேயும் மஹாபூஜ்யர் என்று கொண்டாடி, “அவருடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்” என்று சொல்கிறார்:

“பூஜ்யாபிபூஜ்யம் பரமகுரும் – அமும் பாதபாதைர் – நதோஸ்மி”

ஜனங்கள் ஸம்ஸார ஸாகரத்தில் ஜனன – மரண முதலையின் பிடிப்பில் அகப்பட்டுக் கொண்டு அவஸ்தைப்படுகிறார்கள். அப்போது – ஆசார்யாள் வாக்குப்படி – கௌடபாதர் கருணாவசமாகி என்ன பண்ணுகிறார்? வேதம் என்று இன்னொரு ஸாகரம் இருக்கிறது. அது க்ஷீர ஸாகரம். அதில் நம்முடைய ஞானம் என்ற மந்தர மலையைப் போட்டுக் கடைந்து அத்வைதாம்ருதம் எடுக்கிறார். அதை ஜனங்களுக்குக் கொடுத்து ஜனன மரண நிவ்ருத்தி அளிக்கிறார்! இப்படி ஆசார்யாள் கௌடபாதரை ஸ்துதித்திருக்கிறார்.*

‘பாத(da)-பாத(ta) என்றால் ‘காலில் விழுந்து’. அத்தனை மரியாதையாக ஆசார்யாள் தம்முடைய பரம குருவுக்கு நமஸ்காரம் செய்கிறார்.

இவர் யார் பாதத்தில் விழுகிறாரோ அவர் கௌடபாதர்! மஹான்களின் பேரோடு ‘பாத’ என்று சேர்த்துச் சொல்வது வழக்கம். ‘அடிகள்’ என்பதும் அதே அர்த்தம்தான். பகவானின் பாதத்தில் நம்மைச் சேர்பிப்பதற்காக நாம் யாருடைய பாதத்தில் விழவேண்டுமோ அவர்களயே ‘பாதர்’ என்பது.

இங்கே, கௌடபாதரின் பாதத்தில் விழுகிறவரோ பகவத்பாதர்! (அதாவது) நாம் முடிவாகப் பிடிக்கவேண்டிய ஈச்வர சரணாரவிந்தத்தின் ஸ்வரூபமாகவே இருப்பவர்.

ஆசார்யாளுக்கும் அவருடைய நேர் குருவுக்கும் மட்டும் தான் ‘பகவத்பாத’ சேர்த்து, ஸ்ரீ சங்கர பகவத்பாதர், ஸ்ரீ கோவிந்த பகவத்பாதர் என்று சொல்வது. மற்றவர்களுக்கு (பகவத் சேர்க்காமல்) ‘பாத’ மட்டுந்தான் சேர்த்துச் சொல்வது.

புஸ்தகங்களின் முடிவில் – ஒவ்வொரு அத்யாய முடிவிலுமே – ‘இன்னாருடைய சிஷ்யரான இன்னாரால் பண்ணப்பட்ட இன்ன புஸ்தகத்தில் இன்ன அத்யாயம், அல்லது புஸ்தக ஸமாப்தி’ என்று போடுவது வழக்கம். அதற்குப் ‘புஷ்பிகை’ என்று பெயர். Colophon என்பது. ஆசார்யாளின் புஸ்தகங்களில் அப்படிப் போடும்போது அவரை ‘பகவத்பாதர்’ என்று சொல்லாமல் ‘பகவான்’ என்றே ‘சங்கர பகவத:’ என்றும், அவருடைய குருவைத்தான் பகவத்பாதர் – பகவத் பூஜ்ய பாதர் – என்றும் குறிப்பிடுவதாக நெடுங்கால வழக்கம் இருந்து வருகிறது – “இதி ஸ்ரீ கோவிந்த பகவத் பூஜ்யபாத சிஷ்யஸ்ய ஸ்ரீ சங்கர பகவத: க்ருதௌ” என்று.

கௌடபாதர் கதையை அவர் பதரிகாச்ரமத்தில் ஆத்ம நிஷ்டையில் உட்கார்ந்து விட்டாரென்று முடித்தோம்.

இங்கே நர்மதா தீரத்திலிருந்து சந்த்ரசர்மா என்ன ஆனார்? அவர் எப்போது கோவிந்த பகவத் பாதரானார்?


* ப்ரஜ்ஞா-வைசாக-வேத-க்ஷீபித-ஜலநிதேர்-வேத-நாம்நோ-(அ)ந்தரஸ்தம்

பூதாந்-யாலோக்ய மக்நாந்-யவிரத-ஜநந-க்ராஹ-கோரே ஸமுத்ரே |

காருண்யாதுத்ததாராம்ருதம்-இதம்-அமரைர்-துர்லபம் பூதஹேதோ:

யஸ்தம் பூஜ்யாபி பூஜ்யம் பரமகுருமமும் பாதபாதைர்-நதோஸ்மி ||

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஞானியும் பக்தியும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  சந்திர சர்மாவின் சரித்திரம்
Next