குரு பரம்பரையில் ப்ரம்மா : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இப்படிச் சொல்லும்போது, ஸ்ருஷ்டிகர்த்தாவாக இல்லாமல், ஆனால் குரு பரம்பரையில் ஒரு மூல புருஷராக ப்ரஹ்மா இருப்பது நினைவுக்கு வருகிறது. நாரதருக்கு நாம மந்த்ரம் உபதேசித்த பக்தி குருவாக இருக்கிற அவர் வேதாந்த (அதாவது ஞான மார்க்க) குருவாகவும் இருக்கிறார். குரு என்பதுதான் நாம் எடுத்துக்கொண்டுள்ள விஷயமாதலால் ப்ரஹ்மாவை குருவாகக் கொண்டு வருவதிலும் பொருத்தம் இருக்கிறது.

சங்கர பகவத் பாதாளைப் பின்பற்றுபவர்களான ஸ்மார்த்தர்களின் ப்ரஹ்ம வித்யா குரு பரம்பரையில் ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் மூன்று பேருமே இருக்கிறார்கள். ஆதி முதல் குரு பேசாமலே, வாயுபதேசம் செய்யாமலே, ஞானத்தைக் கொடுத்துவிடும் தக்ஷிணாமூர்த்தி. சிவ பெருமானின் பரம ஞான வடிவமான அவர்தான் ஆதி குரு. அப்புறம் ப்ரஹ்மா – விஷ்ணு – சிவன் மூவரும் ஒன்றுசேர்ந்த ரூபமாக மூன்று தலையோடு விளங்கும் தத்தாத்ரேயர். (அந்த ரூபத்திலே அவர் ஞான குருவாயிருந்தாலும், தனியாக அந்த மூன்று பேரைச் சொன்னால் ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரங்களைத்தான் குறிக்கிறது. இவ்விஷயம் இருக்கட்டும்.) தத்தாத்ரேயருக்கு அப்புறம்தான் நன்றாக வாய்விட்டே, க்ரமமாகவே, குரு சிஷ்யாளென்று உபதேசம் செய்வது ஏற்பட்டது. முதலில் அப்பா – பிள்ளைகளே இப்படி குரு – சிஷ்யாளாக ஐந்தாறு தலைமுறை போய், அப்புறம் கல்யாணமே பண்ணிக்கொள்ளாத சுகாசார்யாளிலிருந்து ஸந்நியாஸ குரு – ஸந்நியாஸ சிஷ்யர் என்று அந்த ப்ரஹ்ம வித்யா குரு பரம்பரை போகிறது*. இதிலே முதலாவது குரு மஹாவிஷ்ணு அப்புறம் அவர் பிள்ளையான ப்ரஹ்மா:

நாராயணம் பத்மபுவம்

நாராயணன் முதலில், அடுத்து பத்மபுவரான – தாமரைப் பூவில் தோன்றியவரான – ப்ரஹ்மா. ப்ரஹ்மா சிஷ்யராகப் பிதாவிடமிருந்து ப்ரஹ்ம வித்யையை உபதேசம் வாங்கிக்கொண்டு, அப்புறம் தாமும் ப்ரஹ்ம வித்யா குருக்களில் ஒருவராகித் தம்முடைய புத்ரரான வஸிஷ்டருக்கு அதை உபதேசம் பண்ணினார். நாரதர் ப்ரஹ்மாவுக்குப் பிள்ளை என்கிறாற்போல வஸிஷ்டரும் அவருடைய பிள்ளைதான். ப்ரஜாபதிகள் என்று பத்துப் பேர் ப்ரஹ்மாவின் புத்ரர்கள். வேதத்தில் ப்ரஜாபதி என்றால் ப்ரஹ்மா என்றாலும் வழக்கில் அவருடைய பத்துப் புத்ரர்களுக்கே அது பெயராக ஆயிற்று. அந்தப் பத்து ரிஷிகளில் நாரதர் மாதிரியே வஸிஷ்டரும் இன்னொருவர். அவருக்குப் பரமோபதேசமான அத்வைதத்தை ப்ரஹ்மா உபதேசம் பண்ணியிருக்கிறார். ஸ்ரீ வைஷ்ணவர்களின் குரு பரம்பரையில் முதலில் மஹாவிஷ்ணு, அப்புறம் மஹாலக்ஷ்மி. பெரிய பெருமாள், பெரிய பிராட்டி என்று அவர்களைச் சொல்வார்கள். அப்புறம் ப்ரஹ்மா இல்லை. சிவ ஸுதனான பிள்ளையார் சிவனுடைய பூதப்படைகளுக்கெல்லாம் தலைவரான கண – பதியாக இருக்கிறாரல்லவா? அப்படி விஷ்ணு கணங்களுக்கெல்லாம் பதியாக ஒருத்தர் இருக்கிறார். அவர் ப்ரஹ்மா இல்லை. அவர் பெயர் விஷ்வக்ஸேனர். ‘சேனை முதலியார்’ என்று சொல்வார்கள். அவர்தான் மஹாலக்ஷ்மிக்கு அடுத்ததாக வரும் ஸ்ரீ வைஷ்ணவ குரு. அவருக்கப்புறம் பூலோகத்திலேயே இருந்த நம்மாழ்வாரிலிருந்து அவர்களுடைய மநுஷ்ய ரூப குருக்கள்.

ஸ்மார்த்த ஸம்பிரதாயத்தில் மஹாவிஷ்ணுவுக்கு அப்புறம் ப்ரம்மா.

ஆகையால், ப்ரஹ்மாவுக்குக் கோவில், பூஜை என்று எதுவுமில்லாவிட்டாலும், வேதாந்தம் அப்யாஸம் செய்கிற ஸ்மார்த்தர்கள் குரு த்யானத்தில் ஆரம்பிக்கும்போது “நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம்” என்று ச்லோகம் சொல்லி நமஸ்காரம் பண்ணும்போது (பத்மபுவரான) ப்ரஹ்மா நமஸ்காரம் வாங்கிக் கொண்டு விடுகிறார். இது கொஞ்சம் ஆறுதலாயிருக்கிறது.

இப்படியே வ்யாஸபூஜை என்பதாக ஆண்டுதோறும் ஸந்நியாஸிகள் குரு பரம்பரா பூஜை செய்யும்போது அதில் ஸரஸ்வதி, நாரதர் ஆகிய இரண்டு பேருக்கும் கூடப் பூஜை சொல்லியிருக்கிறது.

வேதாந்தம் படிப்பவர்கள், ஸந்நியாஸிகள் ஆகியவர்களுக்கு ப்ரஹ்மாவைப் பற்றி ஸென்டிமென்டலான ரிஸர்வேஷன்கள் இருக்காதாதலால் இங்கே அவர் ஸ்ருஷ்டி கர்த்தா என்பதற்காக இல்லாமல் குரு என்ற ஹோதாவில் நமஸ்காரம் பெற்றுவிடுகிறார். ஆனாலும் ஜனஸமூஹத்தில் இது விதிவிலக்கு மாதிரித்தானேயொழிய விதியாக இருப்பதல்ல.


* “தெய்வத்தின் குரல்” – இரண்டாம் பகுதி – “நம்மை நாமாக்குகிறவர்” என்ற உரையில் “குரு பரம்பரை” என்ற உட்பிரிவில் விவரம் காண்க.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is சந்திர சர்மாவின் சரித்திரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  (நிர்வாணம்)
Next