அவதார பூமிக்கான யோக்யதாம்சம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அந்த வம்சங்களில் வந்த நம்பூதிரிகள் மலையாள தேசத்தில் வைதிக அநுஷ்டானங்களைப் புஷ்களமாக (நிறைவாக)ப் பண்ணிக்கொண்டு ஸதாசார ஸம்பன்னர்களாக வாழ்ந்து வந்தார்கள். அந்த வம்சத்துக்காரர்கள் மட்டுமில்லை; நம்பூதிரி ஸமூஹம் முழுதுமே அப்படி இருந்து வந்தது. மலைக்கு மறுபக்கம் நடக்கும் வ்யவஹாரங்களில் சிக்கிக்கொண்டு குழப்பம் அடையாமல் அவர்கள் ஒதுக்குப் புறமாக இருந்த தங்கள் தேசத்தில் நிச்சிந்தையாகப் பழைய வழிகளிலேயே போய்க்கொண்டிருந்தார்கள்.

அப்போதென்ன, ‘சாஸ்த்ரமும் வேண்டாம், ஸம்ப்ரதாயமும் வேண்டாம்’ என்று விட்டுவிட்டு, எல்லாம் கிரிசை கெட்டுக்கிடக்கிற தற்காலத்திலுங்கூட1 எங்கேயாவது கொஞ்சம் விதிவத்தாக அத்யயனம் நடந்து வைதிகஸ்ரீ இருந்துகொண்டிருக்கிறதென்றால் அது மலையாள தேசந்தான் என்றுதானே பார்க்கிறோம்? அங்கேதான் தற்போதும் அநேக நம்பூதிரி க்ருஹங்களில் கர்ப்பத்தைக் கூட்டி எட்டு வயஸில் பசங்களுக்கு உபநயனம் செய்து, அப்புறம் அஞ்சு ஆறு வருஷமாவது அவரவருக்கான (வேத) சாகையில் அத்யயனம் பண்ணுவதற்கு விடுகிறார்கள். இந்த (அத்யயன) காலத்தில் சாஸ்த்ரத்தில் சொல்லியுள்ளபடி ப்ரஹ்மசாரிப் பசங்கள் ஒரு கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டு, தண்டம் வைத்துக்கொண்டு, மான்தோலில் படுத்துக்கொண்டு நியமமாக இருக்கிறார்கள். முதல் மந்த்ரியாயுள்ள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சங்கரன் நம்பூதிரியோடு கூட இப்படி சாஸ்த்ரோக்தமாக அத்யயனம் பண்ணியவர்தான்! (சிரித்து) கம்யூனிஸ்ம் மாத்ரமென்ன? அதுவும் ‘அபேதவாதம்’ என்னும் ஸோஷலிஸத்தின் கெடுபிடி ரூபந்தான். ‘அத்வைதம்’ என்றாலும் ‘அபேதம்’ என்றாலும் ஒன்றுதான்! இவர் பேரும் ஆசார்யாள் பேராகவே இருக்கிறது! அதிலுங்கூட அத்வைதம்!

பிற்பாடு இங்கிலீஷ் படிப்புக்குப் போகிறவர்களும்கூட ஆரம்பத்தில் சில வருஷங்கள் அத்யயனம் பண்ணாமலிருப்பதில்லை என்று ஸமீப காலம்வரை நம்பூதிரிமார்களிடையில்தான் நடந்து வந்திருக்கிறது.

இந்த இருபதாம் நூற்றாண்டின் புது நாகரிகக் கூத்தாட்டத்திலும்கூட இப்படி மலையாளத்தில் ஓரளவு வேதாத்யயனம் இருக்கிறதென்றால் இரண்டாயிரத்தைநூறு வருஷங்களுக்கு முந்தி எப்படி இருந்திருக்கும்?

அதனால்தான் அவதார பூமியாகப் பரமேச்வரன் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தது. சாஸ்த்ர வழியை லோகத்துக்குக் காட்டுவதற்காக அவர் அத்யயனம், குருகுலவாஸம் செய்யணுமென்றால் அவை உள்ள இடத்தில் பிறந்து வளர்ந்தால்தானே முடியும்?


1 இப்பகுதி 1959 மார்ச்சில் ஸ்ரீசரணர்கள் ஆற்றிய ஓர் உரையைச் சேர்ந்தது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஆர்யாம்பா:காஞ்சி காமாக்ஷி ஆர்யன்:ஐயப்பன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பெற்றோரான புண்யசாலிகள்
Next