ஜயந்திச் சிறப்புக்கள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

பரம புண்யமான அந்த அவதார காலம் ஒரு நந்தன வருஷத்தில் வைசாக சுத்த பஞ்சமியில் அபிஜித் முஹூர்த்தத்தில் ஏற்பட்டது. வைசாக சுத்த பஞ்சமி என்றால் வைகாசி மாஸத்து வளர்பிறைப் பஞ்சமி. அதாவது சித்திரை மாஸ அமாவாஸ்யை ஆனவுடன் வரும் பஞ்சமி. அபிஜித் முஹூர்த்தம் என்பது ஸூர்யன் நடு உச்சியிலிருக்கும் மத்யான வேளை. ஜயப்ரதமான (வெற்றி வழங்கவல்ல) முஹூர்த்தம். அன்றைக்குத் திருவாதிரை நக்ஷத்ரம் — பரம சிவனை அதி தேவதையாகக் கொண்ட நக்ஷத்ரம். ராமசந்த்ர மூர்த்தியைப்போலவே ஐந்து க்ரஹங்கள் உச்சமாக இருக்கும் அபூர்வமான காலத்தில் ஆசார்யாள் அவதாரம் பண்ணினார். (ராமர் மாதிரியே ஆசார்யாளும் புனர்வஸு நக்ஷத்ரம் என்றும் அபிப்ராயமிருக்கிறது. வைசாக சுத்த பஞ்சமி திருவாதிரை அல்லது புனர்வஸு என்ற இரண்டிலொரு நக்ஷத்திரத்தில்தான் வருவதைப் பார்க்கிறோம்.)

ஸ்ரீ சங்கர ஜயந்திப் புண்ய காலத்துக்கு ஸமமாக எதுவுமில்லை. இப்படி நான் சொன்னால், “ப்ரக்ருத விஷயம் (தற்போது எடுத்துக்கொண்டுள்ள விஷயம்) ஆசார்ய சரித்ரமானதால் அதை விசேஷமாக ஸ்தோத்ரிக்கத்தான் வேண்டும் என்பதற்காக ஒரேயடியாய் உசத்தி வைத்துச் சொல்கிறாரா? இல்லாவிட்டால் நாமெல்லாம் ஆசார்யாளின் ஸம்ப்ரதாயத்தில் தானே வந்தவர்கள் என்பதால் சொல்கிறாரா? அல்லது அவருடைய மடத்தில் அவருடைய பெயரை வைத்துக்கொண்டுதானே இவர் ஸ்வாமிகளாக ஊர் கூட்டிக் கொண்டிருக்கிறார் என்பதனால் சொல்கிறாரா?” என்று தோன்றலாம். அதாவது (ஸ்வய) அபிமானத்தால் தூக்கி வைக்கிறேனோவென்று தோன்றலாம்.

இப்படிப்பட்ட காரணங்களுக்காக அந்த ஜயந்திக்கு நான் உயர்வு கல்பித்துச் சொல்லவில்லை. கல்பனையே இல்லை! மிகையோ, ஸ்தோத்ரமோ இல்லை! வாஸ்தவத்திலேயே அதற்கென்று இருக்கும் உயர்வினால்தான், ‘எல்லாப் புண்ய காலங்களிலும் நம்முடயை ஆசார்யாளின் ஜயந்திதான் பரம புண்ய காலம்’ என்று சொல்கிறேன். புண்ய காலங்கள் எவ்வளவோ இருக்கின்றன. சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ஸ்ரீராம நவமி, நரஸிம்ஹ ஜயந்தி, ஸரஸ்வதி பூஜை, விஜய தசமி, விநாயக சதுர்த்தி, ஸ்கந்த ஷஷ்டி, இன்னம் உத்தராயண புண்ய காலம், தக்ஷிணாயன புண்யகாலம் என்றெல்லாம் எத்தனையோ இருக்கின்றன. எல்லாமே உத்க்ருஷ்டமானவை (உயர்வு பொருந்தியவை) தான். என்றாலும் ஸ்ரீசங்கர ஜயந்திதான் ஸர்வோத்க்ருஷ்டமானது (எல்லாவற்றையும்விட உயர்வுபொருந்தியது) என்பது வாஸ்தவம்.

எப்படி?

மற்ற புண்ய காலங்கள் சொன்னேனே, வேதங்களாலேயும் புராணங்களாலேயும் அநேக சாஸ்த்ரங்களாலேயும் ஸித்தமான அந்தப் புண்ய காலங்களெல்லாம் தொன்று தொட்டு யுகங்களாக அநுஷ்டிக்கப்பட்டு வந்திருப்பவை. இந்தப் புண்ய காலம் (ஸ்ரீ சங்கர ஜயந்தி) அவற்றுக்கெல்லாம் ரொம்பவும் பிற்பாடுதான் உண்டானது. ஆனாலும் இதுவே ஸர்வோத்க்ருஷ்டமானது என்றால் எப்படி?

ஸரி, இந்தப் புண்ய காலம் எதற்காக உண்டாயிற்று?

வேதங்களையும் புராணங்களையும் சாஸ்த்ரங்களையும் புனருத்தாரணம் பண்ணுவதற்காகத்தான்.

இந்தப் புண்யகாலம் (ஸ்ரீ சங்கராவதாரம்) ஏற்படாமலிருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

பௌத்தம் முதலான மதங்களும், ஈச்வர பக்தியைச் சொல்லாத ஸாங்க்யம், மீமாம்ஸை போன்ற மதங்களும் தான் ஒரேயடியாகப் பரவியிருக்கும். அப்படிப் பரவியிருந்தால் அப்புறம் சிவராத்ரியும், ஸ்ரீராம நவமியும், மற்ற புண்ய காலங்களும் யார் கொண்டாடியிருப்பார்கள்? அத்தனை புண்ய காலங்களையும் அவைதிகம் அடித்துக் கொண்டு போயிருக்கும். ஏறக்குறைய அப்படிப்பட்ட கட்டத்தில் மற்ற எல்லாப் புண்ய காலங்களும் தத்தளித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஒரு புண்ய காலம் ஏற்பட்டது! ஏற்பட்டு வேத வழியை மறுபடி நன்றாக நிலைநாட்டி அந்தப் புண்ய காலங்கள் அத்தனைக்கும் புத்துயிர் கொடுத்து அவற்றை நிலை நிறுத்திற்று! இன்றைக்கும் சிவராத்ரி, ஸ்ரீராம நவமி, கோகுலாஷ்டமி இத்யாதியை நாம் புண்ய காலங்களாகக் கொண்டாடுகிறோமென்றால் அதற்கு ஆசார்ய ஜயந்தி என்ற புண்ய காலம் ஏற்பட்டதுதான் காரணம். இந்த ஒரு ஜயந்தி இல்லையென்றால் எந்த ஜயந்தியுமே இல்லாமல் போயிருந்திருக்கும்! ஜயந்திகளையெல்லாம் ரக்ஷித்துக் கொடுத்த ஜயந்தியாக இருப்பது ஸ்ரீ சங்கர ஜயந்தியே என்பதால்தான் அதைப் புண்ய காலங்கள் அத்தனையிலும் விசேஷமானது என்றது!

ஜய சப்தம் ஆசார்யாளோடு விசேஷமாகச் சேர்ந்து “ஜய ஜய சங்கர” என்று உலகமெல்லாம் முழங்குகிறதென்று சொன்னேன். அதில் இந்த ஜயந்தி விசேஷத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is வரப் பிரதானம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  விமரிசையாக விழாக் கொண்டாடுக
Next