நாமகரணச் சிறப்பு : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அவதாரமாகி விட்டது.

பெற்றவர்கள், ஊரில் இருந்தவர்கள் எல்லாருக்கும் ஸந்தோஷமாயிற்று.

லோகம் பூராவுமே அப்போது அநேக சுப சகுனங்கள் தோன்றியதாகவும், வைதிக விருத்தமாகப் பாஷண்ட மதங்களைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு மட்டும் ஒரே துர்நிமித்தங்களாகத் தோன்றின என்றும் “சங்கர விஜய”ங்களில் இருக்கிறது.

(பிறந்தவுடன் செய்யும் ஸம்ஸ்காரமான) ஜாதகர்மா சிவகுரு செய்தார்.

பதினோராவது நாள் புண்யாஹவாசனம் பண்ணி நாமகரணம் செய்ய எண்ணினார்கள்.

சங்கரர் என்று பிதா பேர் வைத்தார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.

எதனால் அந்தப் பேர் வைத்தார்?

ஈச்வரனுக்கு வேண்டிக்கொண்டு ஈச்வரனின் வரப்படி தானே பிள்ளை பிறந்திருந்தது? அதனால் ஈச்வர நாமாக்களில் ஒன்றான சங்கர நாமாவை வைத்தார்.

ஈச்வரனுக்கு எத்தனையோ நாமா இல்லையா? இதைத் தேர்ந்தெடுத்து வைப்பானேன்?

பெரியோர்களாக இருப்பவர்கள் (புத்தி பூர்வமாகத்) தெரிந்து ஒன்று பண்ணாதபோதிலுங்கூட அதில் அநேக உள்ளர்த்தங்கள் இருக்கும். அந்த மாதிரி, சும்மாயிருக்கும் சம்புதான் கார்யம் செய்யும் சம்கரராக, “சங்கரம் லோக சம்-கரம்” என்னும்படியாக லோகத்துக்கெல்லாம் நல்லதைச் செய்பவராக வந்திருக்கும்போது அவருக்கு அந்தப் பெயர் தான் வைக்கணுமென்று ஏதோ ஒரு உள்ளுணர்ச்சியில் அவருடைய பிதாவுக்குத் தோன்றியிருக்கலாம்.

ஒரு வஸ்துவுக்கு ஒரு பெயர் ஏற்படுவதில் ‘ரூடி’ என்றும் ‘யோகம்’ என்றும் இரண்டு விதம் உண்டு. ஏதோ ஒரு பெயர் சொன்னால்தானே புரியும்? அதனால் அப்படி ஏற்படும் பேர் ‘ரூடி’. அப்படியில்லாமல் அந்த வஸ்துவின் குணம் அல்லது அது செய்யக்கூடிய கார்யத்தை வைத்து அதற்குப் பேர் வைப்பது ‘யோகம்’ அல்லது ‘பௌதிகம்’. இதில் அந்த வார்த்தையை தாது பிரித்து அர்த்தம் சொல்ல முடியும்.

ஒருவருக்கு ஏதாவது ஒரு பெயர் வைத்துத்தானாக வேண்டுமென்பதால் ஏதோ ஒன்றை வைப்பதை ‘ரூடி’ என்றும் அவருடைய குண – கர்மங்களைக் குறிக்கும் விதத்தில் வைப்பதை ‘பௌதிகம்’ என்றும் ஒரு தினுஸில் சொல்லலாமானால் அப்போது ஆசார்யாளுக்கு சங்கர நாமம் ரூடி, பௌதிகம் இரண்டுமாகி விடுகிறது. அப்பா பாட்டுக்குப் பேர் வைத்தார்; அதுவே அவருடைய லக்ஷணையாகவும் இருந்துவிட்டது!

‘அப்பா பாட்டுக்கு வைத்தார்’ என்றது அவ்வளவு ஸரியில்லை. அவரும் ஒரு காரணத்திற்காகத்தான் அப்படி வைத்தார். நல்லதைச் செய்கிறவர் சம்-கரர் என்கிற காரணத்திற்காக அல்ல. வேறே ஒரு காரணதிற்காக, அவதாரம் இன்ன மாஸம், இன்ன பக்ஷம், இன்ன திதி என்று ஸங்கேதமாகக் காட்டுவதற்காகப் பேரில் இன்ன அக்ஷரங்கள் இருக்கவேண்டும் என்று தேர்ந்தெடுத்து வைத்தார். சேர்த்துப் பார்த்தால் அதுவே ‘சங்கர’ என்றாகி ஆசார்யாளின் ‘யௌகிக’ப் பேருமாகிவிட்டது!

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is மனத்தின் அர்ப்பணமும் மௌன மனனமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கடபயாதில் ஸித்தி நாள்
Next