ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – அநுக்ரஹமே லக்ஷ்யம், ஆராய்ச்சி அல்ல! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஆசார்ய பீடத்திலேயே வந்தவர்கள் இயற்றிக்கொடுத்து, எத்தனையோ காலமாக ஆசார்யாள் செய்ததாகவே நினைத்துப் பாராயணம் பண்ணப்பட்டுப் பலனும் தந்து வந்து இருக்கிற உத்தமமான ஸ்தோத்ரங்களையும் — அதே போல ப்ரகரணங்களையும் – அவருடையவை என்றே வைத்துக்கொள்வதும் ந்யாயம்தான்! அவருடைய இன்ஸ்பிரேஷனில், அவரே உள்ளே புகுந்து பண்ணியவைதான் இவை! அதனால் பொதுவாக இப்படியுள்ள நம்பிக்கைகளைக் குலைக்க வேண்டியதில்லை. ரொம்பவும் ஆராய்ச்சி என்று இறங்கினால் பக்தி போய்விடுவதில்தான் முடியும்! ஆனாலும் சிலர் சில தினுஸாக ஆராய்ச்சி பண்ணி அதுதான் ஸத்யம் என்று ஸ்தாபிக்கப் பார்க்கும்போது வேறே அபிப்ராயங்களும் உண்டு, அவற்றுக்கும் ஆதாரமுண்டு என்று காட்டாமலிருக்கக் கூடாது என்றும் தோன்றுகிறது. அப்படித்தான் இன்றைக்கு என்னவோ கால நிர்ணயம் என்று பார்க்க ஆரம்பித்துச் சொல்லும்போது ஆசார்யாள் போலிருக்கிற நூல்களைப் பற்றி சொல்ல நேர்ந்தது. ஆராய்ச்சிப் பூர்வமாக ஆதி ஆசார்யாள் செய்தது வேறே, பிற்கால ஆசார்யாள் செய்தது வேறே என்று வேறுபடுத்தி வைத்துக் கொண்டாலும், அநுபவ பூர்வமாக அவையெல்லாம் ஒரே குரு ப்ரஸாதத்தில் உண்டானவைதான்! அதனால் அவர் – இவர் என்று ஒன்றும் பேதப்படுத்தாமல் பாராயணம் பண்ணிப் பலன் அடைவோம் என்ற பாவம் இருப்பதுதான் நல்லது.

காலம் எதுவானால் என்ன? நமக்கு முக்யம் அநுக்ரஹம். ரொம்பப் பூர்வகாலத்தில் வந்திருந்தால்தான் அநுக்ரஹ மூர்த்தியாயிருக்க முடியும் என்றில்லை. எத்தனை பூர்வ காலமானாலும் அப்போதும் ஆசார்யாளுக்கு ஸமகாலத்தவர்களாகவே இருந்தவர்கள்தானே இப்போது நமக்கெல்லாம் கிடைப்பதைவிட ஜாஸ்தி அவருடைய அநுக்ரஹத்தைப் பெற்றிருக்கிறார்கள்? ஸமீபகாலத்தையும் தற்காலத்தையுமே சேர்ந்த மஹான்களிடமிருந்தும் நம்மால் அநுக்ரஹம் பெற முடியவில்லையா?

அதனால் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்ன, இன்னும் அப்புறம் ஆசார்யாள் வந்திருந்தாலும்கூட அதனால் நாம் பெறுகிற அநுக்ரஹத்திற்கு எந்த ஹானியுமில்லை! (நாம்) கதை கேட்பது அந்த அநுக்ரஹத்திற்குப் பாத்திரராவதற்குத்தான். அந்த முக்ய லக்ஷ்யம் மறந்து போகப்படாது.

அதற்காக யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லி நிலை நாட்டிவிட விடக்கூடாதுதான். இதற்காக நாம் செய்யவேண்டியதையும் கொஞ்சம் கவனித்துதான் ஆகவேண்டும். இப்படிப் பண்ணும்போது இரண்டு மூன்று ஸமாசாரங்கள் முக்யம்: ஒன்று, அவர்கள் பிடிவாதமாகச் சொல்கிறார்களே என்று நாமும் பிடிவாதமாக இருக்கக்கூடாது. நம் அபிப்ராயத்துக்கு மாறான ஒன்றுக்கு ப்ரமாணமிருக்கிறது என்றால் அதைத் திறந்த மனஸோடு அங்கீகரிக்கவேண்டும். இரண்டாவது, மாற்று அபிப்ராயக்காரர்களிடம் கோபமே கூடாது. ஆசார்யாளைக் குறித்த எந்த விஷயமும் பேதங்களைப் போக்குவாகத் தான் இருக்கவேண்டுமே தவிர கோபத்திலும் வெறுப்பிலும் கொண்டுவிடுவதாக இருக்கக்கூடாது. மூன்றாவது, அநுக்ரஹம்தான் நமக்கு முக்யம் என்ற நினைப்பு மறந்து போகாமலிருப்பது…

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 16. எது எந்த சங்கரர் செய்தது?
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  18. பூர்ணவர்மன் விஷயம்
Next