ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – கலியுகத்தில் நமது காலக் கணக்குகள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

முன்னேயே சொன்னாற்போல பூர்வ யுகங்களின் ஸமாசாரத்தை விட்டுவிடுவோம். கலியுகத்தில் வந்த ராஜ வம்சங்களைப் பற்றி முழு விவரமும் புராணங்களில் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு ராஜாவையும் பேர் சொல்லி இத்தனை வருஷம் ஜீவித்தான் என்றும் வரிசையாகச் சொல்லியிருக்கிறது. இதில் நம்பமுடியாததாக எதுவும் இல்லை.

விஸ்தாரமான இந்த தேசத்தில் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த காலங்களிலே எழுதப்பட்டதால் ஒவ்வொரு ப்ரதேசத்தில் எழுதியவர்கள் இன்னொரு ப்ரதேசத்தைப்பற்றிச் சொல்லும்போது சில தவறுகள் நேர்ந்திருக்கும். அதனால் புஸ்தகங்களுக்கிடையில் ஒன்றுக்கொன்று முரணாகவும் தகவல்கள் இருக்கும்தான். ஆனாலும் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டுக்கொண்டு deep -ஆக comparative study பண்ணினால் நிச்சயம் ஏகோபித்த முடிவுகளுக்கு வரமுடியும். அப்படிப் பண்ணப் பொறுமையில்லை. அடிப்படையில் உண்மை என்ற நம்பிக்கையே போய்விட்டபின் என்ன பண்ணுவது?

தினமும் ‘ஸங்கல்பம்’ என்று எந்த வைதிக கார்யத்திலும் செய்துவருகிறோம். என்றைக்கு இந்த பழக்கம் ஆரம்பித்தது என்றே சொல்ல முடியாதபடி அத்தனை பூர்ணகாலத்திலிருந்து இந்த பரந்த தேசத்தின் அத்தனை இடங்களிலும் அன்றன்றும் இப்படி ‘ஸங்கல்பம்’ சொல்லி வருகிறோம், அதிலே ப்ரம்மாவின் வயஸிலிருந்து ஆரம்பித்து, கலியுகத்துக்கு வந்து, நடப்பு வருஷம்-மாஸம்-திதிவரை ஒவ்வொரு நாளாகக் கூட்டிச் சொல்லி வந்திருக்கிறோம். இதிலே இந்த வருஷத்தை1 கலியுகப்படி 5064 என்றே காஷ்மீரத்திலிருந்து கன்யாகுமரி வரை வித்யாஸமில்லாமல் சொல்கிறோம். நம்பமாட்டேன் என்றால் எப்படி?

ஆசார்யாள் கால விஷயமாக சிவரஹஸ்ய இதிஹாஸத்தில் “ஸஹஸ்ர த்வியாத்-பரம்” என்று சொல்லியிருக்கிறது அப்படியென்றால் ‘கலியில் இரண்டாயிரம் வருஷத்துக்கு அப்புறம்‘ என்று அர்த்தம். ‘அப்புறம்’ கரெக்டாக எந்த வருஷமென்று சொல்லவில்லை’ நாமெல்லாம் போட்டு மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டுமென்றே இப்படிச் சொல்லி விட்டுவிட்டாற் போலிருக்கிறது! எப்படியும் கலியில் மூவாயிரம் வருஷத்துக்கு முந்தித்தான் அவதாரம் என்று இதிலிருந்து ஆகிறது.

பவிஷ்யோத்ர புராணத்தில் “கல்யாதௌ த்விஸஹஸ்ராந்தே” என்று இருக்கிறது. ‘கலியில் இரண்டாவது ஆயிர்த்தின் முடிவுப் பகுதியில் என்று அர்த்தம்.

வேறு பல புராணங்கள், (சங்கர) மடங்களைச் சேர்ந்த புஸ்தகங்கள்-குருபரம்பரைகள்-சாஸனங்கள் முதலானதுகள், இதர ஆதாரங்கள் கர்ண பரம்பரையாக வந்துள்ள நம்பிக்கை ஆகியவற்றிலிருந்து நாங்கள் ஆசார்யாளின் காலம் கலியில் 2593லிருந்து 2625வரை என்று கருதி வருகிறோம். கலியின் இரண்டாவது ஆயிரம் வருஷங்களில் அறுநூறு வருஷத்துக்கு முன்னும் பின்னுமாக இது இருப்பதால் இதை “முடிவுப் பகுதியில்” என்று பவிஷ்யோத்தர புராணம் சொல்லியிருக்கலாம். கலி 2593-2625 என்பது கி.மு. 509-477 ஆகிறது.


1 1963

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 6. மேல்நாட்டவரின் பரிஹாஸமும் உள்நோக்கமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  8. நமது சரித்ர ஆதார நூல்கள்
Next