உலகப் பணி அழைத்தது! மனித தர்மமும், அவதார மர்மமும்! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

லோகத்துக்கெல்லாம் பண்ணவேண்டிய கார்யத்தை ஆரம்பித்துவிட வேண்டுமென்று ஆசார்யாள் நினைத்தார். பிறந்தது முதற்கொண்டே அடி மனஸில் அந்த எண்ணம்தான் அவருக்கு ஸதாகாலமும் இருந்து வந்தது. ஆனாலும் ‘ப்ரைவேட் லைப்’ மாதிரி ப்ரம்மசர்ய நியமங்களைப் பண்ணுவதும், மாத்ரு சுச்ரூஷை பண்ணிக்கொண்டிருப்பதும்கூட லோகத்திற்குப் பாடமாகத்தானே என்பதால் செய்துவந்தார். அதற்காக உலகம் பூரா அம்மாக்கள் இருக்கும்போது இந்த ஒரு அம்மாவுக்கே பணி செய்து கொண்டிருந்தால் போதுமா என்று நினைக்க ஆரம்பித்தார். ‘நாம் ஒரு தாயாருக்கு மட்டும் குழந்தை இல்லை. லோகத்துக்குக் குழந்தை, லோகம் பூராவுக்கும் செய்யவேண்டியதை ஒரு தாயாரை முன்னிட்டு எத்தனை காலம் ஒத்திப் போட்டுக்கொண்டே போவது? லோகம் ஒரேயடியாகக் கெட்டுப் போயிருக்கிறதென்றுதானே வந்தோம்? ஜ்வரம் முற்றிக்கொண்டே போகிறபோது மருந்து கொடுக்கத் தாமஸம் செய்யலாமா?’ என்று நினைத்தார்.

என்ன மருந்து? ஒன்றும் பண்ணாமல் சும்மா இருக்கும் மருந்து! அந்த நிலையை அடைவிக்கும் அத்வைத மருந்து! ‘எல்லோருக்கும் சும்மா இருக்கிற தத்வத்தைச் சொல்வதற்காக ஒரு நிமிஷம்கூட சும்மாயில்லாமல் சுற்றவேண்டுமென்று வந்தோம்! எத்தனை காலம் இந்த க்ராமத்தையே சுற்றி வந்துகொண்டிருப்பது?’ என்று மனஸிலே ஒரு முடிவு பண்ணிவிட்டார்.

தாயாருக்கு ஒரே குழந்தை என்பதால் அவளுக்கு ஆனதைச் செய்யாமலிருந்தால் எவ்வளவு தப்பு, அவள் எவ்வளவு கஷ்டப்படுவாள் என்று கொஞ்ச காலம் மாத்ரு ஸேவை செய்தார். அப்புறம் லோகத்தின் கஷ்டத்தைப் பார்த்து அதைத் தீர்ப்பதற்கானதைச் செய்யாமலிருப்பது எவ்வளவு தப்பு என்று நினைத்து அம்மாவை விட்டு, வீடு வாசலை விட்டு ஸந்நியாஸியாகப் புறப்பட முடிவு பண்ணினார்.

‘வயஸானவள், விதந்து, இந்த ஒரு பிள்ளையை விட்டால் வேறே நாதி இல்லாதவள் – அவளுக்குக் குழந்தையாகச் செய்யவேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்டுப் போகிறவர் லோகத்துக்குக் குழந்தை என்று மட்டும் அத்தனை பேருக்கும் என்ன ஸாதித்துவிடமுடியும்?’ என்று தோன்றலாம்.

மநுஷ்ய ரீதியில் பார்த்தால் ஸந்தேஹந்தான் வரும்.

ஆனால் ஈச்வர லீலை, அவதாரம் என்று வரும்போது நமக்குப் புரியாமல், பதில் சொல்லத் தெரியாமல் அநேகம் நடக்கிறது. அவனுக்குத்தானே தெரியும், யாருக்கு என்ன கர்மம், எவருக்கு எத்தனை நாள் எப்படி (தன் அவதார காலத்தில்) பண்ணணும், எங்கே கருணை காட்டணும், எங்கே கருணை இல்லாத மாதிரி லோகத்துக்குத் தோன்றினாலுங்கூட அப்படித்தான் நிர்தாக்ஷிண்யம் மாதிரிப் பண்ணணும் – என்பதெல்லாம்? அப்பா, அம்மா, பெண்டாட்டி, பிள்ளை என்று தனி மநுஷர்களுக்காகவா அவதரிப்பது? இல்லையோல்லியோ? லோகத்துக்காகத்தான் அவதாரம். அதிலே ஓரொரு தனி மநுஷ்யாளுக்கும் அவர்களுடைய பூர்வ புணயத்திற்காக, தபஸுக்காக, ப்ரார்த்தனைக்காகப் புத்ரன் என்றும், பர்த்தா என்றும், ஸகா என்றும் கொஞ்சம் பண்ணுவதுண்டு; அவ்வளவுதான். தசரதருடைய புத்ரகாமேஷ்டிக்காகப் புத்ரனாகப் பிறந்து ராமர் கொஞ்சகாலம் அவருடைய பிள்ளையாக வளர்ந்தார். அப்புறம் அவதார கார்யம் கூப்பிட்டுவிட்டது. தசரதருடைய புண்யமும் தீர்ந்து போயிருந்தது. அதனால், நமக்குப் பார்த்தால் ரொம்பக் கடுமையாகத்தான் தோன்றினாலும், அவர் அழுது அழுது ப்ராணனை விட்டாலும் ஸரி என்று ராமர் வனவாஸத்துக்குப் போய்விட்டார். ப்ராணனை விட்டதுதான் நமக்குத் தெரியும். அப்புறம் அவருக்கு பகவான் பரலோகத்தில் எப்படியெல்லாம் அநுக்ரஹம் பண்ணியிருப்பானோ? அது தெரியாமா?

சிவகுரு – ஆர்யாம்பாளின் தபஸுக்காக ஆசார்யாள் அவர்களுடைய புத்ரனாக அவதாரம் பண்ணினார். இந்த லோகத்தில் அவரைப் பிள்ளை என்று கொஞ்சும் புண்யம் தகப்பனாருக்குக் கொஞ்சம் வருஷத்திலேயே தீர்ந்துவிட்டதால் காலகதி அடைந்துவிட்டார். அப்புறம் சிவலோகத்துக்குப் போனாரா, அத்வைதமாகக் கலந்துவிட்டாரா என்பது நமக்குத் தெரியாது. ஆகையினால் அவருடைய ஆயுஸை இப்படிப் பறித்திருக்கக் கூடாது என்று சொல்ல நமக்கு வாயில்லை.

அந்த அம்மாளுக்கு அவளுடைய கர்மாநுஸாரம் இன்னம் பல தினுஸாகப் புடம்போட்டுக் கடைசியில் ஆசார்யாள் கையாலேயே வைகுண்ட ப்ராப்தி உண்டாக்கணுமென்று ஈச்வரன் கணக்கு வைத்திருப்பான் போலிருக்கிறது! அதனால் இப்போது பிரிந்துதான் போகணுமென்று அவர் மனஸைக் கெட்டிப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.

அவதாரமென்றால் பேருக்கு ஒரு மநுஷ்ய தம்பதிக்குக் குழந்தை மாதிரி வருவதுதானே? அதனால் ஸ்ட்ரிக்டாக நம் ரூல்களை அவர்களுக்கும் (அவதாரங்களுக்கும்) பொருத்திப் பார்ப்பதற்கில்லை. மஹா பெரிய லோக கல்யாண கார்யம் காத்துக்கொண்டிருக்கும்போது, அம்மா அப்பா என்று ஸொந்த உறவைப் பார்க்காமல், ஒருத்தர் இரண்டு பேருக்குத் தன்னால் கஷ்டம் வந்தாலும் வரட்டும் என்று புறப்பட்டால் அதைக் கருணை, த்யாகம் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களும் (அப்பா, அம்மா முதலானவர்களும்) அவர்களை (அவதாரமாக வந்தவர்களை) லோகத்திற்காகத் த்யாகம் பண்ணிப் பெரிய புண்யத்தை ஸம்பாதிக்கவே இப்படி நடப்பது என்று வைத்துக்கொள்ளலாம்.

இவர் ஸந்நியாஸியாகப் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தாரென்றால், தாயாரும் பந்துக்களுமோ கல்யாணம் பண்ணிவைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தார்கள்! குருகுலவாஸம் முடிந்து வந்தவுடன் ப்ரஹ்மசர்யத்திலிருந்து அடுத்த ஆச்ரமத்திற்கு ஏற்றிவிடுவதே வழக்கம். இவர் பன்னிரண்டு வருஷத்தில் படித்து முடிக்கவேண்டியதை மூன்று வருஷத்தில் முடித்துவிட்டுக் குழந்தையாகவே திரும்பியிருந்தாரே என்றால், அந்த நாளில் பால்ய விவாஹமும் உண்டுதானே? குழந்தைகளுக்குக் கல்யாணம் பண்ணிவிடுவது, அப்புறம் அதுகள்பாட்டுக்கு மனஸில் விகாரமில்லாமல் பிள்ளை தன் வீட்டோடு இருப்பது, பெண்ணும் பிறந்தகத்திலேயே இருப்பது, ‘பெரியவ’ளான அப்புறம் புக்ககம் வந்து குடித்தனம் ஆரம்பிப்பது என்று நடந்து வந்தது.

இரண்டு பக்கத்திலே இரண்டு தினுஸான உத்தேசங்கள். கல்யாணமென்றும், ஸந்நியாஸமென்றும் இருந்து வந்தன! அவதார உத்தேசப்படிதானே நடக்கும்?

தாய்க்குமேல் தெய்வமில்லை, அவள் உத்தரவுக்குமேல் சாஸ்த்ரமில்லை என்று சாஸ்த்ரமே சொல்கிறது. சாஸ்த்ரங்களை நிலைநாட்டவே ஆசார்யாளவதாரம். அதற்காக அவர் அம்மா இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக்கொண்டு அகத்தோடு இருந்துவிட்டால் ஆசார்யாளாகவே ஆக முடியாதே! ஸ்வாமி மநுஷராக வந்தால் இப்படியெல்லாம் ஏற்படுகிறது! அப்போது அவர் என்ன பண்ணுகிறாரோ அதுதான் அவதார தர்மம்.

ஒரு பிள்ளை அவனுடைய ஆதீனத்திலேயே தாயார் இருக்கும்போது அவளுடைய அநுமதி இல்லாமல் ஸந்நியாஸியாகக் கூடாது. மாதா பிதாக்களோ, பத்தினியோ யார் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு ஏற்பாடு பண்ணிவைத்து, அவர்களுடைய ஸம்மதத்துடன்தான் வீட்டை விட்டுப் போகலாம். இப்படித்தான் சாஸ்த்ரம். ‘இதையாவது நாம் உதாரணமாகப் பண்ணிக்காட்ட வேண்டும்’ என்று ஆசார்யாள் நினைத்தார். ஒரே வைராக்யமாக க்ஷணத்தில் ஏற்பட்டு, திட்டம் கிட்டம் போட முடியாமல் ஆச்ரமம் வாங்க்கிகொள்வது வேறே விஷயம்.

இப்போது இவர் நன்றாகத் திட்டம் போட்டுத்தானே அவதாரம் பண்ணியிருந்தது? அவதாரத்தில் ஒவ்வொரு கார்யமும் பண்ணியது? அதனால் தாயாரின் அனுமதி பெற்றே ஸந்நியாஸி ஆவதென்று நினைத்தார். ‘எப்படிக் கேட்பது? கல்யாணம், கல்யாணம் என்பவளிடம் ஸந்நியாஸம் என்றால் ரொம்ப துக்கப்படுவாளே!’ என்று நினைத்தார். ‘ஸமயம் வரட்டும், வரும். அப்போ சொல்லிக்கலாம்’ என்று உத்தேசத்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருந்தார்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is மாறி ஓடிய ஆறு!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  துறவியானார்!
Next