தாமரை தாங்கிய தாளர் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இது பிற்காலத் கதை. பத்மபாதர் ஆசார்யாளிடம் வந்து கொஞ்ச நாளில் நடந்த இன்னொரு கதை சொல்கிறேன். ஏன் ‘பத்மபாதர்’ என்று பேர் வந்தது என்னும் கதை. மஹான்கள் பெயருக்குப் பின்னால் ‘பாதர்’ சேர்க்கிற மாதிரி, கௌடர் – கௌடபாதர் மாதிரி, பத்மர்-பத்மபாதர் இல்லை! பத்மபாதர் என்பதே முழுப் பெயர். காரணப் பெயர்

ஒரு நாள் அவர் கங்கையின் அக்கரையிலும் ஆசார்யாள் இக்கரையிலுமாக இருந்தார்கள். ஆசார்யாள் ஈர வஸ்த்ரத்துடனிருந்தார். பத்மபாதரிடம் காய்ந்த சுத்த வஸ்த்ரமிருந்தது.

சிஷ்யருடைய பக்தியை லோகத்திற்கு, மற்ற சிஷ்யர்களுக்கு ப்ரகடனம் பண்ணவேண்டுமென்று ஆசார்யாள் நினைத்தார். “வஸ்த்ரத்தை இங்கே கொண்டு வா!” என்று எதிர்க் கரையிலிருந்தவரிடம் சொன்னார்.

குரு ஆக்ஞை என்றால் தட்டாமல் உடனே பண்ணிவிட வேண்டும் என்ற ஸ்மரணைதான் பத்மபாதருக்கு! அதில், நடுவே கங்கை இருக்கிற ஸ்மரணையே போய்விட்டது! ஆளை முழுங்குகிற மாதிரி ஆழமாக நதி ஓடுவது தெரியாமல் ஸம பூமியில் நடப்பதுபோல அவர் ஆசார்யாள் இருந்த பக்கமாக ப்ரவாஹத்தின் மேலேயே நடக்க ஆரம்பித்தார்!

அப்போது என்ன ஆயிற்றென்றால், அவர் எங்கேயெல்லாம் அடிவைக்க இருந்தாரோ அங்கேயெல்லாம் கங்கா தேவி ஒரு தாமரையைப் புஷ்பித்துப் பாதத்தைத் தாங்கினாள். அதன் மேலாகவே அவர் எதிர்க்கரைக்கு வந்து குருநாதரிடம் வஸ்த்ரத்தைக் கொடுத்தார்.

பத்மங்களால் தாங்கப்பட்ட பாதத்தை உடையவரானதால் ‘பத்ம பாதர்’ என்று பேர் வந்தது.

மற்ற சிஷ்யர்களெல்லாம், “என்னமாக கங்கையைத் தாண்டி விட்டாய்!” என்று ஆச்சர்யப்பட்டார்களாம். அவரானால், “இது எனன ஆச்சயர்ம்? எந்த குருநாதரை ஸ்மரித்தால் ஸம்ஸார ஸாகரமே முழங்காலளவு ஆகிவிடுகிறதோ, அவரே ஆஜ்ஞை பண்ணும்போது இந்த கங்கை என்ன ப்ரமாதம்?” என்றாராம்.

பத்மபாதர் விஷ்ணு அம்சம். ந்ருஸிம்ஹ ஸாக்ஷாத்காரம் பெற்றவர். அதனால், விஷ்ணுவின் அம்சாவதாரமான வ்யாஸரை ஆசார்யாள் அடையாளம் கண்டு கொள்வதற்கு முந்தியே இவர் கண்டுவிட்டாரென்று ஒரு ஸம்பவம் உண்டு. அதுவும் காசியில் நடந்ததுதான்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is கொலையாளிக்கும் கருணை!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  வ்யாஸருடன் வாதமும், ஆயுள் நீடிப்பும்
Next