அதிசயம் சாதித்த அமோக திக்விஜயம் : ஆன்மிய ஐக்கியமும் தேசிய ஐக்கியமும் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இப்படிப்பட்ட சிஷ்யர்கள் ஆறாயிரம் பேரோடு ஆசார்யாள் தேசம் முழுதும் திக்விஜயம் செய்தார். திக்விஜயம் என்றால் அதுதான் திக்விஜயம்! ஞானராஜா பரதகண்டத்தின் 56 தேசங்களிலேயும் பரமதங்கள் அத்தனையையும் ஜயித்து ஸநாதன வேத தர்மத்துக்கும், அதில் குறிப்பாக அத்வைதத்துக்கும் வெற்றிக்கொடி நாட்டிய திக்விஜயம்! எவரையும் சாக அடிக்காமல், அமரமாக ஆக்குகிற வாதச் சண்டையினாலேயே தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலுமுள்ள பர ஸமயவாதிகளை ஜயித்த ஆசார்யாளைப் போல ஜயசாலி லோக சரித்ரத்திலேயே இல்லை! அதனால்தான் “ஜய ஜய சங்கர” என்றே கோஷிப்பதாக, அதுவே அவருக்கு மந்த்ரம் மாதிரியாக இருப்பது.

வாதச் சண்டை என்றுகூடப் போடாமல் தர்சன மாத்திரத்திலேயே பெரும்பாலானவரை ஆகர்ஷித்து வேத வழியில் செலுத்தினார்.

லக்ஷ்யம் ஜீவாத்மாவைப் பரமாத்மாவுடன் ஐக்கியப்படுத்துவது. அது உடனே நடக்கிற கார்யமில்லை. ஸம்ஸ்கார நிவ்ருத்தி, வாஸனாக்ஷயம் ஏற்பட்ட எவ்வளவோ காலம் பிடிக்கும். உடனே நடக்காவிட்டாலும் அதற்கானதை உடனே ஆரம்பித்து விட வேண்டும். தள்ளிப் போடப் போட அழுக்கு தடித்துக் கொண்டே போகும். அப்படி நல்லதை ஆரம்பிக்கும்படி அத்தனை கோடிப் பேரையும் ஆசார்யாள் திருப்பிவிட்டார்!

இது அவதார லக்ஷ்யத்தைப் பற்றிய விஷயம். லக்ஷ்யம் ஜீவ-ப்ரஹ்ம ஐக்யம்.அப்படிப் பண்ணும்போதே என்ன ஆயிற்று என்றால், தேசத்தின் ஜனஸமூஹம் அத்தனையும் ‘ஆட்டோமாடிக்’காக ஐக்யமாகிவிட்டது! வேறே வேறே மதம், ஸித்தாந்தம், உபாஸனை என்று 72 இருந்ததென்றால் ஜனங்களும் 72 பிரிவாகப் பிளந்து போயிருந்தார்கள் என்றுதான் அர்த்தம். அத்தனை பேருக்கும் ஒரே வழி என்று ஸநாதன தர்மத்திற்கு ஆசார்யாள் திருப்பிவிட்டவுடன் பிளவேல்லாம் ஒட்டிக் கொண்டு ஜனஸமூஹம் முழுக்க ஒன்று சேர்ந்து விட்டது! ‘ஒருமைப்பாடு’, ‘ஒருமைப்பாடு’ என்று இப்போது ஸதா கேட்கிறோமே, (கேட்டதுதான் மிச்சமாயிருக்கிறது!) அதை நிஜமாக ஸாதித்துக் கொடுத்தவர் ஆசார்யாள்தான். தனி மநுஷ்யர், ஆண்டி இப்படிப் பண்ணினார்-ராஜ ஸஹாயம் எதுவுமில்லாமல் பண்ணினார் – என்று தற்கால சரித்ராசிரியர்கள், மற்ற ஸ்காலர்கள்கூட ஆச்சர்யப்பட்டுப் புகழ்கிறார்கள். புத்தரிடமே அதிக அபிமானமுள்ள நேரு மாதிரியானவர்கள்கூட புத்தி பலத்தினாலேயே ஒரு பூஞ்சை ப்ராம்மண ஸந்நியாஸி எனா ஸாதனை ஸாதித்துவிட்டாரென்று சொல்லி, National Integrator (தேச ஒருமைப்பாட்டுச் சிற்பி) என்று வாயார ஸ்தோத்ரம் செய்கிறார்கள். நேரு சொல்கிறபோது,1 “ராஜாக்கள், ராஜவம்சங்கள், சக்ரவர்த்திகளும் செய்ததைவிட இந்த தக்ஷிண தேசத்து பிள்ளையாண்டான் ஒருவரே இந்த தேச வாழ்க்கைக்கு நிறையப் பண்ணிவிட்டார்! இதில் என்ன பெரிய ஆச்சர்யமாயிருக்கிறதென்றால் அவர் உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் புத்தி ரீதியாகவே போயுங்கூட ஏதோ ப்ராம்மணர்களை, பண்டிதர்களைத்தான் கவர்ந்தாரென்றில்லாமல் ஸாமான்யப் பொது ஜனங்களையும் ஆகர்ஷித்திருப்பதுதான்” என்கிறார்.

இப்படி அவர் சொல்கிறதில் முழு உண்மையும் இல்லை. புத்தர் மாதிரி ப்ரேமை இல்லாமல் புத்தி வழியிலேயே போயும் ஸர்வஜனங்களையும் ஆசார்யாள் எப்படி வசீகரித்தாரென்று ஆச்சர்யப்படுகிற மாதிரி இருக்கிறது. ஃபிலாஸஃபி என்கிறபோது உணர்ச்சிக்கு இடமே கொடுக்காமல் ச்ருதி-யுக்தி-அநுபவம் என்றேதான் அவர் போனது வாஸ்தவம். ஆனால் பொது ஜனங்களுக்கு அப்படிப்பட்ட அத்வைதத்தை அவர் விதிக்கவில்லை. கோயிலைக் காட்டி, ஸ்வாமியைக் காட்டி, வழிபாட்டு முறைகளை ப்ரேமை நிறைந்ததாக ஆக்கிக்கொடுத்து — அதாவது பக்தியினால்தான் — ஒன்று பண்ணினார். இங்கே உணர்ச்சிக்கு நிறைய இடம் கொடுத்தே பண்ணினார். அவருடைய பக்தி ஸ்தோத்ரங்களை பார்த்தால் தெரியும்.

அதோடு அவரே பரம ப்ரேம மூர்த்தியாக இருந்ததாலேயே அத்தனை ஜனங்களும் சரணத்தில் வந்து விழுந்தார்கள். “கருணாலயம்” என்றே அவரைச் சொல்வது. ‘வறட்டு வேதாந்தி’ என்று அவரை நினைத்தால் அடியோடு தப்பு. ப்ரேமையில் நனைந்து ஊறியவராகவே இருந்தார். அவருடைய சரித்ர புஸ்தகங்கள், நேர் சிஷ்யர்களின் வாக்கு ஆகியவற்றைப் பார்த்தால் தெரியும்.

நேருவே இதைப் புரிந்துகொண்ட மாதிரியும் இன்னொரு புஸ்தகத்தில்2 சொல்கிறார். புத்தி வாதம் மட்டும் பண்ணிய ஃபிலாஸஃபராக அவரை முடித்துவிடாமல், “தத்வவாதி, அநுபவி (mystic என்பது), கவி எல்லாமாயிருந்தவர். இதெல்லாவற்றோடும் உலகத்தோடு ஒட்டாமல் எங்கேயோ நிற்காமல் நடைமுறையில் எப்படிச் சீர் பண்ணுவது என்று காச்ய ரூபத்திலேயே ஸ்தாபன ரீதியில் ஆர்கனைஸ் பண்ணிக் காட்டியதில் சதுரராக இருந்தவர்” என்று அங்கே சொல்கிறார்.

மடங்கள் என்று வைத்து மதத்தை சாச்வதமாகக் காப்பாற்ற அவர் ஏற்பாடு செய்ததைத்தான் ஆர்கனைஸிங் ஸாமர்த்தியம் என்கிறார். ஆசார்யாளுக்கு முன்பு ஹிந்து மதத்தில் அப்படியில்லை. தனி மநுஷ்யர்களின் தபோசக்தியிலேயே மதம் வ்ருத்தியானதுதான்3.

நேருவைச் சொல்வதற்கு காரணம் அவரை நிச்சயம் எங்கள் மாதிரி வைதிகக் குடுக்கை என்றோ, ஆசார்யாள்தான் ஸகலமும் என்று முடிவாக வைத்துவிட்டவர் என்றோ சொல்லமுடியாது என்பதுதான்.

வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், ஸமூஹ சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது. எல்லாரும் ஈசன் குழந்தைகள் என்ற பக்தியினால்தான் ஒன்று சேர்க்க முடியும்.அதற்கும் மேலே, எல்லாரும் ஈசனே என்னும் ஞானம். இவற்றினால்தான் ஆசார்யாள் ஐக்யப்படுத்தியது. அந்த ஞானத்துக்கும் பக்திக்கும் அவரே ரூபமாயிருந்ததால்தான் அத்தனை சக்தியோடு பண்ணமுடிந்தது.

பக்தி, ஞானம் என்றால் ஜன ஸமூஹத்துக்குப் போதுமா? கார்யங்களைப் பண்ணி ஜீவ யாத்ரை நடத்துவதுதானே அவர்களுக்கு முக்யம்? இங்கே வர்ணாச்ரம வழு இல்லாமலே நடக்கும்படியாக ஆசார்யாள் செய்தார்.

அவர் பண்ணியது, இப்போது ஒன்றுமே பண்ண முடியாமல் அவர் பெயரை வைத்துக்கொண்டு புகழ்மாலையும் பாராட்டு விழாவும் பெறுவது இரண்டையும் நினைத்துப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்குமாக இருக்கிறது.

இப்போது, கூட 6000 சிஷ்யர்கள் இல்லை. மடத்தைச் சேர்ந்தவர்கள்தான் இருக்கிறார்கள். ஆனாலும் எந்த ஊரில் நன்றாக பிக்ஷை நடக்கும் என்று பார்த்தே போவதாயிருக்கிறது! ‘ஏதோ ஒரு சக்தி நடத்துகிறது; தர்மத்தைச் சொல்லிக்கொண்டு போ என்று எது இப்படி உட்கார்த்தி வைத்திருக்கிறதோ அதுவே எங்கே நம் கார்யத்துக்குத் தேவையிருக்கிறதோ அங்கே போனாலும் நடத்திக் கொடுக்கும்; அதனால் நம் தேவைக்கு யார் கொண்டுவந்து கொட்டுவார்கள் என்று பார்த்துக்கொண்டு போக வேண்டாம்’ என்ற ஞானம் எப்போதாவது கொஞ்சம் வருவதோடு ஸரி! இப்படி லாப-நஷ்டக் கணக்குப் போட்டுக்கொண்டா ஆசார்யாள் ஒரு இடம் பாக்கியில்லாமல் தேசம் பூரா போனார்? ஒரு தரத்துக்கு மூன்று தரம் போனார்?

பாராட்டு விழா ப்ரஸங்கிகளும், பத்திரிகையாளர்களும், “க்ருத யுகத்தையே கொண்டு வந்துவிட்டாராக்கும், அதுவாக்கும், இதுவாக்கும்” என்று சொன்னாலும், வாஸ்தவத்தில் நாளுக்கு நாள் தர்மங்களைப் பறிகொடுத்துக் கொண்டுதான் வந்திருக்கிறது, ஐம்பது, நாற்பது, முப்பது வருஷம் முன்னாலிருந்த ஆசாரங்கள்கூட இப்போது பூதக்கண்ணாடி வைத்துத் தேடும்படி இருக்கிறது! நம் பிழைப்பு நடந்தால் போதுமென்று, “சிகை இல்லையா, ஸரி,” “மடிச்சார் இல்லையா அதுவும் ஸரி!”, “ஸூட் போட்டுக்கொண்டு வந்தாலும் பரவாயில்லை – இன்னம் நாமே போட்டுக்கலையோன்னோ?” என்று எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்கிகொண்டு, broad-minded, catholic என்றெல்லாம் நிறையப் புகழ் மாலைகள் போட்டுக்கொண்டு- இப்படியா அவர் இருந்தார்? தாமும் சாஸ்த்ர விதி எதையும் விடாமல், அதோடு மாத்ரமில்லாமல், அசாஸ்திரீயமாகப் போயிருந்த அத்தனை ஜன ஸமூஹத்தையும் விதி ப்ரகாரமே பண்ணும்படி செய்திருக்கிறார். எங்கே பிக்ஷை நடக்கும், எங்கே ஏமாந்து போய் நம்மைப் பூஜை பண்ணுவார்கள் என்று பார்த்து போகாமல், எங்கெங்கே சாஸ்த்ரத்துக்கு விரோதமானவர்கள் பலமாக இருந்தார்களோ, தம்மைப் பரம சத்ருவாக நினைத்து பலி கொடுக்கவும் ஆபிசாரம் பண்ணவுங்கூடத் தயாரானவர்கள் இருந்தார்களோ, அங்கேயெல்லாமே தேடித் தேடி ஒரு மலை, காடு விடாமல் காலால் நடந்துபோய், சத்ருக்களையெல்லாம் மித்ரர்களாக்கி, பக்தர்களாக்கி, சிஷ்யர்களாக்கி நம்முடைய மதத்தைப் பூர்ணமாக சாஸ்திரப்படி இந்த பரதகண்டம் முழுதிலும் நிலைநாட்டியிருக்கிறார். தத்-த்வாரா(அதன் வழியாகவே) ஜன ஸமூஹம் முழுதையும் ஒரு குடும்பமாக்கி தேசிய ஐக்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

வாதமும், ஞான ப்ரசாரமும் அறிவாளிகள் என்கப்பட்டவர்களுக்கு. ஆனால் வித்வத் ஸமூஹம் ஒன்றை ஒப்புக் கொண்டால் எல்லாருமே அதை ஏற்றுக்கொண்டு விடுவார்கள் என்கிற ரீதியில், தேசத்தின் ஒவ்வொரு சீமையிலும் வித்வான்களையெல்லாம் ஆசார்யாள் தம்முடைய வழி என்ற ஸநாதன வழிக்குக் கொண்டு வந்ததால் மற்ற ஜனங்களும் அவரையே குருவாகக் கொண்டார்கள். ஆனால், இப்படி ‘இன்டைர்க்டாக’ மட்டும் அவருடைய பொதுஜனப் பணி முடிந்துவிடவில்லை. பொதுமக்களை அவரே நேராக எப்படி நல்லதில் திருப்பினார் என்றால் கோயில்கள், பூஜை, ஸ்தோத்ரம் முதலியவற்றால்தான். க்ரூரமான உபாசனைகள் – க்ரூரமாக இன்னொரு உயிரை பலி தருவது மட்டுமில்லை; தன்னையே சுட்டு வருத்திக் கொண்டு முத்தரை போட்டுக்கொள்வது போன்றவையுந்தான் – இன்னதிரி வழிகளை ஜனங்கள் கைவிடப் பண்ணி அன்போடு வழிபாடுகள் நடக்கச் செய்தார்.


1 நேருஜியின் “Glimpses of World History”

2 “Discovery of India”

3 இவ்விஷயமாக ஸ்ரீ சரணர்களின் ஸாரமிக்க கருத்துகளை “தெய்வத்தின் குரல்” – நான்காம் பகுதியில், “குருகுலம்; கடிகா ஸ்தானம்” என்ற உரையில் “ஸ்தாபனம்: ‘அவச்யத் தீமை’க்கு ஆசார்யாள் பணி” என்ற பிரிவில் பார்க்கவும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is இன்னும் இரு சிஷ்ய ரத்தினங்கள்:ஸர்வஜ்ஞாத்மரும் ப்ருத்வீதவரும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  உக்ர தெய்வங்களை சாந்தமாக்கியது
Next