முற்ற மூத்து

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

முதற்பத்து

முற்ற மூத்து

திருவதரி

இலந்தை மரங்களைப் பதரி என்பர். அவை நிறைந்த இடம் பதரிகாசிரமம். அங்குள்ள பெருமான் பத்ரிநாராயணன். இப்பகுதி பதரீ சேக்ஷத்திரத்தின் பெருமையைக் கூறுகின்றது. அங்கு சென்று வருவது அருஞ்செயல். உடல் தளர்வதற்குமுன் பதரியை ஸேவித்து வாருங்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பேய்ச்சியைக் கொன்றவன் வாழுமிடம் பதரி

968. முற்ற மூத்துக் கோல்துணையா

முன்னடி நோக்கி வளைந்து,

இற்ற கால்போல் தள்ளி

மெள்ள விருந்தங் கிளையாமுன்,

பெற்ற தாய்போல் வந்த

பேய்ச்சி பெருமுலை யூடு, உயிரை

வற்ற வாங்கி யுண்ட

வாயான் வதரி வணங்குதுமே.

முதுமை வருமுன் பதரியை வணங்குக

969. முதுகு பற்றிக் கைத்த

லத்தால் முன்னொரு கோலூன்றி,

விதிர்வி திர்த்துக் கண்சு

ழன்று மேற்கிளை கொண்டிருமி,

'இதுவென் னப்பர் மூத்த

வாª 'றன் றிளையவ ரேசாமுன்,

மதுவுண் வண்டு பண்கள்

பாடும் வதரி வணங்குதுமே.

ஸஹஸ்ரநாமம் சொல்லியவாறு பதரியை வணங்கு

970. உறிகள் போல்மெய்ந் நரம்பெ

ழுந்தூன் தளர்ந்துள் ளமெள்கி,

நெறியை நோக்கிக் கண்சு

ழன்று நின்று நடுங்காமுன்,

அறிதி யாகில் நெஞ்சம்

அன்பா யாயிர நாமஞ்சொல்லி,

வெறிகொள் வண்டு பண்கள்

பாடும் வதரி வணங்குதுமே.

உடல் தளராமுன் பதரியை வணங்கு

971. பீளை சோரக் கண்ணி

டுங்கிப் பித்தெழ மூத்திருமி,

தாள்கள் நோவத் தம்மில்

முட்டித் தள்ளி நடவாமுன்,

காளை யாகிக் கன்று

மேய்த்துக் குன்றெடுத் தன்றுநின்றான்,

வாளை பாயும் தண்ட

டஞ்சூழ் வதரி வணங்குதுமே

கால் தடுமாறாமுன் பதரியை வணங்கு

972. பண்டு காம ரான

வாறம் பாவையர் வாயமுதம்,

உண்ட வாறும் வாழ்ந்த

வாறும் ஓக்க வுரைத்திருமி,

தண்டு காலா வூன்றி

யூன்றித் தள்ளி நடவாமுன்.

வண்டு பாடும் தண்டு

ழாயான் வதரி வணங்குதுமே.

நினைவு தவறாமுன் பதரியை வணங்கு

973. எய்த்த சொல்லோ டீளை

யேங்கி யிருமி யிளைத்துடலம்

பித்தர் போலச் சித்தம்

வேறாய்ப் பேசி அயராமுன்,

அத்த னெந்தை யாதி

மூர்த்தி யாழ்கட லைக்கடைந்த,

மைத்த சோதி யெம்பெ

ருமான வதரி வணங்குதுமே.

நம்மை வாழ்விப்பவன் பகவான்

974. 'பப்ப அப்பர் மூத்த

வாறு பாழ்ப்பது சீத்திரளை

ஒப்ப, ஐக்கள் போத

வுந்த வுன்தமர் காண்மின்'என்று,

செப்பு நேர்மென் கொங்கை

நல்லார் தாம்சிரி யாதமுன்னம்,

வைப்பும் நங்கள் வாழ்வு

மானான் வதரி வணங்குதுமே.

நற்கதி வேண்டுமானால் பதரி செல்க

975. 'ஈசி போமி னீங்கி

ரேன்மி னிருமி யிளைத்தீர், உள்ளம்

கூசி யிட்டீர்' என்று

பேசும் குவளையங் கண்ணியர்பால்,

நாச மான பாசம்

விட்டு நன்னெறி நோக்கலுறில்

வாசம் மல்கு தண்டு

ழாயான் வதரி வணங்குதுமே.

பக்தர்கள் ஆடிப்பாடும் பதரி

976. 'புலன்கள் நைய மெய்யில்

மூத்துப் போந்திருந் துள்ளமெள்கி,

கலங்க ஐக்கள் போத

வுந்திக் கண்ட பிதற்றாமுன்,

அலங்க லாய தண்டு

ழாய்கொண் டாயிர நாமஞ்சொல்லி,

வலங்கொள் தொண்டர் பாடி

யாடும் வதரி வணங்குதுமே.

வைகுந்தப்பதவி கிடைக்கும்

977. வண்டு தண்டே னுண்டு

வாழும் வதரி நெடுமாலை,

கண்டல் வேலி மங்கை

வேந்தன் கலிய னொலிமாலை,

கொண்டு தொண்டர் பாடி

யாடக் கூடிடில் நீள்விசும்பில்

அண்ட மல்லால் மற்ற

வர்க்கோர் ஆட்சி யறியோமே.

அடிவரவு முற்றமூத்து முதுகு உறிகள் பீளை பண்டு எய்த்த பப்ப ஈசி புலன்கள் வண்டு - ஏனம்.


 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வாலி மாவலத்து
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  ஏனமுனாகி
Next