ஏனமுனாகி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

முதற்பத்து

ஏனமுனாகி

திருவதரியாச்சிரமம்

பதரிகாச்சிரமம் என்பதை வதரியாச்சிரமம் என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார். முன்பு மலையை வணங்கினார். இதில் நரநாராயணப் பெருமானின் பெருமைகளைக் கூறுகிறார். எம்பெருமான் பெருமான் நர நாராயணணாக அவதரித்தான். நாராயணனாகிய குரு நரனென்னும் சிஷ்யனுக்கு நலம் தரும் சொல்லாகிய திருமந்திரத்தை உபதேசித்த இடம் பதரிகாச்சிரமம்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தேவர்கள் வணங்குமிடம் பதரி

978. ஏனமு னாகி யிருநில மிடந்தன்

றிணையடி யிமையவர் வணங்க,

தானவ னாகம் தரணியிற் புரளத்

தடஞ்சிலை குனித்தவெந் தலைவன்,

தேனமர் சோலைக் கற்பகம் பயந்த

தெய்வநன் னறுமலர் கொணர்ந்து,

வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்

வதரியாச் சிரமத்துள் ளானே.

பிரமன் பகவானைத் துதிக்குமிடம் பதரி

979. கானிடை யுருவைச் சுடுசரந் துரந்து

கண்டுமுன் கொடுந்தொழி லுரவோன்,

ஊனுடை யகலத் தடுகணை குளிப்ப

வுயிர்கவர்ந் துகந்தவெம் மொருவன்,

தேனுடைக் கமலத் தயனொடு தேவர்

சென்றுசென் றிறைஞ்சிட, பெருகு

வானிடை முதுநீர்க் கங்கையின் கலைமேல்

வதரியாச் சிரமத்துள் ளானே.

கங்கைக் கரையில் உள்ளது பதரி

980. இலங்கையும் கடலு மடலருந் துப்பின்

இருநிதிக் கிறைவனும், அரக்கர்

குல்ங்களும் கெடமுன் கொடுந்தொழில் புரிந்த

கொற்றவன் கொழுஞ்சுடர் சுழன்ற,

விலங்கலி லுரிஞ்சி மேல்நின்ற விசும்பில்

வெண்துகில் கொடியென விரிந்து,

வலந்தரு மணிநீர்க் கங்கையின் கலைமேல்

வதரியாச் சிரமத்துள் ளானே.

மனமே பதரி நாராயணனைத் தொழு

981. துணிவினி யுனக்குச் சொல்லுவன் மனமே

தொழுதெழு தொன்டர்கள் தமக்கு,

பிணியழித் தமரர் பெருவிசும் பருளும்

பேரரு ளாளனெம் பெருமான்,

அணிமலர்க் குழலா ரரம்பையர் துகிலும்

ஆரமும் வாரிவந்து, அணிநீர்

மணிகொழித் திழிந்த கங்கையின் கரைமேல்

வதரியாச் சிரமத்துள் ளானே.

கண்ணபிரானே பதரியில் உள்ளான்

982. பேயிடைக் கிருந்து வந்தமற் றவள்தன்

பெருமுலை சுவைத்திட, பெற்ற

தாயிடைக் கிருத்த லஞ்சுவ னென்று

தளர்ந்திட வளர்ந்தவெந் தலைவன்,

சேய்முகட் டுச்சி யண்டமும் சுமந்த

செம்பொன்செய் விலங்கலில் இலங்கு,

வாய்முகட் டிழிந்த கங்கையின் கரைமேல்

வதரியாச் சிரமத்துள் ளானே.

ஏழு காளைகளை அழித்தவன் வாழுமிடம் பதரி

983. தேரணங் கல்குல் செழுங்கயல் கண்ணி

திறத்தொரு மறத்தொழில் புரிந்து,

பாரணங் கிமிலே றேழும்முன் னடர்த்த

பனிமுகில் வண்ணனெம் பெருமான்,

காரணந் தன்னால் கடும்புனல் கயத்த

கருவரை பிளவெழக் குத்தி,

வாரணங் கொணர்ந்த கங்கையின் கரைமேல்

வதரியாச் சிரமத்துள் ளானே.

அன்பர்கட்கு எதையும் தருவான் நாரணன்

984. வெந்திறல் களிறும் வேலைவா யமுதும்

விண்ணொடு விண்ணவர்க் கரசும்,

இந்திரற் கருளி யெமக்குமீந் தருளும்

எந்தையெம் மடிகளெம் பெருமான்,

அந்தரத் தமர ரடியிணை வணங்க

ஆயிர முகத்தினா லருளி,

மந்தரத் திழிந்த கங்கையின் கரைமேல்

வதரியாச் சிரமத்துள் ளானே.

இரணியனைப் பிளந்தவன் இருக்குமிடம் பதரி

985. மான்முனிந் தொருகால் வரிசிலை வளைத்த

மன்னவன் பொன்னிறத் துரவோன்,

ஊன்முனிந் தவன துடலிரு பிளவா

வுகிர்நுதி மடுத்து, அய னரனைத்

தான்முனிந் திட்ட வெந்திறல் சாபந்

தவிர்த்தவன், தவம்புரிந் துயர்ந்த

மாமுனி கொணர்ந்த கங்கையின் கலைமேல்

வதரியாச் சிரமத்துள் ளானே.

உலகை உண்டவன் பதரி நாராயணன்

986. கொண்டல்மா ருதங்கள் குலவரை தொகுநீர்க்

குரைகட லுலகுட னனைத்தும்,

உண்டமா வயிற்றே னெண்சுட ரேய்ந்த

உம்பரு மூழியு மானானன்,

அண்டமூ டறுத்தன் றந்தரத் திழிந்தங்

கவனியா ளலமர, பெருகும்

மண்டுமா மணிநீர்க் கங்கையின் கரைமேல்

வதரியாச் சிரமத்துள் ளானே.

இவற்றைப் படித்தோர் அரசாள்வர்

987. வருந்திரை மணிநீர்க் கங்கையின் கரைமேல்

வதரியாச் சிரமத்துள் ளானை,

கருங்கடல் முந்நீர் வண்ணனை யெண்ணிக்

கலியன்வா யலிசெய்த பனுவல்,

வரஞ்செய்த வைந்து மைந்தும்வல் லார்கள்

வானவ ருலகுடன் மருவி,

இரங்கட லுலக மாண்டுவெண் குடைக்கீழ்

இமையவ ராகுவர் தாமே.

அடிவரவு - ஏனம் கான் இலங்கை துணிவு பேய் தேர் வெந்திறல் மான் கொண்டல் வருந்திரை - கலை.



 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is முற்ற மூத்து
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கலையும் கரியும்
Next