இருந்தண்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

இருந்தண்

திருவயிந்திரபுரம்

திருக்கோவலுரைப் போல் திருவயிந்திரபுரமும் நடுநாட்டுத் திருப்பதியாகும். இங்கு தெய்வநாயகப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீ ஹயக்ரீவன் சன்னிதியும், ஸ்ரீ தேசிகன் சன்னிதியும் இங்கு இருக்கின்றன. ஸ்ரீ வேதாந்ததேசிகருக்கு ஸ்ரீ ஹயக்ரீவன் பிரத்தியட்சமான இடமும் இதுவே. அமைதியும் ஞானமும் கொடுக்கும் ஊர் இது; ஆதிசேஷனின் பெயரால் ஏற்பட்ட ஊர். அஹீந்திரபுரம் என்பது அயிந்திரபுரம் என்றாயிற்று. அயிந்தை என்றும் கூறுவதுண்டு.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வராகாவதாரம் எடுத்தவன் ஊர் திருவயிந்திரபுரம்

1148. இருந்தண் மாநில மேனம தாய்வளை

மருப்பினி லகத்தொடுக்கி,

கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம்

கமலநன் மலர்த்தேறல்

அருந்தி, இன்னிசை முரன்றெழும் அளிகுலம்

பொதுளியம் பொழிலூடே,

செருந்தி நாண்மலர் சென்றணைந் துழிதரு

திருவயிந் திரபுரமே. 1

நான்மறைப் பொருளாக இருப்பவன் ஊர் இது

1149. மின்னு மாழியங் கையவன் செய்யவள்

உறைதரு திருமார்பன்,

பன்னு நான்மறைப் பலபொரு ளாகிய

பரனிடம் வரைச்சாரல்,

பின்னு மாதவிப் பந்தலில் பெடைவரப்

பிணியவிழ் கமலத்து,

தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு

திருவயிந் திரபுரமே. 2

தெய்வநாயகன் இடம் திருவயிந்திரபுரம்

1150. வைய மேழுமுண் டாலிலை வைகிய

மாயவன், அடியவர்க்கு

மெய்ய னாகிய தெய்வநா யகனிடம்

மெய்தகு வரைச்சாரல்,

மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய

முல்லையங் கொடியாட,

செய்ய தாமரைச் செழும்பணை திகழ்தரு

திருவயிந் திரபுரமே. 3

இரணியனைப் பிளந்தவன் இடம் திருவயிந்திரபுரம்

1151. மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன்

மார்பக மிருபிளவா,

கூறு கொண்டவன் குலமகற் கின்னருள்

கொடுத்தவ னிடம்,மிடைந்து

சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை

விசும்புற மணிநீழல்,

சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ்

திருவயிந் திரபுரமே. 4

ஏழு எருதுகளை அடக்கியவன் இடம் இது

1152. ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்

றகலிட மளந்துஆயர்,

பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம்

பொன்மலர் திகழ்,வேங்கை

கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு

குரக்கினம் இரைத்தோடி,

தேன்க லந்ததண் பலங்கனி நுகர்தரு

திருவயிந் திரபுரமே. 5

இராமன் தங்கும் இடம் திருவயிந்திரபுரம்

1153. கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின்

திறத்திளங் கொடியோடும்,

கானு லாவிய கருமுகில் திருநிறத்

தவனிடம் கவினாரும்,

வானு லாவிய மதிதவழ் மால்வரை

மாமதிள் புடைசூழ,

தேனு லாவிய செழும்பொழில் தழுவிய

திருவயிந் திரபுரமே. 6

இராவணனைக் கொன்றவன் இடம் இது

1154. மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம்

விலங்கலின் மிசையிலங்கை

மன்னன், நீண்முடி பொடிசெய்த மைந்தன

திடம்மணி வரைநீழல்,

அன்ன மாமல ரரவிந்தத் தமளியில்

பெடையடு மினிதமர,

செந்நெ லார்கவ ரிக்குலை வீசுதண்

திருவயிந் திரபுரமே. 7

கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தவன் இடம் இது

1155. விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம்

வில்லிறுத்து அடல்மழைக்கு,

நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன்

நிலவிய இடம்கடமார்,

வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு

மலைவள ரகிலுந்தி,

திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு

திருவயிந் திரபுரமே. 8

அருச்சுனனுக்குத் தேரோட்டியவன் இடம் இது

1156. வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில்

விசயனுக் காய்,மணித்தேர்க்

கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம்

குலவுதண் வரைச்சாரல்,

கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம்

பாளைகள் கமழ்சாரல்,

சேல்கள் பாய்தரு செழுந்தி வயல்புகு

திருவயிந் திரபுரமே. 9

பாடினால் பாவங்கள் பறந்துவிடும்

1157. மூவ ராகிய வொருவனை மூவுல

குண்டுமிழ்ந் தளந்தானை,

தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண்

திருவயிந் திரபுரத்து,

மேவு சோதியை வேல்வல வன்கலி

கன்றி விரித்துரைத்த,

பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப்

பாவங்கள் பயிலாவே. 10

அடிவரவு: இருந்தண் மின்னும் வையம் மாறு ஆங்கு கூன் மின்னின் விரை வேல் மூவர் -- ஊன் வாட.









 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is மஞ்சாடு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  ஊன் வாட
Next