வென்றி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

வென்றி

திருவெள்ளறை

இவ்வூருக்கு வட மொழியில் ச்வேதகிரி என்று பெயர். இது வெண்மையான பாறைகளால் இயன்ற மலை. ஸன்னிதி, மலயின்மீது ஒரு கோட்டைபோல் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் தண்சிணாயன, உத்தராயன வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்தராயன வாசலும், ஆடி முதல் மார்கழி முடிய தட்சிணாயன வாசலும் திறந்திருக்கும். இக்கோயிலில் உள்ள பெருமாளுக்கு புண்டரீகாடசன் என்பது திருநாமம். திருச்சியிலிருந்து கோயிலடி பேருந்துவண்டியில் சென்று இவ்வூருக்குப் போகவேண்டும். கோயிலைச் சுற்றி நாற்புறமும் காவிரி செல்கிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருவெள்ளறையானே! என்னை பக்தனாக்கு

1368. வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை

மன்னரை மூவெழுகால்

கொன்ற தேவ,நின் குரைகழல் தொழுவதோர்

வகையெனக் கருள்புரியே,

மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை

மௌவலின் போதலர்த்தி,

தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு

வெள்ளறை நின்றானே. 1

ஹயக்ரீவனாக அவதரித்தவனே! அருள்செய்

1369. வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற்

கருளி,முன் பரிமுகமாய்,

இசைகொள் வேதநூ லென் றிவை பயந்தவ

னே!எனக் கருள்புரியே,

உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய

மாருதம் வீதியின்வாய்,

திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு

வெள்ளறை நின்றானே! 2

நரசிம்மப் பெருமானே! அருள் புரிவாய்

1370. வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன்

உடலக மிருபிளவா,

கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவ-

னே!எனக் கருள்புரியே,

மையி னார்தரு வாரலினம் பாயவண்

தடத்திடைக் கமலங்கள்,

தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு

வெள்ளறை நின்றானே! 3

திருவேங்கடமுடையானே! திருவருள் தா

1371. வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக

ஐவர்கட் கரசளித்த,

காம்பி னார்திரு வேங்கடப் பொருப்ப!நின்

காதலை யருளெனக்கு,

மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில்

வாயது துவர்ப்பெய்த,

தீம்ப லங்கனித் தேனது நுகர்திரு

வெள்ளறை நின்றானே! 4

வராகப்பெருமானே! எனக்கு அருள் செய்

1372. மான வேலொண்கண் மடவரல் மண்மகள்

அழுங்கமுந் நீர்ப்பரப்பில்,

ஏன மாகியன் றிருநில மிடந்தவ-

னே!எனக் கருள்புரியே,

கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண்

முறுவல்செய் தலர்கின்ற,

தேனின் வாய்மலர் முருகுகுக் கும்திரு

வெள்ளறை நின்றானே! 5

தேவர்கட்கு அமுதளித்தவனே! என்னை ஆட்கொள்

1373. பொங்கு நீள்முடி யமரர்கள் தொழுதெழ

அமுதினைக் கொடுத்தளிப்பான்,

அங்கொ ராமைய தாகிய வாதி!நின்

அடிமையை யருளெனக்கு,

தங்கு பேடைய டூடிய மதுகரம்

தையலார் குழலணைவான்,

திங்கள் தோய்சென்னி மாடம்சென் றணைதிரு

வெள்ளறை நின்றானே! 6

இராவணனை அழித்தவனே! எனக்கு அருள் புரி

1374. ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி

அரக்கன்றன் சிரமெல்லாம்,

வேறு வேறுக வில்லது வளைத்தவ

னே!எனக் கருள்புரியே,

மாறில் சோதிய மரதகப் பாசடைத்

தாமரை மலர்வார்ந்த,

தேறல் மாந்திவண் டின்னிசை முரல்திரு

வெள்ளறை நின்றானே! 7

வேதங்களைத் தோற்றுவித்தவனே! அருள் காட்டு

1375. முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக

உம்பர்கள் தொழுதேத்த,

அன்ன மாகியன் றருமறை பயநதவ

னே!எனக் கருள்புரியே,

மன்னு கேதகை சூதக மென்றிவை

வனத்திடைச் சுரும்பினங்கள்,

தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு

வெள்ளறை நின்றானே! 8

திரிவிக்கிரமனே! எனக்கு அருள் செய்

1376. ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்

றகலிட முழுதினையும்,

பாங்கி னாற்கொண்ட பரம!நிற் பணிந்தெழு

வேனெனக் கருள்புரியே,

ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண்

டுழிதர, மாவேறித்

தீங்கு யில்மழற் றும்படப் பைத்திரு

வெள்ளறை நின்றானே! 9

இவற்றைப் பாடுவோர் தேவர்க்கு அரசராவர்

1377. மஞ்ச லாமணி மாடங்கள் சூழ்திரு

வெள்ளறை யதன்மேய,

அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை

ஆதியை யமுதத்தை,

நஞ்சு லாவிய வேல்வல வன்கலி

கன்றிசொல் ஐயிரண்டும்,

எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை

யோர்க்கர சாவர்களே. 10

அடிவரவு: வென்றி வசை வெய்ய வாம்பரி மானவேல் பொங்கு ஆறு முன் ஆங்கு மஞ்சு -- உந்திமேல்.







 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is தாந்தம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  உந்திமேல்
Next