வெருவாதாள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

வெருவாதாள்

திருவரங்கம்--2

பரகாலநாயகியாகிய திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கநாதராகிய நாயகரது பிரிவால் வருந்துவதாகவும், அது கண்டு அவரது தாய் இரங்கிக் கூறுவதாகவும் ஈண்டுப் பாடல்கள் அமைந்துள்ளன.

தலைவியின் நிலைகண்டு தாய் இரங்கிக் கூறுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மணிவண்ணன் என் மகளை மாற்றிவிட்டானே!

1388. வெருவாதாள் வாய்வெருவி 'வேங்கடமே!

வேங்கடமே!' என்கின் றாளால்,

மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண்

துயில்மறந்தாள், வண்டார் கொண்டல்

உருவாளன் வானவர்த முயிராளன்

ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட

திருவாளன் என்மகளைச் செய்தனகள்

எங்ஙனம்நான் சிந்திக் கேனே! 1

என் மகள் புலம்புமாறு செய்துவிட்டானே மாயன்!

1389. கலையாளா அகலல்குல் கனவளையும்

கையாளா என்செய் கேன்நான்,

'விலையாளா வடியேனை வேண்டுதியோ

வேண்டாயோ?' என்னும், மெய்ய

மலையாளன் வானவர்தம் தலையாளன்

மராமரமே ழெய்த வென்றிச்

சிலையாளன், என்மகளைச் செய்தனகள்

எங்ஙனம்நான் சிந்திக் கேனே! 2

என் மகளைப் பித்தனாக்கிவிட்டானே கண்ணன்!

1390. மானாய மென்னோக்கி வாணெடுங்கண்

நீர்மல்கும் வளையும் சோரும்,

தேனாய நறுந்துழா யலங்கலின்

திறம்பேசி யுறங்காள் காண்மின்,

கானாயன் கடிமனையில் தயிருண்டு

நெய்பருக நந்தன் பெற்ற

ஆனாயன், என்மகளைச் செய்தனகள்

அம்மனைமீர்! அறிகி லேனே! 3

மாமாயன் என் மகளை மயக்கிவிட்டானே!

1391. தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத்

தோடணையாள் தடமென் கொங்கை-

யே,ஆரச் சாந்தணியாள், 'எம்பெருமான்

திருவரங்க மெங்கே?' என்னும்,

பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட

பெருவயிற்றன் பேசில் நங்காய்,

மாமாய னென்மகளைச் செய்தனகள்

மங்கைமீர்! மதிக்கி லேனே! 4

ஆய்ப்பாடி நம்பி என் மகளை எப்படி மாற்றிவிட்டான்!

1392. பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண்

மையெழுதாள் பூவை பேணாள்,

ஏணறியா ளெத்தனையும் 'எம்பெருமான்

திருவரங்க மெங்கே?' என்னும்,

நாண்மலராள் நாயகனாய் நாமறிய

ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி,

ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள்

அம்மனைமீர்! அறிகி லேனே. 5

மதுசூதன் என் மகளை என்னவெல்லாம் செய்துவிட்டான்!

1393. 'தாதாடு வனமாலை தாரானோ?'

என்றென்றே தளர்ந்தாள் காண்மின்,

யாதானு மொன்றுரைக்கில் 'எம்பெருமான்

திருவரங்கம்' என்னும், பூமேல்

மாதாளன் குடமாடி மதுசூதன்

மன்னர்க்காய் முன்னம் சென்ற

தூதாளன், என்மகளைச் செய்தனகள்

எங்ஙனம்நான் சொல்லு கேனே! 6

என் மகளது குணத்தை மாற்றிவிட்டானே மாயன்!

1394. வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே

றாயினவா றெண்ணாள், எண்ணில்

பேராளன் பேரல்லால் பேசாள்இப்

பெண்பெற்றே னென்செய் கேன்நான்,

தாராளன் நண்குடந்தை நகராளன்

ஐவர்க்கா யமரி லுய்த்த

தேராளன், என்மகளைச் செய்தனகள்

எங்ஙனம்நான் செப்பு கேனே! 7

என் மகள் மாயவன் பெயரையே கூறுகின்றாள்

1395. உறவாது மிலளென்றென் றொழியாது

பலரேசும் அலரா யிற்றால்,

மறவாதே யெப்பொழுதும் 'மாயவனே!

மாதவனே!' என்கின் றாளால்,

பிறவாத பேராளன் பெண்ணாளன்

மண்ணாளன் விண்ணோர் தங்கள்

அறவாளன், என் மகளைச் செய்தனகள்

அம்மனைமீர்! அறிகி லேனே! 8

அரங்கன் வந்தானா என்கின்றாள்

1396. பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும்

பாலூட்டாள் பாவை பேணாள்,

'வந்தானோ திருவரங்கன் வாரானோ?'

என்றென்றே வளையும் சோரும்,

சந்தோகன் பௌழியன்ஐந் தழலோம்பு

தைத்திரியன் சாம வேதி,

அந்தோ!வந் தென்மகளைச் செய்தனகள்

அம்மனைமீர்! அறிகி லேனே! 9

இவற்றைப் படிப்போர் பொன்னுலகில் வாழ்வர்

1397. சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத்

தம்மானைச் சிந்தை செய்த,

நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத்

தாய்மொழிந்த அதனை, நேரார்

காலவேல் பரகாலன் கலிகன்றி

ஒலிமாலை கற்று வல்லார்,

மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப்

பொன்னுலகில் வாழ்வர் தாமே. 10

அடிவரவு: வெருவாதாள் கலை மான் தாய் பூண் தாதாடு வாராளும் உறவு பந்தோடு சேல் -- கைம்மானம்.









 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is உந்திமேல்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கைம்மானம்
Next