வண்டுணும்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

வண்டுணும்

திருவிண்ணகர் -- 1

இந்தத் திவ்வியதேசத்தை உப்பிலியப்பன் கோயில் என்று கூறுவார்கள். இதனைத் துளஸீவனம் என்றும் கூறுவர். இங்கு ஸ்ரீநிவாஸன் எழுந்தருளி இருக்கின்றார். இது பிரார்த்தனைத் தலம். இப்பெருமாள் இப்போதும் உப்பு இல்லாமல் தளிகைகளை அமுது செய்கிறார். இப்பெருமானுக்கு 'ஒப்பிலியப்பன்'என்ற திருநாமமும் கூறப்படுகிறது. ஒப்பில்லாத அப்பனை 'ஒப்பிலியப்பன்'என்று அழைப்பது எவ்வளவு பொருத்தமானது!

வஞ்சி விருத்தம்

மனைவாழ்க்கை வேண்டாம்:நின்னருள் தா

1448. வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு

பண்டைநம் வினைகெட வென்று,அடிமேல்

தொண்டரு மமரரும் பணியநின்றங்

கண்டமொ டகலிட மளந்தவனே!

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே! 1

திருமகள் கணவனே!திருவருள் தா

1449. அண்ணல்செய் தலைகடல் கடைந்ததனுள்

கண்ணுதல் நஞ்சுணக் கண்டவனே,

விண்ணவ ரமுதுண அமுதில்வரும்

பெண்ணமு துண்டவெம் பெருமானே

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே! 2

நீலமேனியனே!நின்னைக்காண அருள் செய்

1450. குழல்நிற வண்ண!நின் கூறுகொண்ட

தழல்நிற வண்ணன்நண் ணார்நகரம்

விழ,நனி மலைசிலை வளைவுசெய்துஅங்

கழல்நிற அம்பது வானவனே!,

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே! 3

ஆலிலையில் கண்வளர்ந்தவனே!அருள் வாய்

1451. நிலவொடு வெயில்நில விருசுடரும்

உலகமு முயிர்களு முண்டொருகால்,

கலைதரு குழவியி னுருவினையாய்

அலைகட லாலிலை வளர்ந்தவனே!,

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே! 4

திருவிண்ணகரானே!திருவருள் தா

1452. பாரெழு கடலெழு மலையெழுமாய்ச்

சீர்கெழு மிவ்வுல கேழுமெல்லாம்,

ஆர்கெழு வயிற்றினி லடக்கிநின்றங்

கோரெழுத் தோருரு வானவனே!

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே! 5

நான்மறைப் பொருளே!நல்லருள் நல்கு

1453. கார்கெழு கடல்களும் மலைகளுமாய்

ஏர்கெழு முலகமு மாகி,முத

லார்களு மறிவரு நிலையினையாய்ச்

சீர்கெழு நான்மறை யானவனே!,

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே! 6

வேத ஒலியானவனே!அருள் காட்டு

1454. உருக்குறு நறுநெய்கொண் டாரழலில்

இருக்குறு மந்தணர் சந்தியின்வாய்,

பெருக்கமொ டமரர்க ளமரநல்கும்

இருக்கினி லின்னிசை யானவனே!,

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே! 7

பெண்ணாசை விடுத்தேன்:நின்னைக் காண அருள் செய்

1453. காதல்செய் திளையவர் கலவிதரும்

வேதனை வினையது வெருவுதலாம்,

ஆதலி னுனதடி யணுகுவன்நான்

போதலர் நெடுமுடிப் புண்ணியனே!

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே! 8

மும்மூர்த்தியானவனே:நின்னைக் காணவேண்டும்

1456. சாதலும் பிறத்தலு மென்றிவற்றைக்

காதல்செய் யாதுன கழலடைந்தேன்,

ஓதல்செய் நான்மறை யாகியும்பர்

ஆதல்செய் மூவுரு வானவனே!,

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே! 9

திருமால் திருவடி சேர்வர்

1457. பூமரு பொழிலணி விண்ணகர்மேல்,

காமரு சீர்க்கலி கன்றிசொன்ன,

பாமரு தமிழிவை பாடவல்லார்,

வாமனன் அடியிணை மருவுவரே. 10

அடிவரவு:வண்டு அண்ணல் குழல் நிலவு பார் கார் உருக்குறு காதல் சாதலும் பூமரு -- பொறுத்தேன்.





 










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is தீதறு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  பொறுத்தேன்
Next