பெடையடர்த்த

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

பெடையடர்த்த

திருநறையூர் -- 6

திருநறையூர்த் திருநம்பியின் திருவடிகளையே அடையும்படி தமது நெங்சத்திற்கு அறிவுரை கூறுகிறார் ஆழ்வார்.

தரவு கொச்சகக் கலிப்பா

மனமே!நறையூர் நம்பியின் அடியினை சேர்

1528. பெடை யடர்த்த மடவன்னம் பிரியாது, மலர்க்கமலம்

மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர்

முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன்,

இடர்கெடுத்த திருவாள னிணையடியே யடைநெஞ்சே! 1

மனமே!நறையூரில் இராமபிரான்தான் உள்ளான்

1529. கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி,

வழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர்,

பழியாரும் விறலரக்கன் பருமுடிக ளவைசிதற,

அழலாறும் சரந்துரந்தா னடியிணையே யடைநெஞ்சே! 2

மனமே!நறையூரில் கண்ணபிரான் தான் உள்ளான்

1530. சுளைகொண்ட பலங்கனிகள் தேன்பாய, கதலிகளின்

திளைகொண்ட பழம்பெழுமு திகழ்சோலைத் திருநறையூர்

வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல், மூவுலகோடு

அளைவெண்ணெ யுண்டான்ற னடியிணையே யடை நெஞ்சே! 3

மனமே!கோவர்த்தனனே நறையூரில் உள்ளான்

1531. துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகை மேல்,

நின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்,

மன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த,

குன்றாரும் திரடோளன் குரைகழலே யடைநெஞ்சே! 4

நறையூரில் ஆழியான் அடியினை சேர்

1532. அகிற்குறடும் சந்தனமு மம்பொன்னும் மணிமுத்தும்,

மிகக்கொணர்ந்து திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்,

பகல்சுரந்த சுடராழிப் படையான்,இவ் வுலகேழும்

புகக்கரந்த திருவயிற்றன் பொன்னடியே யடைநெஞ்சே! 5

மனமே!திருமகள் மார்பன் திருவடிகளைச் சேர்

1533. பொன்முத்தும் அரியுகிரும் புழைக்கைம்மா கரிக்கோடும்,

மின்னத்தண் திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்,

மின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலை, திருமார்வில்

மன்னத்தான் வைத்துகந்தான் மலரடியே யடைநெஞ்சே! 6

திருத்துழாய் முடியான் திருநறையூரில் உள்ளான்

1534. சீர்தழைத்த கதிர்ச்செந்நெல் செங்கமலத் திடையிடையின்,

பார்தழைத்துக் கரும்போங்கிப் பயன்விளைக்கும் திருநறையூர்,

கார்தழைத்த திருவுருவன் கண்ணபிரான் விண்ணவர்கோன்,

தார்தழைத்த துழாய்முடியன் தளிரடியே யடைநெஞ்சே! 7

மனமே!நறையூர் நம்பியின் நல்லடி நண்ணு

1535. குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளைமுத்தும்,

தலையார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர்,

மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி,

நிலையார நின்றான்றன் நீள்கழலே யடைநெஞ்சே! 8

மனமே!நறையூர் நம்பிதான் தேவதேவன்

1536. மறையாரும் பெருவேள்விக் கொழும்புகைபோய் வளர்ந்து, எங்கும்

நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்,

பிறையாரும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த,

இறையாகி நின்றான்றன் இணையடியே யடைநெஞ்சே! 9

தேவர்களாகி வாழ்வர்

1537. திண்கனக மதிள்புடைசூழ் திருநறையூர் நின்றானை,

வண்களக நிலவெறிக்கும் வயல்மங்கை நகராளன்,

பண்களகம் பயின்றசீர்ப் பாடலிவை பத்தும்வல்லார்,

விண்களகத் திமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே. 10

அடிவரவு:பெடை கழி சுளை துன்று அகில் பொன் சீர் குலை மறை திண் -- கிடந்த.








 





 










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is மான்கொண்ட
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கிடந்த நம்பி
Next